அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பசையற்ற உடல்
(விருத்தாசலம்)
முருகா!
இடருக்கு இடமான
இந்தப் பிறவியை ஒழித்து அருள்வாய்.
தனதத்த
தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற
வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு
விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று
வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும்
விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற
நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற
மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று
முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பசை
அற்ற உடல் வற்ற, வினை முற்றி நடை நெட்டி
பறிய, கை சொறிய, பல் ......
வெளியாகிப்
படலைக்கு
விழிகெட்ட குருடு உற்று, மிகநெக்க
பழம் உற்று நரை கொக்கின் ...... நிறம் ஆகி,
விசைபெற்று
வருபித்தம் வளி ஐக் கண் நிலைகெட்டு
மெலிவுற்று, விரல்பற்று ...... தடியோடே,
வெளிநிற்கும்
விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை
விடுவித்து, உன் அருள் வைப்பது
...... ஒருநாளே?
அசைவற்ற
நிருதர்க்கும் மடிவுற்ற பிரியத்தில்
அடல் வஜ்ரகரன், மற்றும் ...... உள வானோர்
அளவற்ற
மலர்விட்டு நிலமுற்றும் மறையச்செய்
அதுலச் சமர வெற்றி ...... உடையோனே!
வசை
அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே!
மதுரச்செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவபத்தர்
வளர், விர்த்தகிரி உற்ற ...... பெருமாளே.
பதவுரை
அசைவு அற்ற
நிருதர்க்கும் மடிவு உற்ற பிரியத்தில் --- சிலிப்பு என்பது அறியாத
அசுரர்களுக்கும் மடிவு வந்ததால் உண்டான மகிழ்ச்சியினால்,
அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர் ---
வலிமை பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையில் கொண்டவனாகிய இந்திரனும் மற்றும் உள்ள வானோர்களும்,
அளவு அற்ற மலர்
விட்டு
--- அளவு இல்லாத மலர்களைக் கொண்டு,
நிலம் முற்றும் மறையச் செய் --- பூமி
மறையும் படியாகச் சொரிந்து வழிபட்ட,
அதுல --- ஒப்பற்றவரே!
சமர வெற்றி உடையோனே --- போரில்
வெற்றியை உடையவரே!
வசை அற்று முடிவு அற்று --- குற்றம் அற்று, முடிவு இல்லாது
வளர் பற்றின் --- எப்போதும் பெருகுகின்ற
பாண்டவர்கள் தன் மீது வைத்து இருந்த பற்றுக் காரணமாக,
அளவு அற்ற வடிவு உற்ற --- எண்ணில்லாத
வடிவங்களை எடுத்த,
முகில் கிட்ணன் மருகோனே --- மேக
வண்ணன் ஆகிய கிருஷ்ணருடைய திருமருகரே!
மதுரச் செம்மொழி
செப்பி அருள்பெற்ற சிவபத்தர் வளர் --- இனிமையான செம்மையான
புகழ் மொழிகளைக் கூறி வழிபட்டு இறையருளைப் பெற்ற சிவபக்தர்கள் உள்ள
விர்த்தகிரி உற்ற
பெருமாளே ---
திரு முதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில்
மிக்கவரே!
பசை அற்ற உடல் வற்ற --- ஈரப் பசை அற்று
உடலானது வற்றி வாடிப் போக,
வினை முற்றி --- வினைகள் முற்றிப்
பயனுக்கு வந்ததால்,
நடை நெட்டி --- முதுமை காரணமாக
நடையானது தளர்ச்சி அடைந்து,
பறிய --- உடம்பு
கட்டவிழ்ந்து,
கை சொறி --- கையால் சொறிந்து
கொள்ளும் நிலை வந்து,
பல் வெளியாகி --- முகம் வற்றியதால், பற்கள் நீண்டு வருவது போல் ஆகி,
படலைக்கு விழி கெட்ட
குருடு உற்று
--- விழிப் படலமானது கெட்டுப் போய்,
க்
குருடுபட்டு,
மிக நெக்க பழம் உற்று --- மிகப் பழுத்து
பழம் போல் ஆகி,
நரை கொக்கின் நிறம் ஆகி --- தலைமுடியானது
நரை வந்து கொக்கின் நிறம் போல வெளுத்து,
விசைபெற்று வரு பித்தம்
வளி ஐக் கண் நிலைகெட்டு --- வேகமாக வருகின்ற பித்தத்தாலும், வாயுவினாலும், கபத்தாலும் நிலை தடுமாறி உடல் கெட்டு,
மெலிவு உற்று --- மெலிவு அடைந்து,
விரல் பற்று தடியோடே --- விரல்களால்
பற்றிய தடியுடன்,
வெளி நிற்கும் விதம் உற்ற --- வீட்டிற்கு
வெளியில் இருக்கும் நிலையினை அடைந்த,
இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து ---
இடர் மிகுந்த பிறவியில் இருந்து அடியேனை விடுவித்து,
உன் அருள் வைப்பது
ஒருநாளே
--- உமது திருவருளைத் தந்து அருள்வதும் ஆகிய ஒரு நாள் உண்டாகுமோ?
பொழிப்புரை
சலிப்பு என்பது அறியாத அசுரர்களுக்கும்
மடிவு வந்ததால் உண்டான மகிழ்ச்சியினால்,
வலிமை பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையில்
கொண்டவனாகிய இந்திரனும் மற்றும் உள்ள வானோர்களும் அளவு இல்லாத மலர்களைக் கொண்டு,
பூமி
மறையும் படியாகச் சொரிந்து வழிபட்ட ஒப்பற்றவரே!
போரில் வெற்றியை உடையவரே!
குற்றம் அற்று, முடிவு இல்லாது பாண்டவர்கள் தன் மீது
வைத்து இருந்த எப்போதும் பெருகுகின்ற பற்றுக் காரணமாக, எண்ணில்லாத
வடிவங்களை எடுத்த, மேக வண்ணன் ஆகிய
கிருஷ்ணருடைய திருமருகரே!
இனிமையான செம்மையான புகழ் மொழிகளைக்
கூறி வழிபட்டு இறையருளைப் பெற்ற சிவபக்தர்கள் உள்ள திருமுதுகுன்றம் என்னும்
விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே!
ஈரப் பசை அற்று உடலானது வற்றி வாடிப் போக, வினைகள் முற்றிப் பயனுக்கு வரவும், முதுமை காரணமாக நடையானது தளர்ச்சி
அடைந்து, உடம்பு கட்டவிழ்ந்து, கையால் சொறிந்து கொள்ளும் நிலை வந்து, முகம் வற்றியதால், பற்கள் நீண்டு வருவது போல் ஆகி, விழிப் படலமானது கெட்டுப் போய்க் குருடுபட்டு, மிகப் பழுத்த பழம் போல் ஆகி, தலைமுடியானது நரை வந்து கொக்கின் நிறம்
போல வெளுத்து, வேகமாக வருகின்ற
பித்தத்தாலும், வாயுவினாலும், கபத்தாலும் நிலை தடுமாறி உடல் கெட்டு, மெலிவு அடைந்து, விரல்களால் பற்றிய தடியுடன், வீட்டிற்கு வெளியில் இருக்கும் நிலையினை
அடைந்த, இடர்
மிகுந்த பிறவியில் இருந்து அடியேனை விடுவித்து, உமது திருவருளைத் தந்து அருள்வதும்
ஆகிய ஒரு நாள் உண்டாகுமோ?
விரிவுரை
பசை
அற்ற உடல் வற்ற ---
இளமையில்
வாலிபத்தில் ஈசப் பசையோடு தளதள என்று இருந்த உடலானது பசை அற்று, வற்றி வாடி இருக்கும்.
வினை
முற்றி ---
இப்பிறவியில்
அனுபவித்துத் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போதே, மேல் வினைகள் ஆகிய ஆகாமியத்தையும் புரிவது
மனித இயல்பு. இந்த உடம்பு வினையின் காரணமாக வந்தது. வினை விளைகின்ற
நிலமாகவும் உள்ளது. பிராரத்த வினை அனுபவித்துத் தீரும் வரை இந்த உடம்பு இருக்கும்.
அது முடிந்த பிறகு ஒரு நொடிப் பொழுதும் இந்த உடம்பு நிலைத்து இருக்காது. வினைகள்
முற்றியதால் உடம்பும் முற்றுதலை அடையும்
நடை
நெட்டி
---
நெட்டுதல்
- சோம்பல் அடைதல், சுடக்கு அடைதல். நெட்டி முறித்தல்.
முதுமை
காரணமாக நடையானது தளர்ச்சி அடையும்.
பறிய
---
பறி
- உடம்பு. பறிதல் - நிலை பெயர்தல்,
கட்டு
அவிழ்தல்,
இயலாமல்
போதல்.
முதுமையில்
உடம்பு தனது கட்டை இழந்து, இயலாமை வந்து சேரும்.
கை சொறி
---
உடம்பு
தினவு எடுப்பதால், கையால் சொறிந்து
கொள்வதும்,
சொறிய
முடியாத முதுகை சுவற்றில் உரசிக் கொள்வதும் நிகழும். சொறிந்து கொள்வதற்கு என்றே
சந்தையில் கருவிகள் வந்துவிட்டன.
பல்
வெளியாகி
---
முகம்
வற்றியதால், பற்கள் நீண்டு இருப்பது
போல் தோன்றும். பற்கள் தம்மிடத்தை விட்டு வெளிப்பட்டு விழும்.
படலைக்கு
விழி கெட்ட குருடு உற்று ---
படலம்
- நேத்திரப் படலம். விழியின் மேற்கட்டு.
கண்ணில்
உள்ள படலமானது கெட்டுப் போய், பார்வை இன்றிப்
போகும்.
மிக
நெக்க பழம் உற்று ---
மிகப்
பழுத்த பழம் போல் உடம்பு ஆகிவிடும். பழம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரைந்து போவது போல, உடம்பு
திரைக்கும்.
நரை கொக்கின் நிறம் ஆகி ---
எண்பத்து
நான்கு நூறாயிர யோனி பேதங்களில், எந்த உயிர்க்கும்
நரை தோன்றுவது இல்லை. பன்றி, யானை, காக்கை முதலிய எவைக்கும் மயிர் நரைப்பது
இல்லை.
உயர்ந்த
பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரை வருகின்றது. இது இறைவன்
நமக்குத் தரும் அறிவிப்பு. மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும்
வந்தவை. மனிதன், விலங்குத்
தன்மையில் இருந்து நீங்கி, மனிதத் தன்மையை அடைந்து, அதிலிருந்தும்
விடுபட்டு, இனிப் பிறவாத நிலையைப் பெற
வந்தவன். அதற்காகவே அரிதான இந்த மனித உடம்பு இறைவனால் அருளப் பெற்றது. ஏன்
பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன் செய்யும் எச்சரிக்கையே நரை ஆகும். நரை
தோன்றிய உடனே ஆசாபாசங்களை விட்டு, தவநெறியில் நாட்டம்
உண்டாக வேண்டும். காதின் அருகில் ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தசரதர் தவத்தை
மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். ஒரு ரோமம் நரைத்தவுடன் ஒரு பொருளில் உள்ள
பற்றையாவது விடவேண்டும்.
"கறுத்த
தலை வெளிறு மிகுந்து" என்றும்,
"தலைமயிர்
கொக்குக்கு ஒக்க நரைத்து" என்றும் அடிகளார் பாடிக் காட்டி இருத்தல் காண்க.
விசைபெற்று
வரு பித்தம் வளி ஐக் கண் நிலைகெட்டு ---
வாதம்
பித்தம் சிலேத்துமம் என்னும் மூன்று கூறுகளை உடையது இந்த உடல். இவை தத்தம்
நிலையில் இருக்கவேண்டும். மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். இந்த
மூன்றும் உடம்பில் இருக்க வேண்டிய அளவில் இருந்து நலம் புரிவதற்காக அமைந்தவை.
ஆனால், உணவுப் பழக்கத்தாலும், ஒழுக்கத்தாலும்
இவை மாறுபாடு அடைந்து நோய்க்கு இடம் தருகின்றன.
"மிகினும்
குறையினும் நோய்செய்யும், நூலோர்
வளிமுதலா
எண்ணிய முன்று".
என்றார்
திருவள்ளுவ நாயனார்.
ஊதை
என்னும் வாயு அல்லது வாதம் தனது நிலையில் குறைந்தாலும், மிகுந்தாலும், அண்டவாதம், பட்சவாதம், கீல்வாதம், பீனசவாதம் முதலிய வாத நோய்கள் வரும். பிடிவாதமாக வீடு தங்காமல் திரிந்து
பலப்பல மகளிர் உறவு பூண்பார்க்கு இந்த நோய் எய்தும்.
பித்தம்
மிகுந்தாலும், குறைந்தாலும் மஞ்சள் காமாலை, மயக்கம், சுரம் முதலிய நோய்கள் உண்டாகும்.
சிலேத்துமம்
கபம் எனப்படும். தமிழில் ஐ அல்லது கோழை எனப்படும். இது மிகுந்தாலும், குறைந்தாலும், ஈளை, இளைப்பு, இருமல், க்ஷயம் போன்ற
நோய்கள் உண்டாகும்.
மூச்சும்
பேச்சும் உட்பொருள் இடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும்
நிகழ்த்துவது வாதம்.
உண்ட
உணவு செரிமானம் அடைய உதவுவது பித்தநீர்.
தசை
நார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய்போல் பயன்படுவது கோழை.
இவை
உணவு உடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைதலும்
நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக
நோய்கள் உண்டாகும்.
உணவு
செயல்கள் காரணமாக, ஒவ்வாமை உண்டாகி, இவை மாறுபாடு
அடைகின்றன. உணவு ஒவ்வாமையாவது, சுவை மணம்
ஆற்றல்களால் உடல் கூற்றொடும் கால இடங்களொடும் பொருந்தாமை. உடை ஒவ்வாமையாவது
காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை. செயல் ஒவ்வாமை மிகையும் தகாமையும்.
சித்த
மருத்துவத்தில் நோய் நாடும் சிறந்த முறை நாடி பார்த்தலே. அது தமிழராலேயே
கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடத்தில் இருந்தே, ஆரிய மருத்துவரும் பிற மருத்துவரும்
அதைக் கற்றுக் கொண்டனர். அதை 'நோய்நாடி', 'நோய் முதல் நாடி', 'வாய்நாடி' என்று மும்முறை 'நாடி' என்னும் சொற்களால் குறிப்பாக
உணர்த்தினார் திருவள்ளுவ நாயனார். இது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்திவகை ஆகும்.
வாதம், ஊதை, வளி என்னும் நாடியானது பகலும் இரவும் ஆறு முதல் பத்து மணி வரை பேசும்.
பித்த
நாடியானது பகலும் இரவும் பத்து மணி முதல் இரண்டு மணி வரை பேசும்.
சிலேத்துமம்
என்னும் கோழை நாடியானது இரவும் பகலும் இரண்டு மணி முதல் ஆறு மடி வரை பேசும்.
துவர்ப்பும்
புளிப்பும் சிலேத்தும நாடிக்கு உரியன.
உவர்ப்பு, கசப்பு பித்த நாடிக்கு உரியன.
இனிப்பு, காரம் சிலேத்தும நாடிக்கு உரியன.
மெலிவு
உற்று, விரல் பற்று தடியோடே, வெளி நிற்கும் விதம் உற்ற ---
உடம்பு
மெலிவு அடைந்து, விரல்களால் பற்றிய
தடியுடன் தளர் நடை நடக்கும் நிலை
உண்டாகும்.
"தடி
கால் ஆய், உரத்த நடை தளரும் உடம்பு"
என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். தடியும் ஒரு காலாக அமையும். அந்த நிலை
வந்தபோது வீட்டில் உள்ளார் வெறுப்பார்கள். யாரும் தமது சொல்லைக் கேட்க
மாட்டார்கள். எப்போதும் பிதற்றிக் கொண்டே
இருப்பதால்,
வெறுப்பு
உற்று,
"திண்ணையில்
கிட" என்று சொல்லும் நிலை வந்து சேரும்.
இடர்
பெற்ற ஜனனத்தை விடுவித்து,
உன்
அருள் வைப்பது ஒருநாளே ---
இந்த
விதமாகத் துன்பத்திற்கே கொள்கலமான உடலை விடுத்து, இனிப் பிறவாத பெருநிலையை அடைவதற்கு இறைவன்
திருவருள் வாய்க்கவேண்டும். அந்த ஒரு நாள் என்று வாய்க்குமோ?
வசை
அற்று முடிவு அற்று, வளர் பற்றின் அளவு அற்ற
வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே ---
வசை
- குற்றம்.
பாண்டவர்கள்
கண்ணன் மீது வைத்திருந்த பற்று குற்றம் அற்றது. முடிவு இல்லாதது. நாளுக்கு நாள்
வளர்வது. அளவற்ற தனது வடிவத்தைக் கண்ணபிரான் சகதேவனுக்குக் காட்டிய வரலாற்றை இங்கு
அடிகளார் குறித்து அருளினார்.
தம்
பொருட்டுக் கண்ணபிரானை துரியோதனனிடம் தூது அனுப்பலாம் என்னும் தனது எண்ணத்தைத்
தனது தம்பிமார்களுக்குத் தருமபுத்திரர் தெரிவித்தார். கண்ணனைத் தூது செல்லுமாறு
வேண்டுகின்றார். "போர் மூண்டால் இருதிறத்தாரும் மாண்டு போவோம்.
பெரியவர்களையும், சுற்றத்தாரையும், துணைவர்களையும்
இழந்து,
போரில்
வென்று அரசு புரிவதை விட, காட்டிலே முன்பு வாழ்ந்தது போலவே கனிகளையும், இலைச்
சருகுகளையும் தின்று வாழ்தல் நன்மையைத் தரும். எனவே, கண்ணா, நீ எமக்காகத்
தூது செல்லவேண்டும்" என்று வேண்டினார்.
"வயிரம் எனும் கடு நெருப்பை
மிக மூட்டி வளர்க்கின்,
உயர் வரைக்காடு என்ன,
செயிர்
அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
சென்று மாள்வோம்;
கயிரவமும்
தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
கலந்து, வாழ,
உயிர்
அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
அறத்தின் உருவம் போல்வான்".
"குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
கொன்று, போர் வென்று,
அரவ
நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
ஆளும்
அரசுதன்னில்,
கரவு
உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு
பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
இனிது, நன்றே!"
"நீ தூது நடந்தருளி, எமது நினைவு அவர்க்கு உரைத்தால்,
நினைவின் வண்ணம்
தாது
ஊதி அளி முரலும் தண் பதியும், தாயமும்,
தான் தாரான்ஆகில்,
மீது
ஊது வளைக் குலமும் வலம் புரியும் மிக முழங்க,
வெய்ய காலன்
மா
தூதர் மனம் களிக்க, பொருது எனினும், பெறுவன்;
இது வசையும் அன்றே".
தருமபுத்திரரைத்
தவிர, பீமன், அருச்சுனன், நகுலன் ஆகிய
மூவரும் "போர் புரிவது தான் உசிதம்" என்றனர். கண்ணபிரான் அவர்களுக்கு
மறுமொழி புகன்று, சகாதேவனைப் பார்த்து, "உனது எண்ணம் என்ன?" என்றார்.
"கண்ணா, நீ எங்களுக்காகத் தூது சென்றால் என்ன? செல்லாவிட்டால்தான்
என்ன?
துரியோதனன்
எங்களுக்கு உரிய தாயபாகத்தை தந்தால் என்ன? தராவிட்டால் என்ன? ஐவருக்கும்
தேவியாகிய துரோபதை தனது கூந்தலை முடித்தால் என்ன? இப்படியே விரித்துக்
கிடந்தால் என்ன?
முடிவு
என்ன ஆகும் என்பது எனக்குத் தெரியுமா? நீயே அறிவாய். கண்ணா! உனது மாயை
ஒருவருக்கும் தெரியாது. ஆனால் நான் அறிவேன். உனது கருத்து எதுவோ, அதுவே எனது
கருத்து ஆகும்" என்றான் சகதேவன்.
"சிந்தித்தபடி நீயும் சென்றால்
என்? ஒழிந்தால் என்?
செறிந்த நூறு
மைந்தர்க்குள்
முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
என்? வழங்கினால் என்?
கொந்துற்ற
குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
என்? குறித்த செய்கை
அந்தத்தில்
முடியும்வகை அடியேற்குத்
தெரியுமோ?-ஆதி மூர்த்தி!"
"முருகு அவிழ்க்கும் பசுந்
துளப முடியோனே! அன்று
அலகை முலைப்பால் உண்டு,
மருது
இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும்
தெரியாது இங்கு உன் மாயை; யான்
அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக்
கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
என்றான், தெய்வம் அன்னான்".
"இவன்
நமது எண்ணத்தை வெளிவிட்டு விடுவானோ" என்று திருவுள்ளத்தில் கொண்டு, கண்ணபிரான் தனியாக ஓரிடத்தில்
சகாதேவனை அழைத்துக் கொண்டுபோய்,
"போர்
நிகழாமல் இருக்க ஒரு உபாயத்தைச் சொல்" என்றான்.
"கண்ணா!
பூபாரம் தீர்க்க உன்னால்தான் இயலும். ஆனாலும் எனக்கு ஒன்று தோன்றுகின்றது. கர்ணன் பூமியை
அரசாட்சி செய்யும்படி, அவனிடத்துப் பகைமை
உணர்வு கொண்ட அருச்சுனனை முன்னே கொன்று, திரௌபதியினது கருநிறம் பொருந்திய கூந்தலை அரிந்து
விட்டு,
கால்களிலே
விலங்கை இட்டுக் கைகளையும் பிடித்து உன்னையும் நான் தக்கபடி கட்டி வைப்பேனானால், பெரிய பாரதப்போர்
நடந்திடாதபடி தடுத்திடலாம்" என்று சகதேவன் சொன்னான்.
"இவ்
வண்ணம் சாதேவன் இயம்புதலும், நகைத்தருளி,
'இகலோர் சொன்ன
அவ்
வண்ணம் புகலாமல், விரகு உரைத்தான், இவன்!'
என்ன, அவனோடு ஆங்கு ஓர்
பை
வண்ண மணிக் கூடம்தனில் எய்தி, 'பாரதப் போர்
பயிலா வண்ணம்
உய்வண்ணம்
சொல்லுக, நீ உபாயம்' என, தொழுது
உரைப்பான், உரம் கொள் வேலான்";
"நீ பாரத அமரில் யாவரையும்
நீறாக்கி,
பூ
பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா!
போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா
பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?"
"பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன்கொன்று, அணங்கின்
கார்
ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி
நேராகக்
கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,
வாராமல்
காக்கலாம் மா பாரதம்' என்றான்".
கண்ணபிரான்
சகதேவனைப் பார்த்து, " நீ சொன்னபடி
எல்லாம் நடந்தேறினாலும், என்னை உன்னால் கட்ட முடியுமா?" என்றார்.
"உனது
பெருமையை நீயே உணராத கண்ணா! உன்னுடைய வடிவத்தை எனக்குக் காட்டு, நான்
கட்டுகின்றேன்" என்றான் சகதேவன்.
"முன்னம் நீ கூறியவை எல்லாம்
முடித்தாலும்,
என்னை
நீ கட்டுமாறு எவ்வாறு?' என மாயன்,
'உன்னை நீதானும் உணராதாய்!
உன் வடிவம்-
தன்னை
நீ காட்ட, தளைந்திடுவன் யான்!'என்றான்".
சகதேவனின்
வார்த்தையைக் கேட்ட கண்ணபிரான், பதினாறாயிரம் வடிவங்களை எடுத்தான். ஆயினும், சகதேவன், கண்ணபிரானுடைய
மூல வடிவை உணர்ந்து, அவனது திருவடிகளைத் தனது கருத்தால் கட்டினான்.
"மாயவனும்
அன்பன் மனம் அறிவான், 'கட்டுக!' என்று,
ஆய
வடிவு பதினாறாயிரம் கொண்டான்;
தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்
தாய
அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்".
'பாதப் பிணிப்பை விடு' என்று கண்ணன் கூற, சகதேவன் போரில் ஐவரையும் காக்க வரம் வேண்டி, கண்ணன் திருவடிகளைப் பலகாலும் வணங்கினான். கண்ணனது தாமரை மலர் போன்ற
இரண்டு திருவடிகளிலே பொருந்திச் சரணடைந்த ஒளியுள்ள கிரீடத்தை உடையவனான
சகதேவனுக்கு, கண்ணன், "ஓம்" என்று 'அப்படியே
ஆகுக' என்று உடன்பாடாகக் கூறியருளி, "இன்றைய
தினம் இவ்விடத்தில் நாம் இரண்டு
பேரும் இப்போது தனியே பேசிக்கொண்ட வார்த்தைகளுள் ஒன்றையும் எவரும் அறியச் சொல்லாமல் விடுவாயாக" என்று கூறினான்;
"நீ தேவன்!' என்று அறிந்து, நெஞ்சால் தனைக் கட்டும்
சாதேவன்
கண் களிக்க, தானே ஆய், முன் நின்றான்-
பூ
தேவரும், கனகப் பூங்கா நிழல் வைகும்
மா
தேவரும், தேடிக் காணா மலர் அடியோன்".
"அன்பால் இன்று என்னை அறிந்தே
பிணித்தமை நன்று;
என்
பாதம் தன்னை இனி விடுக!' என்று உரைப்ப,
'வன் பாரதப் போரில் வந்து
அடைந்தேம் ஐவரையும்,
நின்
பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!"
"என்று
என்று இறைஞ்சி, இரு தாமரைத் தாளில்
ஒன்றும்
கதிர் முடியாற்கு, 'ஓம்!' என்று உரைத்தருளி,
'இன்று இங்கு இருவேமும்
இப்போது உரைத்த மொழி
ஒன்றும்
பிறர் அறிய ஓதாது ஒழிக!' என்றான்".
மதுரச்
செம்மொழி செப்பி அருள்பெற்ற சிவபத்தர் வளர் விர்த்தகிரி உற்ற பெருமாளே ---
இனிமையான
செம்மையான புகழ் மொழிகளைக் கூறி வழிபட்டு இறையருளைப் பெற்ற சிவபக்தர்கள் உள்ள திரு முதுகுன்றம் என்னும்
விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமையில் மிக்கவரே என்று முருகப்
பெருமான் அடிகளார் போற்றினார்.
திருமுதுகுன்றம்
என்னும் திருத்தலத்தின் பெருமையை அடிகளார் இங்கு நமக்குக் காட்டினார். பின்வரும் திருஞானசம்பந்தப் பெருமான்
பாடல்களால் திருமுமுகுன்றத்தின் பெருமை விளங்கும்.
"சுரர்
மாதவர் தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா
நரர்ஆனபன்
முனிவர்தொழ இருந்தான்இடம் நலம்ஆர்
அரசார்வர
அணிபொற்கலன் அவைகொண்டுபல்நாளும்
முரசுஆர்வரு
மணமொய்ம்புஉடை முதுகுன்று அடைவோமே".
"அறைஆர்கழல்
அந்தன்தனை அயின்மூவிலை அழகார்
கறைஆர்நெடு
வேலின்மிசை ஏற்றான்இடம் கருதில்,
முறைஆயின
பலசொல்லிஒண் மலர்சாந்துஅவை கொண்டு
முறையால்மிகு
முனிவர்தொழு முதுகுன்று அடைவோமே".
"ஏஆர்சிலை
எயினன் உருவாகி எழில் விசயற்கு
ஓவாதஇன்
அருள்செய்தஎம் ஒருவற்குஇடம் உலகில்
சாவாதவர்
பிறவாதவர் தவமே மிக உடையார்
மூவாத
பல் முனிவர்தொழு முதுகுன்று அடைவோமே".
தேவாரப்
பாடல்களில் திருமுதுகுன்றம். தற்போது விருத்தாசலம்
என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கோயில் உள்ளது.
விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மீ. தொலைவில்
உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து
வசதி உள்ளது.
அழகுத்
தமிழில் "திருமுதுகுன்றம்" என்பது, வடமொழியில் "விருத்தாசலம்", "விருத்தகிரி" என்று ஆனது.
தற்போது, விருத்தாசலம் என்றே வழங்கப்படுகின்றது.
இறைவர்
: பழமலைநாதர், விருத்தகிரீசுவரர்
இறைவியார்
: பெரியநாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை
தல
மரம் : வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.
மூவர்
முதலிகள் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிச் செய்யப்பெற்ற திருத்தலம்.
முதல்
திருச்சுற்றில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது.
பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லாக் குறைகளும் நீங்கி
நல்ல வாழ்வு அமையும் என்பதால் அடியவர்கள் இவரை வணங்குகின்றனர்.
திருவும்
கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை
பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய்
நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும்
ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்
என்று
விருத்தாசலம் தலபுராணம் இவ் விநாயகரைப் பாடும்.
இத்தலத்தின்
இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் திருச்சுற்றின்
வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
நான்காம்
திருச்சுற்றில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது.
சைவ
சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு.
இவற்றை 28 இலிங்கங்களாக
இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த
இலிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வடமேற்கு பகுதியில் தனி சந்நிதியில்
அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின்
நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
இத்திருத்தலத்தின்
மரமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை
வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர்
திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக
கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று
தலபுராணம் கூறுகிறது.
சுந்தரர்
திருமுதுகுன்றத்தினை அடைந்து இறைவரைப் பாடினார்.
முதுகுன்றப் பெருமான் தமது தோழருக்கு 12000 பொற்காசுகள் கொடுத்தார். நம்பியாரூரர்
சிவபெருமானை வணங்கி, "இப்பொன் முழுதும்
திருவாரூருக்கு வருதல் வேண்டும். அதனால் திருவாரூரிலே உள்ளோர்க்கு ஒரு வியப்புத்
தோன்றுதல் வேண்டும்" என்று வேண்டினார். பொன் திரளை மணிமுத்தாற்றிலே இட்டுத்
திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருள் வாக்குச் செய்தார். அது
கேட்ட நம்பியாரூரர் அன்று எனை ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று சொல்லி, மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டு, பொன்னை எல்லாம் மணிமுத்தாற்றிலே
இட்டார்.
இந்தத்
திருத்தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய
ஆடையினால் வீசி இளைப்பாற்ற, இறைவன் பழமலைநாதர்
பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி, அந்த உயிர்களை
தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும்
செய்தியாகும்.
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேல்
கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட்கு எல்லாம் அஞ்செழுத்து இயல்பு
கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால், அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும்
கண்டான்."
--- (கந்தபுராணம் -
வழிநடைப்படலம்)
ஆகையால்
இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது.
இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும்
என்பது நம்பிக்கை. ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது
சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத்
தோன்றினார். அதன் பின்னரே பிரமன் படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம்
சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை
என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.
காசியைப்போன்று
விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால்
மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடம் "புண்ணிய மடு"
எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால், அவை
கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை
வழிபட்டால், காசியில் நீராடி விசுவநாதரை
வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும்
அகன்று சித்தி அடைவர் என்பது நம்பிக்கை.
குருநமசிவாயர்
என்னும் மகான் 16-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில்
திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து
விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசி மிகுந்தது. பசி உண்டான
போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை
துதித்து
நன்றி புனையும் பெரிய நாயகி எனும் கிழத்தி,
என்றும் சிவனார் இடக் கிழத்தி, - நின்ற
நிலைக் கிழத்தி, மேனி முழுநிலக் கிழத்தி,
மலைக் கிழத்தி, சோறு கொண்டு வா”
என்று
பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே
தோன்றி "என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்? கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு
வர முடியும்" என்று கேட்க,
குருநமசிவாயர்,
முத்தி நதி சூழும் முதுகுன்று உறைவாளே!
பத்தர் பணியும் பதத்தாளே! - அத்தன்
இடத்தாளே! முற்றா இளமுலை மேல் ஆர-
வடத்தாளே! சோறு கொண்டு வா”
என்று
பாடினார். அம்மையும் மகிழ்ந்து இள நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள்
என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து
உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.
கருத்துரை
முருகா!
இடருக்கு இடமான இந்தப் பிறவியை ஒழித்து அருள்வாய்.
No comments:
Post a Comment