056. கொடுங்கோன்மை - 09. முறைகோடி மன்னவன்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நீதிநெறிமுறை தவறி அரசன் ஆட்சி புரிவானானால், அவனது நாட்டில் மேகமானது மழை பொழிதலைச் செய்யாது" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்....

“முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னவன் முறை கோடிச் செய்யின் --- மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், 

உறைகோடி வானம் பெயல் ஒல்லாது --- அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.

(இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமீந்துள்ளதை அறியலாம்....

“சிறையில் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா

மறையின்றிச் செய்யும் வினை.” --- இன்னா நாற்பது.

இதன் பொருள் ---

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா - வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம்; உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா - மழைத்துளி ஒழுகுதலை உடைய பழைய கூரையை உடைய மனையில் பொருந்தி வாழ்தல் துன்பமாம்; முறை இன்றி ஆளும் அரசு இன்னா - நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாம்; மறை இன்றி செய்யும் வினை இன்னா - சூழ்தலில்லாமல், செய்யுங் கருமம் துன்பந் தருவதாகும். 


“செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்,

வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்,

பெண்பால் கொழுநன் வழிச்செலவும், இம்மூன்றும்

திங்கள்மும் மாரிக்கு வித்து.” --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் - வேள்விச் செந்தீயை வளர்க்கின்ற அந்தணர்கள் தமக்கு உரிய அறத்தை மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் - கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன் முறையாக ஆளும் வழியில் சேர்ந்து நடத்தலும்; பெண்பால் கொழுநன் வழிச் செலவும் - பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், தன் கணவனுடைய குறிப்பின் வழியில் நடத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திங்கள் மும்மாரிக்கு வித்து - மாதந்தோறும் பெய்யவேண்டிய மூன்று மழைக்கும் காரணங்களாம்.

அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது.



“கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்,

உள்பொருள் சொல்லாச் சலம் மொழி மாந்தரும்,

இல் இருந்து எல்லை கடப்பாளும், இம்மூவர்

வல்லே மழை அருக்குங் கோள்.”  --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும் - தான் கொள்ளுதற்குரிய பொருளை விரும்பி குடிகளை வருத்துகின்ற அரசனும்; உள்பொருள் சொல்லா சலம் மொழி மாந்தரும் - உண்மை நிகழ்ச்சியைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்ற மனிதரும்; இல் இருந்து எல்லை கடப்பாளும் - ஒருவனுக்கு மனையாளாய் வீட்டிலிருந்து, அவன் சொல், மனை என்னும் இரண்டின் எல்லையைக் கடந்து நடப்பவளும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், வல்லே மழை அருக்கும் கோள் - விரைந்து மழையைக் குறைக்கின்ற கோள்களாம்.

குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாதென்பது.

மணிபல்லவத்தினின்றும் நீங்கிய மணிமேகலா தெய்வம், ''இரவு கழிந்தால் மணிமேகலை என் கையகப்படுவாள்'' என்று வேட்கை நோயால் துயிலாது இருந்த உதயகுமரன் முன் தோன்றி, "மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும், மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை, மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னும் தகுதியின்றாகும், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த, அவத்திறம் ஒழிக" என்று அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு, உவவனம் சென்று அங்கே துயிலும் சுதமதியை எழுப்பி, "யான் மணிமேகலா தெய்வம்; இந்திர விழாக் காண்பற்கு வந்தேன்; நீ அஞ்சாதே, மணிமேகலைக்குப் புத்தன் அறநெறியில் செல்லும் நற்பொழுது வந்து உற்றதாகலின் அவளை எடுத்துச் சென்று மணிபல்லவத்தில் வைத்தேன் என்று சொன்னது....

மணிமேகலை என்னும் காப்பியம், "துயில் எழுப்பிய காதை"யில் கூறும் செய்தியைக் காண்போம். 


மணிமேகலை தனை மணிபல்லவத்து இடை

மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி,

மணிமேகலை தனை மலர்ப்பொழில் கண்ட

உதயகுமரன் உறுதுயர் எய்திக்

கங்குல் கழியில் என கையகத்தாள் எனப்


பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்

முன்னர்த் தோன்றி, "மன்னவன் மகனே!


கோல்நிலை திரிந்திடில், கோள்நிலை திரியும்,

கோள்நிலை திரிந்திடின், மாரிவறங் கூரும்,

மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை,

மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்

தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்.."

இதன் பொருள்.... 

மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவத்தின்கண் வைத்து, அதனைவிட்டு நீங்க, மணிமேகலையைப் பூஞ்சோலையில் கண்ட (அரசிளம் குமரனான) உதயகுமரன், மிக்க துன்பமுற்று,  "இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள்" என்று,  சிறந்த மெல்லிய படுக்கையில் கண் துயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி, "அரசன் புதல்வனே!  அரசனது கோல் கோடுவதாயின் கோள்களின் நிலை வேறுபடும். அங்ஙனம் கோள்கள் நிலை தவறினால் மழை பொய்யாமல் கழியும் காலம் மிகும். மழை வளம் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம். நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர் என்று கூறப்படும் தகைமை இல்லாமல் ஆகும். ஆகலின், தவத்தினை மேற்கொண்ட மணிமேகலைபால்  நீ வைத்த,  தீய விருப்பத்தின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர்.... ;


No comments:

056. கொடுங்கோன்மை - 10. ஆபயன் குன்றும்

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், " நாட்டை ஆளும் அரசன் கு...