"மண்ணுலகா ளவும்நினைப்பார், பிறர்பொருள்மேல்
ஆசைவைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம்என் பதைச்செய்யார், கடைமுறையில்
அலக்கழிந்து புரண்டே போவார்;
பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார்
வகுத்தவிதிப் படியல் லாமல்
எண்ணமெல்லாம் பொய்யாகும்! மௌனமே
மெய்யாகும் இயற்கை தானே!"
இதன் பொருள் ---
பண் உலவும் மொழி பாகர் தண்டலையார் வகுத்த விதிப்படி அல்லாமல் - இனிய இசையைப் போன்ற மொழியை உடைய உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டவரான திருத்தண்டலை இறைவர் வகுத்து இட்ட கட்டளையின் வண்ணமே நடக்கும் அன்றி, எண்ணம் எல்லாம் பொய் ஆகும் - நினைத்தவை யாவும் நடவாமல் பொய்த்துப் போகும். மௌனமே மெய் ஆகும் இயற்கை - (சிவபரம்பொருளின் திருவருளை மனதில் சிந்தித்துப்) பேசாதிருப்பதே நலந்தருந் தன்மை உடையது, (ஆகையால்) மண் உலகு ஆளவும் நினைப்பார் - நிலவுலகை ஆள நினைப்பவரும், பிறர் பொருள்மேல் ஆசை வைப்பார் - மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவோரும், வலிமை செய்வார் - தமது ஆற்றலால் (பிறர்க்குக் கேடு) செய்வோரும், புண்ணியம் என்பதைச் செய்யார் - சிறிதும் புண்ணியச் செயல்களைச் செய்யாதவரும், கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார் - இறுதியில் மனக் கலக்கமுற்றுக் கெட்டு அழிவார்கள்.
அவரவர் செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர் கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும் முடியாமல் நம் வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும். ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்' என்பது பழமொழி. பேராசை கொண்டு பிறர்க்குக் கேடு செய்வோர் கெடுவது திண்ணம். எனவே, தீய செயல்களில் மனத்தைச் செலுத்துவதை விடுத்து, நற்செயல்களை இறைவன் திருவருளை எண்ணிச் செய்து வாழ்வதே நன்மையைத் தரும் என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment