"நான்" கலந்து பாடவேண்டும்.

 

"நான்" கலந்து பாட வேண்டும்

-----

தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே ஞானிகள் உபதேசம் செய்வார்கள். "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் இதற்கு வழிகாட்டி அருளினார். குருவாக உள்ளவர்கள் தம்முடைய சீடர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்கலாம். இவை யாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். இறைவனைப் பாமாலைகளால் வழிபட்டுத் தமது காலத்தில் வாழ்ந்திருந்த மக்களை நல்வழிப்படுத்தி ஈடேற்றி, எதிர்காலத்தில் தோன்றக் கூடிய மக்களுக்கும் பயன்படும் வகையில் பாமாலைகள் பலவற்றைத் தொடுத்து வைத்துச் சென்று இருக்கிறார்கள் அருளாளர்கள். பூமாலைகள் சிறிது நேரத்தில் வாடிவிடும். பாமாலைகள் என்றுமே வாடாத மாலைகள். அவற்றை "மாத்ருகா புஷ்ப மாலை" என்று சிறப்பித்துப் பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல.

உபதேசம் பெறுவதற்குத் தகுதி உள்ளவர் இன்னார் என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம். அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று "அழித்துப் பிறக்க ஒட்டா அயில்வேலவன் கவியை அன்பால் எழுத்துப் பிழ அறக் கற்கின்றிலீர்" என்னும் அருள்வாசகத்தின் மூலம் புலப்படுத்துகிறார்.

பாமாலை சூட்டப் பெறுபவன் இறைவன். அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான். பார்வதி திருமணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் திருக்கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென்திசைக்குப் போகும்படி பணித்து அருளினான்.  தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கி விழுவோமோ தெரியாது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும். அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான். அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இலக்கணத்தை அவருக்கு அருளினான். "குறுமுனிக்கும் தமிழ் உரைக்கும் குமர! முத்தம் தருகவே" என்பது பிள்ளைத்தமிழ். "சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழ, இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே" என்று பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஓதிய நூல்களை உணரவேண்டும். உணராமலேயே ஓதிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. உணர்ந்ததைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சொல்லுபவர் மனம் அடங்கியவராக இருக்க வேண்டும். “சினம் அடங்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்று, மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் தாயுமான அடிகளார். அந்த வகையில், முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர்.

அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது பிழையோடு பாடலாமா? அருணகிரிநாதப் பெருமான் தமிழிலே வல்லவர். "அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ்தான் அளித்த மயில்வீரா" என்று தமக்கு அருள் புரிந்த முருகனைப் போற்றி உள்ளார். அந்த முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது பாடப் பெற்றப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

"அழித்துப் பிறக்க ஒட்டாஅயில் வேலன் கவியை, அன்பால்

எழுத்துப் பிழைஅறக் கற்கின்றிலீர்! எரிமூண்டது என்ன

விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே?"

என்று அருணகிரிநாதர் பாடி உள்ள கந்தர் அலங்காரப் பாடலைக் கருத்து ஊன்றி ஓதிச் சிந்திக்க வேண்டும். "பழுது அற ஓதிக் கடந்து, பவ வினை தீரத் துறந்து" என்றும் திருப்புகழில் அருணகிரிநாதர் அறிவுறுத்துகின்றார்.

அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், ஞானம் பிறந்து, பிறப்பு ஒழியும். ஞானமே முருகன் திருக்கரத்தில் வேலாக அமைந்து இருக்கிறது. அந்த ஞானவேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும். "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்பது கந்தர் அனுபூதி. "வேலுண்டு வினை இல்லை" என்பது ஆத்த வாக்கியம். "எனது தீவினை எல்லாம் மடிய நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா?" என்கிறார் பழனித் திருப்புகழில். மடங்கல் என்பதை, மடம்+கல் என்று பிரித்துப் பொருள் கொள்வோமானால், (மடம்-அறியாமை; கல்-தோண்டி எடுத்து நீக்குகின்ற) அறியாமையை நீக்குகின்ற  வேலை உடையவரே என்று பொருள்படும். “மடங்கல் வேலா” என்பதற்கு சிங்கத்திற்கு நிகரான வேலாயுதரே என்றும் பொருள் கூறலாம்.

கற்பது எப்படி என்று சற்று சிந்திக்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அனுபவமாக மாறும் போதுதான் அது முற்றுப் பெறும். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். இறைவனுடைய பொருள்சேர் புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அனுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அனுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

பழங்காலத்தில் சனகாதியர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள்  முதலாக அனைத்தையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஐயம் நீங்கினபாடில்லை. அனுபவ நிறைவு உண்டாகவில்லை. ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும் என்று கற்றவர்களை நாடிச் சென்றால், அவர்கள் எல்லாம் தாம் கற்றதையே விரித்துக் கூறிக் கொண்டு இருப்பார்கள். அறிவு நிறையப் பெற்றவர்களால் மட்டுமே ஐயத்தை நீக்கித் தெளிவு உண்டாக்க முடியும். நிறை அறிவு அல்லது பரிபூரண அறிவு வடிவாக உள்ளவன் இறைவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உன் அருண சரணாரவிந்தம் என்று பணிவேனோ" என்று பாடுகிறார் அருணை அடிகள்.  முருகப் பெருமானை  "முதுஞான சொருபகிரி" என்கிறார். ஞானம் - அறிவு. அறிவு சிறிது சிறிதாக நமக்கு வளர்ச்சி உறுகின்றது. இறைவனிடம் உள்ளது முற்றறிவு, பேரறிவு. தானே எல்லாவற்றையும் அறிவது முழுஞானம். பழுத்தஞானம். அந்த ஞானமே இறைவனுக்கு வடிவம். நம்மைப் போன்று, ஏழு தாதுக்களால் ஆன உடம்பு இறைவனுக்கு இல்லை.

"ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?

மோனம் தீர்கலா முனிவரும் காண்கிலர், முழுவதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தன்மை".   --- கந்தபுராணம்.


அறிவே சொரூபமாகிய ஆண்டவனை அறிவினாலேயே தான் அறியவும் அடையவும் முடியும்.

"ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்

      நாட்டமே! நாட்டத்துள் நிறைந்த

வானமே! எனக்கு வந்துவந்து ஓங்கும்

      மார்க்கமே! மருளர்தாம் அறியா

மோனமே! முதலே! முத்திநல் வித்தே!

      முடிவிலா இன்பமே! செய்யும்

தானமே! தவமே! நின்னைநான் நினைந்தேன்,

      தமியனேன் தனை மறப்பதற்கே."        --- தாயுமானார்.

சனகாதியர் அறிவு வடிவாகிய, ஞானமே வடிவாகிய இறைவனைச் சரண் அடைந்தார்கள்.  கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின்முத்திரையினால் விளக்கினான் இறைவன். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.

“கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறை 

ஆறங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்ககு இறந்த 

பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த த(ன்)னை 

இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 

நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்"

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடுகிறார்.

கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இறைவன், கல்வியினால் அறிந்துகொள்ள முடியாத பொருள். அறிந்தேன் என்று கூறிக் கொள்பவர்களாலும் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டு இருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அனுபவம் தோற்றி, மோனம் தலைப்படும். "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றார் மணிவாசகப் பெருமான். "கற்ற கலையால் நிலைதான் காணுமோ? காண்பது எல்லாம் அற்ற இடத்தே வெளி ஆம் அன்றோ பராபரமே" என்கிறார் தாயுமான அடிகளார். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்கிறார் மணிவாசகப் பெருமான். எனவே, கற்பது எப்படி என்று இப்போது விளங்கும்.

இறைவன் அருட்புகழை நூல்களின் வாயிலாகக் கற்றதுமே பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் இறைவனைப் பாடினால் இனிக்கிறது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாடுகின்ற பாடலின் பொருளை உணர்ந்து, அதன் கருத்தாக உள்ள இறைவன் நமது கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும். அவர்கள் சொன்னது உண்மை என்று விளங்கும்.

மணிவாசகர் பாடி அருளிய திருவாசகப் பாடல்களை பலரும் பாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்றும் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களில் பலரும் உருகித்தான் பாடினார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான மெட்டுகளில் பாட வேண்டும் என்ற முனைப்பு இருப்பதால், பாடலின் பொருள் உள்ளத்தில் விளங்குவது இல்லை. திருவாசகம் திருவாசகமாக இருக்கின்றது. பாடுபவர் பாடுபவராக இருக்கின்றார். பாடுபவர் திருவாசகத்தோடு ஒன்றவில்லை, கலக்கவில்லை.

  வள்ளல்பெருமான் திருவாசகத்தை அனுபவித்தார். திருவாசகம் அவருக்கு இனித்தது, உவட்டாமல் இனித்தது. நான் பாடுகின்றேன் என்ற எண்ணம் இல்லாமல், பாடலின் பொருளிலே உள்ளம் தோய்ந்ததால் இனித்தது என்கிறார்.

"வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்துஎன்

ஊன்கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

அவருக்கு மட்டும் இனிக்கின்றது திருவாசகம்.  நமக்கு அப்படி இனிக்காமல் போவது ஏன்?

நான் அன்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கக் காபி தந்தார்கள். அதைக் கொஞ்சம் குடித்தபோது இனிப்புத் தெரியவில்லை. எனது முகக் குறிப்பை அறிந்து கொண்ட அன்பர், “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது.  கலந்து குடியுங்கள்" என்றார். காபியை இன்னொரு குவளைக்கு மாற்றியபோது, அடியில் சர்க்கரை இருப்பது தெரிந்தது. கலக்கினேன். சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட்டபோது காபி இனித்தது. சர்க்கரை வேறு, காபி வேறாக இருந்தால் இனிக்காது. 'நான் பாடுகின்றேன்' என்ற முனைப்பு இல்லாமல், பாடலின் பொருளோடு கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று வள்ளல்பெருமான் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

மனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று திருவள்ளுவ நாயனார் பேசுகிறார். சாகிறவன் மரணத் தருவாயில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவத்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும் - கண் பிதுங்கும். மரண வேதனையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவை.

தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் இயமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள்.  உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும்போது, அது தானாகப் போகாது. உடம்பில் இருந்து கூறுபடுத்திக் கொண்டு போவது இயமனுக்கு விதிக்கப்பட்ட தொழில். இயமன் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால், பெரியவர்கள் அவனைத் தருமராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவன். ஆதலால் தருமராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம்.

இயமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண்கள் நெருப்புக்  கொப்புளிக்கும் - புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே நமது உள்ளத்தில் பயம் உண்டாகிறது. மரணம் பயம் உடையது என்று எண்ணுகிற நமக்குக் இயமனும் அச்சம் தரும் கோலத்துடன் இருக்கிறான்.

"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரர் தேவாரம். அப்படி இருக்க மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மரணத்தை வரவேற்கத் தானே வேண்டும்  என்று கூறலாம். மரணத்தைப் பற்றிய பயன் உண்டானால்தான் அதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை தோன்றும். மரணம் இல்லாப் பெருவாழ்வை அருள்கின்ற இறைவனிடத்தில் பத்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற  இறைவனிடத்தில் பத்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் பெரியோர்கள். பத்தியை மிகுவிப்பவை அருளாளர்கள் பாடிய அருட்பாடல்கள்.

பத்திச் சுவை ததும்ப அருளாளர்கள் பாடி வைத்துச் சென்ற அருட்பாடல்களை அவற்றின் பொருளை உணர்ந்து ஓதி வழிபடுதல் வேண்டும். வித்தையைக் காட்டுவது கூடாது. 'நான் பாடுகின்றேன்' என்பதை மறந்து, பாடலோடு ஒன்றிப் பாடுதல் வேண்டும். 'நான்' என்பது தோன்றக் கூடாது. அது பாடலின் பொருளோடு கலந்துவிட வேண்டும். "நான் கலந்து பாடுங்கால்" என்று வள்ளல்பெருமான் அருளியதைச் சிந்திக்கவேண்டும். பொருள் உணர்ந்து ஓதி நாம் உருகுவதோடு கேட்பவர்களையும் உருகச் செய்தல் வேண்டும். "படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே" என்கிறார் வள்ளல்பெருமான்.

எனவே, எழுத்துப் பிழை இன்றி, பாடலின் பொருளை உணர்ந்து ஓதி நலம் பெறுதல் வேண்டும். பிறரையும் நலம் பெறுவித்தல் வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்பது மணிவாசகம். பொருள் உணர்ந்து ஓதி, அருள்நலத்தைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...