திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "உள்ளத்தில் அச்சம் உடையவர்க்கு எந்த ஒரு அரணாலும் பயனில்லை; அதுபோல, நல்ல செல்வத்தைப் படைத்தவராக இருந்தாலும், உள்ளத்தில் மறதியை உடையவர்க்கு, அவர் படைத்துள்ள செல்வத்தால் எவ்வகையிலும் நன்மை இல்லை" என்கின்றார் நாயனார்.
பிற காவல்கள் ஒருவனுக்கு அமைந்து இருந்தாலும், உள்ளத்தில் சோர்வு உடையவனுக்கு அவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை. அதுபோலவே, நிறைந்த செல்வம் உடையனாய் இருந்தாலும், அதன் பயனை அறியாது உள்ளத்தில் சொர்வு கொண்டு இருப்பவனுக்கு, அவனது செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை.
இதற்குத் திருக்குறள்..
“அச்சம் உடையார்க்கு அரண் இல்லை, ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அரண் அச்சம் உடையார்க்கு இல்லை --- காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை,
ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
(நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்.
“அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர் நி(ல்)லாது ஆகும்--அலைவில்
புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே,
மலங்கடி வாளா தவர்க்கு.” --- அறநெறிச்சாரம்
இதன் பொருள் ---
அலை புனலுள் நிற்பினும் - அலைகளையுடைய நீரிலே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண் - தாமரை இலையிடத்து, நீர் நில்லாது ஆகும் - நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவில் புலன்களில் நிற்பினும் -சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு - முனிவர்களை, கடிவு மலம் ஆளா - அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமை கொள்ள மாட்டா; பொச்சாப்பு இலர் – அந்த அறவோர்களும் மறதியால் கூட அவற்றின் வயப்படுதலும் இலர்.
No comments:
Post a Comment