அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மடல்அவிழ் சரோருக (பொது)
முருகா!
விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,
தேவரீர் போதகத்தை அருள வேண்டும்.
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
மனமகிழ வேயளித்து ...... மறவாதே
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான்
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு ...... மருகோனே
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து,
மத சுக ப்ரதாப சித்ர ...... முலையாலே,
மலர் அமளி மீது அணைத்து, விளையும் அமுத அதரத்தை
மனம் மகிழவே அளித்து, ...... மறவாதே
உடல் உயிர் அதாய் இருக்க, உனது எனது எனா மறிக்கை,
ஒரு பொழுது ஒணாது சற்றும், ...... எனவே தான்,
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை
ஒழிய, ஒரு போதகத்தை ...... அருள்வாயே.
தட மகுட நாக ரத்ந படம் நெளிய ஆடு, பத்ம
சரண யுக மாயனுக்கு ...... மருகோனே!
சரவணமிலே உதித்த குமர! முருக ஈச! சக்ர
சயிலம் வலமாய் நடத்து ...... மயில்வீரா!
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும்
அறுமுகவ! ஞான தத்வ ...... நெறி வாழ்வே!
அசுரர் குல வேரை வெட்டி, அபயம் என ஓலம் இட்ட
அமரர் சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
பதவுரை
தடமகுட நாகரத்ன பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே --- விசாலமான மகுடங்களைக் கொண்டதும், நாகரத்தினத்தை உடையதும் ஆன காளிங்கன் என்னும் பாம்பின் படம் நெளியுமாறு திருநடனம் புரிந்த, தாமரை போன்ற இரண்டு திருவடிகளை உடைய திருமாலின் திருமருகரே!
சரவணமிலே உதித்த குமர --- சரவணப் பொய்கையில் உதித்த குமாரக் கடவுளே!
முருக --- முருகப் பெருமானே!
ஈச --- எவ்வுயிர்க்கும் தலைவரே!
சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா --- சக்ரவாள கிரியை வலம் வரும்படி மயிலைச் செலுத்திய வீரரே!
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ --- வல்லமை வாய்ந்த வேலாயுதத்தை அழகு விளங்கத் திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
ஞான தத்வ நெறி வாழ்வே --- மெய்ஞ்ஞான நெறியில் பயில்வோர்க்குக் கிட்டிய அருட்செல்வரே!
அசுரர் குல வேரை வெட்டி, அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே --- அசுரர் குலத்தவர்களை வேருடன் அழித்து, அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமையில் மிக்கவரே!
மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து --- இதழ்கள் விரிந்து மலர்ந்த தாமரை போன்ற வாயில் இருந்து வெளிப்படுகின்ற புன்சிரிப்பால் காமுகர்களின் மனதைக் கவர்ந்து,
மத சுக ப்ரதாப சித்ர முலையாலே மலர் அமளி மீது அணைத்து --- மன்மதன் உண்டாக்கும் இன்ப நிலைக்குப் பெயர்பெற்ற அழகிய முலைகளால், மலர்ப் படுக்கையிலே அணைத்து,
விளையும் அமுத அதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே --- காம உணர்வினால் விளையும், அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனம் மகிழ மறவாமல் தந்து,
உடல் உயிர் அதாய் இருக்க --- உடலும் உயிரும் ஒன்றுபட்டது போன்று இருக்கும் நிலையில்,
உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் உரை செய் --- உனது, எனது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று பேசுகின்ற,
மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய --- விலைமாதர்கள் தருகின்ற கலவி இன்பத்தால் உண்டாகும் வருத்தம் ஒழியுமாறு,
ஒரு போதகத்தை அருள்வாயே --- ஒப்பற்ற நல்லுபதேச மொழியை அடியேனுக்கு அருள் புரிவீராக.
பொழிப்புரை
விசாலமான மகுடங்களைக் கொண்டதும், நாகரத்தினத்தை உடையதும் ஆன காளிங்கன் என்னும் பாம்பின் படம் நெளியுமாறு திருநடனம் புரிந்த, தாமரை போன்ற இரண்டு திருவடிகளை உடைய திருமாலின் திருமருகரே!
சரவணப் பொய்கையில் உதித்த குமாரக் கடவுளே!
முருகப் பெருமானே!
எவ்வுயிர்க்கும் தலைவரே!
சக்ரவாள கிரியை வலம் வரும்படி மயிலைச் செலுத்திய வீரரே!
வல்லமை வாய்ந்த வேலாயுதத்தை அழகு விளங்கத் திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!
மெய்ஞ்ஞான நெறியில் பயில்வோர்க்குக் கிட்டிய அருட்செல்வரே!
அசுரர் குலத்தவர்களை வேருடன் அழித்து, அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமையில் மிக்கவரே!
இதழ்கள் விரிந்து மலர்ந்த தாமரை போன்ற வாயில் இருந்து வெளிப்படுகின்ற புன்சிரிப்பால் காமுகர்களின் மனதைக் கவர்ந்து, மன்மதன் உண்டாக்கும் இன்ப நிலைக்குப் பெயர்பெற்ற அழகிய முலைகளால், மலர்ப் படுக்கையிலே அணைத்து, காம உணர்வினால் விளையும், அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனம் மகிழ மறவாமல் தந்து, உடலும் உயிரும் ஒன்றுபட்டது போன்று இருக்கும் நிலையில், உனது, எனது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று பேசுகின்ற, விலைமாதர்கள் தருகின்ற கலவி இன்பத்தால் உண்டாகும் வருத்தம் ஒழியுமாறு, ஒப்பற்ற நல்லுபதேச மொழியை அடியேனுக்கு அருள் புரிவீராக.
விரிவுரை
மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து ---
சரோருகம் - தாமரை.
மத சுக ப்ரதாப சித்ர முலையாலே மலர் அமளி மீது அணைத்து ---
மத சுகம் - மன்மதன் உண்டாக்குகின்ற சுகம்.
பிரதாபம் - பெயர் பெற்றது.
சித்ர முலை - அழகிய முலை.
அமுத அதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே ---
அதர அமுதத்தை மறவாதே மனம் மகிழவே அளித்து.
அதரம் - வாய் இதழ். உதடு. வாயில் ஊறுகின்ற எச்சிலை, அதர பானம் என்பர். கலவியின் போது காம மயக்கத்தில் அது எச்சில் எனத் தோன்றாது. அமுதம் எனத் தோன்றும்.
மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே ---
தோதகம் - வருத்தம், வஞ்சகம், சாலவித்தை, கற்பு ஒழுக்கம் இன்மை.
போதகம் - நல்லுரை, சொல்லிக் கொடுத்த புத்தி.
ஒரு போதகம் - ஒப்பற்ற போதகம்.
விலைமாதர் கூட்டுறவால் விளைந்த தோதகம் ஒழிய, போதகத்தை அருளுமாறு முருகப் பெருமானை அடிகளார் வேண்டுகின்றார்.
தடமகுட நாகரத்ன பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே ---
காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் தலை உச்சியில் கண்ணன் நர்த்தனம் புரிந்தார். யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. கண்ணன் அங்கு சென்று, மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்து, பாம்பினுடன் போர்புரிந்து வென்று, அப் பாம்பின் படத்தின் மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.
காளிங்க நர்த்தனத்தின் பொருள் --- காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களாகிய - ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி மெய்யறிவுப் பொருளாகிய கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.
"லகரமே போல் காளிங்கன் அல் உடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கு அரி"
என்றார் பாம்பன் சுவாமிகள், சண்முக கவசத்தில்.
சரவணமிலே உதித்த குமர ---
சரவணத்திலே உதித்த என்பது "சரவணமிலே" என்று வந்தது.
சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா ---
சயிலம் - மலை.
சக்ர சயிலம் - சக்கரவாள மலை. சக்கரவாள கிரி.
"தடக்கொற்ற வேள்மயிலே இடர் தீரத் தனிவிடின் நீ
வடக்கில் கிரிக்கு அப்புறத்தும் நின் தோகையின் வட்டம்இட்டுக்
கடற்கு அப்புறத்தும், கதிர்க்கு அப்புறத்தும், கனகசக்ரத்
திடர்க்கு அப்புறத்தும், திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே" --- கந்தர் அலங்காரம்.
"சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலம்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு
தனி வெற்பும் அம்புவியும் எண்
திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெம்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும்கவுரி
பத்மப் பதம் கமழ் தரும்
பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய
பரம உபதேசம் அறிவிக்
கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லாரகிரி உருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே." --- மயில் விருத்தம்.
கருத்துரை
முருகா! விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர, தேவரீர் போதகத்தை அருள வேண்டும்.
No comments:
Post a Comment