பொது --- 1131. அரிய வஞ்சகர்

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அரிய வஞ்சகர் (பொது)


முருகா!

உயிரானது பயனின்றிக் கழிவது தவிர அருள் புரிவீர்.


தனன தந்தன தனனா தனதன

     தந்தன தனனா தனதன

     தனன தந்தன தனனா தனதன ...... தனதான


அரிய வஞ்சக ரறவே கொடியவர்

     அவலர் வன்கண ரினியா ரவகுணர்

     அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக


அலையில் மண்டிய வழியே யொழுகியர்

     வினைநி ரம்பிடு பவமே செறிபவர்

     அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற


உரிய சஞ்சல மதியா னதுபெறு

     மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்

     உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே


உலக முண்டவர் மதனா ரிமையவர்

     தருவெ னும்படி மொழியா வவர்தர

     உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ


கரிய கொந்தள மலையா ளிருதன

     அமுது ணுங்குரு பரனே திரைபடு

     கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே


கருணை கொண்டொரு குறமா மகளிடை

     கலவி தங்கிய குமரா மயில்மிசை

     கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ....மிளையோனே


திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து

     பொதுந டம்புரி யரனா ரிடமுறை

     சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே


சிகர வெண்கரி அயிரா வதமிசை

     வருபு ரந்தர னமரா பதியவர்

     சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.



                              பதம் பிரித்தல்



அரிய வஞ்சகர், அறவே கொடியவர்,

     அவலர், வன்கணர், இனியார், அவகுணர்

     அசடர், அன்புஇலர், அவமே திரிபவர், ...... அதிமோக


அலையில் மண்டிய வழியே ஒழுகியர்,

     வினை நிரம்பிடு பவமே செறிபவர்,

     அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள், ......நரகு ஏற


உரிய சஞ்சல மதியானது பெறு

     மன இடும்பர்கள் இடம் ஏதுஎன, அவர்

     உபய அங்கமும் நிலை ஆகிட, ஒரு ...... கவியாலே,


உலகம் உண்டவர், மதனார், இமையவர்

     தரு எனும்படி மொழியா, அவர் தர

     உளது கொண்டு, உயிர் அவமே விடுவது ....தவிராதோ?


கரிய கொந்தள மலையாள் இருதன

     அமுது உணும் குருபரனே! திரைபடு

     கடல் அடும்படி கணை ஏவிய அரி ...... மருகோனே!


கருணை கொண்டு ஒரு குறமாமகள் இடை

     கலவி தங்கிய குமரா! மயில்மிசை

     கடுகி, எண் திசை நொடியே வலம்வரும் .....இளையோனே!


திரிபுரம் கனல் நகையால் எரிசெய்து,

     பொது நடம் புரி அரனார் இடம் உறை

     சிவை, சவுந்தரி, உமையாள் அருளிய ......புதல்வோனே!


சிகர வெண்கரி அயிராவதம் மிசை

     வரு புரந்தரன் அமராபதியவர்

     சிறை விடும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.


பதவுரை

கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குருபரனே --- கருநிறம் கொண்ட கூந்தலை உடைய மலைமகள் ஆகிய உமாதேவியின் இருமுலையிலும் பொழியும் பாலமுதத்தை உண்டு அருளிய மேலான குருமூர்த்தியே!


திரை படு கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே --- அலை வீசுகின்ற கடலானது வெந்து அழியும்படி அம்பை விடுத்து அருளிய இரகுராமன் ஆகிய திருமாலின் திருமருகரே!


கருணைகொண்டு ஒரு குற மாமகள் இடை கலவி தங்கிய குமரா --- அருள் உள்ளத்தோடு ஒப்பற்ற, சிறந்த குறமகளாகிய வள்ளிநாயகியாரைத் திருமணம் புணர்ந்த இளம்பூரணரே!


மயில் மிசை கடுகி எண் திசை நொடியே வலம் வரும் இளையோனே --- மயிலின் மீது இவர்ந்து வேகமாக எட்டுத் திக்குகளையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த இளையவரே! 


திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம் புரி அரனார் இடம் உறை --- முப்புரங்களையும் சிரிப்புக் கனலால் எரித்து, திருவம்பலத்தில் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருளின் திருமேனியில் இடப் பக்கத்தில் உறைபவளாகிய.


சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே --- சிவகாம சவுந்தரியார் அருளிய திருப்புதரல்வரே!


சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் --- மலை போன்றதும், வெள்ளை நிறம் கொண்டதுமாகிய அயிராவதம் என்னும் யானையின்மேல் வருகின்ற தேவர் தலைவனாகிய இந்திரனும்,


அமராபதி அவர் சிறை விடும்படி --- தேவலோகத்தவர்களும் சிறையில் இருந்து மீளும்படி, 


வடிவேல் விடவல பெருமாளே --- கூர்மையான வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!


அரிய வஞ்சகர் --- (மனம் வாக்கு காயம்) ஆகியவற்றால் முழுதும் வஞ்சகத்தில் தேர்ந்தவர்களும்,


  அறவே கொடியவர் ---  முழுதும் பொல்லாதவர்களும், 


அவலர் --- பயனற்றவர்களும், 


வன்கணர் --- இரக்கம் இல்லாதவர்களும், 


இனியார் அவகுணர் ---  இனிமையாகப் பேசுகின்ற துர்க்குணம் படைத்தவர்களும், 


அசடர் --- அறிவற்றவர்களும்,


அன்பிலர் --- உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களும்,


அவமே திரிபவர் --- வீணில் உழல்பவர்களும்,


அதிமோக அலையில் மண்டிய வழியே ஒழுகியர் --- மிகுந்த காமம் ஆகிய அலையில் அகப்பட்டு, தீய வழியில் ஒழுகுபவர்களும்,  


வினை நிரம்பிடு பவமே செறிபவர் --- தீவினை நிரம்பிய பிறவிநெறியிலே பொருந்தியவர்களும்,


அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் --- கருணை என்பது சற்றும் இல்லாதவரிடம் பொருந்தி வாழ்கின்ற அறிவீனர்களும், 


நரகு ஏற உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் --- நரகலோகத்திலே விழுவதற்கே உரிய சஞ்சலப் புத்தியைப் பெற்றுள்ள ஆணவ உள்ளம் படைத்தவர்களும்,


இடம் ஏது என --- வாழுகின்ற இடம் எது எனத் தேடிச் சென்று, 


அவர் உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே --- அவர்மீது சாங்கோபாங்கமான நிலையை உடையதொரு பாடலாலே, 


உலகம் உண்டவர் --- உலகத்தை உண்டு அருளிய திருமால்,


மதனார் --- மன்மதன்,


இமையவர் தரு --- தேவலோகத்திலே உள்ள (நினைத்ததைத் தருகின்ற) கற்பக மரம்,


எனும்படி மொழியா --- என்று வருணித்து,


அவர் தர உளது கொண்டு --- அவர் தருகின்ற பொருளைப் பெற்றுக் கொண்டு, 


உயிர் அவமே விடுவது தவிராதோ --- பயன் இல்லாமல் உயிரை இழக்கின்ற நிலையை அடியேன் தவிர்க்க வழியில்லையா? 



பொழிப்புரை


கருநிறம் கொண்ட கூந்தலை உடைய மலைமகள் ஆகிய உமாதேவியின் இருமுலையிலும் பொழியும் பாலமுதத்தை உண்டு அருளிய மேலான குருமூர்த்தியே!


அலை வீசுகின்ற கடலானது வெந்து அழியும்படி அம்பை விடுத்து அருளிய இரகுராமன் ஆகிய திருமாலின் திருமருகரே!


அருள் உள்ளத்தோடு ஒப்பற்ற, சிறந்த குறமகளாகிய வள்ளிநாயகியாரைத் திருமணம் புணர்ந்த இளம்பூரணரே!


மயிலின் மீது இவர்ந்து வேகமாக எட்டுத் திக்குகளையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த இளையவரே! 


முப்புரங்களையும் சிரிப்புக் கனலால் எரித்து, திருவம்பலத்தில் திருநடனம் புரிகின்ற சிவபரம்பொருளின் திருமேனியில் இடப் பக்கத்தில் உறைபவளாகிய.


சிவகாம சவுந்தரியார் அருளிய திருப்புதரல்வரே!


மலை போன்றதும், வெள்ளை நிறம் கொண்டதுமாகிய அயிராவதம் என்னும் யானையின்மேல் வருகின்ற தேவர் தலைவனாகிய இந்திரனும், தேவலோகத்தவர்களும் சிறையில் இருந்து மீளும்படி கூர்மையான வேலை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!


மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் முழுதும் வஞ்சகத்தில் தேர்ந்தவர்களும், முழுதும் பொல்லாதவர்களும், பயனற்றவர்களும்,  இரக்கம் இல்லாத கொடியவர்களும், இனிமையாகப் பேசுகின்ற துர்க்குணம் படைத்தவர்களும், அறிவற்றவர்களும், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவர்களும், வீணில் உழல்பவர்களும்,மிகுந்த காமம் ஆகிய அலையில் அகப்பட்டு, தீய வழியில் ஒழுகுபவர்களும், தீவினை நிரம்பிய பிறவிநெறியிலே பொருந்தியவர்களும், கருணை என்பது சற்றும் இல்லாதவரிடம் பொருந்தி வாழ்கின்ற அறிவீனர்களும், நரகலோகத்திலே விழுவதற்கே உரிய சஞ்சலப் புத்தியைப் பெற்றுள்ள ஆணவ உள்ளம் படைத்தவர்களும் வாழுகின்ற இடம் எது எனத் தேடிச் சென்று,  அவர்மீது சாங்கோபாங்கமான நிலையை உடையதொரு பாடலாலே, உலகத்தை உண்டு அருளிய திருமால் என்றும், அழகில் சிறந்த மன்மதன் என்றும், தேவலோகத்திலே உள்ள (நினைத்ததைத் தருகின்ற) கற்பக மரம் நீர்தான் என்றும் வருணித்துப் புகழ்ந்து பாடி, அவர் தருகின்ற பொருளைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து, பயன் இல்லாமல் உயிரை இழக்கின்ற நிலையை அடியேன் தவிர்க்க வழியில்லையா? 


விரிவுரை


கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குருபரனே --- 


கரிய கொந்தளம் – கருநிறம் பொருந்திய செறிந்த தலைமயிர்.


திரை படு கடல் அடும்படி கணை ஏவிய அரி --- 


இராமபிரான் சேதுபந்தனம் புரியும் பொருட்டு தென்கடற்கரையில் திருப்புல்லணையில் (தருப்பைப் படுக்கையில்) படுத்து வருணனை ஏழு நாள் வழி வேண்டினார். வருணன் ஏழு கடல்களுக்கு அப்பால் இரு பெரிய திமிலங்களின் போரை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபடியால் இராமருடைய வேண்டுதலை அறியாதவனாகி நின்றான். வருணன் வராமையால், இராமர் வெகுண்டு அக்கினிக் கணையை எடுத்துத் தொடுத்து விடுத்தார். அக்கணையின் வெம்மையால் கடல் வறண்டுவிட்டது.


திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம் புரி அரனார் --- 


கமலாட்சன், வித்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

 

திரிபுரவாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

 

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும்,எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

 

ஆனால், இறைவர் அவ்வில்லையும் கணையையும் பயன்படுத்தாமல் சிரித்தார். முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள்.

 

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.

 

கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்

எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப

வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே.   ---  திருஞானசம்பந்தர்.

                                                 

வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்

கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.   ---  திருஞானசம்பந்தர்.

                                    

குன்ற வார்சிலை நாண் அராஅரி

            வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

            சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.    ---  திருஞானசம்பந்தர்.

 

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

            கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

            பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

            கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

            திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

 

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. --- சுந்தரர்.


முப்புரத்தைச் சிரித்து எரி கொளுத்திய போது, சிவபரம்பொருள் திருநடனம் புரிந்தார்.  இந்த ஆடல்கள் கொடுகொட்டி, பாண்டரங்கம் எனப் பெயர் பெறும்.


“சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீயம்பினால்

சுட்டு மாட்டிச் சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும் போய்ப்

பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால்மதியம் சூடி

நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.”          ---  திருஞானசம்பந்தர்.


இப் பாடலின் முற்பகுதியில், இறைவனைப் போற்றி உய்தி பெற வாய்த்த இந்த உடம்பைக் கொண்டு, அரிய தமிழால் அவன் திருவடிகளைப் போற்றப் புகழ்ந்து நற்கதி பெற முயலாமல், உடம்பைப் பேணுதற்குப் பொருள் வேண்டி, அறிவில்லாத அற்பர்கள் வாழ்கின்ற இடத்தைத் தேடிச் சென்று அவர்களைப் பலவாறாக, பொய்யாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் அற்பப் பொருளைக் கொண்டு அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதில் நினைவாய்க் கவலைப் படுவது குறித்து அடிகளார் வருந்திக் கூறியுள்ளார்.


குன்றும் வனமும் குறுகி வழிநடந்து

சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்

கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்

இடாதோ அதுவே இது.                                --- இரட்டையர்.


வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி

மஞ்சரி கோவை தூது           பலபாவின்

வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி

வந்தியர் போல வீணில்      அழியாதே....             --- திருப்புகழ்.


கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,

     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,

     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,

மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,

இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்

     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.     ---  இராமச்சந்திர கவிராயர்.


தெய்வத் தமிழைப் பயின்று பாட்டு இசைக்கும் ஆற்றல் வாய்ந்து, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத் தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் வேதாகமங்களால் துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த இறைவனைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும், சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது மதியீனம். காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை ஒக்கும்.  தமது அறிவையும் தமிழையும் அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல்,  கேவலம் பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.

“யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்

தாமேபெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே.” -- கந்தர் அனுபூதி


கருத்துரை


முருகா! உயிரானது பயனின்றிக் கழிவது தவிர அருள் புரிவீர்.



 



பொது --- 1131. அரிய வஞ்சகர்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அரிய வஞ்சகர் (பொது) முருகா! உயிரானது பயனின்றிக் கழிவது தவிர அருள் புரிவீர். தனன தந்தன தனனா தனதன      தந்தன...