062. ஆள்வினை உடைமை - 03. தாளாண்மை என்னும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை 


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "எல்லார்க்கும் ஒப்பற்ற மேன்மையில் உதவி செய்தல் என்னும் மேம்பாடானது, விடாமுயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தில் நிலைபெற்று விளங்கும்" என்கின்றார் நாயனார்.

விடாமுயற்சியினை உடையவர்க்கே பொருள் கைகூடும். பொருள் உடையார்க்கே பிறர்க்கு உதவுதல் என்பது கைகூடும். பொருள் இல்லார்க்கு, பிறர்க்கு உதவுதல் என்பது கைகூடாது.

செருக்கு --- மேம்பாடு, ஆண்மை, செல்வம்.


இதற்குத் திருக்குறள் ---

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே,

வேளாண்மை என்னும் செருக்கு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று --- முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின் கண்ணே நிலை பெற்றது;

வேளாண்மை என்னும் செருக்கு --- எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.

(பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள் மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின் வரும் தேவாரப் பாடல் உள்ளது அறிக.


வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை

தோள்ஆகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்

வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கு இருக்கும்

தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.     


இதன் பொருள் ---


ஒளி பொருந்திய கண்களையும், சிவந்தபவளம் போன்ற வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும் ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம் ஆகும்.



No comments:

062. ஆள்வினை உடைமை - 05. இன்பம் விழையான்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்கு இன்பத்தை விரும...