062. ஆள்வினை உடைமை - 05. இன்பம் விழையான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்கு இன்பத்தை விரும்பாதவனாகி, தனக்கு உரிய செயலைச் செய்வதையே விரும்புகின்ற ஒருவன், தன்னுடைய சுற்றத்தார், நட்பினர் ஆகியோருக்கு நேரும் துன்பத்தை நீக்கி, அவரைத் தாங்குகின்ற தூண் ஆவான்" என்கின்றார் நாயனார்.

இன்பத்தை விரும்பாது தொழிலை முடித்தலில் கருத்து உடையவனை, தூண் என்றும், கேளிரைப் பாரம் என்றும் உருவகப்படுத்தினார். 

செல்லினால் தின்னப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுதுகள் தாங்கி நிற்பதைப் போல என்றார். இன்பத்தை விரும்பாது, தொழில் முடித்தலை விரும்பகின்றவன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வல்லமை உடையவன் என்பது விளங்கும்.

  முயற்சியின் காரியமாகிய இன்பத்தை விரும்பாமல், இன்பத்திற்குக் காரணமாகிய முயற்சியை விரும்புபவன் எல்லாப் பயனும் அடைவான். இன்பத்திற்குக் காரணமாகிய முயற்சியை விரும்பாமல், முயற்சியின் காரியமாகிய இன்பத்தை விரும்புபவன் ஒரு பயனும் அடையமாட்டான்.


இதற்குத் திருக்குறள் --- 

இன்பம் விழையான், வினை விழைவான், தன்கேளிர்

துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

இன்பம் விழையான் வினை விழைவான் --- தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினை முடித்தலையே விரும்புவான்; 

தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் --- தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.

(இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


எய்தாது இராமற்கு இலக்குவன்போல் என்றுஉரைக்கச்

செய்தான் அடிமை, சிவசிவா! --- நொய்தேனும்

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்துஊன்றும் தூண்.


இராமருக்கு வாய்த்த தம்பி இலக்குமணன் போல் உலகில் எவருமிலர் என்று சொல்லும்படி இலக்குமணன் பணி புரிந்தனன்.

இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, இலக்குவனும் அவருடன் கானகம் சென்றான். இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தான். இலங்கைப்போரில் இராவணின் மகனான இந்திரசித்தை வீழ்த்தினான்.  இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தான். சிறிதேனும் தனக்கென இன்பத்தை விழையாமல், இராமனுக்கு அடிமை செய்து வாழ்ந்தவன் இலக்குவன்.


No comments:

062. ஆள்வினை உடைமை - 05. இன்பம் விழையான்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 62 -- ஆள்வினை உடைமை இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "தனக்கு இன்பத்தை விரும...