15. மழை விட்டும் தூவானம் விடவில்லை.

 

"உழையிட்ட விழிமடவார் உறவுவிட்டும்,

     வெகுளிவிட்டும், உலக வாழ்விற்

பிழைவிட்டும், இன்னம்இன்னம் ஆசைவிடா

     தலக்கழியப் பெற்றேன்! அந்தோ!

தழையிட்ட கொன்றைபுனை தண்டலைநீள்

     நெறியே! என் தன்மை யெல்லாம்

மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை

     யாய் இருந்த வண்மை தானே."


இதன் பொருள் ---


தழைஇட்ட கொன்றை புனை தண்டலை நீள் நெறியே - செழிப்புடைய கொன்றை மலரை அணிந்த, திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு  எழுந்தருளிய நீள்நெறி நாதரே!


உழை  இட்ட  விழி  மடவார் உறவுவிட்டும் - மானின் கண்களைப் போன்ற கண்களை உடைய  பெண்களின் நட்பை விட்டும், 


வெகுளி விட்டும் - சீற்றத்தை மாற்றிக் கொண்டும்,


உலக வாழ்வில் பிழை விட்டும் - . உலக  வாழ்க்கையில்  நேரும் பிழைகளைத் திருத்திக்கொண்டும், 


இன்னம் இன்னம் ஆசை விடாது அலக்கழியப் பெற்றேன் - இன்னமும் ஆசை அறாமல் துன்பத்தில் அளைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன்.


அந்தோ - ஐயோ!, 


என் தன்மை எல்லாம் - என்னுடைய இயற்கை எல்லாம், மழைவிட்டும்  தூவானம்  விட்டது  இல்லையாய் - மழை விலகியும் தூவானம், விடாமல், இருந்த வண்ணம் தான் - இருந்த அழகுதான்.


விளக்கம் ---


      தூவானம் : மழைபெய்து விட்ட பிறகும் இருக்கும் சிறு தூறல். ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பது பழமொழி.

ஆசையே பிறவிக்கு வித்து. "ஆரா இயற்கை அவா" என்பார் திருவள்ளுவ நாயனார். ஆரா - நிறைவு அடையாத. பெற்றும் நிறைவு அடையாத இயற்கையினை உடையது மனிதன் உள்ளத்தில் எழும் ஆசை. ஆசைப்படுவது கிடைக்கப் பெறாமையால் மனநிறைவு இருக்காது. எனவே, அசையை அளவறுக்க இயலாது என்றர் பெரியோர். "ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே" என்பது ஒன்பதாம் திருமுறை. "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்பது திருமூலர் திருமந்திரம்.

ஒருவனுக்குத் தீராத வறுமையை உண்டாக்குவது எது? என்றால், அவனது தீராத ஆசையே என்கிறார் குமரகுருபர அடிகள். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே - அல்கா நல்குரவு அவா எனப்படுமே" என்பது அவரின் அருள் வாக்கு. இல்கா - குறையாத. நல்குரவு - வறுமை. ஆசையை விட்டுவிடலாம் என்று தோன்றும். ஆனால், பிறிதொன்றுக்கு உள்ளம் ஆசைப்படும். இதுதான் ஆன்மாவின் இயல்பு.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! வாழ்க்கையின் தேவைகள் நிறைவேறினால் தன் வாழமுடியும். ஆசை காரணமாகத் தேவைகள். ஆசை இருப்பதால் தேவைகளைத் தேடிக் கொள்ள முடிகிறது. ஆசைகளை நீக்கி வாழவேண்டும் என்றால் எல்லாரும் துறவிகள் ஆகவேண்டும்.  துறவிகளில்கூட ஆசையை விட்டவர் இல்லை.  இன்றைய துறவிகள் விளம்பரம், பெருமை, இவற்றில் சராசரி மனிதர்களை விடக் கூடுதலாகவே ஆசைப்பட்டு அலைகின்றார்கள். அதற்காகவே திரிகின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆசையை அகற்றுவது எப்படி சித்தியமாகும்?

வாழ்வதற்குப் பொருள்கள் தேவை. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்பது திருக்குறள். வாழ்வாங்கு வாழ எண்ணற்ற நுகர்பொருள்கள் தேவை என்று எண்ணுகின்றோம். பொருள்களை விரும்பி அடைந்து அனுபவித்து வாழ்வதுதானே வாழ்க்கை. பொருள்களை விரும்புவது அவாவா? ஆசையா? பொருள் இல்லையாயின் வாழ்க்கையே இல்லையே! அப்படியானால் அவற்றை விரும்புவது தவறாகுமா? என்றால், இல்லை, இல்லை! இல்லவே இல்லை. தேவைக்கு விரும்புவது ஆசை அல்ல. எந்தப் பொருளையும் தேவைக்கு விரும்புவது ஆசை அல்ல. தேவைக்காக அல்லாது, சொத்தாக, இருப்பாக ஆக்கிக் கொள்ள விரும்புவது ஆசை.

பொருள், வாழ்க்கையை நடத்த ஒரு தேவை. தேவைக்காக விரும்புவது - தேடுவது அறம். எவ்வளவுதான் பொன்னையும் பொருளையும் ஈட்டிச் சேர்த்து வைத்தாலும், அனுபவிப்பது என்னவோ சிறிதுதான். இது எந்தப் பிறவியிலும் மாறப் போவது இல்லை. "உண்பது நாழி. உடுப்பது நான்கு முழம்" என்றார் ஔவைப் பிராட்டியார். உண்பது நான்கு நாழி ஆகப் போவது இல்லை. உடுப்பதும் நாற்பது முழம் ஆகப் போவது இல்லை. எனவே, துய்ப்பனவும் உய்ப்பனவும் இன்றிச் சேமித்தலுக்காகப் பொருள்களைத் தேடுதல் ஆசை என்னும் குற்றம் ஆகும். இந்த ஆசை அறவே தீது. 

இந்த உலகம் பரந்தது. பலரிடம் பல பொருள்கள் இருக்கலாம். அவை, அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஆரவாரத் தோற்றத்திற்காகவும் வைத்திருக்கலாம். நமக்கு அப்பொருள்கள் தேவையில்லை. நமக்கு ஏன் அப்பொருளின் மீது ஆசை? அப்படியே ஆசைப்பட்டாலும் அப்பொருளை அடைவதற்குரிய தகுதியும் நம்மிடம் இல்லை. ஏன் ஆசை? பொருள்கள் நுகர்வுக்காக மட்டுமே! பிறர் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று சிலர் பொருள்களின் மீது ஆசைப்படுவது உண்டு. ஆளுமை இல்லாத பொருள் சார்ந்த பெருமை  ஒன்றுக்கும் ஆகாது.

ஆசை, எரியும் நெருப்புப் போன்றது. குடி, பிறப்பு, மானம் எல்லாவற்றையும் அழிக்கும். ஆசைக்கு வெட்கம் இல்லை! நாணம் இல்லை. ஆசை எப்போதும் தற்சார்பானது. பிறர் நலம் நாடும் பாங்கு ஆசைக்கு இல்லை. எவருடைய நலனையும் பலியிட்டு ஆசை அடைய முயலும். ஆசை - பேராசை என்னும் இரண்டுக்கும் நடுவில் பெரிய வேறுபாடு இல்லை. ஆசையே எரியும் தீ நாக்குப் போன்றது. உலக வழக்கில் மனம் நிறைவு பெறாத ஆசையைப் பேராசை என்று கூறுகின்றோம். ஆசையின் இயல்பு என்பது, ஆசைப்பட்டதை எப்படியும் அடைய வேண்டும் என்பதே ஆகும். ஆசை வந்துவிட்டால், நன்மை - தீமை, நீதி - அநீதி, நியாயம் - அநியாயம், இன்பம் - துன்பம் ஆகிய எவற்றைப் பற்றியும் சிந்தனை இருக்காது. ஆசைப்பட்டதை அடைந்தே தீர்வது என்று வாழ்வதே ஆசையில் இயல்பு. ஆசைப்பட்டுதவற்கும் அளவுகோல் ஏதும் இல்லை.

"ஆசைக்கு ஓர் அளவில்லை, அகிலம் எல்லாம் கட்டி

        ஆளினும், கடல்மீதிலே

      ஆணை செலவே நினைவர், அளகேசன் நிகராக

        அம்பொன் மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்,

        நெடுநாள் இருந்தபேரும்

      நிலையாகவேய இனும் காயகற்பம் தேடி

        நெஞ்சு புண்ணாவர், எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

        உறங்குவதும் ஆகமுடியும்;

      உள்ளதே போதும் நான் நான்எனக் குளறியே

        ஒன்றை விட்டு ஒன்றுபற்றிப்

பாசக் கடற்குளே வீழாமல், மனம் அற்ற

        பரிசுத்த நிலையை அருள்வாய்;

      பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்அற நிறைகி்ன்ற

        பரிபூரண ஆனந்தமே." --- தாயுமானார்.

இதன் பொருள் ---

ஆரா இயற்கை அவா ஆதலின், அவாவினுக்கு ஒரு வரம்பில்லை. ஏனெனில் நிலவுலகம் அனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆளினும், ஆளும் வேந்தனது எண்ணம் கடல் நடுவே காணப்படும் எண்ணிலாத் தீவுகளையும் தனது ஆணைக்கு உட்படுத்து, அங்கும் தனது ஆணையினைச் செலுத்தவே நாளும் எண்ணும். மேலும் கடலையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தலும், வானத்தை உட்படுத்தலும், திங்கள் மண்டிலம் முதலிய கோள் உலகங்களைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தலும் ஆகிய ஆனாத முயற்சியில் தானாக முனைந்து, அறிவியல் வாயிலாக நடக்கின்றமையை இன்றும் காண்கின்றோம். செல்வக் கோமானாகிய குபேரனை ஒத்த பெரும் பொருட்குவியலை வரம்பு இல்லாமல் பெற்று உள்ளவர்களும், மேலும் பொருளைக் குவிக்கவேண்டும் என்று ஆசை கொண்டு, செம்பு முதலிய பொருள்கள் பொன்னாக மாறும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்து அலைந்து வாடுவர். இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாது அனுபவித்து வாழ்ந்தவரும், மனநிறைவு கொள்ளாது, இன்னும் என்றும் அழியாமல் உடலுடனே கூடியிருக்க நினைந்து காயகற்பம் என்னும் மருந்து தேடி, அதற்காக வீணே வருந்தி அலைந்து, நெஞ்சு புண்ணாவர். இவை அனைத்தும் ஆழ்ந்து எண்ணுங்கால், வயிற்றுப் பசிநோய் தீரச் சோற்று மருந்து உண்ணவும், காமநோய் தீரச் சிற்றின்ப நுகர்வும், உடல் இளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதுமாகவே முடியும். ஆதலால், வினைக்கு ஈடாகக் கிடைத்தவற்றைக் கொண்டு, உள்ளதே போதும் என்ற நிறைவை அடைந்து, ஆணவ முனைப்பினால் நான் நான் என்று ஆங்காரம் மேலிட்டுக் குளறுதல் புரிந்து நுகர்பொருள்களாகிய புலன்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப், பாசப் பிணிப்பாகிய பெருங்கடலுள் வீழாமல், மனம் அடங்குதலாகிய தூய (அடிமை) நிலையினை அடியேற்கு அருள்புரிவாயாக.

ஆசை, கடலின் அலைகளைப் போல வளரும். எண்ணெய் வசப்பட எரியும் நெருப்புப் போலப் பற்றி எரியும். எனவேதான், "ஆரா இயற்கை அவா" என்றார் திருவள்ளுவ நாயனார். நலத்துடன் வாழ்வதற்குரியவற்றைத் தவிர, பிறவற்றை தவிர விரும்பாமை வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு பொருள்களின் மீது வைத்த ஆசையில் இருந்து விலகுகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் குறையும்.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்." --- திருக்குறள்.

அவாவை நீக்குதலுக்குரிய வழி! பொருள்கள் வாழ்க்கையில் தேவை என்ற அளவில் மட்டுமே கருதுதல். அதற்குமேல் அந்தப் பொருள்கள் மேல் அளவு கடந்த மதிப்பைக் கூட்டி அப்பொருள்களுக்காக வாழ்தல் இல்லை அல்லது அப்பொருள்கள் இல்லையானால் வாழ்க்கை இல்லை என்று கருதாமல் வாழ்வதும் அவாவை நீக்குதற்குரிய வழி.

மனிதர்களிடத்தில் ஆசை வைப்பது. மனிதர்களிடத்தில் ஆசை வைக்கவேண்டும். ஏன்?  நாம் ஆசை வைக்கும் மனிதர்கள் மீது நமக்கு ஏன் ஆசை? நமக்கு வேண்டுவன செய்வார்கள் என்று எண்ணி ஆசைப்படுவது தவறு! மற்றவர்களை அவர்களுடைய நன்மைக்காக ஆசைப்படுவது தவறல்ல. இன்று பலர், நண்பனை நேசிக்கிறார்கள். நண்பனுக்காக அல்ல, தனக்காகவே. தனக்கு ஒரு நன்மை இல்லாது போனால், நட்பையும் துறக்கின்றார்கள். தனக்காகவே மனைவியை நேசிக்கிறார்கள். மனைவிக்காக அல்ல. தனக்காகவே நேசிக்கிறார்கள், ஆசை காட்டுகிறார்கள். இது தவறு. இதனால் ஆசை வளருமே அன்றி, குறையாது. பிறரிடம் பிறர் நலங்கருதி ஆசை காட்டத் தொடங்கினால் ஆசை அகலும். 

பிறப்பானது துன்பத்தையே தரும் என்பதை அறிந்த ஒருவனுக்கு ஆசை என்று ஒன்று இருந்தால், அது பிறவாமை என்னும் ஆசையாகவே இருத்தல் வேண்டும். அநாதியாகவே உயிரானது பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, நோய் ஆகியவற்றால் துன்பத்தை அடைந்து வருகின்றது. எனவே, மீண்டும் மீண்டும் துன்பத்தில் உழல விரும்பாது. விரும்புவது இன்பமாகவே இருக்கும். அந்த இன்பமானது பிறவாமையால் உண்டாகும் இன்பமே ஆகும். ஒரு பொருளின் மீது ஆசையை வைப்பதால், அந்த ஆசையானது பிறப்பினைக் கொடுக்கும் வித்தாகும் என்பதால், உண்மையான வீட்டின்பத்தை விரும்புகின்ற ஒருவன், ஆசையை விட்டுவிடுதல் வேண்டும்.

"ஆசை படப்பட ஆய் வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்று நமது கருரூலத்தை அறுக்க வந்த, திருமூல நாயனார் அருளியதன் அருமையை உணர்க.

"அருளால் அறம்வளரும், ஆள்வினையால் ஆக்கம்,

பொருளால் பொருள்வளரும், நாளும்--தெருளா

விழைவு இன்பத்தால் வளரும் காமம் அக் காம

விழைவு இன்மையால் வளரும் வீடு".  ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

அருளல் அறம் வளரும் - துன்பத்தால் வருந்துகின்ற பிற உயிர்களுக்கு இரங்கி அருள் செய்வதால் அறமானது வளரும், ஆள்வினையால் ஆக்கம் - முயற்சியால் பெருவாழ்வு உண்டாகும்.  நாளும் பொருளால் பொருள் வளரும் - எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாகும், தெருளா விழைவு இன்பத்தால் காமம் வளரும் - மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம விழைவு இன்மையால் வீடு வளரும் - ஆசையை விட்டு விட்டால் வீடுபேறு உண்டாகும்.

இவ்வுலகத்தில் மக்கள் அடையும் செல்வமும், தேவலோகத்தில் தேவர்கள் அடைந்துள்ள அமுதம், கற்பகத் தரு, சிந்தாமணி முதலாகிய செல்வங்களும், ஒன்றை வைத்து மற்றொன்றை ஆராய்ந்த பார்த்தால், ஒன்றினுக்கு ஒன்று கீழ்ப்படுதலும், மேம்படுதலும் ஆகிய இரண்டு தகுதிகளை உடையனவே. மக்களுள்ளேயும் ஒருவர் செல்வம், மற்றவர்க்குக் கீழாதலும், மேலாதலும் உண்டு. தேவர்களுள்ளேயும் பிரமனது செல்வத்தை நோக்க, இந்திரனது செல்வம் கீழானது எனப்படும். அல்லாமல், இவை யாவும் நிலையான இன்பத்தைத் தராது. துன்பத்திற்கு இடமாகிய பிறப்பினையே தருவன ஆகும். பிறப்பினையும், அதனால் சாருவதாகிய துன்பத்தையும் தருவது ஆசையே. ஆசையை அறுத்துவிட்டால், பிறப்பு இல்லை. அதனால் வரும் துன்பமும் இல்லை. எனவே, ஆசையை அறுத்தல் பெரும் செல்வமாகும். அச் செல்வத்திற்கு, இவ்வுலகச் செல்வங்களும், விண்ணுலகச் செல்வங்களும் ஈடாகா. எனவே, "வேண்டாமை அன்ன விழுச் செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

"ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும்

ஆசு அற்ற நல்லடியான் ஆவானே, - ஆசை

தனை அடிமை கொண்டவனே தப்பாது உலகம்

தனை அடிமை கொண்டவனே தான்."   ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

ஆசைக்கு அடிமைப்பட்டவன் உலகம் முழுமைக்கும் குற்றம் அற்ற நல்ல அடிமை ஆவான். உலகத்தில் உள்ள யாவர்க்கும் என்பது குறிப்பு. ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே, உலகத்தைத் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

எனவே, ஆசையை அளவறுத்து, பிறர் நலம் கருதி வாழ்வதாலும், பிறவி என்பது எப்படியும் துன்பம் நிறைந்த்தே என்னும் உண்மையை உணர்ந்து, உள்ளதே போதும் என்று மனநிறைவு கொண்டு வாழ்ந்து, பிறவாத பெருநிலையைப் பெறுவதற்கு ஆசைப்பட வேண்டும்.

ஆசை எந்த நிலையிலும் நீங்காது. "ஆரா இயற்கை அவா". ஆசைப் படாமல் வாழமுடியாது. உலகப் பற்றுக்கு இடமான அசையை அறுத்தல்தான் அருளாளர்களால் வலியுறுத்தப்பட்டது. ஒன்றின் மீது வைத்த ஆசையை விட்டுவிட வேண்டுமானால், மேலான ஒன்றை விரும்புதல் வேண்டும். அந்த ஆசையே, துன்பம் தருவதான உலகியல் ஆசைகளை அறுக்கத் துணை புரியும். யாவர்க்கும் மேலான ஒன்று பரம்பொருளே. அப் பரம்பொருளை அடையத் துணை புரிவது அடியார்கள் இணக்கமே.

"அங்கு இது நன்று, இது நன்று எனும் மாயை 

அடங்கிடும் ஆகாதே;

ஆசை எ(ல்)லாம் அடியார் அடியோம்எனும் 

அத்தனை ஆகாதே".

என்றார் மணிவாசகப் பெருமான்.

இது நல்லது, இது நல்லது என்று பொருள்களின் மீது பற்று வைத்தல் மயக்க அறிவு ஆகும். பற்று என்னும் சொல்லுக்கு, பிடித்தல், ஊன்றிப் பிடித்தல், ஏற்றுக் கொள்ளுதல், தீ முதலியன மூளூதல் என்று பொருள். பாத்திரத்தில் உள்ள பற்றுப் போக வேண்டுமானால், அதனை நீர் ஊற்றி ஊறவைத்துக் கழுவுதல் போல, அன்பு என்னும் நீரை உள்ளத்தில் ஊற்றி வைத்தால், பற்றுத் தோன்றாது. பற்று இருந்தால், ஆசை மேலும் மேலும் வளரும். ஆசை முழுவதும், இறைவனுடைய அடியார்க்கு அடிமை செய்வதே என்று ஆகிவிட்டால், அதுவும் ஆகாமல் போகாது. இந்த ஆசையால் உயிர்க்குக் கேடு ஏதும் உண்டாவதில்லை. இன்பம், இன்பம், இன்பமே எந்நாளும்.


No comments:

Post a Comment

உலகநீதி - 7

  "கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்     கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்     பொது நிலத்தி...