வேப்பூர் - 0764. குரைகடல் உலகினில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குரைகடல் உலகினில் (வேப்பூர் - நிம்பபுரம்)

முருகா!
குருநாதனாக எழுந்தருளி
உண்மைப் பொருளை உபதேசித்து அருள் புரியவேண்டும்.


தனதன தனதன தனதன தாந்த
     தாத்தான தந்த ...... தனதான


குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
     கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக்

குகையிட மருவிய கருவிழி மாந்தர்
     கோட்டாலை யின்றி ...... யவிரோதம்

வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
     வார்க்கே விளங்கு ...... மநுபூதி

வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
     வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும்

திரள்வரை பகமிகு குருகுல வேந்து
     தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு

தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
     தீப்பாய இந்த்ர ...... புரிவாழ

விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
     வேற்கார கந்த ...... புவியேழும்

மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
     வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


குரை கடல் உலகினில் உயிர்கொடு போந்து
     கூத்தாடுகின்ற ...... குடில்பேணி,

குகையிடம் மருவிய கருவிழி மாந்தர்
     கோட்டாலை இன்றி, ...... அவிரோதம்

வர, இரு வினை உற, உணர்வொடு தூங்கு-
     வார்க்கே விளங்கும் ...... அநுபூதி

வடிவினை, உனது அழகிய திரு ஆர்ந்த
     வாக்கால் மொழிந்து ...... அருளவேணும்.

திரள் வரை பக, மிகு குரு குல வேந்து
     தேர்ப்பாகன் மைந்தன், ...... மறையோடு

தெருமர, நிசிசரர் மனைவியர் சேர்ந்து
     தீப்பாய, இந்த்ர ...... புரிவாழ,

விரிதிரை எரி எழ, முதல் உற வாங்கு
     வேல்கார! கந்த! ...... புவி ஏழும்

மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
     வேப்பூர் அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

திரள் வரை பக --- திரண்ட கிரவுஞ்ச மலையானது பிளவுபடவும்,

மிகு குருகுல வேந்து தேர்ப் பாகன் மைந்தன் --- குருகுல வேந்தன் ஆகிய அருச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த திருமாலின் மைந்தனாகிய பிரமதேவன்

மறையோடு தெருமர --- தான் கற்ற வேதமும் தானுமாக மனச் சுழற்சி அடையவும்,

நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய --- அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும்,

இந்த்ர புரி வாழ --- இந்திர புரியாகிய பொன்னுலகம் வாழ்வு பெறவும்,

விரிதிரை எரி எழ --- பரந்து விரிந்த அலைகடல் தீப் பற்றி எழவும்,

முதல் உற வாங்கு வேல்கார --- முதன்மையான பரம்பொருள் என்னும் தன்மையுடன் செலுத்திய வேலாயுதத்தை உடையவரே!  

கந்த --- கந்தக் கடவுளே!

புவி ஏழும் மிடிகெட விளைவன --- ஏழுலகமும் வறுமை இன்றி விளங்கத்தக்க விளைச்சலை உடைய

வளவயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே --- வளப்பம் பொருந்தி வயல்கள் சூழ்ந்துள்ள வேப்பூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமையில் மிக்கவரே!

குரைகடல் உலகினில் உயிர்கொடு போந்து --- ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் உயிர் உடம்பினை எடுத்து வந்து,

கூத்து ஆடுகின்ற குடில் பேணி --- பலவிதமான விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி,

குகை இடம் மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை இன்றி --- குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும் துன்பங்கள் இல்லாமல்,

அவிரோதம் வர --- மாறுபாடு இல்லாத ஞானம் வர,

இரு வினை அற --- நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்க,

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் --- ஞான உணர்வில் நிலைத்து இருப்பவர்களுக்கே விளங்குகின்ற

அநுபூதி வடிவினை --- அனுபவ ஞானமாய் விளங்கும் திருவடிவின் உண்மையை

உனது அழகிய திரு ஆர்ந்த வாக்கால் --- உமது அழகிய அருள் நிறைந்த திருவாக்கால்

மொழிந்து அருள வேணும் --- உபதேசித்து அருளவேண்டும்.

பொழிப்புரை


திரண்ட கிரவுஞ்ச மலையானது பிளவுபடவும், குருகுல வேந்தன் ஆகிய அருச்சுனனின் தேர்ப்பாகனாக வந்த திருமாலின் மைந்தனாகிய பிரமதேவன் தான் கற்ற வேதமும் தானுமாக மனச் சுழற்சி அடையவும், அசுரர்களின் மனைவியர் ஒன்றுகூடி தீயில் பாய்ந்து இறக்கவும், இந்திர புரியாகிய பொன்னுலகம் வாழ்வு பெறவும், பரந்து விரிந்த அலைகடல் தீப் பற்றி எழவும், முதன்மையான பரம்பொருள் என்னும் தன்மையுடன் செலுத்திய வேலாயுதத்தை உடையவரே!  

கந்தக் கடவுளே!

ஏழுலகமும் வறுமை இன்றி விளங்கத்தக்க விளைச்சலை உடைய வளப்பம் பொருந்திய வயல்கள் சூழ்ந்துள்ள வேப்பூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமையில் மிக்கவரே!

ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்டுள்ள இந்த உலகில் உயிர் உடம்பினை எடுத்து வந்து, பலவிதமான விளையாட்டுகளை ஆடும் இந்த உடலை விரும்பிப் போற்றி, குகை போன்ற கருக்குழிக்குள் விழுகின்ற மக்களுக்கு நேரும் துன்பங்கள் இல்லாமல், மாறுபாடு இல்லாத ஞானம் வர, நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் நீங்க, ஞான உணர்வில் நிலைத்து இருப்பவர்களுக்கே விளங்குகின்ற அனுபவ ஞானமாய் விளங்கும் திருவடிவின் உண்மையை உமது அழகிய அருள் நிறைந்த திருவாக்கால் உபதேசித்து அருளவேண்டும்.  

விரிவுரை

குரைகடல் உலகினில் உயிர்கொடு போந்து, கூத்து ஆடுகின்ற குடில் பேணி ---

குரைத்தல் - ஒலித்தல், இரைத்தல். அலைகள் எழுவதால் கடலானது சதாகாலமும் இரைந்து கொண்டே இருக்கும். கடலால் சூழப்பட்டது இந்த உலகம்.

"அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு.

காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை அடிகளார் இங்குக் குறித்தார்.

செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

(1)   கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் இவ்வநுபவ மொழி நன்கு புலனாகும். அந்தோ!

உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

(1) ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.

(நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?)

(2)       இந்த மருந்து 250 வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3 மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000 இனாம்.

(3)       நோயில்லாத பொழுது டாக்டர் சர்டிபிகேட் தந்து லீவு எடுத்தல்; இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

கூத்தாடுகின்ற குடில் என்று அடிகளார் அருளியதன் அருமையை எண்ணிப் பார்க்கவேண்டும். குடில் என்றது உயிர்கள் எடுத்து வரும் மனித உடம்பை. கூத்து பலவகைப்படும். கூத்து முடிந்தவுடன் அதற்கான வேடம் கலைந்து விடும். பலவகையான செயல்களைப் புரிந்து வாழும் வாழ்க்கையானது ஒரு நாள் முடிந்துவிடும். வாழ்க்கை நிலையில்லாதது. நிலையாமையை உணராமை காரணமாக, பெற்று வந்த உடம்பையே நிலையானது என்று எண்ணிப் பலவகையான ஆடல்களில் திளைத்து வருகின்ற நிலை ஏற்படும்.


குகை இடம் மருவிய கருவிழி மாந்தர் கோட்டாலை இன்றி ---

குகை என்பது கருப்பையைக் குறித்தது.

கரு விழி மாந்தர் என்றது கருவிலே விழுகின்ற மாந்தரை.

கோட்டாலை - துன்பம்.

கருவில் உருவாகி வந்து அனுபவிக்கின்ற துன்பங்கள் யாவும் தீரவேண்டும்.

அவிரோதம் வர ---

அவிரோதம் - மாறுபாடு இல்லாதது. விரோதம் இல்லாதது.

"உள்ளதும் இலாதும் அல்லது அவிரோத உல்லச விநோதம் தருவாயே" என்றார் அடிகளார் பிறிதோர் திருப்புகழில்.
  
கடவுள், இது அது என்று சுட்டி அறியப்படாத பொருள். இல்லை என்றாலும், உள்ள பொருளைத் தான் இல்லை என்று சொல்லமுடியும். எந்த பொருளை இல்லை என்று சொல்லுகின்றாய் என்றால், உள்ள பொருள் என்று பலரும் கூறுவதையே என்பர்.

"உளதாய் இலதாய்" என்பார் அருணை வள்ளல் கந்தர் அநுபூதியில். இது உண்டு, அது உண்டு என்றும், இது இல்லை, அது இல்லை என்றும் சுட்டி அறியப்படாத ஒன்றுதான் கடவுள். அது சத்து, சித்தாக எள்ளது.

"அவிரோத ஞானச் சுடர் வடிவாள்" என்றார் கந்தர் அலங்காரத்தில். ஞானம் அவிரோதமானது. எல்லாம் தானாகவும், எனது என்பதும், யான் என்பதும் வேறாகி நிற்கும் நிலையில், விரோத பாவம் இல்லை என்று ஆகின்றது. நான் என்பது அற்று, எல்லாம் தானாகி விட்டது. இந்த நிலையில் யாரையும் விரோதிக்க முடியாது. அமைதியே நிலவும். அது, மனவாக்கிற்கு எட்டாத அநுபவானந்த நிலை.

நான் என்பது தற்போதம். அது ஆன்ம அறிவு எனப்படும். இது அறவே அழிந்தால் அன்றி மேற்கூறிய இன்பம் தோன்றாது. நான் செய்கின்றேன். நான் அனுபவிக்கின்றேன் என்ற எண்ணங்கள் அணுத்துணையும் இல்லாமல் நீங்க வேண்டும்.

ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானாகரனே! நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே            --- கந்தர்அநுபூதி.

"தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ,
     சீவன் சிவச் சொருபம் ...... என தேறி,
நான் என்பது அற்று, உயிரொடு ஊன்என்பது அற்று, வெளி
     நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே
ஞானம் சுரப்ப, மகிழ் ஆநந்த சித்தியொடெ
     நாளும் களிக்க, பதம் ...... அருள்வாயே"        --- (தேனுந்து) திருப்புகழ்.
 
சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர்
     தாங்களும் ஞானம்உற, ...... அடியேனும்
தூங்கிய பார்வையொடு, தாங்கிய வாயுவொடு,
     தோன்றிய சோதியொடு, ...... சிவயோகம்
தூண்டிய சீவனொடு, வேண்டிய காலமொடு,
     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ?  --- (சாங்கரி பாடி) திருப்புகழ்.

நான் ஆன தன்மை நழுவியே, எவ்வுயிர்க்கும்
   தான் ஆன உண்மை தனைச் சாரும் நாள் எந்நாளோ

நான் ஆன தன்மை என்று நாடாமல் நாட, இன்ப
   வான்ஆகி நின்றனை நீ வாழி பராபரமே

நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து
       நலிந்தவுடன், சகமாயை நானா ஆகித்
தான் வந்து தொடரும்; இத்தால் வளரும் துன்பச்
       சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார்.       --- தாயுமானார்.

இரு வினை அற ---

நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் உயிரை விட்டு நீங்க வேண்டும். அது இறையருளால் மட்டுமே முடியும் என்பதால், அது குறித்து அடிகளார் முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார்.

உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி வடிவினை ---

அநுபூதி என்ற சொல்லுக்கு, பட்டறிவு, அநுபவஞானம், உடனாதல் என்று பொருள். மெய்யுணர்வோடு அநுபவப்பட்டு, அதனால் வரும் பாட்டு அநுபூதி ஆயிற்று.

அது தன்னை ஓதுகின்றவர்களையும் அநுபூதியில் சேர்ப்பது. அநுபவம் என்றால் அழுந்தி அறிதல் என்றும் அநுபவ பூர்வமாய் உணர்தல் என்றும் பொருள்படும். வெறும் சொல்லோடு பொருந்தாமல், சொல் உணர்த்தும் பொருளோடும் பொருந்தாமல், சொல் உணர்த்தும் பொருளிலே பொதிந்துள்ள உண்மையை ஓர்தலே உண்மையான அநுபவ அறிவுக்குத் துணை செய்யும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று மணிவாசகப் பெருமான் பாடியது இந்தக் கருத்திலேயே என்பதை அநுபவமாக உணரலாம். "சொல்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதான்" என்பார் அப்பர் பெருமான். சொல் பாவியுள்ள பொருளை உணர்தல் வேண்டும். இந்த நிலையிலே அருட்பாடல்களைக் குருமுகமாக ஓதி, கேட்டு, உணர்ந்து தெளிதல் வேண்டும்.

தூங்கிய பார்வையொடு, தாங்கிய வாயுவொடு,
     தோன்றியசோதியொடு, ...... சிவயோகம்
தூண்டிய சீவனொடு, வேண்டிய காலமொடு,
     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ?    --- (சாங்கரி) திருப்புகழ்.

தூங்காமல் தூங்கி சுகப் பெருமான் நின் நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ.   ---  தாயுமானார்.

ஆங்காரம் அற்று, உன் அறிவு ஆன அன்பருக்கே
தூங்காத தூக்கம் அது தூக்கும் பராபரமே.          --- தாயுமானார்.

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர் கண்டார் அச் சுருதிக்கண் தூக்கமே. --- திருமூலர்.

இதன் பொருள் --- தற்செயலற்றுச் சிவச் செயலாக இருப்பவர் சோம்பர் எனப்படுவர். அத்தகையார் தங்கி இருப்பது இயற்கை உண்மைத் தூவெளியாகிய சிவவெளியில். அவர் பேரின்பம் நுகர்ந்து கிடப்பதும் அச் சிவ வெளியிலேயேயாம். அவர் உணர்வு மறைக்கும் எட்டாத முடிவிடமாகிய சிவவெளியில் திருவடி உணர்வோடு ஒன்றி உணரும்.
  
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்உள்ளே,
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்உள்ளே,
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே,
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே. --- திருமூலர்.

இதன் பொருள் ---- தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும் மெய்யன்பர்கள் சிவவுலகமும் தம்முளே சிவனை நினைவதாலும் அவன் படைப்பாம் உலகினைத் தம் முனைப்பாக நினையாமையாலும் தம்முள் கண்டனர். உலகைக் காரிய வடிவமாகும் மாயை என்று மட்டும் கருதாமல் அதனைப் படைத்தருளிய வினைமுதற் காரணன் எனப்படும் சிவபெருமானின் திருவருட் பண்புகளையும் தெளிந்து தம்முள் கண்டனர். அதுபோலவே சிவனை விட்டு்ப் பிரியாது ஒட்டிநிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டனர். அதுபோல் சிவபோகமாகிய திருவடி நுகர்வினைத் தம்முள்ளே கொண்டனர். அதனால் நிலையா உலகை மறந்து நிலைக்கும் சிவனை உலையா உணர்வில் உழந்து உணர்ந்து நிற்பார் தூங்கிக் கண்டார்.

ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார், பரம ஆநந்தத்தே
தேங்கார், நினைப்பு மறப்பும் அறார், தினைப்போது அளவும்
ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார், என் செய்வார் யமதூதருக்கே? ---  கந்தர் அலங்காரம்.

நான் எனது என்னும் அகங்கார மமகாரம் ஆகிய அகப்பற்றையும், புறப்பற்றையும் ஒழித்து, அருள் அனுபவத்திலே மனமானது அடங்கப் பெறவேண்டும். அப்போது பொறி புலன்கள் ஒடுங்கி நிற்கும். நினைப்பும் மறப்பும் அற்ற சமாதி நிலை வாய்க்கும்.

"ஓங்காரமே நல் திருவாசி, உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம்" என்றும், இதனை "ஆங்காரம் அற்றார் அறிவர்" என்றும் உண்மை விளக்கம் என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் குறித்துள்ளது சிந்திக்கத் தக்கது.

உலகம் பொருள் உலகம் எனவும், சொல் உலகம் எனவும் இரு வகையாய் அமைந்துள்ளது. பொருள் வடிவாய் உள்ளவை (புவனம், தத்துவம், கலை) பொருள் உலகம் ஆகும். ஒலிவடிவாய் வழங்கும் பலவகை மொழிகள் சொல் உலகம் ஆகும். சொல்லுலகம் எழுத்து, சொல், சொற்றொடர் என மூன்று நிலைமையை உடையது. எழுத்து வடமொழி பற்றி ஐம்பத்தொன்று எனக் கொள்ளப்படும். ஐம்பத்து மூன்று என்று கூறும் வழக்கும் உள்ளது. இவ்வெழுத்துக்களுள் அனைத்து மொழிகளின் எழுத்துக்களும் அடங்கும் என்னும் கருத்தினால் இவற்றை மாத்ருகா அக்கரங்கள் (தாய் எழுத்துக்கள்) என்று குறிப்பிடுவர். சொல்லுலகம் ஆகிய அனைத்து மொழிகளுக்கும் மூலமாய் இருப்பது நாதம் ஆகும். நாதம் ஓம் என்னும் குறியீட்டால் குறிக்கப்படும். அதனால், அது ஓங்காரம் எனப்படும். இன்னும், ஓங்காரம் ஐந்து கூறுகளை உடையதாகச் சொல்லப்படும். அவை அ, , ம், விந்து, நாதம் என்பன. இவற்றுள் முதலில் உள்ள மூன்றும் நம் செவியால் உணரப்படும் அகரம் முதலியன அல்ல. ஆயினும் அகரம் முதலியவற்றோடு ஒத்த தன்மை உடைமையால் அவையும் அகரம் முதலியனவாகவே ஒப்புமை பற்றிக் கூறப்படுகின்றன. ஓங்காரத்தின் கூறுகளாகிய அகரம் முதலிய ஐந்தும் பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும். ஆயினும் அவை திருவைந்தெழுத்தாகிய பஞ்சாக்கரம் போன்றவை அல்ல. ஆதலால் இவை சூக்கும பஞ்சாக்கரம் என்றே குறிக்கப்படும். இறைவன் அகர, உகர, மகர, நாத, விந்துக்களாய் நின்று, அந்தக் கரணங்களை இயக்கிப் பொருளுணர்வைத் தருகின்றான் என்பது பற்றி, "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா" என்று அருளிச் செய்தார் மாணிக்கவாசகர்.

பொருள் உலகம் அனைத்திற்கும் முதல்வன் ஆகிய கடவுளே சொல் உலகத்திற்கும் முதல்வன் ஆதலின், ஓங்காரத்தால் குறிக்கப்படுபவன் அவனே என்று நூல்கள் கூறும். ஓங்காரமே அவனது திருவுருவைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டமாகிய திருவாசி என்பதும், அத்திருவாசியில் அமைந்துள்ள 51 அல்லது 53 என்னும் எண்ணிக்கையுள்ள சுடர்கள், மாத்ருகா அக்கரங்கள் என மேலே குறிப்பிட்ட முதல் எழுத்துக்கள் என்பதும் உண்மை விளக்கத்தால் நாம் அறிந்த செய்திகள்.

நாம் கோயிலுக்குச் செல்லுகிறோம். கோயில் எத்தனைப் பெரியதாக இருந்தாலும், மூலவர் இருக்கும் கருவறை சிறியதாகத்தான் இருக்கும். ஏன் இப்படி இருளடைந்த குகை போன்ற இடத்தில் மூலமூர்த்தியை வைத்திருக்கிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். நம் முன்னோர்கள் தெரியாமல் அப்படிச் செய்யவில்லை. ஒரு கருத்தோடுதான் அவ்வாறு அமைத்தார்கள். கோயிலிலுள்ள மூலத்தானம் நம் இதயத்தைப் போன்றது. இதயம் போன்ற சன்னல் இல்லாத இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் ஆண்டவன் முன் நின்று பார்த்தால் இருட்டில் தெரியாது. கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். பூசை செய்கிறவர் தீபாராதனை காட்டும் பொழுது மிக விளக்கமாகத் தெரியும். தீபாராதனை காட்டும் போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவது போலக் கையைச் சுற்றிக் காட்டுவார். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண வேண்டும். அப்படிக் காணுகிற திருவுருவை மனத்தில் நிலை நிறுத்தப் பழகுதல் வேண்டும்.

அம்பலவாணப் பெருமானின் எடுத்த பொற்பாதத்தில் தம் அன்பை வைத்தவர் நிலத்தின் மேல் நெடுங்கிடையாய் விழுவர், பின்பு திருக்கூத்தினைக் காணவேண்டி எழுவர். தம்மையே தாம் மறந்து விடுவர். ஆங்காரம் என்பது அறவே கெட்டு ஒழியும்.

கையும் தலைமிசை புனை அஞ்சலியன;
         கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங்களும் உடன்
         உருகும் பரிவின; பேறு எய்தும்
மெய்யும் தரை மிசை விழும்; முன்பு எழு தரும்,
         மின் தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
         ஆர்வம் பெருகுதல் அளவின்றால்  (பெரியபுராணம்)

கருவி கரணங்கள் எல்லாம் ஓய்ந்து, அறிவு மாத்திரம் செயல்பட, அந்தப் பரவச நிலையில் தூங்குதல் யோகநித்திரை அல்லது அறிதுயில் என்று வழங்கப்படும்.

அத்தகைய ஞான உணர்வில் நிலைத்து இருப்பவர்களுக்கே விளங்குகின்றது, அனுபவ ஞானமாய் விளங்கும் திருவடிவின் உண்மை.

உனது அழகிய திரு ஆர்ந்த வாக்கால், மொழிந்து அருள வேணும் ---

ஒப்பற்ற அனுபவ ஞானத்தை ஒருவர் தமது முயற்சியாலும், தாம் பெற்ற கல்வி அறிவாலுமே பெறுதல் இயலாது. குருவருள் வாய்க்கவேண்டும். குரு உணர்த்த உணர்தல் வேண்டும். குருவைத் தேடி அலைதல் கூடாது. குருவருள் வேண்டி இறைவழிபாடு ஆற்றி வருதல் வேண்டும். பரம்பொருளே குருவடிவாக மானுடச் சட்டை தாங்கி வந்து அருள் புரியும்.

சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர் என்பர், புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

என்பார் திருமூல நாயனார்.

இதன் பொருள் ---

இயற்கை வடிவாக உள்ள சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து, ஆருயிர்களை மலம் அகற்றித் தூய்மை செய்து அருளுவவன். அக் குருவே தன் திருவடி இணையையும் நல்கி அருளுவன். இவ் உண்மையினைக் காணும் பேறு இல்லாத புல்லறிவாளராகிய அதிமூடர், நிலையில்லாத மாயாகாரியம் ஆகிய ஊனக்கண் கொண்டு கண்டு சிவகுருவும் நம்மவரில் ஒருவரே என்பர். அருட்கண் பெற்ற புண்ணியப் பேறு உடையார் அத்தனாகிய சிவபெருமான் இவனே என்று, 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிச் சிவசிவ' என்று ஓவாது ஓதி அவன் திருவடியை வணங்குவர்.

பரம்பொருளே குருவாக வந்து அருள் புரியும் என்பதை,

"அறிவுக்கு அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்த நிலை நீங்கி,  -  பிறியாக்
கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு", 

என்னும் கந்தர் கலிவெண்பாவில் அறிவுறுத்தினார் குமரகுருபர அடிகள்.

ஆன்மாவின் அறிவுக்கு அறிவாய் இருந்தும்,  அவ் ஆன்ம அறிவால் அறியப்படாத சிவபெருமானே உலகில் குருவடிவாக எழுந்தருளி வந்து பக்குவ ஆன்மாக்களுக்கு அருள் புரிவர். "அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை" என்பது மணிவாசகம்.

"குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்து, திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி,
கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்து,
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்"

என வரும் ஔவைப் பிராட்டியார் அருளிய "விநாயகர் அகவல்" வரிகளையும் எண்ணுக.
  
முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. --- கந்தர் அனுபூதி.

உருவப் பொருளும் அல்ல, அருவப் பொருளும் அல்ல; உள்ள பொருளும் அல்ல, இல்லாத பொருளும் அல்ல; இருளும் அல்ல, ஒளியாகிய பொருளும் அல்ல; என்று சொல்லும் தன்மையில் உள்ளதே பரம்பொருள் ஆகும். அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும், ஒப்பற்ற வேலினை ஏந்திய முனிவன் என்றும், அவரே நமது பரம குரு என்றும், அப் பெருமானது திருவருளைக் கொண்டு மட்டுமே அறிய முடியும்.

எனவே, அநுபூதி ஞான வடிவின் உண்மையை, முருகப் பெருமானே அருட்குருவாக எழுந்தருளி வந்து, அவரது திருவாக்கால் உபதேச முகமாக மொழிந்து அருளவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் வேண்டுகின்றார்.

திரள் வரை பக ---

வரை - மலை, இங்கு கிரவுஞ்ச மலையைக் குறிக்கும்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


மிகு குருகுல வேந்து தேர்ப் பாகன் மைந்தன் மறயோடு தெருமர ---

தெருமரல் - மனச்சுழற்சி, அச்சம்.

பாண்டவர்கள் ஐவரும் குருகுலத்தில் தோன்றிய அரசர்கள்.

யுதிட்டிரர் ---  யுத்தத்தில் புறங்காட்டாதவர். தருமமே ஒரு சொரூபமாக வாழ்ந்தவர்.

வீமன் --- பயங்கரமானவன். மானசீகமாக சிவபூசை செய்கின்றவன்.

அருச்சுனன் ---  மனவாக்குக் காயங்களால் மாசில்லாதவன் - தூயவன்.

நகுலன் --- பகைவராகிய பாம்புகட்குக் கீரி போன்றவன்.

சகாதேவன் --- உடன் பிறந்தாரிடம் ஒற்றுமையாக இருப்பவன். 

இந்த ஐவர்களாகிய பாண்டவர்க்குப் பரந்தாமனாகிய கண்ணபிரான் புகலிடமாக நின்று அருள் புரிந்தார். அவர்களைப் பாரதப் போரில் வெற்றி கொள்ளத் துணை புரியும் வகையில், அருச்சுன்னுக்குத் திரோட்டியாகத் திகழ்ந்தான்.

அப்படிப்பட்ட திருமாலின் உந்தியில் தோன்றியவர் பிரமதேவர். அவர் வேதங்களில் வல்லவர் என்பதால், "வேதா" என்றும் "மறையவன்" என்றும் போற்றப்படுபவர். அத்தகைய பிரமதேவனும் அச்சம் கொள்ளுமாறு சூரபதுமனுடைய செயல் அமைந்திருந்தது.

அருச்சுனனுக்குத் தேர்ப் பாகனாக கண்ணன் விளங்கியதை அடிகளார் போற்றிக் கூறுமாறு காண்க.
  
தரும வீம அருச்சுன நகுல
     சகாதே வர்க்குப் ...... புகல் ஆகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாள்ஓர் பத்து எட் ...... டினில் ஆளும்

குரு மகீதலம் உட்பட, உளம் அது
     கோடாமல் சத் ...... ரியர் மாள,
குலவு தேர்கடவு அச்சுதன் மருக!
     குமாரா! கச்சிப் ...... பெருமாளே.       --- (கருமமான) திருப்புகழ்.

பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
     வென்றிட ,சகுனி கவறால் பொருள்
     பங்குடை அவனி பதிதோற்றிட, ...... அயலேபோய்ப் 
பண்டையில் விதியை நினையா, பனி-
     ரண்டு உடை வருஷ முறையாப்பல
     பண்புடன் மறைவின் முறையால் திரு ...... வருளாலே

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
     முந்து தம்முடைய மனைவாழ்க்கையின்
     வந்தபின் உரிமை அதுகேட்டிட ...... இசையாநாள் 
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
     உந்தினன் மருக! வயலூர்க்குக!
     வஞ்சியில் அமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.     --- (சஞ்சல) திருப்புகழ்.

திருதராட்டிரன் உதவு நூற்றுவர்
     சேண் நாடு ஆள்வான், நாள் ஓர் மூவா ...... றினில் வீழ,
திலக பார்த்தனும் உலகு காத்து அருள்
     சீர் ஆமாறே தேர்ஊர் கோமான் ...... மருகோனே!      --- (பருதியாய்) திருப்புகழ்.

சூது பொரு தருமன் நாடு தோற்று, ரு
     ஆறு வருஷம் வன வாசம் ஏற்று, யல்
      தோகை உடனுமெ விராட ராச்சியம் ...... உறைநாளில்,
சூறை நிரை கொடு, வர் ஏக மீட்டு, திர்
     ஆளும் உரிமை தருமாறு கேட்டு, ரு
      தூது செல, அடுவல் ஆண்மை தாக்குவன், ......எனமீள,

வாது சமர் திருத ரான ராட்டிர
     ராஜ குமரர், துரியோத னால், பிறர்
     மாள, நிருபரொடு சேனை தூள்பட, ...... வரி சாப
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய
     தேரை முடுகு நெடுமால், பராக்ரம
     மாயன் மருக! அமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.   --- (மோதுமறலி) திருப்புகழ்.

நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீப்பாய, இந்த்ர புரி வாழ ---

முருகப் பெருமானுடன் நிகழ்ந்த போரில் அரக்கர் குலம் முழுதும் அழிந்தது. அரக்கர்களுடைய தேவிமார்கள் தீப் புகுந்து தமது உழிரை மாய்த்துக் கொண்டார்கள். அதனால், இந்திர லோகத்து இருந்த தேவர்கள் வாழ்வு அடைந்தார்கள்.
  
விரிதிரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார ---

பரந்து விரிந்த அலைகளை உடைய கடலானது முருகப் பெருமானின் வேலாயுதத்தால் வற்றி வறண்டு போனது. வேலாயுதமானது முதன்மை பெற்று விளங்கியது.

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல் என,
     மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல் என,
     மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயா என ...... இசைகள் கூற, 
வேல் எடுத்து நடந்த திவாகரா! சல
     வேடு வப்பெண் மணந்த புயாசலா! தமிழ்
     வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா! சிவ ...... குமரவேளே.
                                                                                                --- (ஓலமிட்ட) திருப்புகழ்.
 
பட்டு உருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து, கடல்
     முற்றும் மலை வற்றிக் குழம்பும் குழம்ப, முனை
     பட்டஅயில் தொட்டுத் திடங்கொண்டு எதிர்ந்த அவுணர் ...... முடிசாய,
தட்டு அழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட, ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு, செந்தில்உறை ....பெருமாளே.
                                                          ---  (கட்டழகு) திருப்புகழ்.

மாமுதல் தடிந்து, தண் மல்கு கிரி ஊடுபோய்
         வலிய தானவர் மார்பு இடம்
     வழிகண்டு, கமல பவனத்தனை சிறைஇட்டு,
         மகவான் தனைச் சிறை விடுத்து,
     ஓம இருடித் தலைவர் ஆசிபெற்று, உயர்வானில்
         உம்பர்சொல் துதிபெற்று, நா
     உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில்
         ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்..   --- வேல்விருத்தம்.

புவி ஏழும் மிடிகெட விளைவன, வளவயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே ---

உலக மக்கள் வறுமை இன்றி விளக்கம் பெற்று வாழவேண்டுமானால், வறுமை இன்றி விளங்க வேண்டும். வறுமை இல்லாமல் விளங்க வேண்டுமானால், நல்ல மழை பொழிந்து விளைநிலம் செழுமை அடைய வேண்டும்.

தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழுகின்ற தொண்டை நன்னாட்டில், பாலாற்றின் கரையில் விளங்குவது வேப்பூர் என்னும் திருத்தலம். ஆர்க்காட்டிற்கு மேற்கிலும், வேலூருக்குக் கிழக்கிலும் நெடுஞ்சாலையை ஒட்டி, பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம். திருக்கோயிலின் மூலவராக வசிட்டேசுவரர் உள்ளார். ஏழுமுனிவர்களில் ஒருவரான வசிட்டர் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இவர் வசிட்டேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். சிவன் இங்கு வசிட்டருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாகக் கூறுகின்றனர். இறைவி பாலகுஜாம்பிகை ஆவார். இறைவி தனி சன்னதியில் உள்ளார். சிவனின் சன்னதியில் வசிட்டர், சிவனை வணங்கிய நிலையில் உள்ளார். இவருக்கு பூசை செய்த பின்னர் சிவனுக்கு பூசை செய்கிறார்கள். சரபேசுவரர், சப்த மாதர், செல்வ விநாயகர், காசி விசுவநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலிலுள்ள வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரைப் போற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கருத்துரை

முருகா! குருநாதனாக எழுந்தருளி உண்மைப் பொருளை உபதேசித்து அருள் புரியவேண்டும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...