Showing posts with label சிறுபஞ்சமூலம். Show all posts
Showing posts with label சிறுபஞ்சமூலம். Show all posts

மூலம் 17

 “நட்டாரை ஆக்கி, பகைபணித்து, வை எயிற்றுப்

பட்டுஆர் அகல்அல்கு லார்படிந்து, - ஒட்டித்

தொடங்கினார், இல்லகத்து அன்பில் துறவா

உடம்பினான் ஆய பயன்.” -- சிறுபஞ்சமூலம்.


நட்புக்கொண்டவரைச் செல்வராக்குதல்; பகைவரைப் பணியச் செய்தல்; கூரிய பற்களையுடைய, பட்டாடை அணியப்பெற்ற, அகன்ற அல்குலையுடைய மாதரைச் சேர்ந்து இன்புற்று வாழ்தல்; தமக்கு உறவின் முறை ஆயினார் மாட்டும், தாம் பிறந்த குடியில் பிறந்தவரிடத்தும் அன்பினால் நீங்காமை ஆகிய இவ்வைந்தும் அரிதான மக்கள் பிறப்பினால் உண்டான பயன்கள் என்பர்.


மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய

மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால்

கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த

நாய்வாயுள் நல்ல தசை.” -- சிறுபஞ்சமூலம்.


நற்குணம் இல்லாதார் முன்பு கோபம் கொள்ளுதல் நல்லது. அவரிடத்துச் சால்புடைமை காட்டுவது தீதாக முடியும். எனவே, மிக்க வலி செய்தல் நல்லது. கோய்போலும் வாயை உடைய, கீழ்மக்களுக்குக் கொடுக்கும் உணவானது, குரைத்துக் கொண்டே எழுந்த நாயின் வாயில் கொடுத்த, நல்ல மாமிசத்தினும் நல்லது. (கோய் - கள் முகக்கும் கலம், இது கீழ்மக்கள் வாய்க்கு ஒப்பு. கீழ் மக்கள் வாயானது, மிகுந்த உணவை உருட்டிப் போடுவதற்கு ஏற்றபடி அகன்றதாயும், வேற்று வடிவம் பெற்றதாயும், கெட்டமொழிகள் வெளிப்படத் தக்கதாயும், அருவருக்கத் தக்கதாயும் இருக்கும்.)


மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை

இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த

பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார்

நகைகெட வாழ்வதும் நன்று.” -- சிறுபஞ்சமூலம்.


தனக்குப் பிறனொருவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் பெருமை தரும். பிறர் செய்த தீமையை நினைத்துக் கொண்டே இருத்தல் சிறுமையாகும். தான் செய்த பிழைகள் கெடும்படி வாழ்தலும்; பல பொருள்களையுடைய செல்வர்களும், பெரியோர்களும் ஏளனம் செய்து நகைப்பது நீங்க வாழ்தலும் நன்மையாம்.


மூலம் 14

“கொண்டான் வழி ஒழுகல் பெண், மகன் தந்தைக்குத்

தண்டான் வழி ஒழுகல், தன்கிளைஅஃது, - அண்டாதே

வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு

கோல்வழி வாழ்தல் குணம்.”      -- சிறுபஞ்சமூலம்.


இல்வாழ்க்கைக்கு இசைந்த பெண்ணானவள்,  தன்னை மணந்து கொண்டவனுடைய சொல்வழியே நடத்தலும், ஒருவனுக்கு மகனாய் இருப்பவன், தந்தையினது கட்டளையை விட்டு நீங்காதவனாய், அவன் காட்டும் வழியிலேயே நடத்தலும், அத் தந்தையினுடைய சுற்றத்தார்க்கு அவரது குணமே பொருத்தி இருத்தலும், மன்னனுடைய போரைச் செய்யும் வீரர்கள், பகைவரோடு சேர்ந்துகொள்ளாமல், அரசன் பகைவர்மீது ஏவுகின்ற வேல் செல்லும் வழியேபோய் அவனை நீங்காது போர்செய்தலும், அரசன் செங்கோல் முறைப்படி ஒழுகுதலும் நன்மையைத் தருவனவாம்.


மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா,

தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா,

கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே

கொண்ட விரதம் குறைவு.”.      – சிறுபஞ்சமூலம்


தாழைமலர் முடிக்கப்பட்டு விளங்குகின்ற அழகிய கூந்தலை உடையவளே! நண்பர்களிடத்துத் துன்பம் செய்தலும், அவர்கள் துன்புறும் காலத்தில் அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடாதிருத்தலும், பகைவரிடத்து நட்புக் கொள்ளுதலும், உள்ளத் தூய்மை உடையவரின் தொடர்பை விட்டுநீங்குதலும், கைக்கொண்ட நோன்பில் குறைவுபடுதலும் ஆகிய இவைகள் தீய பயன்களையே தரும்.


மூலம் 12

“கோறலும் நஞ்சு, ஊனைத் துய்த்தல் கொடுநஞ்சு,

வேறலும் நஞ்சு, மாறு அல்லானை, - தேறினான்

நீடாங்கு செயதலும் நஞ்சுஆம், இளங்கிளையை

நாடாதே தீதுரையும் நஞ்சு.”    -- சிறுபஞ்சமூலம்.


ஓர் உயிரை உள்ளத்தில் அருள் இல்லாமல் கொல்லுதலும், ஒருவனுக்கு உயிரைக் கொல்லும் நஞ்சு போன்றது. அங்ஙனம் கொல்லப்பட்ட உயிரின் தசையைத் தின்னுதலும் கொடிய நஞ்சு போன்றது. தனக்கு எதிர் அல்லாதவனை, எதிர்த்து வெல்லுதலும் நஞ்சு போன்றது. ஒரு காரியத்துக்கு உரியவனென்று ஆராய்ந்து தெளியப்பட்டவனாகிய ஒருவன், அக் காரியத்தின் மேல் கால நீட்டிப்பு செய்தலும் நஞ்சு போன்றது. இளைத்த சுற்றத்தாரை ஆராயாமலே பழுது சொல்லுதலும் நஞ்சு போன்றது. (துன்பம் செய்பவை இவை என்று கூறப்பட்டது)


மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு,

ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான்

சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்,

நாவகமே நாடின் நகை.”          -- சிறுபஞ்சமூலம்


பழிப்புக்கு இடமாகிய செயல்களுக்கு நாணம் இல்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட நல்ல விரதமும், தனக்கே உண்பொருள் இல்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமை இல்லாதவனது வீரத் தொழிலும், செந்தமிழில் தன் மனதைத் தெளியச் செய்யாதவன் பாட்டுக்களைச் செய்தலும், ஆராய்ந்து பார்த்தால் சிரிப்புக்கு இடமாகும்.


சால்பு என்பது சான்றாண்மை ஆகும். அது நல்ல குணங்களைப் கடைப்பிடித்தல் ஆகும். பழிப்புக்கும் பாவத்துக்கும் இடம் தரும் செயல்களைச் செய்வதற்கு நாணப்படுதல் சிறந்த பண்பு ஆகும். அது ஞான்றோர்களுக்குச் சிறந்த அணிகலம் ஆகும். “அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல் பிணி அன்றோ பீடு நடை” எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க. 


நடை என்பது நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நல்லொழுக்கம் இல்லாத ஒருவன் விரதம் மேற்கொள்வது நகைப்புக்கு இடமாகவே முடியும். விரதம் மேற்கொண்டு இறையருளைப் பெற எண்ணுபவன், தன்னிடத்து உள்ள தீய குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.


சேவகம் என்னும் சொல்லுக்கு வீரம் என்றும் பொருள் உண்டு. ஏண் என்னும் சொல்லுக்கு, திண்மை, வலிமை என்று பொருள். உள்ளத் திண்மையும் உடல் வலிமையும் இல்லாதவன் சேவகம் செந்வது நகைப்புக்கு இடம் ஆகும் என்றார்.


மூலம் 10

 “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் தன்பார்ப்பு,

நாவிற்கு நன்றல் வசை.” -- சிறுபஞ்சமூலம்.


சிலந்திப் பூச்சிக்குத் தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும். எருது முதலிய மிருகங்களுக்கு நீண்ட கொம்புகளே எமனாகும். வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும். நண்டுக்குத் தன் குஞ்சுகளே எமனாகும். ஒருவனுடைய நாவுக்கு, நன்மையல்லாத பழியைக் கொடுக்கும் பிறரை நன்று அல்லாத வசைமொழிகள் சொல்லுதல்  எமனாகும்.


சிலந்திப்பூச்சி முட்டை இட்டவுடன் அழிதலால், “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்’’ என்றார். “நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில் கொண்ட கரு அளிக்கும்” என்பது ஔவையார் அருளிய நல்வழி. விலங்குகளுக்கு நீண்ட கொம்பு இருந்தால், மரங்கள் முதலியவற்றில் குத்தி முறிந்து, அதனால் அவை வருத்தம் அடைய நேரும். அல்லது பிற உயிர்களின் மீதோ, மனிதர் மீதோ பட்டாலும் கேடு விளைவிக்கும் என்பதாலும், “நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம்” என்றும் கொள்ளலாம். கவரிமான் முட்செடி முதலியவற்றில் பட்டுத் தனது உடம்பில் உள்ள மயிர் ஒன்று உதிர்ந்தால், அது உழிரை விட்டுவிடும் என்பதால், “மயிர்தான் வலம்படா மாவிற்குக் கூற்றம்” என்றார். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா” என்பது திருக்குறள்.  


மூலம் 9

“கொன்றுஉண்பான் நாச்சாம், கொடுங்கரிப் போவான் நாச்சாம்,

நன்றுஉணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம், - ஒன்றானுங்

கண்டுழி நாச்சாம், கடவான் குடிப்பிறந்தான்

உண்டுழி நாச்சாம் உணர்ந்து.” -- சிறுபஞ்சமூலம்.


ஓருயிரைக் கொன்று அதன் தசையைத் தின்பவனுடைய நாக்கானது அற்று விழும். பொய்ச்சாட்சி கூறப்போகின்றவனுடைய நாக்கானது அற்று விழும். நன்றாகக் கற்று அறிந்தவர்களுக்கு எதிரில், கற்று உணராதவனுடைய நாக்கானது வர்கள் வினாவுக்கு விடை கூறமுடியாமல் அடங்கிப் போகும். தான் சொல்லிய சொல்லைக் கடவாத நெறியில் நடப்போன்,  கடன் தண்ட வேண்டி வந்தானொருவனைப் பார்த்த இடத்து, தான் வாக்குச் சொன்னவனிடம் பேசுவதற்கு நாக்கு எழாது. உயர்குடியில் பிறந்தவன், தான் யாதானும் ஒருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்றுப் பின் அவன் குற்றஞ் செய்ததாக அறிந்தபொழுது, அதனை உணர்ந்து, தன் நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லான்.


மூலம் 8

 “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் குற்றம் குறைகளை மறந்து அருள் உடையவன் ஆதல். கால்களுக்கு அழகாவது, பிறரிடத்தில் இரக்கப் போகாமை. ஆராய்ச்சிக்கு அழகாவது, பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல். இசைக்கு அழகாவது, அதனைக் கேட்டவர்கள், இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம். புகழினால் விளங்குகின்ற, அரசனுக்கு (தலைவனுக்கு) அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தமாட்டான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம். 


மூலம் 7

 “பற்றினான் பற்றுஅற்றான் நூல்தவசி, எப்பொருளும்

முற்றினான் ஆகும் முதல்வன்நூல் – பற்றினால்,

பாத்துண்பான் பார்ப்பான், பழிஉணர்வான் சான்றவன்,

காத்துண்பான் காணான் பிணி.” -- சிறுபஞ்சமூலம்.


எல்லாப் பொருள்களிலும் கலந்து நின்றே, அவற்றில் சார்பு இல்லாதவனாகிய இறைவனால் செய்யப்பட்ட முதல் நூலைக் கடைபிடித்து ஒழுகுகின்றவன் வீடு பேற்றை விரும்பி நோற்பவனாவான். எல்லாப் பொருளையும் முற்ற உணர்ந்தவன் எல்லார்க்கும் தலைவன் ஆவான். நூல்களில் கூறப்பட்ட அறங்களைக் கைக்கொள்வதன் மூலம், தன் மனைக்கு வரும் விருந்தினர் முதலியவர்களை உண்பித்துத் தானும் உண்கின்றவன் அந்தணன் ஆவான். பழிக்கு எதுவான செயல்களை அறிந்து விலக்குவோன், அறிவால் நிறைந்த பெரியோன் ஆவான். உடலுக்குப் பொருந்தாத உணவுகளை மறுத்து உண்பவன் நோய் கொள்ளான்.


மூலம் 6

“படைதனக்கு யானை வனப்பாகும், பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாம், - நடைதனக்குக்

கோடா மொழிவனப்பு, கோற்குஅதுவே, சேவகர்க்கு

வாடாத வன்கண் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


    நால்வகைப் படைக்கு, யானைப் படையே அழகாகும். பெண்ணினுடைய இடைக்கு நுண்மை அழகாகும். ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு  நடுநிலை தவறாத சொல்லே அழகாகும். செங்கோலுக்கும் அந்தக் கோடாத மொழியே அழகாகும். போர் வீரர்க்கு, கெடாத வீரமானது, அழகாகும்.


மூலம் 5

“உடம்புஒழிய வேண்டின் உயர்தவம் ஆற்று,ஈண்டு

இடம்பொழிய வேண்டுமேல் ஈகை, - மடம்பொழிய

வேண்டின் அறிமடம், வேண்டேல் பிறர்மனை,

ஈண்டின் இயையும் திரு.” -- சிறுபஞ்சமூலம்.


பிறந்து இறந்து உழலும் அல்லல் வாழ்க்கைக்கு இடமாக உள்ள உடம்பை (இனிப் பிறவி வாராமல்) ஒழிக்க வேண்டினால், உயர்ந்த தவத்தைச் செய்வாயாக. வாழும் காலத்தில் நீ இருக்கும் இடம் புகழோடு மேன்மையை அடைய வேண்டுமானால் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவுவாயாக. மெல்லிய வீரம் உனக்குள்ளே நிறைய வேண்டுமானால் அறிய வேண்டுவனவற்றை அறிந்து, தான் அறிந்தமையைப் பிறருக்கு வெளிக் காட்டிக் கொள்ளாமல், மனம் அடங்கி ஒழுகுதல் வேண்டும். பிறர்மனைவியை விரும்பாது ஒழிய வேண்டும். வருவாய் சிறிதே ஆனாலும், நாளும் வந்து சேருமானால், அதுவே நாளடைவில் பெரும் செல்வம் ஆகிவிடும்.


“ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை இங்கு வைத்து எண்ணுதல் நலம். "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், "உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே" என்றும், "செல்வத்துப் பயனே ஈதல்" என்றும் புறநானூறு கூறும். "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்" என்று கலித்தொகை கூறும். "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" என்று மணிமேகலை அறிவுறுத்தும். இதனால், இசைபட வாழ்தலை ஈகை அறிவிக்கின்றது என்று அறியலாம். பின்வரும் பாடல்களையும் ஓதி உணர்தல் நலம்.


“இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம்போல் பெரிது உவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்(கு)

அடையாவாம் ஆண்டைக் கதவு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

பொருளில்லாத காலத்திலும் இயன்ற அளவில், பொருளுள்ள காலத்தில் மிகவும் மகிழ்ந்து கொடுத்தது போலவே, ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் ஆகிய நற்பண்போடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு சுவர்க்க உலகத்தின் கதவுகள் மூடப்படாது திறந்தே இருக்கும்.


ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து. ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

சொல்லப்பட்ட அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல் ஆகும். அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல் ஆகும்.  இவ்விரு செயல்களாலும் நிறைந்த புகழை அடைந்தவனை, வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கும்.


“ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு.” ---  நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

பிறர்க்கு கொடுத்து உண்பவன் உலகத்தில் புகழை நிறுத்துவான். அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான். விரும்பாதவர் முன்,ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சி உண்டாக்கும். தனது தகுதி அறியாதவனை இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.


மடம் என்பது மென்மையைக் குறிக்கும். அது மென்மையின் பயனாகிய இணக்கத்தை உணர்த்துகின்றது. தான் கூறுவதை அறியமாட்டாத ஒருவரிடத்தில் அவரது அறியாமையைக் கூறுவதால் பயனில்லை. அறிமடம் என்பது, தான் கூறுவதை அறியும் அறிவு இல்லாதவரிடத்தில் அவரது அறியாமையை அறிந்திருந்தும் அறியாதவர் போன்று இலுத்தல். 


பாவங்களில் கொடியது பிறர்மனை விரும்பல். எனவே,  பிறர்மனை வேண்டேல் என்றார் இந்நூலாசிரியர். வள்ளுவரும், “பகை பாவம் அச்சம் பழி என நான்கும், இகவாவாம் இல் இறப்பான் கண்” என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக. “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என ஔவைப் பிராட்டியார் அருளிதையும் அறிக.


மூலம் 4


“கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதுஇரண்டும்

இல்லாதாள் எக்கழுத்தம் செய்தலும், - இல்லாதான்

ஒல்லாப் பொருள்இல்லார்க்கு ஈத்துஅளியான்என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை.” -- சிறுபஞ்சமூலம்.


ஆசிரியனிடத்து கற்கவேண்டிய முறைப்படி நூல்களைக் கல்லாத ஒருவன், தானே நூல்களை ஆராய்ந்து காண்கின்ற நுண்பொருளும்; இரண்டு காதுகளும் இல்லாத ஒருத்தி, தான் மிக்க அழகுடையவள் என்று இறுமாப்பு அடைதலும்; கையில் பொருள் இல்லாதவன்,  தன்னைப் போல் பொருளற்ற வறியவர்கட்கு, அவர்களின் விருப்பம் தணிவதற்குப் பொருந்தாத பொருளைக் கொடுத்து, தான் வறியவரிடத்து மிகவும் அருளுடையவன் என்று தற்பெருமை சொல்லுதலும்; அறிவு உடைய நல்லவர்கள் கேட்டால், அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்.

    ஆசிரியனிடத்து நூல்களை முறைப்படிக் கல்லாதவன் நுண்பொருளை ஆராய்ந்து சொல்லத் தொடங்கினால், நேர் பொருள் அல்லாமல், அவையில் சொல்லத் தகாத சொற்களைக் கூற முற்பட்டு இகழ்ச்சிக்கு உரியவனாவன். குருவின் அருள் இல்லாமல் எந்த நூலையும் யாரும் முறைப்படக் கற்றுவிட முடியாது. “கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும், கொள்ளார் அறிவு உடையார்” என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம், --- மற்றதனை

நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லி, தன்

புல்லறிவு காட்டி விடும். ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தாம் ஆழ்ந்து பயின்றதும் இல்லாமல், தக்க கேள்வியும் இன்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நற்புலவர் கூடியுள்ள அவையில் சென்று நாணம் இன்றி விரித்துரைத்து, அறிவில்லாதவன் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான்.


மூலம் 3

“கற்புஉடைய பெண்அமிர்து, கற்றுஅடங்கி னான்அமிர்து,

நற்புடைய நாடுஅமிர்து,அந் நாட்டுக்கு - நற்புடைய

மோகமே சேர்கொடி வேந்துஅமிர்து, சேவகனும்

ஆகவே செய்யின் அமிர்து.” -- சிறுபஞ்சமூலம்


கற்புள்ள பெண்ணானவள் தன் கணவனுக்கு அமிர்தம் போல்பவள். அறிவு நூல்களைக் கற்று, அவற்றின் வழியில் அடங்கி நிற்பவன் உலகத்தார்க்கு அமிர்தம் போன்றவன். நன்மையுள்ள நாடு அந்நாட்டரசனுக்கு அமிர்தம் போன்றது. அந்த நாட்டுக்கு நன்மையைச் செய்கின்ற மேகத்தை அளாவுகின்ற கொடியை உடைய அரசன் அமிர்தம் போல் இன்பம் செய்வான். அவ்வேந்தனது சேவகனும், வேந்தனுக்கு நன்மையானவற்றையே செய்வானாயின்,  அவன் அவ்வேந்தனுக்கு அமிர்தம் போல்வான்.


மூலம் - 2

“பொருள்உடையான் கண்ணதே போகம், அறனும்

அருள்உடையான் கண்ணதே ஆகும், - அருள்உடையான்

செய்யான் பழி,பாவம் சேரான், புறமொழியும்

உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.”    – சிறுபஞ்சமூலம்.


உலக இன்பமானது (அறவழியில் ஈட்டிய) செல்வப் பொருள் உடையவனிடத்து உண்டாகும். அறவழியில் ஒழுகும் நல்லொழுக்கமும் உள்ளத்தில் அருள் உள்ளவனிடத்தில் உள்ளதாகும். அத்தகைய அருள் உடையவன்,  பழிப்புக்கு இடமாகிய தீய செயல்களைச் செய்யான். தீவினையைச் செய்ய மனத்திலும் நினையான். அதானல் அவனிடத்து பழியும், பாவமும் சேராது. புறங்கூற்றுச் சொற்களையும் மற்றையவர் காதுகளில் செலுத்திப் பிழைக்க மாட்டான்.


இவ்வுலக இன்பத்தை அடைதற்கு, பொருள் காரணம் ஆனதுபோல், அவ்வுலக இன்பத்தை அடைவதற்கு அருள் காரணம் ஆயிற்று என்பதால் “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என்று அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.


மூலம் - 1

"ஒத்த ஒழுக்கம், கொலைபொய் புலால்களவோடு

ஒத்த இவையல ஓர்நூல் இட்டு-ஒத்த

உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்

சிறுபஞ்ச மூலம் சிறந்து."


இதன் பதவுரை ---


ஒத்த உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல்  - உலகில் பொருந்திய,  மிகுதியாகிய சிறுவிலைக் காலம் எனப்படும் பஞ்சகாலத்திற்குக் காரணமாகிய மழையின்மையைப் போக்கி, உயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களைப் போக்குகின்ற மழையைப் போல, சிறு பஞ்சமூலம் - (உடம்புக்கு உண்டாகும் நோய்களை அகற்றும்) சிறுய ஐந்து வேர்களைப் (பஞ்சமூலங்களைப்) போன்று, ஒத்த ஒழுக்கம் –  மனிதர்கள் மேற்கொண்டு ஒழுகவேண்டியது எல்லார்க்கும் பொதுவான நல்லொழுக்கம். (அது) கொலை – உயிரைக் கொல்லுதல், பொய் – இல்லாததும் நடவாததும் ஆகிய ஒன்றைக் கூறல், புலால் – புலால் உண்ணுதல், களவு ஓடு – களவு செய்தல் ஆகிய இவை இல்லாது இருத்தல் ஆகும். ஒத்த – உயிர்களுக்குப் பொருந்தி இருக்கவேண்டிய, இவை அல - இவற்றுக்கு எதிரிடையானவைகளைப் போக்கி (நன்மை பயக்கவல்ல)  ஓர் நூல் இட்டுச் சிறந்து – ஒப்பற்ற இந்நூல் கருத்துக்களைச் சிறப்பாக, கூறீர் - (கல்வியறிவாளரே! நீங்கள் மக்கள் தீய குணங்களை நீக்கி நற்குணங்களைப் பெருக்குமாறு) சொல்லுவீர்களாக.


பஞ்சத்தைத் தீர்க்கும் மழையைப் போல, மக்கள் வினைகளைத் தீர்க்கும் இச் சிறுபஞ்ச மூலம் என்பது கருத்து.


இந்நூலில் ஒழுக்கம் கொலை செய்யாமை முதலிய ஐந்தைப் பற்றிய பொருள்களே வருவதால், இவ்வைந்தையும் சேர்த்துச் சிறுபஞ்சமூலம் கூறுங்கள் என்றார். கூறுங்கள் என்பதன் மூலம் நீங்கள் கற்று உணர்ந்து, அதன்வழி நடந்து பிறருக்கும் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்துங்கள் என்றார். “ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்” என்று திருவள்ளுவ நாயனார் அருளி உள்ளதை இங்கு வைத்து எண்ணுதல் வேண்டும். பொய்யாமை, புலாலுணுண்ணாமை, கள் குடியாமை, களவு செய்யாமை முதலியன ஒழுக்கத்தில் அடங்கி நிற்கும் சிறந்த அறங்களாக இருப்பதால் அவை நான்கையும் தனித்தனி அறமாகக்கொண்டு மற்ற அறங்களை எல்லாம் கொல்லாமை என்ற ஒன்றினுள் அடக்கி, இவ்வைந்தையும் சிறுபஞ்சமூலம் எனக் கூறினார். 


மூலம் என்னும் சொல்லுக்கு, வேர், அடி, கிழங்கு என்றும் பொருள் உண்டு. மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் ஆகிய பஞ்சமூலங்கள் மக்கள் உடலுக்கு உண்டாகும் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுட்களிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்து உணர்கின்றவர் பிறவிப் பிணியைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்ட வல்லது என்பது அறிவுறுத்தப்பட்டது.


பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் ஆராத காதலாகி (பொது) முருகா!  பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல்,  தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரி...