"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்
நெறியே! நின் செயல் உண்டாகில்
எங்காகில் என்ன? அவர் எண்ணியதெல்
லாம்முடியும்!, இல்லை யாகில்,
பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்
வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
தன்னுடனே ஆகும் தானே."
இதன் பொருள் ---
செங்காவி மலர்த் தடம்சூழ் தண்டலை நீள் நெறியே - சிவந்த குவளை மலர்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள் நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபரம்பொருளே!
நின் செயல் உண்டாகில் - தேவரீருடைய நல்ல அருள் கிடைத்தால், எங்கு ஆகில் என்ன அவர் எண்ணியது எல்லாம் முடியும் - எவ்விடமாயினும் என்ன? அவர்கள் நினைத்தது முற்றும் முற்றுப் பெறும்,
இல்லை ஆகில் - தேவரீரது அருள் கிடையா விட்டால், பொங்கு ஆழிசூழ் உலகில் - நீர் மிகுந்த கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில், உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக - உள்ளங் காலில் (தசை தேய்ந்து) வெள்ளை எலும்பு தெரியும்படியாக, ஐங்காதம் ஓடிப் போனாலும் தன் பாவம் தன் உடனே ஆகும் - ஐந்துகாத தொலைவு விரைவாகப் போய் அலைவுற்றாலும் தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.
விளக்கம் ---
இறைவன் செயல் நம் ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால், "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள்ளெலும்பாய்ப் போக' என்பது மரபுமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே' என்பது பழமொழி.
No comments:
Post a Comment