திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "தன்னிடத்தில் முறையிடுபவர்க்கு எளிய நிலையினனாய், நிலைமைகளை ஆராய்ந்து, நீதிமுறையில் ஆட்சி புரியாத அரசன், தாழ்ந்த நிலையினனாய்த் தானே கெட்டு அழிவான்" என்கின்றார் நாயனார்.
குடிமக்கள் தமக்கு நேர்ந்த குறையை சொல்லிக் கொள்ள வரும் காலத்தில், அவர்கள் எப்போதும் தன்னைப் பார்க்கும் நிலையை உடையவனாய் இருந்து, கண்ட காலத்தில் இன்முகத்தோடு, முறையீட்டைக் கேட்டு, இனிய சொற்களைக் கூறி, தன்னிடத்தில் வந்த முறையீட்டை, தானும் ஆராய்ந்து, நூல் வல்ல மதியமைச்சர்களையும் கலந்து, தெளிந்த பின்னர் நீதியைச் செய்நவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், குடிமக்கள் மனம் உடைந்து, அரசனைப் பழிப்பார்கள். பழியும் பாவமும் வந்து சேரும். பழிக்கும் பாவத்திற்கும் இடமான ஒருவன் கெடுப்பவர் ஒருவரும் இல்லாமல் தானாகவே கெட்டுப் போவான். "அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்" என்பதால், அறமே அவனைக் கொல்லும்.
“அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே;--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.” --- சிலப்பதிகாரம், வழக்குரை காதை.
இதன் பொருள் ---
அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம் என்னும் - பாவச் செயல்களைச் செய்தவர்களுக்கு அறக்கடவுளே யமனாக இருந்து ஒறுக்கும் என்கின்ற, பல்லவையோர் சொல்லும் பழுது அன்றே - பல அறிஞர்களின் கூற்றும் பயனிலதன்று, பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி - கொடிய தீங்கினைச் செய்த வெற்றியினையுடைய பாண்டியனுடைய மனைவியே, கடுவினையேன் செய்வதூஉம் காண் - கொடுவினையை உடையேனாகிய யான் இழைக்கும் மறச் செயல்களையும் நீ காண்பாய். இது கண்ணகி கூற்றாக அமைந்துள்ளது.
இதற்குத் திருக்குறள்...
“எண்பதத்தான் ஓரா, முறை செய்யா மன்னவன்,
தண்பதத்தான் தானே கெடும்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் --- முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்,
தண்பதத்தான் தானே கெடும் --- தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.
(எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொற்கூற்றம்;
மெல்லிலை வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்;
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே
இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்.” --- நான்மணிக்கடிகை.
இதன் பொருள் ---
கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம் - கல்வியறிவில்லாத ஒருவருக்குத் தமது வாயிலிருந்து வரும் சொல்லே கூற்றுவனாகும்; மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மெல்லிய இலைகளையுடைய வாழை மரத்துக்குத் தான் வெளிவிட்ட குலையே கூற்றுவனாகும்; அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் - தீயவை செய்யும் மக்கட்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள் கூற்றமே - வீட்டிலிருந்து கொண்டு, கற்புக் கேடாக மறைவாக ஒழுகும் மனைவி, தன்னைக் கொண்ட கணவனுக்குக் கூற்றுவனே யாவாள்.
கல்வியறிவில்லாதவர்களுக்கு அவர் வாயிற் பிறக்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவன் ஆகும். வாழை மரத்துக்கு அது ஈனுகின்ற குலையே கூற்றுவன் ஆகும். தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவன் ஆகும். இல்லத்திலிருந்து கொண்டு மறைவாய்க் கற்புக் கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனே ஆவாள்.
“கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்;
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்; - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்; கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.”. – மூதுரை.
இதன் பொருள் ---
கல்லாத மாந்தர்க்கு கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் - கல்வி அறிவில்லாத மாக்களுக்கு, கற்றறிந்தவருடைய உறுதிமொழி இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - (தருமத்தில் விருப்பமுடையர்) அல்லாத மனிதர்க்கு தருமமே இயமனாகும்; மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மெல்லிய வாழைமரத்துக்கு, அஃது ஈன்ற காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் கூற்றம் - இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி (கணவனுக்கு) இயமனாவள்.
கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக்கும் துன்பம் விளையும்.
“ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும்எனப்
பொன்தோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்
அறிவுஅரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை, சென்று
முறையிடினும் கேளாமை அன்று.” --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
ஒன்றின் தெரியா - வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை, சிறைப்புறத்து ஒர்தும் என - ஒதுக்கிடங்களில் இருந்து தெரிந்து கொள்வோம் என்று, பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்னாலான வீரவளை அணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக் கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத் தெரிந்து கொண்டும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடிமக்களின் செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங் காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும். (அதுவே முறையாமன்றிச்) சென்று முறையிடினுங் கேளாமையன்று - குடிமக்களே போய்த் தம் குறைகளைச் சொல்லிக்கொண்டாலும் அதனைக் கேளாமல் இருப்பது முறைமை அல்ல.
அரசனாவான் குடிமக்களின் நலங்களை அவர்களிருக்கும் இடத்தில் வேவுகாரர்களை அனுப்பி வரச் செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதும் அல்லாமல், அவர்களாலும் தெரிந்து கொள்ளப்படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரில் சென்று அறிவதும், அங்ஙனம் அறிந்த இடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியாது ஒழிவதுமே நல்ல அரசாட்சி முறையாகும். அவ்வாறு தன் ஒற்றர்களாளாவது, அல்லது தானாவது போய் அவர் நலங்களை அறியாது ஒழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக் குறையிரக்கும் போதுகூட அதனைக் கேளாமல் இருப்பதும் முறை அல்ல என்பது உணர்த்தப்பட்டது.
“கைப்பு உரை ஏற்று, பொய்ப்புகழ் ஏலாக்
காதினன், அருள்பொழி கண்ணன்,
தப்பு உரை வழங்கா நாவினன், புவியோர்
தாசன் தான் எனஉணர் மனத்தன்,
செப்பு அயல் மடவார் காண அரும் உரத்தன்,
திருந்தலர் காண அரும் புறத்தன்,
எப்பொழுதினுஞ் சென்று, யாரும்காண் முகத்தன்
ஈசன் அன்பு உடையவன் இறையே.” --- நீதிநூல்.
இதன் பொருள் ---
சான்றோர் கூறும் நல்வழிப்படுத்தும் கசப்பான் சொல்லை உவந்து கேட்கும் காதினன். பொய்ப் புகழ் அக் காதில் ஏறாது செய்பவன். அருள் நிறைந்த கண்ணை உடையவன். பொய் சொல்லா நாவினன். உலகோர்க்கு உவந்து செய்யும் அடிமை எனத் தன்னை நினைக்கும் மனத்தினன். அயல் மாதர் எண்ணம் அணுவும் இல்லா நெஞ்சினன். பகைவர்க்குப் புறமுதுகு இடாதவன். எல்லார்க்கும் எப்பொழுதும் காட்சிக்கு இனியவன். கடவுள்மாட்டு நீங்காப் பேரன்புடையவன், அரசன்.
No comments:
Post a Comment