"கறுத்தவிடம் உண்டருளும் தண்டலையார்
வளநாட்டிற் கடிய தீயோர்
குறித்துமனை யாளரையில் துகிலுரிந்தும்
ஐவர்மனம் கோபித் தாரோ!
பறித்துரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே அரசாள்வார்! பொங்கினவர்
காடாளப் போவார் தாமே."
இதன் பொருள் ---
கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார் வளநாட்டில் - கரிய நஞ்சினை உண்டு உலகினுக்கு அருளிய திருத்தண்டலை இறைவர் எழுந்தருளி உள்ள செழித்த நாட்டிலே, மனையாள் அரையில் துகில் கடிய தீயோர் குறித்து உரிந்தும் - தங்கள் மனைவியான துரௌபதியின் இடையிலிருந்த ஆடையை மிகவும் கொடியரான கவுரவர் (இழிவு செய்ய) நினைத்து அவிழ்த்த காலத்திலும், ஐவர் மனம் கோபித்தாரோ - பாண்டவர்கள் மனத்திலே சீற்றங் கொண்டனரோ? (ஆகையால்), உரிய பொருள் முழுதும் பறித்துக் கவர்ந்தாலும் அடித்தாலும் பழி செய்தாலும் - (தமக்கு) உரிமையான எல்லாப் பொருளையும் வலிதில் எடுத்துக் கொண்டாலும் அடித்தாலும் இழிவு செய்தாலும், பொறுத்தவரே அரசு ஆள்வர் பொங்கினவர் காடு ஆளப் போவர் - பொறுத்துக் கொண்டவரே உலகு ஆள்வர், மனம் பொறாதவர் காட்டைக் காக்கச் செல்வர்.
‘பொறுத்தவர் பூமியாள்வார்; பொங்கினவர் காடாள்வார்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment