திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் ஆதரவு புரிந்து, குற்றம் உண்டானால், அதனைக் கண்டித்துத் தண்டித்தல் அரசனது தொழில் ஆகும். தண்டித்தல் அவனுக்குப் பழி ஆகாது" என்கின்றார் நாயனார்.
பிறர் வருத்தாமல் காப்பது, தன்னால் வருத்தம் வராமல் காப்பது என்பது பின்வரும் பெரியபுராணப் பாடலால் தெளிவாகும்...
மாநிலம் காவலன் ஆவான்
மன்உயிர் காக்கும் காலைத்
தான், அதனுக்கு இடையூறு
தன்னால், தன் பரிசனத்தால்,
ஊனமிகு பகைத்திறத்தால்,
கள்வரால், உயிர்தம்மால்,
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
அறம் காப்பான் அல்லனோ.
இதன் பொருள் ---
பெரிய நிலவுலகத்திற்கு அரசன் ஆக உள்ளவன், நிலை பெற்ற உயிர்களைக் காக்கும் காலத்தில், அவ்வுயிர்களுக்குத் தன் காரணமாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரணமாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ?
பிறவற்றால் வரும் இடையூறுகளைக் காப்பதற்கு உரிய அரசன், தானே தவறு செய்வானாயின் அதனைத் தடுப்பார் எவரும் இல்லை. எனவே, முதலிலே வராமல் காக்கவேண்டியது தன்னால் நேரக் கூடிய இடையூறே ஆகும்.
தன்னால் வருவன - வரிப்பொருளை மிகுதிகொள்ளுதல் - அதனை வலிந்து கொள்ளுதல், கொடுக்க வகையில்லாதவரிடம் கொள்ளுதல், அல்லவை நீக்காது ஒழுகுதல், காட்சிக்கு அரியன் ஆதல், கடும் சொல்லன் ஆதல், இடிக்கும் துணையாயினார் சொற்களைக் கேட்கப் பொறுக்கும் பண்பு இல்லாதவனாதல், அறநிலையப் பொருளை வவ்வுதல் முதலியன.
“இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்,
நின்று குறையிரப்ப நேர்படான், --- சென்றொருவன்
ஆவன கூறின் எயிறு அலைப்பான், ஆறு அலைக்கும்
வேடுஅலன், வேந்தும் அலன்“
"ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும்எனப்
பொன்தோள் துணையாத் தெரிதந்தும், - குற்றம்
அறிவுஅரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை, சென்று
முறையிடினும் கேளாமை அன்று".
முதலிய நீதிநெறி விளக்கக் செய்யுட்களைக் காண்க.
தன் பரிசனத்தால் வருவன --- அரசனிடம் அதிகாரம் பெற்றுள்ளோம், அரசனது வலிய சார்பு பெற்றுள்ளோம் என்ற இறுமாப்பினால் வருகின்ற நியதி மீறிய மிகைச் செயல்கள்.
ஊனமிகு பகைத்திறத்தால் வருவன --- பசுக் கவர்தல் - பொருள் கொள்ளையிடல் - மாதர் கற்பழித்தல் முதலியன.
கள்வரால் வருவன --- வழிப்பறி முதலியன.
உயிரால் வருவன --- புலி, யானை முதலியவற்றால் விளைவன.
இந்நாள், நமது அரசாட்சி முறையிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச் சட்டமும், குடிகளின் உயிர் உடம்புகளையும், உடைமைகளையும், காவல் புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் - உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன.
துன்பம் செய்தல், பொருளைக் கொள்ளுதல், கொல்லுதல் எனத் தண்டம் மூவகைப்படும்.
இதற்குத் திருக்குறள்...
“குடிபுறம் காத்து, ஓம்பி, குற்றம் கடிதல்,
வடு அன்று, வேந்தன் தொழில்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் --- குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்,
வேந்தன் வடு அன்று தொழில் --- வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
(துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“மைந்தன் எனாமல் அசமஞ்சன் தனை வெறுத்தான்
சுந்தரச் செங்கோல் சகரன், சோமேசா! --- முந்தும்
குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.”
இதன் பொருள்---
சோமேசா! முந்தும் குடி - முன்னேறிச் செல்லுதற்குரிய தம் குடிகளை, புறங்காத்து ஓம்பி - பிறர் நலியாமல் காத்து, தானும் நலியாது பேணி, குற்றம் கடிதல் - அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை தண்டிக்க வேண்டிய வழியில் தண்டித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி ஆகாது. தொழில் ஆகும்,
சுந்தரச் செங்கோல் சகரன் - அழகிய நீதி முறைமையை உடைய சகரன் என்னும் அரசன், அசமஞ்சன் தனை - அசமஞ்சனை, மைந்தன் எனாமல் - தன் மகன் என்று கருதாமல், வெறுத்தான் - வெறுத்து நாட்டைவிட்டுத் துரத்தினான் ஆகலான் என்றவாறு.
சூரிய வமிசத்தில் தோன்றிய சகரன் என்னும் சக்கரவர்த்தி தன் மகன் அசமஞ்சன் என்பான் தீவழி ஒழுகிப் பற்பல சிறுவர்களைச் சரயு நதியில் எறிந்து கொன்றமை கண்டு, தன் நாட்டை விட்டுத் துரத்தினான்.
அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் கோட்புலி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“பொலிகிளை கொன்றார் கோட்புலியார், விரையாக்
கலிகடந்த குற்றம் கடிந்தார், --- உலகில்
குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஎன்று வேந்தன் தொழில்.”
இதன் பொருள் ---
கோட்புலி நாயனார் சோழநாட்டிலே, திருநாட்டியத்தான்குடி என்னும் திருத்தலத்திலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர். சிவபத்தியில் சிறந்தவர். அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டவர். அதனால் கிடைக்கின்ற வேதனத்தைக் கொண்டு சிவாயலங்கட்குத் திருவமுதின் பொருட்டு நெல்லு வாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலம் அவர் செய்துவந்தார்.
ஒருநாள் அரசன் ஏவலினால் அவர் போர் முனைக்குச் செல்ல நேர்ந்தது. தாம் திரும்பி வரும் வரையில் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டு வேண்டும் நெல்லைக் கட்டினார். அதனை எடுத்துச் செலவழியாது இருக்கும்படி தமது சுற்றத்தார் எல்லாருக்கும் தனித்தனியே ஆணையிட்டார். போருக்குப் போயினார். சிலநாளிலே பஞ்சம் வந்து அடுத்தது. பஞ்சம் நீங்கும்வரை சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டிய இந்நெல்லைக் கொண்டாயினும் நாம் பிழைத்து, பின்னர் கொடுத்து விடுவோம் எனச் சுற்றத்தார் கருதி, அதனை எடுத்துச் செலவழித்தார்கள். கோட்புலி நாயனார் பகைவரை வென்று போர்முனையில் இருந்து திரும்பினார். தம் ஊரை அடைந்ததும் சுற்றத்தார் அதிபாதகம் செய்தமையை அறிந்தார். தம் வீட்டின் உள்ளே நுழைந்து அனைவரையும் வாளினாலே துணித்தார். எஞ்சிய ஓர் ஆண்குழந்தையைக் கண்டார். இது இந்நெல் உண்டவளுடைய முலைப்பாலை உண்டது என அதனையும் துணித்தார். சிவபெருமான் திருவருள் பெற்றார்.
குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தனுக்குப் பழி அன்று. தொழிலாகலான் என்றார் திருவள்ளுவ நாயனார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...
“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது, பிறர்மேல் கருணை கொள்ளுதல்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்;எண் வனப்பு இத்துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது, அதனைக் கேட்டவர்கள், இது நல்லது என்று புகழ்ந்துரைத்தல்; கிளர் வேந்தன் வனப்பு நன்று, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
"கொற்றம் கொண்டு குடிபுறம் காத்தும்
செற்ற தெவ்வர் தேஎம்தமது ஆக்கியும்
தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தகவு உடைத்தே..."--- மணிமேகலை.
இதன் பொருள் ---
வெற்றிகொண்டு குடிகளைப் பிறர் நலியாமல் பாதுகாத்தும், பகைமையை உடைய மாற்றாரது நாட்டினைத் தம்முடையது ஆக்கியும் அன்றி, தருப்பைப் புல்லில் கிடத்தி வாளால் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கண் செல்க என்று கூறுமாறு வாளா முதுமையுற்று இறத்தல், இச்சோழர் குடியில் பிறந்தோர்க்கு நாணும் தகுதியை உடைத்து. ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழவில்லை.
No comments:
Post a Comment