சீகாழி - 0777. ஊனத்தசை தோல்கள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஊனத்தசை தோல்கள் (சீகாழி)

முருகா!
பிறவி நோயில் சிக்கி அலையாமல்,
திருவடி ஞானத்தைத் தந்து அருள் புரிவாய்.


தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான


ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்

ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்

கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே

கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே

சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்

தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்

காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப்பொதி, மாயம் மிகுந்த
     ஊசல், சுடு நாறு குரம்பை, ...... மறைநாலும்

ஓதப்படு நாலு முகன் தனால் உற்றிடு கோலம் எழுந்து,
     ஓடித் தடுமாறி உழன்று, ...... தளர்வு ஆகி,

கூனித் தடியோடு நடந்து, ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சடம் ஈதை உகந்து, ...... புவிமீதே

கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடுயோய்கள் அகன்று
     கோலக் கழலே பெற இன்று ...... அருள்வாயே.

சேனக் குரு கூடலில் அன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச் சமணோர் கழுவின்கண் ...... மிசை ஏற,

தீரத் திருநீறு புரிந்து, மீனக் கொடியோன் உடல் துன்று
     தீமைப் பிணி தீர உவந்த ...... குருநாதா!

கானச் சிறுமானை நினைந்து, ஏனல்புன மீது நடந்து,
     காதல் கிளியோடு மொழிந்து, ...... சிலைவேடர்

காண, கணியாக வளர்ந்து, ஞானக் குறமானை மணந்து,
     காழிப்பதி மேவி உகந்த ...... பெருமாளே.


பதவுரை

         சேனக் குரு கூடலில் --- சேனன் என்று அழைக்கபட்டப் சமண குருமார்கள் கூடியிருந்த கூடல் மாநகரம் ஆகிய மதுரையில்,

         அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து --- (ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தராக வந்து) அக் காலத்தில் ஞானத் தமிழால் தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்து அருளி,

         சேனைச் சமணோர் கழுவின்கண் மிசை ஏற --- கூட்டமாக இருந்த சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து,

         தீரத் திரு நீறு புரிந்து --- திடத்துடன் திருநீற்றைப் பூச அளித்து

         மீனக் கொடியோன் உடல் துன்று தீமைப் பிணி தீர உவந்த குருநாதா --- மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டிய மன்னனின் உடலில் பொருந்தி இருந்த கொடிய வெப்புநோய் தீரும்படியாக திருவுள்ளம் மகிழ்ந்து அருள் புரிந்த குருநாதரே!

         கானச் சிறு மானை நினைந்து --- காட்டில் இருந்த சிறுமியும் மான் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியை நினைந்து,

         ஏனல் புனம் மீது நடந்து --- தினைப்புனத்தில் நடந்து சென்று,

         காதல் கிளியோடு மொழிந்து --- கிளிமொழி பேசும் அவள் மீது தனது காதலை வெளிப்படுத்தி,

         சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து --- வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து,

         ஞானக் குற மானை மணந்து --- குறவர் குலத்தில் வளர்ந்த அந்த ஞானத் தாயாகிய வள்ளிநாயகியை திருமணம் புரிந்து,

         காழிப் பதி மேவி உகந்த பெருமாளே --- சீகாழிப் பதியில் எழுந்தருளி மகிழும் பெருமையில் மிக்கவரே!

         ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி --- அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமையானது,

         மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை --- மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், இறுதியில் சுடப்பட்டு, நாறுவதுமான சிறு குடிசையாகிய இந்த உடல்

         மறை நாலும் ஓதப்படும் நாலுமுகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து --- நான்கு வேதங்களையும் ஓதுகின்ற நான்முகன் ஆகிய பிரமதேவனால் படைக்கப்பட்டு, அழகுடன் உருப்பெற்று எழுந்து,

         ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி --- ஓடி உழைத்துப் பொருள் தேடும்பொருட்டு தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும்,

         கூனித் தடியோடு நடந்து --- வயதான காலத்தில் முதுகு வளைந்து தடியைக் கொண்டு நடந்தும்,

         ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சடம் ஈதை உகந்து --- இழிவை அடைகின்ற, கோழை மிக்கதும், குப்பையுமான இந்த உடலை விரும்பி,

         புவி மீதே --- இந்தப் பூமியில்,

        கூச - நிலைகுலைந்து,

        பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று  -- விதிப்படி இயலும் இந்த உலக மயக்கத்தினால் உண்டாகும் உடல் பிணிகளும், பிறவிப்பிணியும் நீங்கி,

           கோலக் கழலே பெற இன்று அருள்வாயே --- தேவரீரது அழகிய  திருவடிகளை அடியேன் பெற்று இன்புற இன்று எனக்கு அருள் புரிவாயாக.


பொழிப்புரை


         சேனன் என்று அழைக்கபட்டப் சமண குருமார்கள் கூடியிருந்த கூடல் மாநகரம் ஆகிய மதுரையில், ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தராக வந்து, அக் காலத்தில் ஞானத் தமிழால் தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்து அருளி, கூட்டமாக இருந்த சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திருநீற்றைப் பூச அளித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டிய மன்னனின் உடலில் பொருந்தி இருந்த கொடிய வெப்புநோய் தீரும்படியாக திருவுள்ளம் மகிழ்ந்து அருள் புரிந்த குருநாதரே!

         காட்டில் இருந்த சிறுமியும் மான் போன்றவளும் ஆகிய வள்ளிநாயகியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, கிளிமொழி பேசும் அவள் மீது தனக்குள்  காதலை வெளிப்படுத்தி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, குறவர் குலத்தில் வளர்ந்த அந்த ஞானாம்பிகையைத் திருமணம் புரிந்து, சீகாழிப் பதியில் எழுந்தருளி மகிழும் பெருமையில் மிக்கவரே!

     அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள், இவைகளைச் சுமக்கும் உடற்சுமையானது, மாயம் மிக்கதும், ஊசிப் போவதும், இறுதியில் சுடப்பட்டு, நாறுவதுமான சிறு குடிசையாகிய இந்த உடல்,நான்கு வேதங்களையும் ஓதுகின்ற நான்முகன் ஆகிய பிரமதேவனால் படைக்கப்பட்டு, அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடி உழைத்துப் பொருள் தேடும்பொருட்டு தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், வயதான காலத்தில் முதுகு வளைந்து தடியைக் கொண்டு நடந்தும், இழிவை அடைகின்ற, கோழை மிக்கதும், குப்பையுமான இந்த உடலை விரும்பி, இந்தப் பூமியில், நிலைகுலைந்து, விதிப்படி இயலும் இந்த உலக மயக்கத்தினால் உண்டாகும் உடல் பிணிகளும், பிறவிப்பிணியும் நீங்கி, தேவரீரது அழகிய  திருவடிகளை அடியேன் பெற்று இன்புற இன்று எனக்கு அருள் புரிவாயாக.


விரிவுரை


ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை ---

ஊனம் - குறைவு, குற்றம், தீமை, அழிவு, பழி.

காயம் - உடம்பு.

பொதி - மூட்டை, பலபண்டம். பொதிந்து வைக்கப்பட்டது.

பொதிதல் - நிறைதல், சேமித்தல், உள்ளடக்குதல், மறைத்தல், பிணித்தல்.

மாயம் - மாயை, மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குவது.

ஊசல் - பதன் அழிதல், ஊழல்,

குரம்பை - சிறுகுடில், உடல்.

இந்த உடம்பு ஏழு தாதுக்களால் ஆனது. ஏழு தாதுக்களால் ஆன கருவிகள் அனைத்தும் பொதிந்து உள்ளது இந்த உடம்பு. இது மாயையால் ஆனது. இதைச் சதம் என நம்புபவர்க்கு ஊனத்தைத் தருவது. ஊனப்படுவது. உடலில் இருந்து உயிர் பிரிந்தால் பதம் கெட்டுப் போவது. ஊசிப் போவது. இறுதியில் சுடுகாட்டில் சுடப்பட்டு தீநாற்றத்தைத் தருவது.

தந்தையிடமிருந்து தாயின் கருப்பை ஆகிய நிலத்தில் முளைத்து, வளர்ந்து, பயிராகி, உலகமாகிய பெருநிலத்தில் நாற்று நடப்பட்டு, இம் மனிதப்பயிர் விளைகின்றது. பெண் மயலாகிய கோடையால் வெதும்பி காம க்ரோத முதலிய களைகளால் மெலிந்து முத்திக் கதிர் தோன்றாமுன்னம் சாவி ஆகிறது.

மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானமாக மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பை அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி, ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மை இயல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

மறை நாலும் ஓதப்படும் நாலுமுகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து ---

கோலம் - அழகு.

"தன்னால்" என்னும் சொல் "தனால்" எனக் குறுகி வந்தது.

உறுதல் - பொருந்துதல்.

நான்கு வேதங்களையும் ஓதுகின்ற நான்முகன் ஆகிய பிரமதேவனுக்குப் படைப்புத் தொழிலை அருளியது பரம்பொருளாகிய சிவம். இந்த உடம்பு மாயையின் துணைக் கொண்டு பிரதேவனால் படைக்கப்பட்டது. மாயையின் காரியம் ஆனதால், அழகுடன் உருப்பெற்று எழுந்தது இந்த உடம்பு.

ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி ---

பதினாறு வயதை அடைந்து, ஆவி ஈடேறும் வழியினைத் தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, பரத்தையர் நட்புகொண்டு, அவர்களுக்குக் கொடுப்பதற்கும் நன்றாக உடுப்பதற்கும் உண்பதற்கும் பொருள் தேட முயன்று, அதற்காக, தாம் கற்ற கல்வியை இறைவன் திருவருள் நெறியில் உபபோகிக்காது, இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும் வலி இல்லாதவனை, “விஜயனே விறல் வீமனே” யென்றும் பலவகையாக கலம்பகம் மடல் பரணி கோவை தூது முதலிய பிரபந்தங்களைப் பாடி, அவர்கள் தரும் பொருள்களைக் கொணர்ந்து நல்வழியில் செலவழிக்காமல் பரத்தையர்க்கு ஈந்து, மகளிர் போகமே சுவர்க்க வாழ்வு என்று மயங்கிக் கிடந்து பிணிவாய்ப்பட்டு உடம்பு தளர்கின்றது.

"இத் தாரணிக்குள் மநு வித்தாய் முளைத்து, ழுது
         கேவிக் கிடந்து, மடி மீதில் தவழ்ந்து, அடிகள்
    தத்தா தனத்ததன இட்டே, தெருத்தலையில்
         ஓடித் திரிந்து, நவ கோடிப் ப்ரபந்தகலை
    இச்சீர் பயிற்ற, வயது எட்டொடும் எட்டு வர,
         வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்கள் ...... உடன் உறவாகி,

இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து, வெகு
         வாகக் கலம்ப வகை பாடிப் புகழ்ந்து, பல
    திக்கோடு திக்குவரை மட்டு ஓடி, மிக்கபொருள்
         தேடி, சுகந்த அணை மீதில் துயின்று, சுகம்
     இட்டு ஆதரத்து உருகி, வட்டார் முலைக்குள் இடை
         மூழ்கிக் கிடந்து, மயல் ஆகித் துளைந்து, சில ......பிணிஅதுமூடிச்

சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க,"

என அடிகாளர் அருளி இருப்பது காண்க.


கூனித் தடியோடு நடந்து ---

"தடி கால் ஆய், உரத்த நடை தளரும் உடம்பு" என அடிகளார் பிறிதோரிடத்தில் அருளி உள்ளார்.

வயதான காலத்தில், முகுகு வளைந்து போகும். இரண்டு கால்களும் உடல் தளர்ச்சியால் நடக்க முடியாமல் போகும். தடி ஒன்றை மூன்றாவது காலாகக் கொண்டு தளர் நடை பழகும் நிலை வந்து சேரும்.

ஈனப் படு கோழை மிகுந்த கூளச்சடம் ஈதை உகந்து ---

ஈனம் - இழிநிலை.

கூளம் - குப்பை, திப்பி, பயனற்றது.

சடம் - உடம்பு.

"இதை" என்னும் சொல் "ஈதை" என்று முதல்நிலை நீண்டு வந்தது.

உடம்பை இழிநிலைக்குத் தள்ளி, பயனற்றதாக ஆக்குவது சிலேத்துமம் எனப்படும் கோழை ஆகும். இது மிகுந்தால் தொண்டையில் அடைக்கும். வெளியிலும் வராது. வழவழ என்றும் கொழகொழ என்றும் இருக்கும். "வழவழ என உமிழும்அது கொழகொழ என ஒழுகி விழ வாடி" என அடிகளார் பிறிதோரிடத்தில் அருளி இருப்பது காண்க. "ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவதுமே" என அப்பர் பெருமான் அருளி இருப்பதும் அறிக.

இப்படி அழிந்து போகின்ற இந்த உடம்பையே பெரிதாக மதித்து, இது வந்த எதற்காக என்பதை அருள் நூல்களால் ஆசாரிய முகமாக இருந்து கேட்டுத் தெளிவு பெற்று, உய்யும வழியைத் தேடாமல் வாழ்வது அறிவீனம்.

 
பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று ---

பிரமாணம் - விதி.

பிரபஞ்ச மாயை என்பது பிரகிருதி மாயை என்றம் வழங்கப்படும்.

சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரண்டு மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மூன்று மாயைகள் எனப்படும். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயை அல்ல. அது அசுத்த மாயையில்ல் இருந்து தோன்றிய காரியமே ஆகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும். அந்த மயக்கம் சிறிதே தாகும். ஆனால், அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது. அது போலவே, பிரகிருதி மாயை, அசுத்த மாயையின் உள் அடங்கி நிற்பதாகும். எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் இருப்பது, அதன் உள்ளே இருப்பது, அதற்கும் உள்ளே இருப்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நாம் வாழும் இந்த உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்பு நிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை ஆகும். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.

பிரகிருதி மாயையிலிருந்து, ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கும், அந்தக் கரணங்கள் நான்கும் தோன்றும்.  

இத்தகைய பிரகிருதியினின்றும் உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அகக்கருவிகள். அகக் கருவிகளாகிய இவைகளின் பின்னர், புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும்.

உலகுக்கு முதல் காரணம் மாயை. அது சுத்த மாயை, அசுத்த மாயை என் இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இந்தப் பிரகிருதியே ஆகும். பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.

நமது உடம்பு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. உயிர்களுக்கு அவற்றின் வினைப் போகத்திற்கு ஏற், உடலைப் படைத்து அருளுகின்றது பரம்பொருள். உயிரானது உடம்பில் பொருந்துகின்ற கரு உண்டான காலத்திலேயே, அதன் சாதி, ஆயுள், போகம் ஆகியவை நிச்சயிக்கப் பெறுகின்றன.  வினைநுகர்வு தீர்ந்து விட்டால், ஒரு கணம் கூட இந்த உடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போது அளவும் நில்லாது கண்டாய்" என்றார் பட்டினத்து அடிகள்.

இந்த உடம்போடு பொருந்தி இருக்கும் காலம் வரை அனுபவிப்பதற்கு உண்டான வினைகள் பிராரத்தம் எனப்படும். நுகர்வினை என்று தமிழில் சொல்லப்படும். வினைகள் காரணமாக நோய்கள் உண்டாகின்றன. இந்த உடம்பு நிலையில்லாதது என்பதை உணர்ந்து, உடம்பால் ஆன பயனைப் பெற்றுக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால்
ஆகின்ற ஆக்கை, நீர் மேல்
அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன, நான்
அறியாத காலம் எல்லாம்,
புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து, இன்பம் ஆவதே
போந்த நெறிஎன்று இருந்தேன்...               --- தாயுமானார்.

மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்
பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க ஒட்டா உபாதி;
கால் எதிர் குவித்து பூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர் மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட கண்காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையும் அமையும் பிரானே! அமையும்,
இமைய வல்லி வாழி என்று ஏத்த,
ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டு அருள்கை நின்அருளினுக்கு அழகே.   --- பட்டினத்தார்.

நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே, சாசுவதம்
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே.      --- தாயுமானார்.

நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய்,
பார்க்கும் இடத்து இதன்மேல் பற்று அறுவது எந்நாளோ.  --- தாயுமானார்.

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
     காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
     கானல்காட் டும்ப்ர வாகம்!        --- அறப்பளீசுர சதகம்.

நீர்க் குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்,
பார்க்கும் இடத்து அந்த மின் போலும் என்பர் பசித்து வந்தே
ஏற்கும் அவர்க்கிட என்னின், எங்கேனும் எழுந்திருப்பார்,
வேல் குமரற்கு அன்பு இலாதவர் ஞானம் மிகவும் நன்றே.    --- கந்தர் அலங்காரம்.

இந்த உடம்பின் மேல் ஆசை வைத்து, உடலை வளர்க்க உண்பதில் ஆசை கொண்டு, ஆடை அணிகள் முதலானவற்றால் அழகு படுத்த வேண்டி, பொருளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றோம். அதற்காகவே அல்லும் பகலும் பல இடங்களிலும் அலைந்து திரிந்து பொருளைத் தேடுகின்றோம். ஐம்பொறிகளால் உண்டான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைந்து திரிந்து, மனக் கலக்கம் உறுகின்றது. ஐம்புல இன்பத்தைத் துய்க்க மனம் அலைகின்றது. இறைவனை வணங்கி உய்தி பெறுவதற்காக வந்தது இந்த உடம்பு என்னும் சிந்தனை இல்லாமல், உண்டு உடுத்து இன்பத்தைத் துய்ப்பதற்கே ஆசைப்பட்டு, நீதிநெறிகளை எல்லாம் மறக்கின்றோம். அற்ப இன்பத்தைத் தரும் அற்பர்களை நாடி அலைகின்றோம்.

பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
                  பசுஏது, பாசம்ஏது,
         பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
                  பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
                  மனம்விரும்பு உணவு உண்டு, நல்
         வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
                  மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
                  கலந்து மகிழ்கின்ற சுகமே
         கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
                  கயவரைக் கூடாது அருள்,
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
                  தலம் ஓங்கு கந்தவேளே!
         தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
                  சண்முகத் தெய்வமணியே!     --- திருவருட்பா.

கோலக் கழலே பெற இன்று அருள்வாயே ---

கோலம் - அழகு.

கழல் - கழல் அணிந்த திருவடியைக் குறிக்கும். கழல் என்னும் அணிகலம் போரில் வெற்றி பெற்றவர் தனது காலில் அணிவது. இறைவனின் கழல் அணிந்த திருவடி, உயிர்களுக்கு இயல்பாகவே அமைந்து உள்ள காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறுபகைகளை அறுத்து எறிந்து, ஞானவெற்றியைத் தருவது. "ஞானவெற்றி" என்னும் தலைப்பில் திருவாசகத்தில் ஒரு பகுதி வருவது காண்க.

"அகன் அமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப் புகல் உடையோர்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருத்தல் காண்க. உயிருக்கு அழகைத் தருவது இறைவன் திருவடி ஞானம் ஆகும்.

மனித இனத்திற்கு ஒரு தனி இயல்பு உண்டு. தமக்கு உதவி செய்தவர் ஒருவரைப் புகழும்போது, அவரை விட்டுவிட்டு, உதவி செய்த அவரின் உறுப்பைப் புகழ்வதே இயல்பு. மருத்தவரைப் புகழ்ந்து கூறும்போது, 'கைராசிக்காரர்' என்றும், பொருளுதவி செய்தவரைப் புகழும்போது, 'கொடுத்துச் சிவந்த கை' என்றும் கூறுவது இயல்பு. கையானது தானே தொழிற்படுவது இல்லை. உதவியைச் செய்தவரை நினைத்து அவருடைய கை தானே வாழவைத்தது என்ற நினைவில் புகழுகின்றோம். அதேபோல, இறைவனுக்கு வடிவத்தைக் கற்பித்த தமிழர்கள், அவனுடைய கைகளை அபயகரம் என்றும் வரதகரம் என்றும் புகழ்ந்தனர். பிறவிக்கடலில் அழுந்தும் உயிர்களை, அஞ்சாதே என்று காப்பது அபயகரம். வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்வது வரதகரம். ஆனால், பிறவிப் பெருங்கடலை நீந்தத் துணை புரிவது திருவடியே ஆகும். பிறவியைக் கடக்கத் துணை புரிவதான ஞானத்தை அருள்வது இறைவன் திருவடியே ஆகும். எனவேதான், மணிவாசகப் பெருமான் "நாதன் தாள் வாழ்க" என்றும் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்றும் வாழ்த்தி அருளினார்.

திருவள்ளுவ நாயனாரும், "கடவுள் வாழ்த்து" என்னும் முதல் அதிகாரத்தில் ஏழு திருக்குறள் பாக்களில் இறைவன் திருவடியையே வைத்து அருளினார்.

திருவடி ஞானம் என்பது திருவருள் ஞானம் ஆகும். அதனை இன்றே அருளுமாறு முருகப் பெருமானை அடிகளார் வேண்டுகின்றார்.

சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து, சேனைச் சமணோர் கழுவின்கண் மிசை ஏற, தீரத் திரு நீறு புரிந்து, மீனக் கொடியோன் உடல் துன்று தீமைப் பிணி தீர உவந்த குருநாதா ---

"சேனன்" அல்லது "சேனர்" என்னும் பட்டப் பெயர் சமண சமயக் குருமார்களுக்கு வழங்கப்படுவது. சேனக் குருமார்கள் கூடி இருந்த கூடல் மாநகரம்.

"சந்துசேனனும், இந்துசேனனும்,
     தருமசேனனும், கருமைசேர்
கந்துசேனனும், கனகசேனனும் 
     முதலதாகிய பெயர்கொளா,
மந்திபோல் திரிந்து, ஆரியத்தொடு
     செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன்அலேன், திரு
     ஆலவாய்அரன் நிற்கவே".

எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருத்தல் காண்க.

மருள்நீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமத்தினை உடைய அப்பர் பெருமான், தனது தந்நையாரும், தாயாரும் இறந்ததன் பின், தமக்கையார் வாழ்க்கைப்பட இருந்த கலிப்பகையாரும் உயிர் துறந்த நிலையில், தம்பியார் உளர் ஆகவேண்டும் என வைத்த தயாவினால், திலகவதியார் இல்லத்திலேயே இருந்து தவம் புரிந்து வருகையில், உலக நிலையாமையை உணர்ந்து, அறநெறியில் நின்று, அறச்சாலைகளை அமைத்தார், தண்ணீர்ப்பந்தர் வைத்தார். சோலைகளை வளர்த்தார். குளங்களை வெட்டினார். வந்தவருக்கு எல்லாம் விருந்து படைத்தார். நாவலர்களுக்கு உதவினார். துறவு பூண்டு சமய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவருக்கு, சமயங்களில் சிறந்தது எது என்னும் தெளிவு, இறைவன் அருள் இன்மையால் உண்டாகவில்லை. சமண சமயத்தைத் தழுவி, அவர்கள் சொன்ன நெறியையே வீட்டினை அடையும் நெறி எனக்கொண்டு, சமணசமயக் கலைகள் அனைத்தையும் ஓதித் தெளிந்தார். அது கண்ட சமணர்கள், அவருக்குத் "தருமசேனர்" என்னும் பட்டத்தினைச் சூட்டி, அவரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தருமசேனர் புத்தர்களை வாதில் வென்று சமண சமயத்தை வளர்த்து வந்தார்.

"அங்கு அவரும் அமண்சமயத்து அரும் கலைநூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வு உறப்பயின்றே, அந்நெறியில் புலன் சிறப்ப,
துங்கம் உறும் உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார், அவர்க்குத்
தங்களின் மேலாம் "தருமசேனர்" எனும் பெயர் கொடுத்தார்".   --- பெரியபுராணம்.

"அத்துறையின் மீக்கூரும் அமைதியினால், அகலிடத்தில்
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண்
உய்த்த உணர்வினில் வென்றே, உலகின்கண் ஒளி உடைய
வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்".      --- பெரியபுராணம்.

சேனக் குருமார்கள் ஊனத்தையே பயின்றவர்கள். "கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். கொல்லாமை என்னும் மேலான அறத்தைத் தமது கொள்கையாகக் கொண்டு, அந்தப் போர்வையில் தம்மை மறைத்துக் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலியைப் போல், உயிர்களுக்குத் தீமை புரிவதையே பயின்றவர்கள். தமது சூழ்ச்சிக்கு, நாட்டின் மன்னனையும் அடிமையாக்கியவர்கள். பல்லவ மன்னனைத் தமது வசமாக்கி, அப்பர் பெருமானுக்கு அளவற்ற துன்பைத்தைப் புரிந்தவர்கள். பாண்டிய மன்னனைத் தமது வசமாக்கி, பாண்டி நாட்டைச் சேர்ந்தோருக்கு எல்லையற்ற துன்பத்தைப் புரிந்தவர்கள் என்பது, திருஞானசம்பந்தப் பெருமான் அடியார்களோடு தங்கி இருந்த மடத்திற்குத் தீயை ஊட்டியதில் இருந்து தெளிவாகும்.

சமணர்கள் மிகுதியா, கூடல் நகரம் என்னும் மதுரையம்பதியில்
வாழ்ந்திருந்தனர். அந்நாளில் பாண்டி நாட்டில் சமணம் பெருகி, சைவம் அருகியது. மன்னனும் சமணன் ஆனான். குடிகளும் மன்னன் வழி நின்றனர். பாண்டி நாடு செய்த பெருந்தவத்தால், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் ஆகிய குலச்சிறை நாயனாரும் சைவநெறிநில் ஒழுகி வந்தனர். பாண்டி நாட்டிற்கு சமணர்களால் விளையும் கேட்டினை நினைந்து வருந்தி வந்தனர். சமணர்களின் வஞ்சனை மிகுந்தது. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருந்ததை அறிந்து ஒற்றர்களை அனுப்பி, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள வேண்டினர். பிள்ளையாரும், இறையருளைப் பெற்று, பாண்டி நாட்டிற்கு எழுந்தருள உடன்பட்டார்.

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச் சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு" என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.

சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார்.

சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது.

பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே, மன்னனைப் பற்றியுள்ள இந்த நோய் மட்டும் அல்லாது அவனது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.

திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின் தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப்      பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான்.

ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது.

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.

"பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும், முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும், தென்னர் கோமான்,
"இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும்,
தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றனர்" என்று செப்ப".

"மன்னவன் மாற்றம் கேட்டு, வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர், தென்னர் தோன்றலை நோக்கி, "நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம்
முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும்" என்றார்".

"யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு தடவிட, மேன்மேல் வெப்புத்
தீது உறப் பொறாது, மன்னன் சிரபுரத்தவரைப் பார்த்தான்".

"தென்னவன் நோக்கம் கண்டு திருக் கழுமலத்தார் செல்வர்
"அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய்த் தீர்ப்பது" என்று
பன்னிய மறைகள் ஏத்தி, பகர் திருப்பதிகம் பாடி".

"திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவ, தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால்,
மருவிய இடப்பால் மிக்க அழல் எழ மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி இடங்கொளாது என்னப் பொங்க".

"உறியுடைக் கையர், பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச்
செறிமயில் பீலி தீயத் தென்னன் வெப்பு உறு தீத் தம்மை
எறியுமா சுடலும்,  கன்றி அருகு விட்டு ஏற நிற்பார்,
அறிவு உடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார்".

"பலர் தொழும் புகலி மன்னர் ஒருபுடை வெப்பைப் பாற்ற,
மலர்தலை உலகின் மிக்கார் வந்து அதிசயித்துச் சூழ,
இலகுவேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே".

"மன்னவன் மொழிவான், "என்னே மதித்த இக் காலம் ஒன்றில்
வெந்நரகு ஒருபால் ஆகும், வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்;
துன்னு நஞ்சு ஒருபால் ஆகும், சுவை அமுது ஒருபால் ஆகும்;
என்வடிவு ஒன்றில் உற்றேன், இருதிறத்து இயல்பும்" என்பான்".

"வெந்தொழில் அருகர்! தோற்றீர், என்னை விட்டு அகல நீங்கும்,
வந்து எனை உய்யக் கொண்ட மறைக் குல வள்ளலாரே!
இந்தவெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர்" என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல்கதிக்கு அணியன் ஆனான்.

"திருமுகம் கருணை காட்ட, திருக்கையால் நீறு காட்டி,
பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி, பின்னும்
ஒருமுறை தடவ, அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று, பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி, வழுதியும் முழுதும் உய்ந்தான்".
        
"கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்து,
"பெற்றனம் பெருமை, இன்று பிறந்தனம், பிறவா மேன்மை
உற்றனன் மன்னன்" என்றே   உளம் களித்து உவகை மிக்கார்".

"மீனவன் தன்மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற,
ஆன பேரின்பம் எய்தி, உச்சிமேல் அங்கை கூப்பி,
மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.           --- பெரியபுராணம்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது.

முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமானுக்கு அருள் உபதேசம் புரிந்தமையால் "குருநாதா" என்றார்.  சைவமுதல் குருவாக வந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான் என்பதால், "குருநாதா" என்றார் என்றும் கொள்ளலாம். "சைவமுதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருள் இருத்தலும் காண்க.

கானச் சிறு மானை நினைந்து, ஏனல் புனம் மீது நடந்து, காதல் கிளியோடு மொழிந்து, சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து, ஞானக் குற மானை மணந்து ---

இக் கருத்தைப் பின்வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் அமைத்துப் பாடி இருப்பதை உணர்க.

நாவலர் பாடிய நூல்இசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயில் ...... உடையோனே.    --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,
     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,
நாணம் அழிந்து, ரு மாறிய வஞ்சக!
     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

மார சரம் பட, மோகம் உடன் குற-
     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,
மா முநிவன் புணர் மான் உதவும், தனி
     மானை மணம் செய்த ...... பெருமாளே.   --- (பாரநறுங்) திருப்புகழ்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                 
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                    
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                               
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி, தன் பரிசனங்கள் சூழ அங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

கரிய வரிகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூர்மையான  திருக்கண்களை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் கண் எதிரில் முன் ஒரு நாள் முருகப் பெருமான் வேங்கை மரமாக ஆனதை அடிகாளர் பாடுவதைக் காண்க.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட, மாமுனியும்
     வேங்கையுமாய் மறமின் ...... உடன்வாழ்வாய்!
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக!
     பாண்டியன் நீறு அணிய ...... மொழிவோனே!
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே!
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே.     --- திருவேங்கடத் திருப்பகழ்.

வனசரர் ஏங்க, வான முகடுஉற ஓங்கி, ஆசை
     மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக
மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி,
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே!       --- சீகாழித் திருப்புகழ்.

காழிப் பதி மேவி உகந்த பெருமாளே ---

சீகாழி சோழ நாட்டில் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் புரிந்து அருளியது.

குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீசுவரர் இலிங்கமாகவும்,திரு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

சீகாழிக்கு உள்ள பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.       ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை

முருகா! பிறவி நோயில் சிக்கி அலையாமல், திருவடி ஞானத்தைத் தந்து அருள் புரிவாய்.

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...