“கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதுஇரண்டும்
இல்லாதாள் எக்கழுத்தம் செய்தலும், - இல்லாதான்
ஒல்லாப் பொருள்இல்லார்க்கு ஈத்துஅளியான்என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை.” -- சிறுபஞ்சமூலம்.
ஆசிரியனிடத்து கற்கவேண்டிய முறைப்படி நூல்களைக் கல்லாத ஒருவன், தானே நூல்களை ஆராய்ந்து காண்கின்ற நுண்பொருளும்; இரண்டு காதுகளும் இல்லாத ஒருத்தி, தான் மிக்க அழகுடையவள் என்று இறுமாப்பு அடைதலும்; கையில் பொருள் இல்லாதவன், தன்னைப் போல் பொருளற்ற வறியவர்கட்கு, அவர்களின் விருப்பம் தணிவதற்குப் பொருந்தாத பொருளைக் கொடுத்து, தான் வறியவரிடத்து மிகவும் அருளுடையவன் என்று தற்பெருமை சொல்லுதலும்; அறிவு உடைய நல்லவர்கள் கேட்டால், அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்.
ஆசிரியனிடத்து நூல்களை முறைப்படிக் கல்லாதவன் நுண்பொருளை ஆராய்ந்து சொல்லத் தொடங்கினால், நேர் பொருள் அல்லாமல், அவையில் சொல்லத் தகாத சொற்களைக் கூற முற்பட்டு இகழ்ச்சிக்கு உரியவனாவன். குருவின் அருள் இல்லாமல் எந்த நூலையும் யாரும் முறைப்படக் கற்றுவிட முடியாது. “கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும், கொள்ளார் அறிவு உடையார்” என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.
“கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம், --- மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லி, தன்
புல்லறிவு காட்டி விடும். --- நாலடியார்.
இதன் பொருள் ---
தாம் ஆழ்ந்து பயின்றதும் இல்லாமல், தக்க கேள்வியும் இன்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நற்புலவர் கூடியுள்ள அவையில் சென்று நாணம் இன்றி விரித்துரைத்து, அறிவில்லாதவன் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான்.
No comments:
Post a Comment