பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஆராத காதலாகி (பொது)


முருகா! 

பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல், 

தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரிவீர்.



தானான தான தான தானன

     தானான தான தான தானன

          தானான தான தான தானன ...... தந்ததான


ஆராத காத லாகி மாதர்த

     மாபாத சூட மீதி லேவிழி

          யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே


ஆசாப சாசு மூடி மேலிட

     ஆசார வீன னாகி யேமிக

          ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே


ஈராறு தோளு மாறு மாமுக

     மோடாரு நீப வாச மாலையு

          மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே


ஏனோரு மோது மாறு தீதற

     நானாசு பாடி யாடி நாடொறு

          மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ


வாராகி நீள்க பாலி மாலினி

     மாமாயி யாயி தேவி யாமளை

          வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி


வாதாடி மோடி காடு காளுமை

     மாஞால லீலி யால போசனி

          மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி


சூராரி மாபு ராரி கோமளை

     தூளாய பூதி பூசு நாரணி

          சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே


தோளாலும் வாளி னாலு மாறிடு

     தோலாத வான நாடு சூறைகொள்

          சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.



                            பதம் பிரித்தல்



ஆராத காதல் ஆகி மாதர் தம்

     மாபாத சூடம் மீதிலே, விழி

          ஆலோலனாய் விகாரம் ஆகி, ...... இலஞ்சியாலே,


ஆசா பசாசு மூடி மேலிட,

     ஆசார ஈனன் ஆகியே, மிக

          ஆபாசன் ஆகி ஓடி நாளும் ...... அழிந்திடாதே,


ஈர்ஆறு தோளும், ஆறு மாமுக-

     மோடு ஆரு நீப வாச மாலையும்,

          ஏறான தோகை நீல வாசியும், ...... அன்பினாலே


ஏனோரும் ஓதுமாறு, தீது அற,

     நான்ஆசு பாடி ஆடி நாள்தொறும்

          ஈடேறுமாறு ஞான போதகம் ...... அன்புஉறாதோ?


வாராகி, நீள் கபாலி, மாலினி,

     மாமாயி, ஆயி, தேவி, யாமளை,

          வாசாம கோசரை, பராபரை, ...... இங்குஉள்ஆயி,


வாதாடி, மோடி, காடு காள், உமை,

     மாஞால லீலி, ஆல போசனி,

          மாகாளி, சூலி, வாலை, யோகினி, ...... அம்பவானி,


சூராரி, மாபுராரி, கோமளை,

     தூளாய பூதி பூசு நாரணி,

          சோணாசல ஆதி லோக நாயகி, ...... தந்தவாழ்வே!


தோளாலும் வாளினாலும் மாறிடு

     தோலாத வான நாடு சூறைகொள்

          சூராரியே! விசாகனே! சுரர் ...... தம்பிரானே.


பதவுரை


வாராகி --- வாராகியாக விளங்குபவரும்,


நீள் கபாலி ---  நீண்ட கபாலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும்,


மாலினி ---  கங்கையாகத் திகழ்பவரும்,


மாமாயி ---  பெரிய மாயையைச் செய்பவரும்,


ஆயி --- உலகங்கட்கு அன்னையாகத் திகழ்பவரும்,


தேவி --- ஒளி மயமானவரும்,


யாமளை ---  பச்சை நிறம் உடையவரும்,


வாசா மகோசரை --- வாக்கிற்கு எட்டாதவரும்,


பராபரை --- பெரிய பொருளாகியவரும்,


இங்கு உள் ஆயி --- அடியவர் உள்ளத்தில் தங்குகின்ற தாயும், 


வாதாடி --- இறைவரோடு வாது செய்தவரும்,


மோடி --- பிணங்குபவரும்,


காடுகாள் --- துர்க்கையாக வந்தவரும்,


உமை --- உமாதேவியாரும்,


மாஞால லீலி --- உலகத்தை ஆக்கியும், அளித்தும், அழித்தும் விளையாடுபவரும்,


ஆல போசனி --- ஆலகாலவிடத்தை உண்டவரும்,


மாகாளி ---  மகா காளிதேவி ஆனவரும்,


சூலி ---  திரிசூலத்தைத் தாங்கியவரும்,


வாலை --- இளமையானவரும்,


யோகினி --- மோகத்தைச் செய்பவரும்,


அம்பவானி ---  அழகிய பார்வதி அம்மையாரும்,


சூராரி --- மகிடாசுரன் முதலிய அசுரத் தலைவர்களை அழித்தவரும்,


மா புராரி --- பெரிய முப்புரங்களை எரித்தவரும்,


கோமளை ---  அழகியவரும்,


தூளாய பூதி பூசு நாரணி ... திருநீற்றுப் பொடியைப் பூசிக்கொள்ளுகின்ற குளிர்ந்தவரும்,


சோணாசல --- சிவந்த மலையாகிய அருணையில் வாழ்பவரும்,


ஆதி லோக நாயகி --- முதன்மை பெற்று உலகங்கட்குத் தலைவியாக வீற்றிருப்பவரும் ஆகிய அம்பிகையார்,


தந்த வாழ்வே ---  பெற்றருளிய குமாரக் கடவுளே!


தோளாலும் வாளினாலும் மாறிடு --- தோள்வலியாலும், வாள்வலியாலும் மாறுபட்டவனும்,


தோலாத --- யாவரிடத்தும் தோல்வி அடையாதவனும்,


வான நாடு சூறைகொள் --- தேவர் உலகைச் சூறையிட்டவனும் ஆகிய


சூராரியே ---  சூரபதுமனை அடக்கியவரே!


விசாகனே --- விசாக மூர்த்தியே!


சுரர் தம்பிரானே --- தேவர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!


ஆராத காதல் ஆகி --- தணியாத காதல் கொண்டு,


மாதர் தம் ---  பெண்களுடைய


மாபாத சூட மீதிலே ---  அழகிய பாத முதல் உச்சி வரையிலும்,


விழி ஆலோலனாய் --- கண்களைச் செலுத்துபவனாகி,


விகாரமாகி --- உள்ளம் மாறுபட்டவனாகி,


இலஞ்சியாலே --- உந்திச் சுழியினாலே,


ஆசா பசாசு மூடி மேலிட --- ஆசையாகிய பேய் என்னை அழுத்தி மேற்கொள்ள,


ஆசார வீனனாகியே --- மேலான ஆசாரத்தை விட்டு அநாசாரனாகி,


மிக ஆபாசனாகி  – மிகவும் அசுத்தனாகி,


ஓடி நாளும் அழிந்திடாதே --- எங்கும் திரிந்து நாள்தோறும் அடியேன் அழிந்து போகாமல்,


ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரு நீப வாச மாலையும் --- பன்னிரு புயங்களும், ஆறு திருமுகங்களும், திருமார்பிலே பொருந்தி உள்ள மணம் கமழ்கின்ற கடப்பமலர் மாலைகளும்,


ஏறான தோகை நீல வாசியும் --- உயர்ந்த நீலநிறம் பொருந்திய தோகையுடன் கூடிய மயில் வாகனமும் ஆகிய இவைகளை,


அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு --- அன்பு மிகுதியாலே உலகிலே உள்ள எல்லோரும் ஓதி உய்யுமாறும்,


தீதற ---  குற்றங்கள் விலகுமாறும்,


நான் ஆசு பாடி ஆடி நாடொறும் ---  அடியேன் நாள்தோறும் ஆசுகவியாகப் பாடியும், ஆனந்தத்தால் ஆடியும்,


ஈடேறுமாறு ஞான போதகம் அன்பு உறாதோ --- கடைத் தேறுமாறு சிவஞானபோதத்திலே அன்பு உண்டாகாதோ?


பொழிப்புரை


வாராகியாக விளங்குபவரும், நீண்ட கபாலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும், கங்கையாகத் திகழ்பவரும், பெரிய மாயையைச் செய்பவரும்,  உலகங்கட்கு அன்னையாகத் திகழ்பவரும், ஒளி மயமானவரும், பச்சை நிறம் உடையவரும், (மன) வாக்கிற்கு எட்டாதவரும், பெரிய பொருளாகியவரும்,  அடியவர் உள்ளத்தில் தங்குகின்ற தாயும், இறைவரோடு வாது செய்தவரும், பிணங்குபவரும், துர்க்கையாக வந்தவரும், உமாதேவியாரும், உலகத்தை ஆக்கியும், அளித்தும், அழித்தும் விளையாடுபவரும், ஆலகால விடத்தை உண்டருளி வரும், மகா காளிதேவி ஆனவரும், திரிசூலத்தைத்  தாங்கியவரும், இளமையானவரும்,  மோகத்தைச் செய்பவரும், அழகிய பார்வதி அம்மையாரும், மகிடாசுரன் முதலிய அசுரத் தலைவர்களை அழித்தவரும், பெரிய முப்புரங்களை எரித்தவரும், அழகியவரும், திருநீற்றுப் பொடியைப் பூசிக்கொள்ளுகின்ற குளிர்ந்தவரும், சிவந்த மலையாகிய அருணையில் வாழ்பவரும்,  முதன்மை பெற்று உலகங்கட்குத் தலைவியாக வீற்றிருப்பவரும் ஆகிய அம்பிகையார், பெற்றருளிய குமாரக் கடவுளே!


தோள்வலியாலும், வாள்வலியாலும் மாறுபட்டவனும், யாவரிடத்தும் தோல்வி அடையாதவனும்,  தேவர் உலகைச் சூறையிட்டவனும் ஆகிய சூரபதுமனை அடக்கியவரே!


விசாக மூர்த்தியே!


தேவர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!


தணியாத காதல் கொண்டு, பெண்களுடைய அழகிய பாத முதல் உச்சி வரையிலும், கண்களைச் செலுத்துபவனாகி, உள்ளம் மாறுபட்டவனாகி, உந்திச் சுழியினாலே, ஆசையாகிய பேய் என்னை அழுத்தி மேற்கொள்ள, மேலான ஆசாரத்தை விட்டு அநாசாரனாகி, மிகவும் அசுத்தனாகி,  எங்கும் திரிந்து நாள்தோறும் அடியேன் அழிந்து போகாமல், பன்னிரு புயங்களும், ஆறு திருமுகங்களும், திருமார்பிலே பொருந்தி உள்ள மணம் கமழ்கின்ற கடப்பமலர் மாலைகளும், உயர்ந்த நீலநிறம் பொருந்திய தோகையுடன் கூடிய மயில் வாகனமும் ஆகிய இவைகளை, அன்பு மிகுதியாலே உலகிலே உள்ள எல்லோரும் ஓதி உய்யுமாறும், குற்றங்கள் விலகுமாறும், அடியேன் நாள்தோறும் ஆசுகவியாகப் பாடியும், ஆனந்தத்தால் ஆடியும், கடைத்தேறுமாறு சிவஞானபோதத்திலே அன்பு உண்டாகாதோ?


விரிவுரை


ஆராத காதல் ---


ஆராத – தணியாத. பெண்கள்பால் தணிதல் இல்லாத காதல் கொண்டு, தவநெறி விடுத்து, அவநெறி அடுத்து, அலைவது பேதைமை.


இறைவனிடத்துக் காதல் வைக்கவேண்டும். அது ஞானக் காதல்.  அதனால் எல்லா நலன்களும் உண்டாகும்.


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது....  ---  திருஞானசம்பந்தர் தேவாரம்.


பெருமை உடையார் மனைதொறும் போய்

பிச்சை எடுத்தார் ஆனாலும்,

அருமை மணியார் அம்பலத்தே

ஆடித் திரிந்தார் ஆனாலும்,

ஒருமை உடையார் கோவணமே

உடையாய் உடுத்தார் ஆனாலும்,

கருமை விழியாய் நான்அவர்மேல்

காதல் ஒழியேன் கனவிலுமே. ---  திருவருட்பா.


மாதர் தம் பாதாதி சூட மீதிலே விழி ஆலோலனாய் ---


மகளிருடைய பாதம் முதல் கூந்தல் வரை வியந்து நோக்கியும், புகழ்ந்து கவிகள் பல ஆக்கியும் கெடுகின்றவர் பலர். பஞ்சுபோல் நரைக்கின்ற கூந்தலை முகில் என்றும், அறல் என்றும் புகழ்வர். பீளை சொரியும் கண்களை, வேல் என்றும், சேல் என்றும், கடல் என்றும், கயல் என்றும் கூறுவர். சளி ஒழுகும் நாசியை எள்ளுப் பூ என்றும்,  குறும்பி வரும் செவியை வள்ளை இலையென்றும், நாறுகின்ற வாயில் உள்ள பல்லை முத்து என்றும், உதட்டைப் பவழம் என்றும், சதைக்கட்டிகளை மேரு என்றும், குடம் என்றும்,  இவ்வாறு அருவருக்கத்தக்க உறுப்புக்களை மிகமிக உயர்வாகச் சிறப்பித்துப் பாடியும், அவைகளை உற்று உற்றுப் பார்த்தும், கண்கள் பூத்தும், உடல் வேர்த்தும், பணத்தைத் தூர்த்தும், அவமே அழிவர்.  இது மடமை.  ஊன உடம்பை விரும்பி அழியாது, இறைவருடைய ஞான உடம்பை நினைந்து உய்ய வேண்டும்.


பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல்என்பது ஆகத் திரிகின்ற நீ,செந்திலோன் திருக்கை

வேல் என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, மனமே, எங்ஙனே முத்தி காண்பதுவே. ---  கந்தர் அலங்காரம்.


வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க் கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே

ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே. ---  மணிவாசகம்.


 

"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர், அமையும், அவர் என் செய?

 

மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே".--- கோயில் நான்மணி மாலை.

 

"சொல் பல பேசித் துதித்து, நீங்கள்

நச்சிச் செல்லும் நரக வாயில்

தோலும் இறைச்சியுந் துதைந்து சீப் பாயும் 

காமப் பாழி, கருவிளை கழனி,

தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்

எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி,

மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்,

நச்சிக் காமுகர நாய்தான் என்றும்

இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி,

புண் இது என்று புடவையை மூடி

உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண், 

மால்கொண்ட அறியா மாந்தர் புகும் வழி,

நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி,

தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,

செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,

பெண்ணுமு ஆணும் பிறக்கும் பெருவழி,

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே

சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,

இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி

மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை, 

முத்தி நாதனை, மூவா முதல்வனை,

அண்டரு அண்டமும் அனைத்து உள புவனமும்

கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,

ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!"    ---  பட்டினத்தார்.

 

     வள்ளல் பெருமான் நமது நெஞ்சுக்கு அறிவுறுத்துமாறு காண்க....

 

.....            .....            .....       மந்திரத்தில்

பேய்பிடித்தால் தீர்ந்திடும்,இப் பெண்பேய் விடாதே,செந்

நாய்பிடித்தால் போலும் என்று நாடிலையே,--- ஆய்வில்உன்றன் 

 

ஏழைமை என் என்பேன்,இவர்மயக்கம் வல்நரகின்

தோழைமை என்று அந்தோ துணிந்திலையே,--- ஊழ்அமைந்த   

 

கார் இருளில் செல்லக் கலங்குகின்றாய்,மாதர்சூழல்

பேர் இருளில் செல்வதனைப் பேர்த்திலையே --- பாரிடையோர் 

 

எண்வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய்,ஏந்திழையார்

கண்வாள் அறுப்பக் கனிந்தனையே,--- மண்வாழும்

 

ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய்,மாதர்முலை

ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே --- சீரான 

 

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய்,மாதர்முலை

வெற்பு என்றால் ஏற விரைந்தனையே,--- பொற்புஒன்றும்

 

சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய்,மாதர் இடைச்

சிங்கம் எனில் காணத் திரும்பினையே,--- இங்குசிறு

 

பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய்,மாதர் அல்குல்

பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே,--- ஆம் பண்டைக் 

 

கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ,மாதர் அல்குல்

பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே,--- கீழ்க் கதுவும்

 

கல் என்றால் பின்னிடுவாய்,காரிகையார் கால்சிலம்பு

கல் என்றால் மேல் எழும்பக் கற்றனையே,--- அல்அளகம் 

 

மையோ கருமென் மணலோ என்பாய், மாறி

ஐயோ நரைப்பது அறிந்திலையோ?--- பொய் ஓதி

 

ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய்,உள்எலும்புஆம்

வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே,--- கண்புருவம் 

 

வில் என்றாய்,வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்

சொல் என்றால் சொல்லத் துணியாயே,--- வல் அம்பில்

 

கண் குவளை என்றாய்,கண்ணீர் உலர்ந்துமிக

உள்குழியும் போதில் உரைப்பாயே,--- கள்குலவு

 

மெய்க்குமிழே நாசி என வெஃகினையால்,வெண்மலத்தால்

உய்க்குமிழுஞ் சீந்தல் உளதேயோ?--- எய்த்தல் இலா

 

வள்ளை என்றாய் வார்காது,வள்ளைதனக்கு உள்புழையோடு

உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?--- வெள்ளைநகை 

 

முல்லை என்றாய்,முல்லை முறித்து ஒருகோல் கொண்டுநிதம்

ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?--- நல்லதொரு 

 

கொவ்வை என இதழைக் கொள்கின்றாய்,மேல்குழம்பும்

செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே,--- செவ்வியகண் 

 

ஆடி எனக் கவுட்கே ஆசை வைத்தாய்,மேல்செழுந்தோல்

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே?--- கூடியதோர்

 

அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய்,ஏழ்துளைகள்

எந்த மதிக்கு உண்டு? அதனை எண்ணிலையே,--- நந்து எனவே

 

கண்ட மட்டும் கூறினை அக் கண்ட மட்டும் அன்றி,உடல்

கொண்டமட்டும் மற்று அதன்மெய்க் கூறு அன்றோ,---  விண்டவற்றைத்

 

தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய்,அவ்வேய்க்கு

மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே?--- நாளொன்றும் 

 

செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய்,அம்மலர்க்குப்

பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே?--- மங்காத 

 

செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்புஇங்கு

எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே?--- செவ்வைபெறும்

 

செப்பு என்றனை முலையை,சீசீ சிலந்தி அது

துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே?--- வப்பு இறுகச்

 

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய்,கீழ்த்துவண்டு

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே,--- தாழ்ந்த அவை

 

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய்,முதிர்ந்து உடையாப்

புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? --- திண்கட்டும் 

 

அந் நீர்க் குரும்பை அவை என்றாய்,மேல் எழும்பும்

செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே,--- அந்நீரார்

 

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார்,சான்றாக

வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே?--- தண்ணீர்மைச்

 

சாடி என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்துஇடும் மேல்

மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ?--- மேடு அதனை

 

ஆல் இலையே என்பாய்,அடர் குடரோடு ஈருளொடும்

தோல் இலையே ஆல் இலைக்கு, என் சொல்லுதியே? ---  நூல் இடைதான் 

 

உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய்,கைதொட்டுக்

கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே,--- விண்டுஓங்கும்

 

ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை,சிற்சிலர்கள்

பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே,---  தாழ்ங்கொடிஞ்சித்

 

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை,அன்றுசிறு

நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே, --- ஆராப்புன் 

 

நீர் வீழியை ஆசை நிலை என்றாய்,வன்மலம்தான்

சோர் வழியை என்என்று சொல்லுதியே,--- சார்முடைதான் 

 

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்

வீறாப் புண் என்று விடுத்திலையே,--- ஊறு ஆக்கி          

 

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி,மற்று அதன்மேல்

சீலை இடக் கண்டும் தெரிந்திலையே,--- மேலை உறு-

 

மே நரகம் என்றால் விதிர்ப்புறு நீ,மாதர் அல்குல்

கோ நரகம் என்றால் குலைந்திலையே,--- ஊனம் இதைக்

 

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்

தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே,--- அண்டாது

 

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய்,மற்று அதன்பால்

மாதவிடாய் உண்டால் மதித்திலையே,--- மாதர் அவர்  

 

தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய்,தண்டுஊன்றி

வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே,--- நன்கு இலவாய்

 

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய்,புலால் சிறிதே

வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே --- சேந்த அடி

 

தண் தாமரை என்றாய்,தன்மை விளர்ப்பு அடைந்தால்

வெண் தாமரை என்று மேவுதியோ?--- வண் தாரா 

 

மேல் நாட்டுஞ் சண்பகமே மேனி என்றாய்,தீயிடுங்கால்

தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ?--- வானாட்டும்

 

மின் தேர் வடிவு என்றாய்,மேல்நீ உரைத்த உள் ஈது

ஒன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண், --- ஒன்றாச்சொல் 

 

வேள் வாகனம் என்றாய்,வெய்யநமன் விட்டிடும் தூது

ஆள்வாகனம் என்றால் ஆகாதோ?--- வேள் ஆனோன் 

 

காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய்,காலன் என்போன்

காகளம் என்பார்க்கு என் கழறுதியே?--- நாகளவும் 

 

சாயைமயில் என்றே தருக்குகின்றாய்,சார்பிரம

சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே,--- சேயமலர்

 

அன்ன நடைஎன்பாய்,அஃது அன்று, அருந்துகின்ற

அன்னநடை என்பார்க்கு என் ஆற்றுதியே,--- அன்னவரை 

 

ஓர ஓவியம் என்பாய்,ஓவியமேல் ஆங்கு எழுபத்து

ஈராயிர நாடி யாண்டு உடைத்தே?--- பார் ஆர்ந்த

 

முன்னுமலர்க் கொம்பு என்பாய்,மூன்றொடரைக் கோடியெனத்

துன்னும் உரோமத் துவாரம் உண்டே?--- இன் அமுதால்

 

செய்த வடிவு என்பாய்,அச் செய்கை மெய்யேல்,நீ அவர்கள்

வைதிடினும் மற்று அதனை வையாயே,--- பொய் தவிராய்

 

ஒள்ளிழையார் தம் உபு ஓர் உண்கரும்பு என்றாய், சிறிது

கிள்ளி எடுத்தால் இரத்தம் கீழ்வருமே,--- கொள்ளும் அவர்

 

ஈடில் பெயர் நல்லார் என நயந்தாய்,நாய்ப்பெயர் தான்

கேடில் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ?--- நாடில்அவர்

 

மெல்இயலார் என்பாய்,மிகு கருப்ப வேதனையை

வல்இயலார் யார் பொறுக்க வல்லார்காண்?--- வில்லியல்பூண் 

 

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய்,வெந்தீயில்

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- வேய்ந்தாங்கு

 

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய்,வெம்புலிப்பின்

சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே,--- சென்றாங்கு

 

நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய்,கண்மூடி

நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே,--- ஒன்றாது

 

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல் அணைத்துக்

கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே,--- பெண்டுஆனார்

 

வைதாலும் தொண்டு வலித்தாய்,பிணத்தொண்டு

செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- கைதாவி

 

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,

செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- வைத்தாடும் 

 

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ,மற்றொழிந்து

துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே --- வஞ்சியரைப்

 

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய்,வெந்நரகைப்

பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே --- சேர்த்தார் கைத் 

 

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய்,வன்பூதம்

தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே --- நட்டாலும்

 

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய்,தீ விடத்தை

வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே,--- செவ்விதழ்நீர்

 

உண்டால் மகிழ்வாய் நீ,ஒண்சிறுவர் தம்சிறுநீர்

உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே --- கண்டு ஆகக்

 

கவ்வுகின்றாய் அவ் இதழை,கார் மதுகம் வேம்பு இவற்றைக்

கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே,--- அவ்இளையர்

 

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய்,நீ வெறும்வாய்

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே,--- முன்தானை 

 

பட்டால் மகிழ்வு பதிந்தாய்,பதைக்க அம்பு

பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- கிட்டாமெய்த் 

 

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய்,செந்தேள்முன்

தீண்டிடினும் அங்கு ஓர் திறன்உண்டே,--- வேண்டி அவர்

 

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய்,மற்ற அதைஓர்

நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே,--- தாக்கவர்க்காய்த்

 

தேட்டாண்மை செய்வாய், அத் தேட்டாண்மையைத்தெருவில்

போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே,--- வாட்டாரைக் 

 

கொண்டார் உடன் உணவு கொள்கின்றாய்,குக்கலுடன்

உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே --- மிண்டு ஆகும் 

 

இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய்,புன்மலத்தை

நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே, --- மங்கையர்தம் 

 

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய்,ஈமம் அது

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே,--- பூத்தாழ்வோர்

 

காட்டாக் குரல் கேட்பாய்,கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்

கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே,--- கோட்டாவி 

 

ஆழ்ந்தார் உடன்வாழ ஆதரித்தாய்,ஆழ்ங்கடலில்

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே --- வீழ்ந்தார் உள்

 

வீட்டால் முலையும்,எதிர் வீட்டால் முகமும் உறக்

காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே,--- கூட்டாட்குச்

 

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்

பை கையிடல் கண்டும் பயந்திலையே,--- சைகை அது

 

கையால் ஒருசிலர்க்கும்,கண்ணால் ஒருசிலர்க்கும்,

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே,--- எய்யாமல்

 

ஈறு இகந்த இவ்வகையாய்,இம்மடவார் செய்கையெலாம்

கூறுவனேல்,அம்ம! குடர் குழம்பும்;--- கூறும்இவர்

 

வாய் ஒருபால் பேச,மனம்ஒருபால் செல்ல, உடல்

ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்;--- ஆயஇவர்

 

நன்று அறியார்,தீதே நயப்பார்,சிவதலத்தில்

சென்று அறியார்,பேய்க்கே சிறப்பு எடுப்பார்,--- இன்று இவரை

 

வஞ்சம் என்கோ?வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்

புஞ்சம் என்கோ?மாநரக பூமி என்கோ?--- அஞ்சுறும் ஈர்

 

வாள் என்கோ?வாய்க்கு அடங்கா மாயம் என்கோ?மண்முடிவு

நாள் என்கோ?வெய்ய நமன் என்கோ?--- கோள்என்கோ? 

 

சாலம் என்கோ?வான் இந்த்ர சாலம் என்கோ?வீறு ஆல

காலம் என்கோ?நின் பொல்லாக் காலம் என்கோ?--- ஞாலம்அதில் 

 

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,

மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்..... --- திருவருட்பா.

 

 

நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?

     பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?

     நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்

 நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?

     சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?

     நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து

 

எய்த்த இடை அது கொடியோ?துடியோ?

     மிக்க திருஅரை அரவோ?ரதமோ?

     இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,

 இச்சை விரகுடன் மடவார் உடனே,

     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,

     ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.--- திருப்புகழ்.

 


இலஞ்சியாலே ---


இலஞ்சி - உந்தி.  இங்கு உந்திச் சுழினைக் குறித்தது.


மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென

     வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக

     வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய

     உந்தியென் கின்றமடு ...... விழுவேனை... ---  திருப்புகழ்.


ஆசா பசாசு மூடி ---


ஆசையாகிய பேய் பிடிக்க, அதனால் நன்மை இன்னதென்று அறியவும், தீமையை நன்மை என்றும், துக்கத்தைச் சுகம் என்றும் கருதி உழல்வர்.


ஆசார ஈனன் ஆகி ---


ஆன்றோர்கள் வடித்த நல்லொழுக்கத்தை மேற்கொள்ளாமல், நீராடாமல் உண்பதும்,  உடுத்த உடையையே மீண்டும் மீண்டும் உடுப்பதும், எச்சில்பட்ட கலங்களில் உண்பதும், பலர் கவ்விய பாத்திரங்களில் பாத்திரம் கடித்துக் குடிப்பதும், மது மாமிசங்களை உண்பதும், இன்னோரன்ன பிறவும் ஆகிய அநாசாரங்களை உடையராய் அலையும் மாந்தர் பலர்.


ஆபாசன் ஆகி ---


ஆபாசம் - அசுத்தம்.


மனத்தினால் தீயவை நினைத்தும், வாக்கினால் தீயவை உரைத்தும், காயத்தால் தீயவை புரிந்தும், அசுத்தராகி இம்மை நலனையும், மறுமை நலனையும் ஒருங்கே இழப்பர்.  மனம் தூய்மை உடைய தியானமும், வாக்குத் தூய்மை உடைய துதியும், காயம் தூய்மை உடைய வழிபாடும் புரிதல் வேண்டும்.


திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

        செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,

        தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

        அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

        அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

        வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

        விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து, மின்னொளி கடந்த

        ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

        ஈசனே, மாசிலா மணியே.            --- சிவப்பிரகாசர்.


மனதால் உண்டாகும் அழுக்கு ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.


பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்னும் வாயால் உண்டாகும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.


பாவச் செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.


இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.

  

இதனைச் சுருக்கமாகத் திருவள்ளுவர், "மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்று அருளிச் செய்தார். மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும். மன அழுக்கு நீங்கினாலே, வாய் அழுக்கும், மெய் அழுக்கும் இல்லாது ஆகும்.



அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு ---


அருணகிரிநாதப் பெருமான் எந்தை கந்தவேள் கருணை முழுவதும் பெற்று, பாசகரண பசுகரணங்களை நீங்கி, பதிகரணம் பெற்று, பரஞானபரராய் விளங்கி, உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஓதி உய்வு பெறும்பொருட்டு, திருப்புகழாகிய இத் தமிழ் மறையைப் பாடியருளினார் என்பது "எனோரும் ஓதுமாறு" என்ற திருவாக்கினால் நன்கு புலனாகின்றது.  இவ்வாறே பிறிது ஒரு இடத்திலும் அடிகள் கூறியருள்வதை நோக்குக.


….. ….. ….. உலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்

     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்

          ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்...  --- (ஆனாதஞான) திருப்புகழ்.


முத்திக்கு வித்தாக எத்திக்கும் தித்திக்குமாறு சந்தத் தமிழ்ப் பாமாலையை அடிகளார் ஓதி நமக்கெல்லாம் உபகரித்தவர். ஆதலின், முருகவேள் திருவருளை எளிதில் பெறுவதற்கு சிறந்த சாதனம், நாள்தோறும் திருப்புகழை நியதியாகப் பாராயணம் செய்வதே ஆகும்.


பலகாலும் உனைத்தொழு வோர்கள் 

  மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே...   ---  (நிலையாத) திருப்புகழ்.


எனோரும் என்றமையால், எல்லா மதத்தினரும், எல்லாக் குலத்தினரும், எல்லாப் பக்குவிகளும், எல்லாக் காலத்தவரும், எல்லாக் கொள்கையரும் இத் திருப்புகழை ஓதி உய்வு பெறுதல் வேண்டும் என்பது உறுதியாகின்றது.


நான் ஆசு பாடி ---


ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்று கவி நான்கு வகைப்படும்.  நாலுகவி த்யாகா என்பார் அநுபூதியில். அருணகிரிநாதர் ஆசுகவி பாடுவதில் வல்லவர்.


வாராகி ---


சத்த மாதர்களில் ஒருவர். சத்தமாதர்களாவார் --- அபிராமி, மகேச்சுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. இவர்களது வாகனம் --- அன்னம், இடபம், மயில், கருடன்,சிங்கம், யானை, பேய்.  இவர்களது ஆயுதம் --- மறை, பிநாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம்,  சூலம்.


விசாகனே ---


விசாக நட்சத்திரத்திற்கு உரியவர். வி-சாகம். சிறந்த பட்சங்களை உடைய மயில்வாகனத்தை உடையவர்.


கருத்துரை


முருகா! பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி, உழலாமல், தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரிவீர்.


No comments:

பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...