நெஞ்சாரப் பொய் சொல்லுதல் இன்றைய வாடிக்கை

“அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி,

சிரதலம் கரம் சேர்த்திடா, "செவித் தொளை சேர்ந்த

உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின்,உரவோய்!

நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்' எனநவின்றான்.”

--கம்பராமாயணம், இரணியன் வதைப் படலம்.


 இதன் பொருள் ---

அரசன் அன்னவை உரை செய - அரசனாகிய இரணியன் அவ்வாறு கூறினானாக;  மறையவன் அஞ்சி - அந்தணன் பயந்து; சிரதலம் கரம் சேர்த்திடா - தலைமீது கரங்களைக் கூப்பி வணங்கி;  'செவித் தொளை சேர்ந்த - காதுத் தொளைகளிலே புகுந்த;  உரகம் அன்ன சொல் – பாம்புக்கு ஒப்பான அந்தச் சொல்லை; யான் உனக்கு உரை செயின் - நான் உனக்குச் சொல்லுவேனாயின்; உரவோய் - வலிமை மிக்கவனே;   நரகம் எய்துவென் - நான் நரகத்தை அடைவேன்;நாவும் வெந்து உகும் - எனது நா வெந்து அழியும்; என நவின்றான் - என்று கூறினான்.


பிரகலாத ஆழ்வார் ஓதிய ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்துத் திருமந்திரத்தைத் தான் ஓதினால் நரகம் கிடைக்கும், நாக்கு வெந்துபோகும் என்று அவருடைய ஆசிரியராகப் பணியாற்றிய ஓரு வேதியன் இரணியனிடம் முறையிட்டான். நாக்குக் கூசாமல் தான் முன்னர் வேதங்களை ஓதிய வாயால், திருமந்திரத்தைப் பாம்புக்கு ஒப்பிட்டுக் கூறினான். 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதற்கு  ஒப்ப அந்த மறையவன் நடத்தை அமைந்தது. இன்றைய காலத்தில் கூட, பலரும் அதிகார வர்க்கத்திற்கு அஞ்சியோ, அல்லது ஆதாயம் கருதி அஞ்சுவது போல் நடித்தோ இவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தான் உண்மையில் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. உண்மைக்கு உண்மையில் மரியாதை இல்லை என்பதுதான் உண்மை. அதிகார வர்க்கத்தினர் சிலரும் இரணியனைப் போலவே, தன்னை எல்லாரினும் உயர்ந்தவராக மதித்துக் கொள்ளுகின்றனர். “தன்னை வியந்தான் விரைந்து கெடும்” என்று திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்ததைநினைவில் கொள்வது இல்லை. 


“தன்னை வியந்து தருக்கலும், தாழ்வு இன்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும், - முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும், இம்மூன்றும்

செல்வம் உடைக்கும் படை.” -- திரிகடுகம்


ஒருவன் தன்னைத் தானே நன்கு மதித்து அகங்கரித்து இருத்தலும்; அடக்கம் இல்லாமல் வீணாகச் சினத்தைப் பெருகச் செய்தலும்; கருதிய எல்லாப் பொருள்களையும் இச்சிக்கின்ற சிறுமைத் தனமும், ஆகிய இந்த மூன்றும் ஒருவனது செல்வத்தை அழிக்கும் படைக் கருவிகள் ஆகும்.



No comments:

மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...