87. கோபத்தின் கொடுமை

 


"கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை;

     கோபமே குடிகெ டுக்கும்;

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது;

     கோபமே துயர்கொ டுக்கும்;


கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு;

     கோபமே உறவ றுக்கும்;

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி;

     கோபமே கருணை போக்கும்;


கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்;

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்;


ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும் அண்ணலே - இடையூறுகளை எல்லாம் நீக்கி என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!,  அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை - சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும் அப்பனும் ஆகும்;

கோபமே குடிகெடுக்கும் - சினமே குடியைக் கெடுக்கும்;

கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது - சினமே எதனையும் அடைய விடாது;

கோபமே துயர் கொடுக்கும் - சினமே துயரத்தைத் தரும்; 

கோபமே பொல்லாது - சினமே கெட்டது; 

கோபமே சீர்கேடு - சினமே புகழைக் கெடுப்பது;

கோபமே உறவு அறுக்கும் - சினமே உறவைத் தவிர்க்கும்;

கோபமே பழி செயும் - சினமே பழியை உண்டாக்கும்;

கோபமே பகையாளி - சினமே ஒருவனுக்குப் பகையாளி;

கோபமே கருணை போக்கும் - சினமே அருளைக் கெடுக்கும்; கோபமே ஈனம் ஆம் - சினமே இழிவாகும்; 

கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் - சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியன் ஆக்கும், 

கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில் தள்ளும் - சினமே காலன்முன் இழுத்துச் சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

விளக்கம் ---

ஔவைப் பிராட்டியார், அறம் செய்ய விரும்புகின்ற உனது மனத்துள் ஆறவேண்டியது நீ கொள்ளுகின்ற சினம் ஆகும் என்பதை அறிவுறுத்த, "ஆறுவது சினம்" என்றார். எனவே, கோபமானது ஒருவனுக்குத் தணிய வேண்டுவது ஆகும் என்பதை அறிதல் வேண்டும். காரணம், சினம் மிகுந்து தீராமல் இருந்தால், அது போராக முடியும் என்பதை அறிவுறுத்த, "தீராக் கோபம் போராய் முடியும்" என்று கொன்றைவேந்தன் மூலமாக விளக்கம் தந்தார் ஔவைப் பிராட்டியார். 


கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும். பின்வரும் பாடல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளத்தில் மிக்கு எழுகின்ற சினத்தின் வேகத்தைத் தணித்து, தன்னையும் பிறரையும் காத்துக் கொள்ளுவதே சிறந்த குணம் என்கின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

"உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க, - வெள்ளம்

தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ? விளம்பு."  ---  நன்னெறி.

இதன் பொருள் ---

மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற  குணமே மேலான குணம் என்று அறிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோ? முன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ? நீயே சொல்வாயாக.

உடம்போடு உயிரானது எப்போதும் கூடி இருப்பதில்லை. வாழ்நாள் முடிவில் பிரியத் தான் போகின்றது. அதுபோல, உள்ளத்தில் ஒருக்கால் தோன்றிய சினமானது தணியத் தான் வேண்டும். பயிரில் உடன் வளர்கின்ற புல்லைக் களைந்து, பயிரைக் காத்துக் கொள்வது போல, உள்ளத்தில் எழுகின்ற சினத்தைக் களைந்து, தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்கின்றது "அறநெறிச்சாரம்".

"உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்

செயிரும் சினமும் கடிந்து, - பயிரிடைப்

புல்களைந்து நெல்பயன் கொள்ளும் ஒருவன் போல்

நற்பயன் கொண்டு இருக்கற் பாற்று." --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி - உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து - பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல் - பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து - மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று - இன்பத்துக்கு ஏதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

சான்றோர் உள்ளத்தில் சினம் தோன்றும். ஆனால் அது விரைவில் தணிந்துவிடும் என்கிற்து "நாலடியார்". சினத்தைத் தணிவித்துக் கொள்ளப் பழகுபவர் சான்றோர்.

"நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும், - அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்." --- நாலடியார்.

இதன் பதவுரை ---

நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்களின் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியும் காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுகின்ற காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.


கோபத்தில் நன்மை எது என்பதே தோன்றாது, எல்லாம் கெட்டுப் போகும் என்கின்றது "நான்மணிக்கடிகை".

"கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம், காதலித்து ஒன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல், - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா, எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்" --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

கழிவு இரக்கம் கற்றார்முன் தோன்றா - இழந்த பொருள்களுக்கு வருத்தப்படுதல், கற்று உணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து ஒன்று உற்றார்முன் உறா முதல் தோன்றா - ஊக்கம் கொண்டு, ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவரிடத்தில், அது விரைவில் கிட்டாமையால் ஆகிய முயற்சித் துன்பம் தோன்றாது; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா - தெளிவாய் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும் - எல்லா நன்மைகளும், சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டு ஒழியும்.


"மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்

முதல் அற முருக்குமா போல்

தாங்க அரும் சினத்தீ தன்னுளே பிறந்து

தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,

ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால்

அதனை உள்ளடக்கவும் அடங்காது

ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்

உட்பகை உலகில் வேறு உண்டோ?"  --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல, ஒருவனிடத்தில் வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு இல்லை.


"கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,

கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்,

கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்,

கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே." --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம் தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர் புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர் துறந்தனர்.

சினம் தோன்றுவது இயல்புதான். சினம் தோன்றினால், அதனைத் தணித்துக் (ஆற்றிக்) கொள்ளுதல் வேண்டும். 


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...