"ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
ஒன்றுதப் பாது புரிவார்;
உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்
ஒருமூன்றி னுக்கும் மறவா
தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்
அதிதிபூ சைகள்பண் ணுவார்;
யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
பிழையா திருக்கும் மறையோர்
பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்
பேசுதற் கரித ரிதுகாண்!
ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே - ஆத்திமாலை தரித்த நீண்ட திருச்சடையை உடைய தூயவனே! எனை ஆளும் அண்ணலே - என்னை ஆட்கொண்டு அருள் புரியும் தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வைதிக நல்மார்க்கமே பிழையாது இருக்கும் மறையோர் - மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் - (தமக்கு உரிய) ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் - தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமல் செய்வார், உதய ஆதியில் சென்று நீர் படிகுவார் - வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும் மறவாது ஆராய்ந்து காயத்திர அது செபிப்பார் - முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார், நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் - எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர கிரியாலோபம் இன்றியே செய்து வருவார் - வேள்வி முதலிய தொழில்களை மந்திர உச்சரிப்புக் குறையாமலும், கிரியைகளில் குறைவு இல்லாமலும் செய்து வருவார், பேராசை கொண்டிடார் - பேராசை கொள்ளமாட்டார், பெய் என முகில் பெய்யும் - (இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது - அவருடைய மேன்மை யாவராலும் கூற இயலாதது! இயலாதது!
அந்தணர்களுக்கு உரிய ஆறு தொழில் : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் - வேள்வி செய்தல். வேட்பித்தல் - வேள்வி செய்வித்தல்.)
No comments:
Post a Comment