061. மடி இன்மை - 10. மடியிலா மன்னவன்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "திருமால் தனது அடியால் உலகத்தைத் தாவி அளந்த நிலப்பரப்பை எல்லாம், ஒரே நிலையில் தன்னிடத்தில் சோம்பல் இல்லாத அரசன் அடையப் பெறுவான்" என்கின்றார் நாயனார்.

சோம்புதல் இல்லாது எக்காலத்தும் தனது தொழிலிலேயே கண்ணாய் இருப்பவன், அம் முயற்சி மிகுதியினால், ஒன்றன் பின் ஒன்றாகத் தான் எண்ணியதை எல்லாம் அடையப் பெறுவான்.


இதற்குத் திருக்குறள்...


மடிஇலா மன்னவன் எய்தும், அடி அளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.


இதற்குப் பரிமேரலழகர் உரை ---


அடி அளந்தான் தா அயது எல்லாம் --- தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;


மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.


('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“கஞ்சுகநாதன் தன்கோயில் கால்எலிக்கு மாட்டாதே

வஞ்சனை செய்தானை இவண் வைத்துப்பார் ---

மடிஇலா மன்னவன் எய்தும், அடி அளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.”


இதன் பொருள் ---


கஞ்சுகம் - சட்டை. கஞ்சுகநாதன் -  சட்டைநாதர், சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான். கால் - வளை.  

இதில் கூறப்பட்ட எலி, சிவபெருமான் அருளால் மாவலி என்னும் அசுரனாகப் பிறந்து இப்பூவுலகை ஆண்டது. பிறகு ஒரு சமயம் மாவலியிடம் திருமால் வஞ்சனையால், குறள் வடிவம் கொண்டு மூன்று அடி மண் இரந்து அவனை அழித்தார்.  கால்எலி (வளையிலே பதுங்கி உள்ள எலி) என்ற நிந்தையால் மாவலிக்கு உயர்வு தோன்றியது.


“நிறைமறைக் காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்

கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,

நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்

குறைவுஅறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.”


என்னும் அப்பர் தேவாரப் பாடலின்படிக்கு, மந்திரசித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக்காட்டில் நீண்டு எரிந்துகொண்டு இருந்த ஒரு விளக்கினை, கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை, அத்தீப் பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு, திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய, அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நில உலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் திருக்குறுக்கை வீரட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமான்.


திருக்கோயிலில் எரிந்து கொண்டிருந்து ஒரு விளக்கினை அபுத்திபூர்வமாகத் துண்டியதன் பலனாக, அந்த எலியானது, மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்குமாறு திருவருள் புரிந்தார் சிவபெருமான்.


மாவலி வரலாறு


பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன்.  மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டு இருந்தான்.  அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர்கோமான் ஆகிய இந்திரன் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டான். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்துகொண்டு இருந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.


“காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.” –கம்பராமாயணம்


மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான்.  அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான்.  திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.


அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர்.  வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை. என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.


அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்மை தராது" என்று தடுத்தனன்.


மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ. கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கள் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவர் ஆவார்.  இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.


“மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.”


“எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,

கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.”


எனவரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க.


"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்து உவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான். “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்” என்னும் திருக்குறள் கருத்தை, இராமாயணத்தில் கம்பர் எடுத்து ஆண்டு உள்ளார் என்பதை அறிக.


உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. காவலி தனது முயற்சியின் பலனாக அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“பொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி

தொன்மைவலி ஆண்மையினால், சோமேசா! - பன்னின்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.”


இதன் பொருள்---


சோமேசா! அடி அளந்தான் தாயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த திருமால் தாவிய பரப்பு முழுவதையும், மடி இலா மன்னவன் - மடியிலா அரசன், ஒருங்கு எய்தும் - முறையானன்றி ஒருங்கே எய்தும்,


சென்னி - கரிகால் சோழன் என்பவன், தொன்மை வலி ஆண்மையினால் - பழமையாகவுள்ள வலிமையை ஆளும் தன்மையான், பொன்மலையின் - இமயமலையினிடத்தே, வேங்கை - தன் கொடியில் உள்ள புலியை, பொறித்து மீண்டான் - எழுதித் திரும்பினான் ஆகலான் என்றவாறு.


கற்றறிந்தோர் பல சொல்லினையே ஒரு சொல்லாகவும் கருதுவர் என்பதற்கு 'அடியளந்தான் தாயதெல்லாம்' என்பதை எடுத்துக் காட்டி 'அரி' என ஒரு சொல்லாகவே கொள்வர் என்பர். புலிக்கொடி சோழ அரசர்க்குரியது.


சென்னி பொன்மலையில் வேங்கை பொறித்தமை ----


"செண்டு கொண்டுகரி காலனொரு காலில்இமயச்

சிமய மால்வரை திரித்தருளி மீளஅதனைப்

பண்டு நின்றபடி நிற்கஇது என்று முதுகில்

பாய்புலிப் பொறி குறித்தது மறித்த பொழுதே."

எனவரும் கலிங்கத்துப்பரணிப் பாடலால் அறியலாம்.


காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட கரிகால் பெருவளத்தான் என்னும் சோழன் தென்தேசத்தில் உள்ள நாடுகளை வென்று, வடதேசம் புக்கு, அங்குள்ள அரசர்களையும் புறங்கண்டு, இமயமலை வரையும் தன் ஆணை செல்வதற்கு அறிகுறியாகத் தனது அடையாளமாகிய புலியை அம்மலைக்கண் எழுதித் திரும்பினான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“அம்புவி முற்றும் புரந்தான் ஆண்மை ரகு மாற்றலர்

மொய்ம்பு அதனால் வென்றே, முருகேசா! --- இம்பர்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே,  ஆண்மை ரகு - பேராண்மையையுடைய இரகு என்னும் அரசன், மாற்றலரை மொய்ம்பு அதனால் வென்று - பகைவர்களைத் தன்னுடைய வலிமையினாலே வெற்றி கொண்டு, அம்புவி முற்றும் புரந்தான் - அழகிய நிலவுலகம் முழுவதையும் அரசாட்சி செய்தான்.  இம்பர் - இவ் உலகத்திலே, அடி அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு - அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் ஒன்றாக, மடிஇலா மன்னவன் எய்தும் - சோம்பல் இல்லாத அரசன் அடைவான்.


ஆண்மை மிகுந்த இரகு என்னும் அரசன் பகைவர்களை எல்லாம் தன்னுடைய வலிமையினால் வெற்றிகொண்டு உலகம் முழுவதையும் அரசாண்டான். திருமாலால் தாவி அளக்கப்பட்ட இவ் உலகங்கள் எல்லாவற்றையும்  சோம்பலில்லாத அரசன்  ஒருசேர அடைவான் என்பதாம்.


இரகுவின் கதை


திலீபன் என்னும் அரசன் காமதேனுவை வழிபட்டு இரகு என்னும் மைந்தனைப் பெற்றான். அந்த இரகு தன்னுடைய தந்தை இயற்றிய வேள்வியின் பொருட்டுத் திக்குகள்தோறும் சென்று வரும்போது, இந்திரன் வேள்விக் குதிரையைக் கவர்ந்தான். இரகு அதனைக் குறித்து சிறிதும் தளர்ச்சி அடையமல் அவனையும் வென்று வேள்விப்பலன் கைகூடும் பலத்தை அவனால் பெற்றான். சில காலம் சென்ற பிறகு, தன் தந்தை தவம் செய்யும் பொருட்டுக் காட்டை அடைந்ததும் தான் அரசுரிமையை மேற்கொண்டான். திக்குகள்தோறும் சென்று பெற்ற எண்ணிறந்த பொற்குவியலைக் கொண்டு விசுவசித்து என்னும் வேள்வியைச் செய்தான். அந்தணர்கட்குப் பொருள்களை எல்லாம் தானம் செய்தான். அதனால் வறுமை உடையவன் ஆனான். இச்சமயத்தில் கௌற்சமுனிவர் என்பவர் குருகாணிக்கை கொடுத்தலுக்காகப் பதினான்கு கோடி பொன்னை விரும்பி இரகுவினிடம் வந்தார். அவன் அவரை வணங்கி இருக்கச் செய்தான். தன்னிடம் பொருள் இன்மையால் குபேரனை வென்று வேண்டிய பொருளை அடையவேண்டுமென்று எண்ணமிட்டுக் கொண்டு இருந்தான். இதனைக் குபேரன் அறிந்து அஞ்சினான். அன்று இரவே அவ் அரசனுடைய பொருளறையில் பொன்மழை பொழியச் செய்தான். கௌற்ச முனிவர் விரும்பி வந்த பொருளைக் கொடுத்தான். அம் முனிவர் வழங்கிய வாழ்த்துரையின்படி அயன் என்னும் மகனைப் பெற்றுச் சிறந்த வாழ்வை அடைந்தான்.


அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“தந்தை உளம் நோக்கி, நவம் மேவிய துருவன்

சிந்தை வலிது அன்றோ, சிவசிவா! --- நந்து

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு.


மாற்றாந் தாயால் கடியப்பட்ட துருவன் தந்தையின் ஒவ்வா நிலையையும் கண்டான். தன் தாயின் சொற்படி திருமாலை நோக்கித் தவம் புரிந்து, துருவ நிலையை அடைந்தான்.”

துருவன் தான் கொண்டிருந்த உயர்ந்த கருத்தினாலே நாள்களையும் கோள்களையும் இயக்கும் உயர்ந்த பதவியைப் பெற்றான். 


துருவன் கதை


உத்தானபாதன் என்னும் அரசனுக்குச் சுருதி சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தனர். மூத்தாள் சுருதி. இளையாள் சுநீதி. இருவருக்கும் உத்தமன் துருவன் என்னும் இரண்டு மக்கள் இருந்தனர். மூத்தாள் மகனாகிய உத்தமன் தந்தையின் மடியில் இருக்கும்போது இளையான் மகனாகிய துருவனும் தந்தையின் மடியில் ஏறச் சென்றான். அதனைச் சுருதியாகிய மூத்தவள் தடுத்தாள். துருவன் சிறவனாக இருந்தும் அதனைப் பொறாமல், தாயினிடத்திலே கூறி உடன்பாடு பெற்றுக்கொண்டு எழு முனிவர்களிடம் போய் அவர்களுடைய அருளுரைப்படியே தவம் புரிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட பூதம் முதலியவைகட்குச் சிறிதும் அஞ்சாது நின்று நாள்களையும் கோள்களையும் பிணித்த உருளையை சுழற்றி விளங்கும் பெரும் பதவியைத் திருமாலால் பெற்றான். அதனால் தன்னுடைய தாயோடு மிகுந்த சிறப்பை அடைந்தான். உள்ளத்தில் கொண்டிருந்த முயற்சியால் இத்தகைய சிறந்த பேற்றைப் பெற்றான்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“இனி யாரும் இல்லாதார் எம்மில் பிறர்யார்,

தனியேம்யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டாம,

முனிவு இலர் ஆகி முயல்க, முனிவுஇல்லார்

முன்னியது எய்தாமை இல்.”    – பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


இனி - இப்பொழுது, யாரும் இல்லாதார் எம்மில் பிறர் யார் -சார்வாக ஒருவரையும் இல்லாதார் எம்மைவிட யார் உளர் இவ்வுலகத்தில், தனியேம் யாம் - தனிமை உடையவராக ஆயினோம், என்று ஒருவர் தாம் மடியல் - என்று கருதி ஒருவர் சோம்பி இருக்க வேண்டுவதில்லை, முனிவு இலர் ஆகி முயல்க - எடுத்த காரியத்தில் சோர்வு இல்லாதவராகி முயற்சி செய்க, முனிவு இல்லார் முன்னியது எய்தாமை இல் - காரியத்தில் வெறுப்பில்லாதவர்கள் தாம் நினைத்ததை அடையாமல் இருத்தலில்லை.


தொடங்கிய காரியத்தில் சோம்பலும் வெறுப்பும் இன்றி அதனைச் செய்தல் வேண்டும்.


061. மடி இன்மை - 08. மடிமை குடிமைக்கண்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "சோம்பல் உடைமை ஒருவன் குடும்பத்தில் இருக்குமானால், அது அவனை பகைவர்க்கு மீளாத அடிமை ஆக்கிவிடும்" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...


மடிமை குடிமைக்கண் தங்கின், தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


மடிமை குடிமைக்கண் தங்கின் --- மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; 


தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் --- அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்,


(மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


துஞ்சுவிழிக் கும்பகன்னன் துண்டம் செவிஇழந்தும்

எஞ்சுதலை உற்றான் இரங்கேசா --- விஞ்சும்

மடிமை குடிமைக்கண் தங்கில்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும்.


இதன் பொருள் --- 


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! துஞ்சு விழிக் கும்பகன்னன் - தூங்கும் வி்ழிகளையுடைய கும்பகன்னன், துண்டம் செவி இழந்தும் - மூக்கையும் காதுகளையும் (சுக்கிரீவன் கடித்துவிட்டதனால்) போக்கடித்துக் கொண்டும், எஞ்சுதலை உற்றான் - உயிர் பிழைத்திருத்தலைப் பெற்றான், (ஆகையால், இது) விஞ்சும் மடிமை - மிகுந்த சோம்பலானது, குடிமைக்கண் தங்கின் - ஓர் அரசனுடைய குடியில் பொருந்தி இருக்குமாயின், தன் ஒன்னார்க்கு - அது அவனுடைய பகைவர்களுக்கு, அடிமை புகுத்தி விடும் – அவனை அடிமைத்தனம் செய்யும்படி நுழைத்து விடும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- "சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்" என்பது ஔவைப் பிராட்டியின் “கொன்றை வேந்தன்”.


விளக்கவுரை --- இராமாயணப் போரில் கும்பகன்னன் சண்டைக்கு வந்து, சகல வானரங்களையும் கொன்று வெற்றி பெற்று அதற்கு அடையாளமாக வானரத்தலைவனான சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டு முரசம் முழங்க அதிவேகமாகப் போனான். அப்போது அவனுக்கு வழக்கமாயுள்ள சோம்பல் காரணமாக தூக்கம் வந்து விட்டது. அதனால் சற்று மயங்கி இருந்தான். அதுதான் சரியான சமயம் அவனை அவமானப்படுத்தி அவனிடத்திருந்து தப்புவதற்கு என்று எண்ணின சுக்கிரீவன், அவனுடைய மூக்கையும் காதுகளையும் கடித்து எரிந்து விட்டுத் தப்பி வந்து தன் சேனையோடு சேர்ந்துகொண்டான். பிறகு அவன் மூக்கு முதலியவைகளை இழந்து பிழைத்திருக்கும் அவமானத்தால், அதற்கு அப்புறமும் தன் உயிரை வைத்துக் கொண்டிருக்க மாட்டாமல், சண்டையில் மாண்டு மடிந்தான். மடிமை கும்பகன்னன் குடிமையில் தங்கி இருந்ததால், அவனை ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் அவமானத்தை அவனுக்கு வருவித்தது காண்க.


061. மடி இன்மை - 07. இடி புரிந்து

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "சோம்பலை மேற்கொண்டு, முயற்சியைக் கைக்கொள்ளாதவர், இடித்துக் கூறுதலைத் தொடர்ந்து செய்து இகழ்கின்ற சொற்களைக் கேட்பர்" என்கின்றார் நாயனார்.

சோம்பேறி, எச் செயலையும் செய்யத் தகுதி அற்றவன் என்று இவனது சொல்லை நண்பர்களே கேளாது இருப்பதுடன், இகழ்ந்தும் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க நேரிடும்.


இதற்குத் திருக்குறள்...


இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர், மடிபுரிந்து

மாண்ட உஞற்று இல் அவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் --- மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; 


இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் --- தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.


('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மாறன் இறை அருளால் வந்து வெல்லத் தோற்ற அளவில்

போர்விண்ட இந்திரனைப் போலவே, சால

இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர், மடிபுரிந்து

மாண்ட உஞற்று இல் அவர்.”


இதன் பொருள் ---


மாறன் --- உக்கிரகுமார பாண்டியன்.  


உக்கிரகுமார பாண்டியன் வானாடு சென்று இருந்த போது, தனக்குச் சமானமாக உக்கிரன் நடந்து கொண்டமையை இந்திரன் கண்டு சினம் கொண்டு, பாண்டி நாட்டில் மழை பெய்யாதவண்ணம் மேகங்களுக்குக் கட்டளை இடவே, பாண்டி நாட்டின் மலைகளில் தங்கிய மேகங்களை உக்கிரன் தளை இட்டான்.  இந்திரன் அவற்றை விடுவிக்கும் பொருட்டு, உக்கிரனுடன் போருக்கு வந்து மகுடபங்கம் அடைந்து முதுகிட்டு ஓடினான். இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தைத் திருவிளையாடல் புராணத்தில் காண்க.


பின்வரும் பாடல், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்ப அமைந்துள்ளதை அறிக.


கண்கூடாப் பட்டது கேடுஎனினும் கீழ்மக்கட்கு

உண்டோ உணர்ச்சி, மற்று இல்ஆகும், - மண்டுஎரி

தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்துயில்வ,

பேரா பெருமூச்சு எறிந்து.     ---  நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---


மிகுந்த நெருப்பு சூழ்ந்து எரிந்தாலும் பெரிய பாம்புகள், பெருமூச்சு விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும். அவ்விடத்தினின்றும் அசையா. (அதுபோல) தமக்கு வரும் கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும், கீழ்மக்களுக்கு அவற்றினின்றுந் தப்பிப்பிழைக்கும் உணர்ச்சி இல்லையாகும்.


061. மடி இன்மை - 06. படி உடையார்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "இந்த உலகத்தை எல்லாம் ஆளுகின்றவரிடத்து உள்ள செல்வம் எல்லாம் வந்து ஒருவனுக்குப் பொருந்தியபோதும், சோம்பல் இருந்தால், அவனால் சிறந்த பயனை அடைய முடியாது" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...


படி உடையார்பற்று அமைந்தக் கண்ணும், மடி உடையார்

மாண் பயன் எய்தல் அரிது.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் --- நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; 


மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது --- மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.

'உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.)


பின்வரும் பாடல், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்ப உள்ளது அறிக.


விடக்கு உறும் சடம்பல வேலை செய்தற்கா,

நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள்

மடக்கவும் நீட்டவும் வாய்ந்ததால், சும்மா

கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு உளார்களே. --- நீதிநூல்.


இதன் பொருள் ---


  இறைச்சி நிறைந்த அறிவில்லதாகிய இவ்வுடல் வேலை செய்தற் பொருட்டே, உறுப்புகள் நடக்கவும், ஓடவும், மடக்கவும், நீட்டவும் பொருத்தமாக வாய்ந்தன. அப்படியிருந்தும், வேலை செய்யாது அவ் வுறுப்புகளை வறிதே கிடக்கும்படி செய்வோர் தீயவராவர்.


  விடக்கு-இறைச்சி. சடம்-அறிவில்லது; உடல். சும்மா-வறிது.


மூலம் 19

“தேவரே கற்றவர், கல்லாதார் தேருங்கால்

பூதரே, முன்பொருள் செய்யாதார் - ஆதரே,

துன்பம் இலேம் பண்டு யாமே வனப்புடையேம்

என்பார் இருகால் எருது.” -- சிறுபஞ்சமூலம்.


அறிவு நூல்களைக் கற்றவர் தேவரை ஒப்பர். அவற்றைக் கல்லாதவரைப் பற்றி ஆராய்ந்து பார்க்குமிடத்து, அவர்கள் பூத பசாசுகளோடு ஒப்பவர் ஆவர். முதுமைப் பருவம் வருதற்கு முன்பே, பொருள் தேடி வைத்துக் கொள்ளாதவர் அறிவில்லாதரே ஆவர். நாம் செல்வம் உடையவராய் இருந்ததனால் எமக்குத் துன்பம் இல்லை, அழகு உடையவராய் இருந்தோம் என்று சொல்லுவோர், இருகால் மாடுகளுக்கு நிகராவர்.


கடுகம் 19

“கொல்யானைக்கு ஓடும் குணம் இலியும், எல்லில்

பிறன்கடை நின்று ஒழுகுவானும், - மறம் தெரியாது

ஆடும்பாம்பு ஆட்டும் அறிவிலியும், இம்மூவர்

நாடுங்கால் தூங்கு பவர்.” --- திரிகடுகம்.


உணவு முதலியன கொடுத்துக் காத்து வந்த அரசனுக்குப் போர் வந்த காலத்தில் போர்க்களத்தில் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் வீரனும், அயலான் மனைவியை விரும்பித் தீய வழியில் ஒழுகுபவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும் ஆகிய இம் மூவர் விரைவில் கெடுபவர் ஆவார்.


70. நல்லவர் தீயவர் செயல்

“வல்லவர்பால் கல்வி, மதம் ஆணவம் போக்கும்;

அல்லவர்பால் கல்வி, அவை ஆக்கும்; - நல்லிடத்தில்

யோகம் பயில்வார் உயர்ந்தோர், இழிந்தோர்கள்

போகம் பயில்வோர் புரிந்து.” -- நீதிவெண்பா.


உயர்ந்தவரிடத்தில் உண்டான கல்வி, அறியாமையையும் ஆணவத்தையும் ஒழிக்கும். அக் கல்வியில் சிறந்தோர் நல்ல இடங்களில் இருந்து இறைவனை வணங்கும் யோகத்தைப் பயில்வர். நல்லவர் அல்லாத தாழ்ந்தோர் இடத்துள்ள கல்வி, அறியாமையையும், ஆணவத்தையும் மிகுவிக்கும். ஆதலால், அக் கீழோர் கீழான உலக வாழ்க்கையினை விரும்பி, போகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.


(மதம் – அறியாமை, ஆணவம் - செருக்கு.  யோகம் - இறைவனை விடாது தியானித்தல்.  போகம் - சிற்றின்பம்.  புரிந்து - விரும்பி.)


061. மடி இன்மை - 05. நெடுநீர் மறவி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "நீட்டித்த இயல்பு, மறதி, சோம்பல், தூங்குதல் என்னும் இவை நான்கும், அழியும் தன்மையை உடையவருடைய ஆசையான மரக்கலங்கள்" என்கின்றார் நாயனார்.


தாமத குணத்தால் உண்டாகின்ற செயல்களை இங்குக் கூறினார். செய்யவேண்டிய காரியங்களை விரைந்து செய்யாது, காலம் தாழ்த்திச் செய்தல்; மறதி, சோம்பல், காலம் நேரும்போது எல்லாம் தூங்கிக் கொண்டே இருத்தல் ஆகிய குற்றங்களை உடையவர் கெடுதல் திண்ணம்.


கடலில் முழுகிய கப்பலானது கரை சேராமல், அதில் இருந்தவர்களும் முழுகி அழிவது போல், இவர்கள் தமது குடியை மேல் உயர்த்துவதற்கு இல்லாமல் நடுவில் அழிந்து போவர் என்கின்றார்.


இதற்குத் திருக்குறள்...


நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் --- மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; 


கெடும் நீரார் காமக்கலன் --- இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.


(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல் மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன் நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


நெடிய திருப்புல்லை நாரணனே, நெடுநீர் மறவி

மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் எனும் அக்

கொடிய வினை அணுகாது, எளியேனை நின் கோகனகத்து 

அடியில் படியவைத்து, ஆண்டுகொண்டாய் என்அருட்கடலே.


இதன் பொருள் ---


திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணமூர்த்தியே! எனது அருட்கடலே! ஒருவனுக்கு அழிவைத் தரும் தன்மையை உடைய நீட்டித்த இயல்பு, மறதி, சோம்பல், தூங்குதல் என்னும் இந் நான்கு கொடிய செயல்களும் அடியேனை அணுகாவண்ணம், எளியவனான என்னை உனது தாமரைத் திருவடியில் பொருந்த வைத்து ஆண்டுகொண்டாய்.


அக்கொடிய வினை - நெடுநீர் மறவி முதலியன. கோகனகத்தடி - தாமரை மலர் போன்ற திருவடி. படிய வைத்து --- பொருந்துமாறு வைத்து.


பின்வரும் பாடல், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.


வான் உலாம் அருணன் என்னும் 

மக்கள் ஆயுளின் கணக்கன்

தான் எழும் முன் எழாரைச் 

சகத்திரக் கரத்தால் தட்டும்

ஏன் என எழார் வாழ் நாளை

எண்குறைத்து எழுதிக் கொள்வான்

ஆனது கண்டு காலன் 

அவரிடம் அணுகு வானே. ---  நீதிநூல்.

 

இதன் பொருள் ---


விண்ணிலே படர்ந்து செல்லும் ஞாயிறு என்னும் கதிரவன், மக்கள் வாழ்நாளாகிய அகவையைக் (வயதைக்) கணக்கெடுப்பவன். சோம்பல் இல்லாமல் அவன் தோன்றுவதன் முன்னம் மக்கள் எழுதல்வேண்டும். அப்படி எழாதவர்களை அவன் தன்னுடைய ஆயிரங் கதிர்க் கைகளால் தட்டி எழுப்புவான். உடன் ஏன் என்று எழாதவர்களின் அகவையைக் குறைத்து எழுதிக் கொள்வான். காலன் அக்கணக்கைப் பார்த்து மக்களுயிரைக் கொண்டுபோக நெருங்குவான்.


  அருணன்-ஞாயிறு. சகத்திரம்-ஆயிரம். கரம்-கை. வாழ்நாள்-அகவை. அணுகுவன்-நெருங்குவன்.


061. மடி இன்மை - 04. குடிமடிந்து குற்றம்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், " சோம்பலில் வீழ்ந்து, சிறந்த முயற்சி இல்லாதவர்க்கு, தன் குடும்பமானது வீழ்ச்சி உற்று, குற்றங்கள் பலவாகப் பெருகிக் கெடும்" என்கின்றார் நாயனார்.


சோம்பலானது செல்வத்தைக் கெடுத்துப் பெயரையும் கெடுக்கும். அல்லாமல் பல குற்றங்களையும் கொண்டு வந்துவிடும்.


இதற்குத் திருக்குறள்...


குடிமடிந்து குற்றம் பெருகும், மடிமறந்து

மாண்ட உஞற்று இல் அவர்க்கு.


இதற்குப் பரிமேலழகர் உரை --- 


மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு --- மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; 


குடி மடிந்து குற்றம் பெருகும் --- குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.


('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்

என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிதாகும்;

அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது

சென்றது பேரா தவர். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


ஒன்றால் – இருப்பது ஒன்றுதானே என்றும், சிறிதால் – (அதுவும்) சிறிதளவு தானே உள்ளது என்றும், உதவுவது ஒன்று இல்லையால் – நாம் எடுத்த செயலை முடிப்பதற்குப் போதிய உதவி இல்லையே, என்று ஆங்கு இருப்பின் - என்று நினைத்து, முயற்சி ஏதும் இல்லாமல் சோம்பி இருப்பின், இழுக்கம் பெரிதாகும் – அதனால் அவனுக்கு வரும் குற்றமே பெரிதாகும்;  நின்றது சென்றது பேராதவர் --- தம்மிடத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்தும், பிறரிடத்துக் கொடுத்த பொருளைத் தாம் மீளக் கொண்டும், மேலும் பொருளைத் தேடுவதிலும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாதவர்கள், அன்றைப் பகலேயும் வாழ்கலார் --- ஒருநாளின் பொழுதிலேயே வளமாக வாழமுடியாதவர் ஆவார்.


ஒருவன் சோம்பலுடையவனாய் இருப்பின், அதனால் மிகுந்த குற்றங்கள் மிகுதியாகும். இருப்பதைக் கொண்டு முயற்சியுடன் பாடுபட்டுப் பொருளைஈட்டியும், அனுபவித்தும், பிறர்க்குக் கொடுத்து உதவியும் வாழ்வதே சிறந்த வாழ்வு ஆகும்.



“மடிமை கெடுவார்கண் நிற்கும், கொடுமைதான்

பேணாமை செய்வார்கண் நிற்குமாம், பேணிய

நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர், நட்டமைந்த

தூணின்கண் நிற்கும் களிறு. --- நான்மணிக் கடிகை.


இதன் பொருள் ---


மடிமை கெடுவார்கண் நிற்கும் – முயற்சியின்மை என்னும் சோம்பலானது கெட்டுப் போக உள்ளவர் இடத்திலேயே ஏற்படும். கொடுமை தான் பேணாமை செய்வார்கண் நிற்கும் - தீமையானது மேலோர் விரும்பாத செயல்களைச் செய்வாரிடத்தில் உண்டாகும். நற்பெண்டிர் பேணிய நாணின் வரை நிற்பர் - நன்மகளிர் விரும்பப்பட்ட நாணத்தின் எல்லையில் நிற்பார்கள். களிறு நட்டு அமைந்த தூணின்கண் நிற்கும் - யானையானது  கீழே நட்டு வலிவமைந்த  தூணின் வலுவில் நிலைபெறும்.



மடிசேரும் அவர்க்கு ஒரு நாளும் மறல்,

விடியாதவர் நெஞ்சிடை வெந்துயரே,

குடியாகு மறந்தொடர் குற்றமெலா

நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே. --- நீதிநூல்.


இதன் பொருள் ---


  வேண்டாதவர்க்குத் தம்மை  அடிமைப்படுத்தும் வன்மை வாய்ந்த மடியை மேற்கொள்பவர், எப்பொழுதும் வறுமைப் பிணியில் இருந்து நீங்கார். அவருடைய மனத்தில் கடுந்துன்பம் குடிகொள்ளும். பாவத்தைச் சேர்க்கும் தீமைகளெல்லாம் வளரும். இது நிச்சயம்.


  மடி-சோம்பல். மறல்-வறுமை. மறம்-பாவம். நிச்சயம்-உறுதி.


061. மடி இன்மை - 03. மடிமடிக் கொண்டு

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில்,"மடித்து அழித்தற்கு உரிய சோம்பலை அழிக்காமல் ஏற்று நடந்து கொள்ளும் அறிவில்லாதவன் பிறந்த குடும்பமானது, அவனினும் முந்தி அழியும்" என்கின்றார் நாயனார்.


அழிவினைத் தரக்கூடிய சோம்பலை ஒருவன் தனது மனத்தே கொண்டு நடக்க முயல்வானானால், அவனுக்கு இயற்கையாக உள்ள அறிவும் கெட்டு, அவனால் காக்கப்பட வேண்டிய குடியும் காப்பதற்கு இல்லாமல் அவனது கண் முன்னரேயே அழியும்.


இதற்குத் திருக்குறள்...


மடிமடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த

குடி, மடியும் தன்னினும் முந்து.


இதற்குப் பரிமேழகர் உரை ---


மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி --- விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; 


தன்னினும் முந்து மடியும் --- அவன் தன்னினும் முந்துற அழியும்.


(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...


சிற்று எறும்பு ஆதியாச் சீவ கோடிகள்

முற்றும் மெய் உழைத்து, உயிர் முறையில் காக்குமால்,

சற்றுமெய் அசைவு இலாச் சழக்கர் ஆருயிர்

அற்ற ஓர் சவம்கொல், மற்று அசரமே கொலோ. --- நீதிநூல்.


இதன் பொருள் ---


  சிறிய எறும்பு முதல் பெரிய யானை வரை எல்லா உயிரினங்களும் உழைத்து முறையாகத் தம் உயிரைக் காக்கின்றன. உடல் ஒரு சிறிதும் அசையாது சோம்பி இருக்கும் தீயோர் உயிர் அற்ற சவமோ? அல்லது நிலைத்திணையாகிய பட்ட மரமோ?

 


விடக்கு உறும் சடம்பல வேலை செய்தற்கா

நடக்கவும் ஓடவும் நனி உறுப்புகள்

மடக்கவு நீட்டவும் வாய்ந்ததால், சும்மா

கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு உளார்களே. --- நீதிநூல்.


இதன் பொருள் ---


  இறைச்சி நிறைந்த அறிவில்லதாகிய இவ்வுடல் வேலை செய்தற்பொருட்டே, உறுப்புகள் நடக்கவும், ஓடவும், மடக்கவும், நீட்டவும் பொருத்தமாக வாய்த்துள்ளன.. அப்படியிருந்தும், வேலை செய்யாது அவ் வுறுப்புகளை வறிதே கிடக்கும்படி செய்வோர் தீயவராவர்.


  விடக்கு-இறைச்சி. சடம்-அறிவில்லது; உடல். சும்மா-வறிது.


061. மடி இன்மை - 02. மடியை மடியா

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 61 -- மடி இன்மை


அதாவது, எண்ணிய செயலைச் செய்யுங்கால், உள்ளத்தில் ஊக்கம் இன்மையால், தாமதகுணம் காரணமாக சோம்பல் உண்டாகும். சோம்பல் இல்லாது இருக்க வலியுறுத்தினார் நாயனார்..


தாமத குணத்தின் வடிவமாவது, மோகம் கொள்ளுதல், பேருண்டி, அநீதி, உறக்கம், மறதி, சோம்பல், தவறுதல், கொலை, வஞ்சனை முதலியன ஆகும். இவை இல்லாது இருத்தல் வேண்டும்.


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "குடும்பத்தைக் குடும்பமாக வைத்திருக்க எண்ணுபவர், சோம்பல் மடிந்து போகும்படியாக முயற்சியோடு நடந்து கொள்ள வேண்டும்" என்கின்றார் நாயனார்.


நெருப்பை நெருப்பாகவே எண்ணுதல் வேண்டும் என்பது போல, மடியை மடியாகக் கொண்டு ஒழுகவேண்டும் என்றார். அவ்வாறு எண்ணாவிடில், சோம்பலானது நாள்தோறும் சிறிது சிறிதாக அதிகரித்து, ஊக்கம் உடைமையைக் கெடுத்து, குடியைக் கெடுத்துவிடும். எனவே, ஒருவன் வாழ்வில் உயரவேண்டுமானால், மடியை மடித்தல் வேண்டும்.


இதற்குத் திருக்குறள்...


மடியை மடியா ஒழுகல், குடியைக்

குடியாக வேண்டு பவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


குடியைக் குடியாக வேண்டுபவர் --- தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; 


மடியை மடியா ஒழுகல் --- மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.


('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற் போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம்

முடியாத வாறே முயலும் - கொடியன்னாய்!

பாரித் தவனை நலிந்து தொழில்கோடல்

மூரி உழுது விடல். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கொடி அன்னாய் - கொடிபோன்ற இடையை உடையவளே! மடியை வியம் கொள்ளின் - சோம்பல் உடையானை ஒருசெயலைச் செய்ய ஏவினால், மற்றை கருமம் முடியாத ஆறே முயலும் - அவனைச் செய்ய ஏவிய அச்செயல் முடியாத விதமாகவே முயற்சி செய்வான் சோம்பல் உடையான், பாரித்தவனை நலிந்து தொழில்கோடல் – சோம்பலில் மிகுந்தவனைத் துன்புறுத்திக் காரியத்தைக் கொள்ளுதல் மிகவும் கடினமானது ஆகும். (அவ்வாறு செந்தல்) மூரி உழுது விடல் - கிழட்டு எருதினைக் கொண்டு நிலத்தை உழுது பயன் கொள்ள எண்ணுவதோடு ஒக்கும்.


சோம்பல் உடையானைக் கொண்டு ஒரு காரியம் செய்வித்தல் ஆகாது.  நலிந்து செய்வித்தாலும் அதனால் பயன் உண்டாகாது. சோம்பலில் மிகுந்தவனை வருத்தியாவது காரியம் செய்விப்போமாயினும், காரியம் தாம் விரும்பிய காலத்தில் முடிவுறாது. பயன் பெறுதல் இல்லை..



தெளிவுற நூல்பல தினமும் வாசித்து

மிளிர் உடல் வருந்தியும் வெறுக்கை ஈட்டி,நல்

கிளிமொழி மனைவியைக் கிளைஞரைப் பல

எளியரைத் தாங்குவோர்க்கு இல்லை மந்தமே. --- நீதிநூல்.


இதன் பொருள் ---


  மெய்ந்நூல்களை நாள்தோறும் தெளிய ஓதி, விளங்கும் உடல் வருந்தப் பாடுபட்டுப் பணம் தேடி, கிளிமொழி போன்ற மனைவியையும் கிளைஞர்களையும் பல எளியவர்களையும் பேணி வருவோர்க்குச் சோம்பல் உண்டாகாது.


மூலம் 18

 “பொய்யாமை பொன்பெறினும், கள்ளாமை, மெல்லியலார்

வையாமை, வார்குழலார் நச்சினும் - நையாமை,

ஓர்த்துஉடம்பு பேரும்என்று ஊன்அவாய் உண்ணோனேல்

பேர்த்துஉடம்பு கோடல் அரிது.”   -- சிறுபஞ்சமூலம்.


ஒருவன் பொன்னைப் பெறுவதாக இருந்தாலும் பொய் சொல்லாமையும், பிறர் பொருளைக் களவு செய்யாமையும், மெல்லிய தன்மையை உடையவராகிய எளியாரைத் திட்டாமையும், நீண்ட கூந்தலையுடைய பெண்கள் விரும்பினாலும் உள்ளம் தளராமையும் ஆகியவற்றை மேற்கொண்டு, தன் உடம்பின் நளர்ச்சியைப் போக்குதற்கு வேண்டி, பிறிதோர் உயிரின் தசையை விரும்பி உண்ணாது இருப்பானாயின், அவன், பிறிதோர் உடம்பை எடுத்தல் இல்லையாகும். (மறுபிறவி இல்லை ஆகும்)


கடுகம் 18

 “ஒருதலையான் வந்துறூஉ மூப்பும், புணர்ந்தார்க்கு

இருதலையும் இன்னாப் பிரிவும், - உருவினை

உள் உருக்கித் தின்னும் பெரும்பிணியும், இம்மூன்றுங்

கள்வரின் அஞ்சப் படும்.” -- திரிகடுகம்.


மனிதனுக்கு உறுதியாக வந்து அடையும் கிழப் பருவமும்; நட்புச் செய்து பிரிந்தவருக்கும் பிரியப்பட்டவர்க்கும் துன்பத்தைத் தருகின்ற பிரிவும், உள் இருந்தே உருவத்தை அழிக்கின்றதும் மருந்து முதலியவற்றால் தீராதவையும் ஆன நோய்களும், ஆகிய இம்மூன்றும் திருடருக்கு அஞ்சுவது போல அஞ்சப்பட வேண்டியவை ஆகும்.


திருடருக்கு அஞ்சி எச்சரிக்கையாய் இருப்பது போல, உறுதியாக வரக்கூடிய முதுமை, நண்பரிருவர்க்கும் விருப்பமில்லாத பிரிவு, உருவினை அழிக்கும் நோய் இம் மூன்றுக்கும் அஞ்சிச் செய்ய வேண்டுவனவற்றைச் செய்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.


69. இரசவாதிக்கும் சிவயோகிக்கும் அடையாளங்கள் மூன்று

 “அற்றசிவ யோகிக்கு அருஞ்சின்னம் மூன்று உண்டு;

பற்றுஅலகை, உன்மத்தர், பாலர்இயல்; - முற்று இரச

வாதிக்குச் சின்னம் மூன்று உண்டே மகிழ் போகம்

ஈதல் இரவாமை என்று.” -- நீதிவெண்பா


பற்று அற்ற சிவனடியார்க்கு, ஒன்றைப் பற்றி நிற்கும் பேய்கள் இயல்பு, பித்தர் இயல்பு, குழந்தைகள் இயல்பு என்று சிறந்த அடையாளங்கள் மூன்று உள்ளன. இரசவாதம் செய்வோர்க்கு இன்பமான வாழ்வு, வறியவருக்குக் கொடுத்து உதவுதல், பிறரிடம் சென்று இரவாமை ஆகிய மூன்று அடையாளங்கள் உண்டு.


(சின்னம் - அடையாளம்.  அலகை - பேய்.  உன்மத்தர் - பித்தர்.  முற்றுரசவாதி – இரசவாதம் செய்வோர்.  போகம் - இன்பம்.)


பொது --- 1134. ஆராதனர் ஆடம்பரத்தும்

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஆராதனர் ஆடம்பரத்தும் (பொது)


முருகா! 

அடியேனை வாவா என அழைத்து, முத்தி நலத்தைத் தந்து அருளுவீர்.



தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த

     தானாதன தானந் தனத்த ...... தனதான


ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து

     மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்


ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து

     மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே


நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த

     நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக


நீவாவென நீயிங் கழைத்து பாராவர வானந்த சித்தி

     நேரேபர மானந்த முத்தி ...... தரவேணும்


வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க

     வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி


வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க

     வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்


வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து

     வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா


வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து

     வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.


                                 பதம் பிரித்தல்


ஆராதனர் ஆடம்பரத்தும், மாறா துச ஆலம்பனத்தும்,

     ஆவாகன மாமந்திரத்தும், ...... அடலாலும்,


ஆறார் தெச மாமண்டபத்தும், வேத ஆகமம் ஓதும் தலத்தும்,

     ஆமாறு எரி தாம் இந்தனத்தும் ...... மருளாதே,


நீர் ஆள் அக நீர் மஞ்சனத்த, நீள் தாரக வேதண்ட மத்த,

     நீ நான் அற, வேறு இன்றி நிற்க, ...... நியமாக,


நீ வா என நீ இங்கு அழைத்து, பாராவர ஆனந்த சித்தி,

     நேரே பரமானந்த முத்தி ...... தரவேணும்.


வீராகர சாமுண்டி, சக்ர பாரா கண பூதம் களிக்க,

     வேதாள சமூகம் பிழைக்க, ...... அமர் ஆடி,


வேதா முறையோ என்று அரற்ற, ஆகாச கபாலம் பிளக்க,

     வேர் மாமர மூலம் தறித்து, ...... வடவாலும்,


வார்ஆகரம் ஏழும் குடித்து, மாசூரொடு போர் அம்பு அறுத்து,

     வாண ஆசனம் மேலும் துணித்த ...... கதிர்வேலா!


வான்நாடு அரசாளும் படிக்கு, வாவா என வா என்று அழைத்து,

     வானோர் பரிதாபம் தவிர்த்த ...... பெருமாளே.


பதவுரை


வீராகர சாமுண்டி --- வீரத்துக்கு இருப்பிடமான துர்க்கையும்,


சக்ர பாரா கண பூதம் களிக்க --- வளைவாகப் பெருங்கூட்டமாகிய பூதங்களும் மகிழ்ச்சி அடையவும்,


வேதாள சமூகம் பிழைக்க அமர் ஆடி --- பெரும் பேய்க்கூட்டம் உண்டு உய்யும்படியும், போர் புரிந்து


வேதா முறையோ என்று அரற்ற --- பிரமதேவர் முறையோ என்று கூறி ஓலமிடவும்,


ஆகாச கபாலம் பிளக்க ---- விண் முகட்டில் உள்ள மூதண்டம் பிளக்கும்படியும்,


வேர் மாமர மூலம் தறித்து --- ஆழமான வேருடன் கூடிய பெரிய மாமரத்தின் அடிப்பகுதியை வெட்டியும்,


வடவாலும் வார் ஆகரம் ஏழும் குடித்து --- வடவைத் தீயையும், தண்ணீரின் இருப்பிடமாகிய ஏழு கடல்கலையும் வற்றச் செய்தும்,


மாசூரொடு போர் அம்பு அறுத்து --- பெரிய சூரபதுமனோடு போருக்குரிய அம்புகளை அறுத்தும்,


வாண ஆசனம் மேலும் துணித்த கதிர்வேலா --- பாணங்களின் இருப்பிடங்களையும் அழித்து அருளிய ஒளிமிக்க வேற்படையை உடையவரே!


வானாடு அரசாளும் படிக்கு வாவா என வாஎன்று அழைத்து --- தேவர்கள் தமது வான லோகத்தை மீளவும் அரசாளும்படி, வாருங்கள், வாருங்கள்,  என்று அன்புடன் அனைவரையும் அழைத்து,


வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே ---  வானவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமையின் மிக்கவரே!


ஆராதனர் ஆடம்பரத்தும் --- ஆராதனை புரிகின்றவர்களது ஆடம்பரமான வழிபாட்டிலும்,


மாறா துச ஆலம்பனத்தும் --- மாறுபாடில்லாத கொடிமரத்தில் பற்றுக்கோடாக இருப்பதிலும்,


ஆவாகன மாமந்திரத்தும் அடலாலும் --- தெய்வம் எழுந்தருளப் பண்ண வேண்டிக் கூறும் மந்திரங்களிலும், மந்திரசக்தியிலும்,


ஆறு ஆர்தெச மாமண்டபத்தும் --- ஆறாவது நிலையாக ‘ய’ என்ற எழுத்துடன் கூடி விளங்கும் ஆக்ஞையை நாடி நிற்கும் நிலைமையிலும்,


வேதாகமம் ஓதும் தலத்தும் --- காமியத்தைக் குறித்து வேதம், ஆகமங்களை ஓதுகின்ற இடத்திலும்,


ஆம் ஆறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே --- சுவர்க்க போகத்திற்கு ஆகும் வழியில் அக்கினி கவ்வுகின்ற யாகத்திற்கு உரிய சமித்துக்களிலும் அடியேன் மருட்சி அடையாமல்,


நீர் ஆள் அக நீர் மஞ்சனத்த --- குளிர்ச்சியை ஆளுகின்ற தண்ணீரால் அடியார்களால் ஆட்டப்படுகின்றவரே!


நீள் தாரக ---  நீண்ட தாரகப் பொருளாயுள்ளவரே!


வேதண்டம் அத்த --- திருக்கயிலாய மலைக்குத் தலைவரே!


நீ நான் அற வேறு இன்றி நிற்க --- நீ வேறு நான் வேறு என்ற தன்மை நீங்கி, ஒன்றுபட்டு விளங்க,


நியமாக நீ வா என நீ இங்கு அழைத்து --- நியதியுடன் அன்பனே, நீ வருக என்று தேவரீர் இவ்விடத்தில் அடியேனை அழைத்து,


பாராவர ஆநந்த சித்தி --- கரையில்லாத சிவானந்தப் பெருஞ்சித்தி ஆகிய


நேரே பரம ஆநந்த முத்தி தரவேணும் ---  பேரானந்த முத்தி நலத்தை நேரடியாகத் தேவரீர் அடிமையேனுக்குத் தந்து அருள வேணும்.


பொழிப்புரை


வீரத்துக்கு இருப்பிடமான துர்க்கையும்,  வளைவாகப் பெருங்கூட்டமாகிய பூதங்களும் மகிழ்ச்சி அடையவும், பெரும் பேய்க்கூட்டம் உண்டு உய்யும்படியும், போர் புரிந்து, பிரமதேவர் முறையோ என்று கூறி ஓலமிடவும், விண் முகட்டில் உள்ள மூதண்டம் பிளக்கும்படியும், ஆழமான வேருடன் கூடிய பெரிய மாமரத்தின் அடிப்பகுதியை வெட்டியும், வடவைத் தீயையும், தண்ணீரின் இருப்பிடமாகிய ஏழு கடல்கலையும் வற்றச் செய்தும், பெரிய சூரபன்மனோடு போருக்குரிய அம்புகளை அறுத்தும், பாணங்களின் இருப்பிடங்களையும் அழித்து அருளிய ஒளிமிக்க வேற்படையை உடையவரே!


தேவர்கள் தமது வான லோகத்தை அரசாளும்படி, வாருங்கள், வாருங்கள்,  என்று அன்புடன் அனைவரையும் அழைத்து, வானவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமையின் மிக்கவரே!


ஆராதனை புரிகின்றவர்களது ஆடம்பரமான வழிபாட்டிலும், மாறுபாடில்லாத கொடிமரத்தில் பற்றுக்கோடாக இருப்பதிலும், தெய்வம் எழுந்தருளப் பண்ண வேண்டிக் கூறும் மந்திரங்களிலும், மந்திரசக்தியிலும், ஆறாவது நிலையாக ய என்ற எழுத்துடன் கூடி விளங்கும் ஆக்ஞையை நாடி நிற்கும் நிலைமையிலும், காமியத்தைக் குறித்து வேதம், ஆகமங்களை ஓதுகின்ற இடத்திலும், சுவர்க்க போகத்திற்கு ஆகும் வழியில் அக்கினி தாவுகின்ற யாகத்திற்கு உரிய சமித்துக்களிலும் அடியேன் மருட்சி அடையாமல், "குளிர்ச்சியை ஆளுகின்ற தண்ணீரால் அடியார்களால் ஆட்டப்படுகின்றவரே! நீண்ட தாரகப் பொருளாயுள்ளவரே! திருக்கயிலாய மலைக்குத் தலைவரே! நீ வேறு நான் வேறு என்ற தன்மை நீங்கி, ஒன்றுபட்டு விளங்க, நியதியுடன் அன்பனே, நீ வருக என்று தேவரீர் இவ்விடத்தில் அடியேனை அழைத்து, கரையில்லாத சிவானந்தப் பெருஞ்சித்தி ஆகிய பேரானந்த முத்தி நலத்தை நேரடியாகத் தேவரீர் அடிமையேனுக்குத் தந்து அருள வேணும்”.


விரிவுரை


ஆராதனர் ஆடம்பரத்து ---


இந்தத் திருப்புகழில் அருணகிரிநாதர் அன்பில்லாத வெற்றுக் கிரியைகளுடன் கூடிய ஆடம்பரமான தன்மைகளைக் கண்டிக்கின்றனர்.


அன்பம், பயன் கருதாமையுமே அருள்நெறிக்கு அங்கங்கள் என்க.  அன்பு இன்றி, பயன் கருதி ஆடம்பரமாகச் செய்யும் வழிபாட்டைக் கண்டு இறைவன் சிரிக்கின்றான் என்று கூறுகின்றனர் அப்பரடிகள்.


“பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்கும் அவர் தம்மை நாணியே.”  – அப்பர்.


எனவே, விரிவாக ஆடம்பரமாகச் செய்யும் பூசையினும், சிறிது நேரமாவது அன்புடன் செய்யும் பூசையே சிறந்தது. “சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க" என்றார் பிறிதொரு திருப்புகழில்.


“ஆடம் பரங்கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!

ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.” --- திருமந்திரம்


முயற்சி ஏதும் இன்றி வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதி, தவம் புரிவாரைப் போலப் பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகளே! உங்களின் வெற்று வேடத்தால், வஞ்சக வேடத்தால், இறைவன் திருவருளைப் பெற முடியாது. “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?” வேடத்தைக் கொண்ட நீங்கள் செய்யும் பாவச் செயலில் இருந்து நீங்கி, புனைந்து கொண்ட வேடத்திற்கு ஏற்ப, உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள். அதுவே பயனுடையது ஆகும்.



மாறாதுச வாலம்பனத்து ---


மாறா துச ஆலம்பனம் என்று பிரிக்க. மாறா - மாறுபாடு இல்லாத. துவசம் என்பது துச என்று வந்தது. ஆலம்பனம் - பற்றுக்கோடு.


ஆடம்பரமாகக் கொடியேற்றுதல் புரிந்து, அதைப் பற்றிச் செய்யும் சடங்குகள்.


ஆவாகன மாமந்திரத்து ---


பூசை என்பது கிரியாபூசை, ஞானபூசை என்று இருவகைப்படும். கிரியா பூசை என்பது குண்ட மண்டலமிட்டு, ஒரு பொருளில் பரம்பொருளை ஆவாகனம் செய்து, மந்திரங்களைக் கூரி, அதற்குரிய அங்கங்களுடன் செய்வது. ஞான பூசையாவது, உள்ளக் கோயிலில் எங்கும் நிறைந்த பரம்பொருளை உன்னி, கருவிகரணங்கள் இன்றி, நிர்விகல்பமாகப் புரிவது.


இந்தப் பூசையின் சிறப்பையே தாயுமானார்,


“பண்ணேன் உனக்குஆன பூசை, ஒரு வடிவிலே

        பாவித்து இறைஞ்ச,ஆங்கே

      பார்க்கின்ற மலர்ஊடு நீயே இருத்தி,அப்

        பனிமலர் எடுக்கமனமும்

நண்ணேன், அலாமல்இரு கைதான் குவிக்கஎனில்

        நாணும்என் உளம்நிற்றிநீ,

      நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால்

        நான்பூசை செய்யல்முறையோ...”


என்றும்,


“நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீர், பூசைகொள்ள வாராய் பராபரமே..”


என்றும் கூறியருளுகின்றார்.


ஆதலின், ஆடம்பரமாக ஆவாகனாதி மந்திரங்களைக் கூறியும், கிரியா பூசையையே பெரிது என எண்ணி, மயங்கக் கூடாது என்று அடிகள் கூறியருளுகின்றார்.


ஞானபூசை வாய்க்கும் வரை, கிரியாபூசை செய்துவர வேண்டும். ஞானபூசை வாய்த்த பெரியவர்களும், கிரியாபூசை நிகழ்த்தலாம். அது உலகவரை நன்னெறிப்படுத்தும் பொருட்டு என்க.  இல்லையேல், சாமானியர்கள் பூசையாதிகளைக் கைவிட்டு, மெய் விடுவர். அதனால் அன்றோ, இறைவனை நேரே கண்டு திருவருள்மயமாய் நின்ற நால்வர்களும் திருக்கோயில்கள் தோறும் சென்று வழிபட்டனர். அது உலகம் பின்பற்றி உய்யும் பொருட்டு என்க.


அடலாலும் ---


அடல் - வலிமை. மந்திரத்தை உருவேற்றி, அதனால் வந்த மந்திர வலிமையால் பலப்பல ஆடல்களைப் புரிவர்.  வசியம், மோகனம், தம்பனம் முதலியவைகளைப் புரியும் வலிமை மந்திர சக்தியார் ஏற்படும்.  அவைகளைக் கண்டு ஞானசீலர்கள் மருளக் கூடாது என்கின்றார்.


ஆறார் தெச மாமண்டபத்தும் ---


ஆறு ஆதாரங்களில், ஆறு அக்கரங்கள் நடுநாயகங்களாகவும், அவற்றைச் சூழ்ந்து ஐம்பத்தொரு அக்கரங்களும் இருக்கின்றன.


மூலாதாரத்தில் ஓம். சுவாதிட்டானத்தில் ந, மணிபூரகத்தில் ம, அநாகதத்தில் சி, விசுத்தியில் வ, ஆக்ஞையில் ய.  ஆக்ஞாஸ்தானம் புருவடு.  அங்கிருக்கும் எழுத்து ய.  தசம் - பத்து.  தமிழ்க் கணக்கில் பத்து - ய. தசமண்டபம் என்றால் யகரம் உள்ள ஆக்ஞை என்று அறிக. ஆக்ஞையிலே நாட்டத்தைச் செலுத்தித் தியானித்தல் ஒருபடி. ஆனால், அப் படியிலேயே நின்றுவிடக் கூடாது.  அதையும் கடந்து, பிரமரந்திரம் கடந்து சகஸ்ராரப் பெருவெளி சேர்ந்து, சிவானந்த வெள்ளத்தில் அழுந்துதல் வேண்டும்.


நாளும்அதி வேக கால்கொண்டு தீமண்ட,

     வாசிஅனல் ஊடு போய்ஒன்றி, வானின்கண்

     நாமமதி மீதில் ஊறுங்க லாஇன்ப ...... அமுதுஊறல்


நாடி,அதன் மீது போய்நின்ற ஆநந்த

     மேலைவெளி ஏறி, நீயின்றி நானின்றி

     நாடியினும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ...... ஒருநாளே.. --- (மூளும்வினை) திருப்புகழ்.


ஆறாவது ஆதாரமாக நிறைந்துள்ள யகார எழுத்துடன் கூடிய ஆக்ஞையைக் கண்டு, அங்கேயே நின்று மருட்சி அடையாமல், அதற்கு அப்பாலும் செல்லுதல் வேண்டும் என்று தெளிக.  இந்தக் குறிப்பிலேயே அடிகளார்,


“தங்கிய தவத்துஉணர்வு தந்து,அடிமை முத்திபெற,

சந்திரவெளிக்கு வழி       அருள்வாயே”...  --- (ஐங்கரனை) திருப்புகழ்.


என்று அருளிச் செய்தனர்.


வேதாகமம் ஓதும் தலத்தும் ---


முத்தி நலம் கருதாமல், பத்தி நலம் இன்றி, காமியம் கருதி, வெறும் ஒலியாக வேதாகமங்களை ஓதுவதைப் பற்றி இது குறிக்கின்றது.  பொருள் பற்றிச் செய்யும் பூசனை புனிதமுறாதது போல், பொருள் பற்றி வேதாகமம் ஓதுவதும் சிறப்புறாது என அறிக.


ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே ---


சுவர்க்காதி புவனபோகங்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளை விரும்புதல் கூடாது. மேலும் பகைவர் முதலியோர் அழியுமாறு செய்யும் வேள்விகளும் உண்டு.  அதனால், "ஆமாறு எரிதாம் இந்தனத்தும்" என்று கூறினார்.


வேதவேள்வி முதலியன யாவும் புண்ணியத்தைத் தந்து, அப் புண்ணியத்தின் பயனாக வான் பதம் தருவனவே ஆகும்.  அவை பிறவி நீக்கத்திற்குத் துணையாகா எனத் தெளிக.


நம்முடைய நோக்கம் அனைத்தும் பிறவாமையை நாடி அமையவேண்டும். கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லவனாகி வள்ளல் பிரானை உள்ளபடி உன்னி, பள்ளத்தை நாடும் வெள்ளம் போல் அவரிடத்து அன்பு செலுத்தி, தெள்ளத் தெளிந்த சிந்தையுடன் இருத்தல் வேண்டும்.


“வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்

பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்,

பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மேல் ஆகப்

பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு,

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால், உடம்பெல்லாம் கண்ணாய், அண்ணா!

வெள்ளந்தான் பாயாதால், நெஞ்சங் கல்லாம்,

கண்ணிணையும் மரமாம், தீ வினையி னேற்கே.” --திருவாசகம்.


“அன்பர் வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை"  --- திருவிசைப்பா.


“முருக,சரவணமகளிர் அறுவர்முலை நுகரும்அறு

    முக,குமர, சரணம்என  ......  அருள்பாடி ஆடிமிக  

மொழிகுழற அழுதுதொழுது உருகும்அவர் விழிஅருவி

    முழுகுவதும்” --- சீர்பாத வகுப்பு.



வீராகர சாமுண்டி ---


சாமுண்டி - காளி - போர் செய்ய வல்லவள்.  வீரத்திற்கு உறைவிடமானவள். முருகவேள் அவுணர்களுடன் மிகவும் உக்கிரமாகப் போர் புரிந்த போது, போர்ச் சிறப்பைக் கண்டு போரில் வல்ல காளி களிப்புமிகுந்து ஆடினாள்.


சக்ர பாராகண பூதம் களிக்க ---


சக்ரம் - வளைவு.  பாராகணம் - பெருங்கூட்டம்.  பூதங்கள் குறுகிய கால்களும் இறுகிய உடம்பும் உள்ளவைகள். இப் பூதங்கள் முருகவேளுடன் படைகளாகச் சென்றன. இவை ஒப்பற்ற ஆற்றல் படைத்தவை.


நீடுதேவர் நிலைகளும், வேண்டிடின்

நாடும் ஐம்பெரும் பூதமும், நாட்டுவ

கோடிகோடி குறள்சிறு பூதங்கள்

பாடிஆடும் பரப்பது பாங்குஎலாம். ---  பெரியபுராணம்.


கந்தவேள் அவுணரோடும் புரிந்த போர்த்திறத்தை நோக்கிப் பூதங்கள் பெரிதும் மகிழ்ந்தன.


வேதாள சமூகம் பிழைக்க ---


வேதாளம் - பெரும்பேய்.  கந்தவேளின் கணைகளால் மாண்ட அவுணரது நிணங்களை உண்டு வேதாள கணம் உய்ந்தன.


“கூதாள கிராத குலிக்கு இறைவா,

வேதாளகணம் புகழ் வேலவனே.”. ---  கந்தர் அநுபூதி.


வேர் மாமர மூலம் தறித்து ---


சூரபதுமன் இறுதியில் உறுதியுள்ள மாமரமாகக் கடலின் நடுவே நின்றான். அதன் நிழல் ஆயிரத்து எட்டு அண்டங்களிலும் பரந்தது.  அதன் எஃகு மயமான கிளைகளும் இலைகளும் அசைவதனால், அண்டங்கள் அதிர்ந்து அல்லல் பட்டன. ஆருயிர்கள் நிலை குலைந்தன. முருகப் பெருமான் அயில்வேலை விடுத்து, அப் பெரிய மாமரத்தைப் பிளந்து அழித்து அருளினார்.


வாராகரம் ---


வார் - நீர்.  ஆகரம் - உறைவிடம்.  நீருக்கு உறைவிடமாக உள்ளது கடல்.  சூரபதுமன் கடலிலே ஒளிந்தான்.  நூறுகோடி சூரிய ஒளியுடன் வேலாயுதம் கடலுக்கு அருகிலே சென்றவுடன், கடல்கள் எழும் வற்றித் திடர் பட்டன.


வேலை துகள்பட்டு மலை சூரன்உடல் பட்டு உருவ

வேலைஉற விட்டதனி வேலைக்காரனும்...  ---  திருவேளைக்காரன் வகுப்பு


வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல்என

     மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல்என

     மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாஎன ......விசைகள்கூற


வேல்எ டுத்து நடந்த திவா கரா,சல

     வேடு வப்பெண் மணந்த புயா சலா,தமிழ்

     வேத வெற்பில் அமர்ந்த க்ருபா கரா,சிவ ...... குமரவேளே. --- (ஓலமிட்ட) திருப்புகழ்.


குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்

திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே .. ---  கந்தர் அலங்காரம்.


கருத்துரை


முருகா! அடியேனை வாவா என அழைத்து, முத்தி நலத்தைத் தந்து அருளுவீர்.


பொது --- 1133. ஆராத காதலாகி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஆராத காதலாகி (பொது)


முருகா! 

பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி உழலாமல், 

தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரிவீர்.



தானான தான தான தானன

     தானான தான தான தானன

          தானான தான தான தானன ...... தந்ததான


ஆராத காத லாகி மாதர்த

     மாபாத சூட மீதி லேவிழி

          யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே


ஆசாப சாசு மூடி மேலிட

     ஆசார வீன னாகி யேமிக

          ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே


ஈராறு தோளு மாறு மாமுக

     மோடாரு நீப வாச மாலையு

          மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே


ஏனோரு மோது மாறு தீதற

     நானாசு பாடி யாடி நாடொறு

          மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ


வாராகி நீள்க பாலி மாலினி

     மாமாயி யாயி தேவி யாமளை

          வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி


வாதாடி மோடி காடு காளுமை

     மாஞால லீலி யால போசனி

          மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி


சூராரி மாபு ராரி கோமளை

     தூளாய பூதி பூசு நாரணி

          சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே


தோளாலும் வாளி னாலு மாறிடு

     தோலாத வான நாடு சூறைகொள்

          சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.



                            பதம் பிரித்தல்



ஆராத காதல் ஆகி மாதர் தம்

     மாபாத சூடம் மீதிலே, விழி

          ஆலோலனாய் விகாரம் ஆகி, ...... இலஞ்சியாலே,


ஆசா பசாசு மூடி மேலிட,

     ஆசார ஈனன் ஆகியே, மிக

          ஆபாசன் ஆகி ஓடி நாளும் ...... அழிந்திடாதே,


ஈர்ஆறு தோளும், ஆறு மாமுக-

     மோடு ஆரு நீப வாச மாலையும்,

          ஏறான தோகை நீல வாசியும், ...... அன்பினாலே


ஏனோரும் ஓதுமாறு, தீது அற,

     நான்ஆசு பாடி ஆடி நாள்தொறும்

          ஈடேறுமாறு ஞான போதகம் ...... அன்புஉறாதோ?


வாராகி, நீள் கபாலி, மாலினி,

     மாமாயி, ஆயி, தேவி, யாமளை,

          வாசாம கோசரை, பராபரை, ...... இங்குஉள்ஆயி,


வாதாடி, மோடி, காடு காள், உமை,

     மாஞால லீலி, ஆல போசனி,

          மாகாளி, சூலி, வாலை, யோகினி, ...... அம்பவானி,


சூராரி, மாபுராரி, கோமளை,

     தூளாய பூதி பூசு நாரணி,

          சோணாசல ஆதி லோக நாயகி, ...... தந்தவாழ்வே!


தோளாலும் வாளினாலும் மாறிடு

     தோலாத வான நாடு சூறைகொள்

          சூராரியே! விசாகனே! சுரர் ...... தம்பிரானே.


பதவுரை


வாராகி --- வாராகியாக விளங்குபவரும்,


நீள் கபாலி ---  நீண்ட கபாலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும்,


மாலினி ---  கங்கையாகத் திகழ்பவரும்,


மாமாயி ---  பெரிய மாயையைச் செய்பவரும்,


ஆயி --- உலகங்கட்கு அன்னையாகத் திகழ்பவரும்,


தேவி --- ஒளி மயமானவரும்,


யாமளை ---  பச்சை நிறம் உடையவரும்,


வாசா மகோசரை --- வாக்கிற்கு எட்டாதவரும்,


பராபரை --- பெரிய பொருளாகியவரும்,


இங்கு உள் ஆயி --- அடியவர் உள்ளத்தில் தங்குகின்ற தாயும், 


வாதாடி --- இறைவரோடு வாது செய்தவரும்,


மோடி --- பிணங்குபவரும்,


காடுகாள் --- துர்க்கையாக வந்தவரும்,


உமை --- உமாதேவியாரும்,


மாஞால லீலி --- உலகத்தை ஆக்கியும், அளித்தும், அழித்தும் விளையாடுபவரும்,


ஆல போசனி --- ஆலகாலவிடத்தை உண்டவரும்,


மாகாளி ---  மகா காளிதேவி ஆனவரும்,


சூலி ---  திரிசூலத்தைத் தாங்கியவரும்,


வாலை --- இளமையானவரும்,


யோகினி --- மோகத்தைச் செய்பவரும்,


அம்பவானி ---  அழகிய பார்வதி அம்மையாரும்,


சூராரி --- மகிடாசுரன் முதலிய அசுரத் தலைவர்களை அழித்தவரும்,


மா புராரி --- பெரிய முப்புரங்களை எரித்தவரும்,


கோமளை ---  அழகியவரும்,


தூளாய பூதி பூசு நாரணி ... திருநீற்றுப் பொடியைப் பூசிக்கொள்ளுகின்ற குளிர்ந்தவரும்,


சோணாசல --- சிவந்த மலையாகிய அருணையில் வாழ்பவரும்,


ஆதி லோக நாயகி --- முதன்மை பெற்று உலகங்கட்குத் தலைவியாக வீற்றிருப்பவரும் ஆகிய அம்பிகையார்,


தந்த வாழ்வே ---  பெற்றருளிய குமாரக் கடவுளே!


தோளாலும் வாளினாலும் மாறிடு --- தோள்வலியாலும், வாள்வலியாலும் மாறுபட்டவனும்,


தோலாத --- யாவரிடத்தும் தோல்வி அடையாதவனும்,


வான நாடு சூறைகொள் --- தேவர் உலகைச் சூறையிட்டவனும் ஆகிய


சூராரியே ---  சூரபதுமனை அடக்கியவரே!


விசாகனே --- விசாக மூர்த்தியே!


சுரர் தம்பிரானே --- தேவர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!


ஆராத காதல் ஆகி --- தணியாத காதல் கொண்டு,


மாதர் தம் ---  பெண்களுடைய


மாபாத சூட மீதிலே ---  அழகிய பாத முதல் உச்சி வரையிலும்,


விழி ஆலோலனாய் --- கண்களைச் செலுத்துபவனாகி,


விகாரமாகி --- உள்ளம் மாறுபட்டவனாகி,


இலஞ்சியாலே --- உந்திச் சுழியினாலே,


ஆசா பசாசு மூடி மேலிட --- ஆசையாகிய பேய் என்னை அழுத்தி மேற்கொள்ள,


ஆசார வீனனாகியே --- மேலான ஆசாரத்தை விட்டு அநாசாரனாகி,


மிக ஆபாசனாகி  – மிகவும் அசுத்தனாகி,


ஓடி நாளும் அழிந்திடாதே --- எங்கும் திரிந்து நாள்தோறும் அடியேன் அழிந்து போகாமல்,


ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரு நீப வாச மாலையும் --- பன்னிரு புயங்களும், ஆறு திருமுகங்களும், திருமார்பிலே பொருந்தி உள்ள மணம் கமழ்கின்ற கடப்பமலர் மாலைகளும்,


ஏறான தோகை நீல வாசியும் --- உயர்ந்த நீலநிறம் பொருந்திய தோகையுடன் கூடிய மயில் வாகனமும் ஆகிய இவைகளை,


அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு --- அன்பு மிகுதியாலே உலகிலே உள்ள எல்லோரும் ஓதி உய்யுமாறும்,


தீதற ---  குற்றங்கள் விலகுமாறும்,


நான் ஆசு பாடி ஆடி நாடொறும் ---  அடியேன் நாள்தோறும் ஆசுகவியாகப் பாடியும், ஆனந்தத்தால் ஆடியும்,


ஈடேறுமாறு ஞான போதகம் அன்பு உறாதோ --- கடைத் தேறுமாறு சிவஞானபோதத்திலே அன்பு உண்டாகாதோ?


பொழிப்புரை


வாராகியாக விளங்குபவரும், நீண்ட கபாலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும், கங்கையாகத் திகழ்பவரும், பெரிய மாயையைச் செய்பவரும்,  உலகங்கட்கு அன்னையாகத் திகழ்பவரும், ஒளி மயமானவரும், பச்சை நிறம் உடையவரும், (மன) வாக்கிற்கு எட்டாதவரும், பெரிய பொருளாகியவரும்,  அடியவர் உள்ளத்தில் தங்குகின்ற தாயும், இறைவரோடு வாது செய்தவரும், பிணங்குபவரும், துர்க்கையாக வந்தவரும், உமாதேவியாரும், உலகத்தை ஆக்கியும், அளித்தும், அழித்தும் விளையாடுபவரும், ஆலகால விடத்தை உண்டருளி வரும், மகா காளிதேவி ஆனவரும், திரிசூலத்தைத்  தாங்கியவரும், இளமையானவரும்,  மோகத்தைச் செய்பவரும், அழகிய பார்வதி அம்மையாரும், மகிடாசுரன் முதலிய அசுரத் தலைவர்களை அழித்தவரும், பெரிய முப்புரங்களை எரித்தவரும், அழகியவரும், திருநீற்றுப் பொடியைப் பூசிக்கொள்ளுகின்ற குளிர்ந்தவரும், சிவந்த மலையாகிய அருணையில் வாழ்பவரும்,  முதன்மை பெற்று உலகங்கட்குத் தலைவியாக வீற்றிருப்பவரும் ஆகிய அம்பிகையார், பெற்றருளிய குமாரக் கடவுளே!


தோள்வலியாலும், வாள்வலியாலும் மாறுபட்டவனும், யாவரிடத்தும் தோல்வி அடையாதவனும்,  தேவர் உலகைச் சூறையிட்டவனும் ஆகிய சூரபதுமனை அடக்கியவரே!


விசாக மூர்த்தியே!


தேவர்கள் வணங்கும் தனிப்பெரும் தலைவரே!


தணியாத காதல் கொண்டு, பெண்களுடைய அழகிய பாத முதல் உச்சி வரையிலும், கண்களைச் செலுத்துபவனாகி, உள்ளம் மாறுபட்டவனாகி, உந்திச் சுழியினாலே, ஆசையாகிய பேய் என்னை அழுத்தி மேற்கொள்ள, மேலான ஆசாரத்தை விட்டு அநாசாரனாகி, மிகவும் அசுத்தனாகி,  எங்கும் திரிந்து நாள்தோறும் அடியேன் அழிந்து போகாமல், பன்னிரு புயங்களும், ஆறு திருமுகங்களும், திருமார்பிலே பொருந்தி உள்ள மணம் கமழ்கின்ற கடப்பமலர் மாலைகளும், உயர்ந்த நீலநிறம் பொருந்திய தோகையுடன் கூடிய மயில் வாகனமும் ஆகிய இவைகளை, அன்பு மிகுதியாலே உலகிலே உள்ள எல்லோரும் ஓதி உய்யுமாறும், குற்றங்கள் விலகுமாறும், அடியேன் நாள்தோறும் ஆசுகவியாகப் பாடியும், ஆனந்தத்தால் ஆடியும், கடைத்தேறுமாறு சிவஞானபோதத்திலே அன்பு உண்டாகாதோ?


விரிவுரை


ஆராத காதல் ---


ஆராத – தணியாத. பெண்கள்பால் தணிதல் இல்லாத காதல் கொண்டு, தவநெறி விடுத்து, அவநெறி அடுத்து, அலைவது பேதைமை.


இறைவனிடத்துக் காதல் வைக்கவேண்டும். அது ஞானக் காதல்.  அதனால் எல்லா நலன்களும் உண்டாகும்.


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது....  ---  திருஞானசம்பந்தர் தேவாரம்.


பெருமை உடையார் மனைதொறும் போய்

பிச்சை எடுத்தார் ஆனாலும்,

அருமை மணியார் அம்பலத்தே

ஆடித் திரிந்தார் ஆனாலும்,

ஒருமை உடையார் கோவணமே

உடையாய் உடுத்தார் ஆனாலும்,

கருமை விழியாய் நான்அவர்மேல்

காதல் ஒழியேன் கனவிலுமே. ---  திருவருட்பா.


மாதர் தம் பாதாதி சூட மீதிலே விழி ஆலோலனாய் ---


மகளிருடைய பாதம் முதல் கூந்தல் வரை வியந்து நோக்கியும், புகழ்ந்து கவிகள் பல ஆக்கியும் கெடுகின்றவர் பலர். பஞ்சுபோல் நரைக்கின்ற கூந்தலை முகில் என்றும், அறல் என்றும் புகழ்வர். பீளை சொரியும் கண்களை, வேல் என்றும், சேல் என்றும், கடல் என்றும், கயல் என்றும் கூறுவர். சளி ஒழுகும் நாசியை எள்ளுப் பூ என்றும்,  குறும்பி வரும் செவியை வள்ளை இலையென்றும், நாறுகின்ற வாயில் உள்ள பல்லை முத்து என்றும், உதட்டைப் பவழம் என்றும், சதைக்கட்டிகளை மேரு என்றும், குடம் என்றும்,  இவ்வாறு அருவருக்கத்தக்க உறுப்புக்களை மிகமிக உயர்வாகச் சிறப்பித்துப் பாடியும், அவைகளை உற்று உற்றுப் பார்த்தும், கண்கள் பூத்தும், உடல் வேர்த்தும், பணத்தைத் தூர்த்தும், அவமே அழிவர்.  இது மடமை.  ஊன உடம்பை விரும்பி அழியாது, இறைவருடைய ஞான உடம்பை நினைந்து உய்ய வேண்டும்.


பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல்என்பது ஆகத் திரிகின்ற நீ,செந்திலோன் திருக்கை

வேல் என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, மனமே, எங்ஙனே முத்தி காண்பதுவே. ---  கந்தர் அலங்காரம்.


வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச் செவ்வாய்க் கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே

ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்

வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே. ---  மணிவாசகம்.


 

"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர், அமையும், அவர் என் செய?

 

மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே".--- கோயில் நான்மணி மாலை.

 

"சொல் பல பேசித் துதித்து, நீங்கள்

நச்சிச் செல்லும் நரக வாயில்

தோலும் இறைச்சியுந் துதைந்து சீப் பாயும் 

காமப் பாழி, கருவிளை கழனி,

தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்

எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி,

மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்,

நச்சிக் காமுகர நாய்தான் என்றும்

இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி,

புண் இது என்று புடவையை மூடி

உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண், 

மால்கொண்ட அறியா மாந்தர் புகும் வழி,

நோய்கொண்டு ஒழியா நுண்ணியர் போம்வழி,

தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,

செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,

பெண்ணுமு ஆணும் பிறக்கும் பெருவழி,

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே

சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,

இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி

மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை, 

முத்தி நாதனை, மூவா முதல்வனை,

அண்டரு அண்டமும் அனைத்து உள புவனமும்

கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,

ஏக நாதனை, இணை அடி இறைஞ்சுமின்,

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!"    ---  பட்டினத்தார்.

 

     வள்ளல் பெருமான் நமது நெஞ்சுக்கு அறிவுறுத்துமாறு காண்க....

 

.....            .....            .....       மந்திரத்தில்

பேய்பிடித்தால் தீர்ந்திடும்,இப் பெண்பேய் விடாதே,செந்

நாய்பிடித்தால் போலும் என்று நாடிலையே,--- ஆய்வில்உன்றன் 

 

ஏழைமை என் என்பேன்,இவர்மயக்கம் வல்நரகின்

தோழைமை என்று அந்தோ துணிந்திலையே,--- ஊழ்அமைந்த   

 

கார் இருளில் செல்லக் கலங்குகின்றாய்,மாதர்சூழல்

பேர் இருளில் செல்வதனைப் பேர்த்திலையே --- பாரிடையோர் 

 

எண்வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய்,ஏந்திழையார்

கண்வாள் அறுப்பக் கனிந்தனையே,--- மண்வாழும்

 

ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய்,மாதர்முலை

ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே --- சீரான 

 

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய்,மாதர்முலை

வெற்பு என்றால் ஏற விரைந்தனையே,--- பொற்புஒன்றும்

 

சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய்,மாதர் இடைச்

சிங்கம் எனில் காணத் திரும்பினையே,--- இங்குசிறு

 

பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய்,மாதர் அல்குல்

பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே,--- ஆம் பண்டைக் 

 

கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ,மாதர் அல்குல்

பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே,--- கீழ்க் கதுவும்

 

கல் என்றால் பின்னிடுவாய்,காரிகையார் கால்சிலம்பு

கல் என்றால் மேல் எழும்பக் கற்றனையே,--- அல்அளகம் 

 

மையோ கருமென் மணலோ என்பாய், மாறி

ஐயோ நரைப்பது அறிந்திலையோ?--- பொய் ஓதி

 

ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய்,உள்எலும்புஆம்

வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே,--- கண்புருவம் 

 

வில் என்றாய்,வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்

சொல் என்றால் சொல்லத் துணியாயே,--- வல் அம்பில்

 

கண் குவளை என்றாய்,கண்ணீர் உலர்ந்துமிக

உள்குழியும் போதில் உரைப்பாயே,--- கள்குலவு

 

மெய்க்குமிழே நாசி என வெஃகினையால்,வெண்மலத்தால்

உய்க்குமிழுஞ் சீந்தல் உளதேயோ?--- எய்த்தல் இலா

 

வள்ளை என்றாய் வார்காது,வள்ளைதனக்கு உள்புழையோடு

உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ?--- வெள்ளைநகை 

 

முல்லை என்றாய்,முல்லை முறித்து ஒருகோல் கொண்டுநிதம்

ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ?--- நல்லதொரு 

 

கொவ்வை என இதழைக் கொள்கின்றாய்,மேல்குழம்பும்

செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே,--- செவ்வியகண் 

 

ஆடி எனக் கவுட்கே ஆசை வைத்தாய்,மேல்செழுந்தோல்

வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே?--- கூடியதோர்

 

அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய்,ஏழ்துளைகள்

எந்த மதிக்கு உண்டு? அதனை எண்ணிலையே,--- நந்து எனவே

 

கண்ட மட்டும் கூறினை அக் கண்ட மட்டும் அன்றி,உடல்

கொண்டமட்டும் மற்று அதன்மெய்க் கூறு அன்றோ,---  விண்டவற்றைத்

 

தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய்,அவ்வேய்க்கு

மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே?--- நாளொன்றும் 

 

செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய்,அம்மலர்க்குப்

பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே?--- மங்காத 

 

செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்புஇங்கு

எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே?--- செவ்வைபெறும்

 

செப்பு என்றனை முலையை,சீசீ சிலந்தி அது

துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே?--- வப்பு இறுகச்

 

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய்,கீழ்த்துவண்டு

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே,--- தாழ்ந்த அவை

 

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய்,முதிர்ந்து உடையாப்

புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? --- திண்கட்டும் 

 

அந் நீர்க் குரும்பை அவை என்றாய்,மேல் எழும்பும்

செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே,--- அந்நீரார்

 

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார்,சான்றாக

வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே?--- தண்ணீர்மைச்

 

சாடி என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்துஇடும் மேல்

மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ?--- மேடு அதனை

 

ஆல் இலையே என்பாய்,அடர் குடரோடு ஈருளொடும்

தோல் இலையே ஆல் இலைக்கு, என் சொல்லுதியே? ---  நூல் இடைதான் 

 

உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய்,கைதொட்டுக்

கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே,--- விண்டுஓங்கும்

 

ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை,சிற்சிலர்கள்

பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே,---  தாழ்ங்கொடிஞ்சித்

 

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை,அன்றுசிறு

நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே, --- ஆராப்புன் 

 

நீர் வீழியை ஆசை நிலை என்றாய்,வன்மலம்தான்

சோர் வழியை என்என்று சொல்லுதியே,--- சார்முடைதான் 

 

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்

வீறாப் புண் என்று விடுத்திலையே,--- ஊறு ஆக்கி          

 

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி,மற்று அதன்மேல்

சீலை இடக் கண்டும் தெரிந்திலையே,--- மேலை உறு-

 

மே நரகம் என்றால் விதிர்ப்புறு நீ,மாதர் அல்குல்

கோ நரகம் என்றால் குலைந்திலையே,--- ஊனம் இதைக்

 

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்

தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே,--- அண்டாது

 

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய்,மற்று அதன்பால்

மாதவிடாய் உண்டால் மதித்திலையே,--- மாதர் அவர்  

 

தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய்,தண்டுஊன்றி

வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே,--- நன்கு இலவாய்

 

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய்,புலால் சிறிதே

வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே --- சேந்த அடி

 

தண் தாமரை என்றாய்,தன்மை விளர்ப்பு அடைந்தால்

வெண் தாமரை என்று மேவுதியோ?--- வண் தாரா 

 

மேல் நாட்டுஞ் சண்பகமே மேனி என்றாய்,தீயிடுங்கால்

தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ?--- வானாட்டும்

 

மின் தேர் வடிவு என்றாய்,மேல்நீ உரைத்த உள் ஈது

ஒன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண், --- ஒன்றாச்சொல் 

 

வேள் வாகனம் என்றாய்,வெய்யநமன் விட்டிடும் தூது

ஆள்வாகனம் என்றால் ஆகாதோ?--- வேள் ஆனோன் 

 

காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய்,காலன் என்போன்

காகளம் என்பார்க்கு என் கழறுதியே?--- நாகளவும் 

 

சாயைமயில் என்றே தருக்குகின்றாய்,சார்பிரம

சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே,--- சேயமலர்

 

அன்ன நடைஎன்பாய்,அஃது அன்று, அருந்துகின்ற

அன்னநடை என்பார்க்கு என் ஆற்றுதியே,--- அன்னவரை 

 

ஓர ஓவியம் என்பாய்,ஓவியமேல் ஆங்கு எழுபத்து

ஈராயிர நாடி யாண்டு உடைத்தே?--- பார் ஆர்ந்த

 

முன்னுமலர்க் கொம்பு என்பாய்,மூன்றொடரைக் கோடியெனத்

துன்னும் உரோமத் துவாரம் உண்டே?--- இன் அமுதால்

 

செய்த வடிவு என்பாய்,அச் செய்கை மெய்யேல்,நீ அவர்கள்

வைதிடினும் மற்று அதனை வையாயே,--- பொய் தவிராய்

 

ஒள்ளிழையார் தம் உபு ஓர் உண்கரும்பு என்றாய், சிறிது

கிள்ளி எடுத்தால் இரத்தம் கீழ்வருமே,--- கொள்ளும் அவர்

 

ஈடில் பெயர் நல்லார் என நயந்தாய்,நாய்ப்பெயர் தான்

கேடில் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ?--- நாடில்அவர்

 

மெல்இயலார் என்பாய்,மிகு கருப்ப வேதனையை

வல்இயலார் யார் பொறுக்க வல்லார்காண்?--- வில்லியல்பூண் 

 

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய்,வெந்தீயில்

பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- வேய்ந்தாங்கு

 

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய்,வெம்புலிப்பின்

சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே,--- சென்றாங்கு

 

நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய்,கண்மூடி

நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே,--- ஒன்றாது

 

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல் அணைத்துக்

கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே,--- பெண்டுஆனார்

 

வைதாலும் தொண்டு வலித்தாய்,பிணத்தொண்டு

செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- கைதாவி

 

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,

செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே,--- வைத்தாடும் 

 

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ,மற்றொழிந்து

துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே --- வஞ்சியரைப்

 

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய்,வெந்நரகைப்

பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே --- சேர்த்தார் கைத் 

 

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய்,வன்பூதம்

தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே --- நட்டாலும்

 

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய்,தீ விடத்தை

வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே,--- செவ்விதழ்நீர்

 

உண்டால் மகிழ்வாய் நீ,ஒண்சிறுவர் தம்சிறுநீர்

உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே --- கண்டு ஆகக்

 

கவ்வுகின்றாய் அவ் இதழை,கார் மதுகம் வேம்பு இவற்றைக்

கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே,--- அவ்இளையர்

 

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய்,நீ வெறும்வாய்

மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே,--- முன்தானை 

 

பட்டால் மகிழ்வு பதிந்தாய்,பதைக்க அம்பு

பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே,--- கிட்டாமெய்த் 

 

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய்,செந்தேள்முன்

தீண்டிடினும் அங்கு ஓர் திறன்உண்டே,--- வேண்டி அவர்

 

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய்,மற்ற அதைஓர்

நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே,--- தாக்கவர்க்காய்த்

 

தேட்டாண்மை செய்வாய், அத் தேட்டாண்மையைத்தெருவில்

போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே,--- வாட்டாரைக் 

 

கொண்டார் உடன் உணவு கொள்கின்றாய்,குக்கலுடன்

உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே --- மிண்டு ஆகும் 

 

இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய்,புன்மலத்தை

நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே, --- மங்கையர்தம் 

 

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய்,ஈமம் அது

காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே,--- பூத்தாழ்வோர்

 

காட்டாக் குரல் கேட்பாய்,கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்

கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே,--- கோட்டாவி 

 

ஆழ்ந்தார் உடன்வாழ ஆதரித்தாய்,ஆழ்ங்கடலில்

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே --- வீழ்ந்தார் உள்

 

வீட்டால் முலையும்,எதிர் வீட்டால் முகமும் உறக்

காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே,--- கூட்டாட்குச்

 

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்

பை கையிடல் கண்டும் பயந்திலையே,--- சைகை அது

 

கையால் ஒருசிலர்க்கும்,கண்ணால் ஒருசிலர்க்கும்,

செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே,--- எய்யாமல்

 

ஈறு இகந்த இவ்வகையாய்,இம்மடவார் செய்கையெலாம்

கூறுவனேல்,அம்ம! குடர் குழம்பும்;--- கூறும்இவர்

 

வாய் ஒருபால் பேச,மனம்ஒருபால் செல்ல, உடல்

ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்;--- ஆயஇவர்

 

நன்று அறியார்,தீதே நயப்பார்,சிவதலத்தில்

சென்று அறியார்,பேய்க்கே சிறப்பு எடுப்பார்,--- இன்று இவரை

 

வஞ்சம் என்கோ?வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்

புஞ்சம் என்கோ?மாநரக பூமி என்கோ?--- அஞ்சுறும் ஈர்

 

வாள் என்கோ?வாய்க்கு அடங்கா மாயம் என்கோ?மண்முடிவு

நாள் என்கோ?வெய்ய நமன் என்கோ?--- கோள்என்கோ? 

 

சாலம் என்கோ?வான் இந்த்ர சாலம் என்கோ?வீறு ஆல

காலம் என்கோ?நின் பொல்லாக் காலம் என்கோ?--- ஞாலம்அதில் 

 

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,

மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்..... --- திருவருட்பா.

 

 

நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?

     பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?

     நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்

 நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?

     சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?

     நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து

 

எய்த்த இடை அது கொடியோ?துடியோ?

     மிக்க திருஅரை அரவோ?ரதமோ?

     இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,

 இச்சை விரகுடன் மடவார் உடனே,

     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,

     ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.--- திருப்புகழ்.

 


இலஞ்சியாலே ---


இலஞ்சி - உந்தி.  இங்கு உந்திச் சுழினைக் குறித்தது.


மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென

     வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக

     வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய

     உந்தியென் கின்றமடு ...... விழுவேனை... ---  திருப்புகழ்.


ஆசா பசாசு மூடி ---


ஆசையாகிய பேய் பிடிக்க, அதனால் நன்மை இன்னதென்று அறியவும், தீமையை நன்மை என்றும், துக்கத்தைச் சுகம் என்றும் கருதி உழல்வர்.


ஆசார ஈனன் ஆகி ---


ஆன்றோர்கள் வடித்த நல்லொழுக்கத்தை மேற்கொள்ளாமல், நீராடாமல் உண்பதும்,  உடுத்த உடையையே மீண்டும் மீண்டும் உடுப்பதும், எச்சில்பட்ட கலங்களில் உண்பதும், பலர் கவ்விய பாத்திரங்களில் பாத்திரம் கடித்துக் குடிப்பதும், மது மாமிசங்களை உண்பதும், இன்னோரன்ன பிறவும் ஆகிய அநாசாரங்களை உடையராய் அலையும் மாந்தர் பலர்.


ஆபாசன் ஆகி ---


ஆபாசம் - அசுத்தம்.


மனத்தினால் தீயவை நினைத்தும், வாக்கினால் தீயவை உரைத்தும், காயத்தால் தீயவை புரிந்தும், அசுத்தராகி இம்மை நலனையும், மறுமை நலனையும் ஒருங்கே இழப்பர்.  மனம் தூய்மை உடைய தியானமும், வாக்குத் தூய்மை உடைய துதியும், காயம் தூய்மை உடைய வழிபாடும் புரிதல் வேண்டும்.


திருக்குஉறும் அழுக்காறு அவாவொடு வெகுளி

        செற்றம் ஆகியமன அழுக்கைத்

    தியானம்என் புனலால்; பொய், புறங்கூறல்,

        தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை

அருட்கிளர் நினது துதியெனும் புனலால்;

        அவத் தொழில் என்னும் மெய் அழுக்கை

    அருச்சனை என்னும் புனலினால் கழுவா

        அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ?

விருப்பொடு வெறுப்பு இங்கு இலாதவன் என்ன

        வெண்மதி யோடு வெண் தலையும்,

    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்

        விருந்துஉணும் கொன்றைமென் மலரோடு,

எருக்கையும் அணிந்து, மின்னொளி கடந்த

        ஈர்ஞ்சடை, பாந்தள் நாண்உடையாய்,

    இட்டநன்கு உதவி என்கரத்து இருக்கும்

        ஈசனே, மாசிலா மணியே.            --- சிவப்பிரகாசர்.


மனதால் உண்டாகும் அழுக்கு ஆகிய அழுக்காறு, அவா, வெகுளி, பகைமை உணர்வு ஆகியவற்றை, தியானம் என்னும் நீரால் கழுவி அகற்ற வேண்டும்.


பொய் சொல்லுதல், புறம் கூறுதல், தீய சொற்களைக் கூறுதல் என்னும் வாயால் உண்டாகும் அழுக்கை, இறைவனை வாயாரப் பாடிப் புகழ்வதன் மூலம் கழுவ வேண்டும்.


பாவச் செயல்களில் ஈடுபடுவதனால் உண்டாகும் உடல் அழுக்கை, அருச்சனை என்னும் நீரால் கழுவிப் போக்க வேண்டும்.


இவ்வாறு, மன அழுக்கு, வாய் அழுக்கு, உடல் அழுக்கு என்று முக்கரண அழுக்கைச் சிவப்பிரகாச அடிகளார் தெளிவிப்பது ஓதி, உணர்ந்து, ஒழுக வேண்டியது.

  

இதனைச் சுருக்கமாகத் திருவள்ளுவர், "மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்று அருளிச் செய்தார். மனமாசு நீங்குதலே எல்லா அறங்களுமாகும். மன அழுக்கு நீங்கினாலே, வாய் அழுக்கும், மெய் அழுக்கும் இல்லாது ஆகும்.



அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு ---


அருணகிரிநாதப் பெருமான் எந்தை கந்தவேள் கருணை முழுவதும் பெற்று, பாசகரண பசுகரணங்களை நீங்கி, பதிகரணம் பெற்று, பரஞானபரராய் விளங்கி, உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஓதி உய்வு பெறும்பொருட்டு, திருப்புகழாகிய இத் தமிழ் மறையைப் பாடியருளினார் என்பது "எனோரும் ஓதுமாறு" என்ற திருவாக்கினால் நன்கு புலனாகின்றது.  இவ்வாறே பிறிது ஒரு இடத்திலும் அடிகள் கூறியருள்வதை நோக்குக.


….. ….. ….. உலகேழும்

யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்

     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்

          ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும்...  --- (ஆனாதஞான) திருப்புகழ்.


முத்திக்கு வித்தாக எத்திக்கும் தித்திக்குமாறு சந்தத் தமிழ்ப் பாமாலையை அடிகளார் ஓதி நமக்கெல்லாம் உபகரித்தவர். ஆதலின், முருகவேள் திருவருளை எளிதில் பெறுவதற்கு சிறந்த சாதனம், நாள்தோறும் திருப்புகழை நியதியாகப் பாராயணம் செய்வதே ஆகும்.


பலகாலும் உனைத்தொழு வோர்கள் 

  மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே...   ---  (நிலையாத) திருப்புகழ்.


எனோரும் என்றமையால், எல்லா மதத்தினரும், எல்லாக் குலத்தினரும், எல்லாப் பக்குவிகளும், எல்லாக் காலத்தவரும், எல்லாக் கொள்கையரும் இத் திருப்புகழை ஓதி உய்வு பெறுதல் வேண்டும் என்பது உறுதியாகின்றது.


நான் ஆசு பாடி ---


ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்று கவி நான்கு வகைப்படும்.  நாலுகவி த்யாகா என்பார் அநுபூதியில். அருணகிரிநாதர் ஆசுகவி பாடுவதில் வல்லவர்.


வாராகி ---


சத்த மாதர்களில் ஒருவர். சத்தமாதர்களாவார் --- அபிராமி, மகேச்சுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. இவர்களது வாகனம் --- அன்னம், இடபம், மயில், கருடன்,சிங்கம், யானை, பேய்.  இவர்களது ஆயுதம் --- மறை, பிநாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம்,  சூலம்.


விசாகனே ---


விசாக நட்சத்திரத்திற்கு உரியவர். வி-சாகம். சிறந்த பட்சங்களை உடைய மயில்வாகனத்தை உடையவர்.


கருத்துரை


முருகா! பெண்களைக் கண்களால் கண்டு மயங்கி, உழலாமல், தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள் புரிவீர்.


061. மடி இன்மை - 10. மடியிலா மன்னவன்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 61 -- மடி இன்மை இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "திருமால் தனது அடியால் உலகத...