80. பயன் இல்லாதவை

 


"சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்

     சார்பொழுது இலாத கிளைஏன்?

  சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு

     சமரத்திலாத படைஏன்?


விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்

     வேளைக்கிலாத சுடர்ஏன்?

  வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்

     வேளைக் கிலாத கலைஏன்?


தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?

     சரசத் திலாதநகை ஏன்?

  சாம்மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?

     தரணிமீ தென்பர் கண்டாய்!


அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத

     ஆதியே! அருமைமத வேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத ஆதியே - வானவர்க்கும் முனிவர்க்கும் பிறர் எவர்க்கும் அடைய இநலாத முழுமுதற் பரம்பொருளே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 


தரணி மீது சமயத்தில் உதவாத நிதியம் ஏன் - உலகில் வேண்டிய காலத்திற் பயன்படாத செல்வம் எதற்கு? 


மிக்க துயர் சார்பொழுது இலாத கிளை ஏன் - மிகுதியான துன்பம் உண்டானபோது பயன்படாத உறவு எதற்கு?


சபைமுகத்து உதவாத கல்வி ஏன் - அவைக் களத்தில் பயன்படாத கல்வி எதற்கு?


எதிரி வரும் சமரத்து இலாத படை ஏன் - பகைவன் எதிர்த்து வரும் போரில் பயன்படாத படை எதற்கு?


விமலனுக்கு உதவாத பூசை ஏன் - தூயவனான இறைவனுக்குப் பயன்படாத வழிபாடு எதற்கு?


நாளும் இருள் வேளைக்கு இலாத சுடர் ஏன் - எப்போதும் இருட்பொழுதில் ஒளிதராத விளக்கு எதற்கு?


வெம் பசிக்கு உதவாத அன்னம் ஏன் - கொடிய பசியைத் தணிக்கப் பயன்படாத உணவு எதற்கு?


நீடு குளிர் வேளைக்கு இலாத கலை ஏன் - நீண்ட குளிர் காலத்திற்குப் பயன்தராத ஆடை எதற்கு?


தமது தளர் வேளைக்கு இலாத ஓர் மனைவி ஏன் - தங்களின் சோர்வு காலத்திற்கு உடன் இராத ஒரு மனைவி எதற்கு?


சரசத்து இலாத நகை ஏன் - விளையாட்டின்போது இல்லாத நகைப்பு எதற்கு?


சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன் - உயிர்விடும் இறுதிப் போதில் உதவாத மகன் எதற்கு?


என்பர் - என்று (அறிஞர்) கூறுவர்.


No comments:

Post a Comment

உலகநீதி - 7

  "கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்     கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்     பொது நிலத்தி...