திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 54 -- பொச்சாவாமை
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வரக் கூடிய துன்பங்களை முன்னரே அறிந்து, தன்னைக் காத்துக் கொள்ளமால் மறந்து இருந்தவன், பின்னர் துன்பம் வந்த காலத்தில் அவற்றைத் தடுத்துக் கொள்ள இயலாமையால், தனது பிழைக்கு வருந்துவான்" என்கின்றார் நாயனார்.
முன்னரே அறிந்து காக்காவிட்டால், அவனது சோர்வினை எதிர்பார்த்து இருந்த பகைவர் காலம் அறிந்து தாக்குதல் கூடும். பகைவர் தாம் வரும்போது சொல்லிவிட்டு வரமாட்டார். அக்காலத்தில், இவனுக்கு ஆற்றல் இருந்தாலும், தக்க துணையைத் தேடிக்கொள்ள அவகாசம் இல்லாமையால், காத்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.
இதற்குத் திருக்குறள்...
“முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை
பின் ஊறு இரங்கி விடும்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
முன்னுறக் காவாது இழுக்கியான் --- தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்,
பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் --- பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
(காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“மறந்து மறந்து ஈசன் மலரடியைப் பேணாது
இறந்து இறந்து மாலும் இடர் எய்தும், --- அறிந்துஅறிந்து
முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை
பின் ஊறு இரங்கி விடும்.”
திருமால் தசாவதாரங்கள் எடுத்தமையை நினைந்து, இவ்வாறு பாடினார்.
ஒருகாலத்திலே தேவர்கட்கும் அசுரர்கட்கும் போர் மூண்டது. அப்போரில் தேவர்கள் தோல்வியடைந்து திருமாலிடம் சென்று தங்களுடைய துன்பங்களைக் கூறி முறையிட்டுக் கொண்டார்கள். திருமால் அசுரர்களோடு போருக்குச் சென்று அசுரர்களை விரட்டியடித்தார். திருமாலோடு போர் செய்ய முடியாத அசுரர்கள் தங்களுடைய குலகுருவாகிய சுக்கிராசாரியரின் தந்தையான பிருகு முனிவருடைய இருப்பிடத்தை அடைந்து, முனிவருடைய மனைவியாகிய கியாதி என்பவளிடம் அடைக்கலம் புகுந்தனர். கியாதி அவர்களைக் காப்பதாகக் கூறி மறைத்து வைத்தனள். திருமால் துரத்திக்கொண்டே அங்கு வந்தார். கியாதி உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அவள் தமக்கு மாமியாக இருத்தலோடு முனிவருடைய மனைவியாகவும் உள்ளாள் என்பதையும் நோக்காமல் அவளையும் கொன்று உள்ளே போய் அசுரரையும் கொன்று சென்றார். இச் செய்தியை உணர்ந்த பிருகு முனிவர், "திருமாலே, நீ நிலவுலகத்தின்கண் பத்துப் பிறவிகளை எடுப்பாயாக" என்று வசவுரை வழங்கினார். இவ்வசவுரையை உணர்ந்த திருமால் இதனைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபிரானைப் பூசித்து வழிபட்டார். ஆயினும் முனிவருடைய தீ மொழியிலிருந்து விடுபட முடியவில்லை. நிலவுலகில் பத்துப் பிறப்புக்கள் எடுக்க வேண்டியதாகவே முடிந்துவிட்டது.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“கோடியர்தன் போல்தோன்ற குன்றிமதர்க் கும்பமுனி
மூடுவெண் நோய்உற்றான், முருகேசா! - நாடுங்கால்
முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்.”
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, மதர்க் கும்பமுனி - களிப்பினை உடைய அகத்திய முனிவர், கோடியர் தன் போல் தோன்ற குன்றி - கோடி அகத்தியர்கள் தம்போல் காணப்பட, அதனால் மனம் சோர்ந்து, மூடு வெண்நோய் உற்றான் - உடலெல்லாம் மூடுவதாகிய வெண்குட்ட நோயைப் பெற்றார். நாடுங்கால் - ஆராயுமிடத்திலே, முன் உறக் காவாது - காக்கப்பட வேண்டிய துன்பங்களை எல்லாம் அவை வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளாது, இழுக்கியான் - மறந்து சோர்ந்து இருந்தவன், பின் தன் பிழை ஊறு இரங்கி விடும் - பிறகு தன் தவற்றினாலே இடையூறு உண்டாகியதை எண்ணி வருந்துவான்.
ஆணவக் களிப்புக் கொண்டிருந்த அகத்திய முனிவர், தம்போல் கோடிக்கணக்கான அகத்தியர் தோன்றக் கண்டு அதனால் உள்ளம் குன்றி வெண்நோய் அடைந்தார். காக்க வேண்டிய இடையூறுகளை எல்லாம் முன்னரே காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன் பிறகு தன் பிழையால் இடையூறு ஏற்பட்டதைக் கண்டு உள்ளம் இரங்குவான் என்பதாம்.
அகத்திய முனிவர் பல சிவப்பதிகளையும் வணங்கித் திருக்கோடிகா என்னும் பதியை அடைந்தார். மனத் தூய்மையோடு நாளும் சிவபெருமானைப் பூசித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்குள்ள பெரியோர்களைத் தாம் பணியாமல் அவர்களை ஏவல் கொண்டார். 'கற்பில் சிறந்த மனைவி வாய்க்கப்பெற்ற நம் போல் சிறந்தவரில்லை' என்னும் செருக்கையும் உள்ளத்திலே கொண்டார்.
ஒருநாள் சிவபெருமானைப் பூசிக்கும்போது சிவபெருமான் அகத்தியருடைய செருக்கை அடக்க எண்ணினார். சிவலிங்கத்திலே கோடி அகத்திய முனிவர் மனைவியரோடு விரைவாகத் தோன்றி அதைப் பூசித்து அதிலே மறையும்படி ஒரு புதுமையைக் காட்டி அருளினார். அதனை நோக்கிய அகத்திய முனிவர் நாணம் கொண்டார். அதனால் உடல் முழுவதும் விளர்த்தது. தம்முடைய தீய எண்ணத்தைப் பலவாறாக இகழ்ந்து கொண்டார். உருவிலி (அசரீரி) வாக்குப்படி திருவாவடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு அந்நோய் நீங்கப் பெற்றார்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...
“தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்
றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதந் தரும்.” --- ஆசாரக்கோவை.
இதன் பொருள் ---
தன் உடம்பு - தன்னுடைய உடம்பும், தாரம் - மனைவியும். அடைக்கலம் - அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு என்று - தன் உயிர்க்கு உதவியாகுமென்று, உன்னித்து - நினைத்து, வைத்த பொருளோடு – சேர்த்து வைத்த பொருளும், இவை நான்கும் - இந்த நான்கையும், பொன்னினைப் போல் - பொன்னைக் காப்பதுபோல, போற்றி காத்து உய்க்க - ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக, உய்க்காக்கால் - அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடின், மன்னிய - மிகுந்த. ஏதம் - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.
தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.
No comments:
Post a Comment