056. கொடுங்கோன்மை - 02. வேலொடு நின்றான்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தண்டித்தல் தொழிலோடு நின்ற அரசன், குடிமக்களைப் பொருள் வேண்டித் துன்புறுத்தலாவது, வழிப்பறி செய்பவன் வேலைக் கையில் எடுத்துக் கொண்டு, வழிப்போக்கனை, "உனது கையில் உள்ள பொருளைத் தா" என்று அதட்டுவது போல் ஆகும்" என்கின்றார் நாயனார்.

அரசன் கொடுங்கோல் முறையில் நின்று, வசூலித்தல் என்ற போர்வையில் குடிமக்களைப் பயமுறுத்திப் பொருள் வாங்குவது, முறையற்ற வழியில் பொருளைப் பெற முயல்வது, வேடுவன் ஒருவன், வழியில் தனியே செல்கின்றவர்களைப் பார்த்து, "உம்மிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காவிட்டால், உம்மை வேலால் கொலை செய்துவிடுவேன்" என்று கூறுவது போல் ஆகும்.


இதற்குத் திருக்குறள்..

“வேலொடு நின்றான், இடு என்றது போலும்,

கோலொடு நின்றான் இரவு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வேலொடு நின்றான் --- ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், 

இடு என்றது போலும் --- ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும், 

கோலொடு நின்றான் இரவு --- ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.

('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால் ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று, இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


"நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க,

கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு

கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின்,

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்,

வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர,

விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்

சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்

சொல்லுவது உடையேன்;".... --- கலித்தொகை.


இதன் பொருள் ---


காக்கும் கடமை பூண்ட மன்னன், அந்தப் பொறுப்பிலிருந்து தான் மாறுபட்டனன் ஆயின் நாடு என்னவாகும்? மேலும், பண்பற்ற ஒருவனின் சொல்லுக்கு இணங்கித் தீமையும் விளைத்து வந்தால், மக்கள் எவ்வளவு துயரத்தை அடைவர்? அத்தகைய மன்னவனின் கொடுங்கோலாட்சி போலக் கதிரவனின் கதிர்கள் அனலினை ஏவி உலகை வெம்மையால் வாட்டுகின்றன. காட்டிலுள்ள யானைகள், முன்னர் மதங்கொண்டு திரிவன; அம் மதநீரில் வண்டுகள் மொய்த்து விளங்கும். இப்பொழுதோ, அவை தம் அழகு கெட்டனவாய், ஈரப்பசை அற்ற நிலத்திலே உழுங் கலப்பை போலத் தம் கொம்புகளைத் தரையில் ஊன்றியவாகக், கையை உயரே நிமிர்த்தவாறு, சோர்ந்து வீழ்ந்து கிடக்கின்றன. வெற்றியையுடைய மலைகளும் வேனலால் வெதும்பியுள்ளன. போவதற்கு அருமையான அவ்வழியினைக் கடந்து சென்று, பொருள் தேட எண்ணினாய். எம்மிடம் சொல்லாது போகத் துணிந்த உனக்கு, ஒரு பொருள் உடைய செய்தியையும் சொல்ல நினைக்கிறேன். 



“அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,

நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது,

கன்றுவிட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்

அம்புவிட்டு ஆக் கறக்குமாறு.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது - தாம் பூண்ட அன்பினால் ஒருவன் மனம் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக் கொள்ளாது,  நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது - நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறி முடித்துக் கொள்ளுதல், கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் - கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது, கறவானாய் - அங்ஙனம் கறவாதவன் ஆகி, அம்புவிட்டு ஆ கறக்குமாறு - அம்பினைச் செலுத்தி ஆவினைக் கறக்க நினைப்பதை ஒக்கும்.

தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியும் இருந்து செயலை முடித்துக்கொள்ளுதல் வேண்டும்.

விரைந்து நிரம்பவும் பால் பெறவேண்டும் என்பது காரணமாகப் பசுவினைத் துன்புறுத்துவான் பாலினைப் பெறாததுபோல, விரைவாகவும் அன்பின்றியும் இருப்பவன்,  பிறரிடமிருந்து காரியத்தைக் கொள்ள முடியாது. அங்ஙனம் கொண்டாலும் அதனால் பயன்பெறுதல் இல்லை.



“இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்,

நின்று குறைஇரப்ப நேர்படான், - சென்றுஒருவன்

ஆவன கூறின் எயிறுஅலைப்பான், ஆறுஅலைக்கும்

வேடுஅலன், வேந்தும் அலன்.   --- நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---


இன்று கொளற்பால நாளை கொளப்பொறான் - இன்று கொள்ளத் தக்க பொருள்களை நாளைக்கு வாங்கிக் கொள்ள ஒருநாள் பொறுக்கமாட்டான்; நின்று குறை இரப்ப நேர் படான் - சற்று நேரம் எதிரே நின்று  குடிகள் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ள அகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூறின் எயிறு அலைப்பான் - ஒருவன் எதிரே போய்த் தனக்கு வேண்டியவற்றைக் கூறினால் பல்லைக் கடித்து அச்சுறுத்துவான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - இப்படிப்பட்டவன் வேடனும் அல்லன் அரசனும் அல்லன்.


ஒருநாள் பொறுக்குமாறு குடிமக்கள் தமக்கு உள்ள குறைகளைச் சொல்லிக் கொள்ளலாம் என்றாலும் அதற்கும் நேர்படான். ஏதோ நல்ல காலமாக நேர்பட்டானாயினும் அவர்கள் தமக்கு ஆவன கூறும்பொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாமல் எயிறு அலைப்பான். இவன் எதற்கும் பயனில்லை. எயிறலைத்தல் ஆறலைத்தல் என்பன பண்டுதொட்டே பற்கடித்தல் வழிப்பறித்தல் என்னும் பொருள் மேலாகவே வருவது. 





No comments:

056. கொடுங்கோன்மை - 02. வேலொடு நின்றான்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தண்டித்தல் தொழிலோடு நி...