திருக் கூடலையாற்றூர் - 0767. வாட்டிஎனைச் சூழ்ந்தவினை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வாட்டியெனை (திருக்கூடலையாற்றூர்)

முருகா!
இருவினையினால் அடியேன் கலங்கி,
இயம பாசத்திற்கு ஆளாகாமல்படிக்கு ஆட்கொண்டருள்வீர்.


தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
     தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
     தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான

வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
     மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
     மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே

வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
     காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
     வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத்

தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
     பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
     சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ......தன்பிலாமல்

தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
     னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
     சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய்

வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
     நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
     மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ......விஞ்சையோனே

வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
     யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
     மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ......முங்கொளாயி

கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
     தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
     கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ......கந்தவேளே

கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
     நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
     கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


வாட்டி எனைச் சூழ்ந்த வினை, ஆசைய முஆசை, அனல்
     மூட்டி உலைக் காய்ந்த மழுவாம் என விகாசமொடு
     மாட்டி எனைப் பாய்ந்து, கடவோடு, டமொடு ஆடி விடு ......விஞ்சையாலே

வாய்த்த மலர்ச் சாந்து புழுகு, ன பனி நீர்களொடு
     காற்று வரத் தாங்குவன, மார்பில் அணி ஆரமொடு
     வாய்க்கும் எனப் பூண்டு அழகதாக பவிசோடு மகிழ் ...... வன்பு கூரத்

தீட்டு விழிக் காந்தி, மடவார்களுடன் ஆடி, வலை
     பூட்டிவிடப் போந்து, பிணியோடு வலி வாதம் என
     சேர்த்துவிடப் பேர்ந்து, வினை மூடி, அடியேனும் உனது ......அன்பு இலாமல்,

தேட்டம் உறத் தேர்ந்தும் அமிர்தாம் எனவெ ஏகி, நமன்
     ஓட்டிவிடக் காய்ந்து, வரி வேதன் அடையாளம் அருள்
     சீட்டுவரக் காண்டு, நலி காலன் அணுகா, நின் அருள்......அன்பு தாராய்.

வேட்டுவரைக் காய்ந்து, குற மாதை உறவாடி, இருள்
     நாட்டவரைச் சேந்த, கதிர் வேல்கொடு அமர் ஆடி,சிறை
     மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும்.....விஞ்சையோனே!

வேற்று உருவில் போந்து மதுரா புரியில் ஆடி, வைகை
     ஆற்றின் மணல் தாங்கு மழுவாளி, அன தாதை, புர
     மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன், விடை ஏறி, இட....மும் கொள் ஆயி,

கோட்டு முலைத் தாங்கும் இழையான இடை, கோடிமதி
     தோற்றம் எனப் போந்த அழகான சிவகாமி, விறல்
     கூற்றுவனைக் காய்ந்த அபிராமி, மனதார அருள் ...... கந்தவேளே!

கூட்டுநதித் தேங்கிய வெளாறு, தரளாறு திகழ்
     நாட்டில் உறைச் சேந்த! மயிலா! வளிதெய்வானையொடெ
     கூற்றுவிழத் தாண்டி, எனது ஆகம் அதில் வாழ்குமர! ......தம்பிரானே.


பதவுரை

      வேட்டுவரைக் காய்ந்து --- வேடர்களை மூர்ச்சிக்குமாறு செய்து,

     குற மாதை உறவாடி --- வள்ளியம்மையாருடன் உறவு செய்து,

     இருள் நாட்டவரை --- பாவமாகிய இருளிலே வாழும் அரக்கர்களுடன்,

     சேந்த கதிர்வேல் கொடு அமர் ஆடி --- சிவந்த ஒளியுடன் கூடிய வேலாயுதத்தைக் கொண்டு போர் புரிந்து,

      சிறை மீட்டு --- சிறையினின்றும் மீளுமாறு செய்து,

     அமரர்க்கு ஆண்டவனை --- தேவர்கள் தலைவனாகிய இந்திரனை

     வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே --- நிலையாக வாழும்படி வைத்த கல்வியில் பெரியவரே!

      வேற்று உருவில் போந்து --- கூலியாள் போன்று மாறுபட்ட உருவத்தோடு சென்று

     மதுரா புரியில் ஆடி --- மதுரையம்பதியில் பல திருவிளையாடல்களைப் புரிந்து,

     வைகை ஆற்றின் மணல் தாங்கும் --- வைகை ஆற்றில் மணலைச் சென்னிமிசை எடுத்தவரும்,

     மழுவாளி --- மழுவாயுதத்தை ஏந்தியவரும்,

     என தாதை --- என்னுடைய தந்தையும்,

     புரம் மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் --- திரிபுரங்களின் கோட்டையை எரித்து உலகை ஆட்கொண்ட சிவலோகநாதரும்,

     விடை ஏறி --- இடப வாகனரும் ஆகிய சிவபெருமானுடைய,

     இடமும் கொள் ஆயி ---  இடப்பக்கத்தை உடைய உலக அன்னை,

      கோட்டு முலைத் தாங்கும் --- மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும்

     இழையான இடை --- நூல் போன்ற இடையை உடையவர்,

     கோடி மதி தோற்றம் எனப் போந்த --- கோடிச் சந்திரர்கள் உதயம் ஆனால் போன்ற குளிர்ந்த ஒளியுடன் கூடிய,

     அழகான சிவகாமி --- அழகிய சிவகாமி,

     விறல் கூற்றுவனைக் காய்ந்த அபிராமி --- வலிமை மிக்க கூற்றுவனை உதைத்த பேரழகி,

     மனது ஆர அருள் கந்தவேளே --- திருவுள்ளம் மகிழ்ந்து பெற்றருளிய கந்தப் பெருமானே!

      கூட்டு நதித் தேங்கிய வெ(ள்)ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறைச் சேந்த --- வெள்ளாறு, மணிமுத்தா நதிகள் கூடுவதனால் நீர் தேங்கி இருக்கும் கூடலையாற்றூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள செம்மேனியனே! 

     மயிலா --- மயில் வாகனரே!

      வ(ள்)ளி தெய்வானையொடெ --- வள்ளியம்மை, தேவயானையம்மை ஆகிய இருவரோடு இணைந்து,

     கூற்று விழத் தாண்டி --- இயம பயம் நீங்குமாறு ஞானத்தைத் தூண்டி,

     எனது ஆகம் அதில் வாழ் குமர --- அடியேனுடைய உள்ளத்தில் வாழ்கின்ற குமார மூர்த்தியே!

     தம்பிரானே --- தனிப்பெரும் தலைவரே!

      வாட்டி எனைச் சூழ்ந்த வினை --- அடியேனைத் துன்புறுத்திச் சூழ்ந்த வினையினால்,

     ஆசைய மூ ஆசை அனல் மூட்டி --- பொன் முதலிய அந்த மூன்று ஆசையாகிய நெருப்பை மூட்டி,

     உலை காய்ந்த மழுவாம் என --- உலையிலே காய்ந்த மழுவைப் போல, ஒளியுடன்,

     விகாசமோடு மாட்டி --- ஆசாபாசத்தில் அகப்படச் செய்து,

      எனைப் பாய்ந்து --- என் மீது வேகமாகப் பாய்ந்து,

     கடவோடு அ(ட்)டமோடு --- மாயையிலே என்னைச் செலுத்தும் பிடிவாதமோடு நடித்து,

      ஆடிவிடு விஞ்சையாலே --- அதிலே செலுத்தும் வித்தையினாலே,

      வாய்த்த மலர் --- மணம் நிறைந்துள்ள மலர்,

     சாந்து --- சந்தனம்,

     புழுகு --- புனுகுச் சட்டம்,

     ஆன ப(ன்)னீர்களோடு --- சுகமான பனிநீர் முதலியவைகளோடு,

     காற்று வர --- தென்றல் காற்று வர,

     தாங்கு வன மார்பில் --- தாங்குதற்கு ஏற்றதான அழகிய மார்பில்

     அணி ஆரமோடு வாய்க்கும் எனப் பூண்டு ---  அணிந்து கொள்ளும் பொன்மாலை முதலிய வாய்ப்பாக உள்ளது என்று அணிந்து,

      அழகு அதாக --- அழகாகவும்

     பவிசோடு --- பெருமையுடனும்

     மகிழ் வன்பு கூர --- மகிழ்கின்ற வலிமையுடைய

     தீட்டு விழிக் காந்தி --- மை தீட்டிய கண்களுடைய ஒளி பொருந்திய

     மடவார்களுடன் ஆடி --- பெண்களுடன் விளையாடி,

     வலை பூட்டி விடப் போந்து --- அவர்கள் வலையிட்டு வசப்படுத்த, அவர்கள் பின்னேயே சென்று,

      பிணியோடு வலிவாதம் என சேர்த்து விட --- நோய்களுடன் வலிசெய்கின்ற வாத நோயும் உண்டாக்கி விட,

     பேர்ந்து வினைமூடி --- மீண்டும் வினைகள் மூடி,

     அடியேனும் உனது அன்பு இலாமல் --- அடியேனும் தேவரீரிடத்தில் அன்பு இல்லாமல்,

     தேட்டம் உற --- விருப்பம் உற,

     தேர்ந்தும் --- உள்ளத் தேர்ச்சி அடைந்து

     அமிர்து ஆம் எனவே ஏகி --- உலக மார்க்கத்தை அமிர்தம் போல எண்ணிச் செல்ல,

      நமன் ஓட்டி விடக் காய்ந்து --- என்னைப் பற்றி வருமாறு இயமன் தனது தூதுவர்களை விரைந்து அனுப்ப, கோபித்து,

     வரி வேதன் அடையாளம் அருள் சீட்டு வர க(கா)ண்டு --- நியமிக்கின்ற பிரமன் எழுதிய அடையளத்துடன் கூடிய ஓலை வரப் பார்த்து,

     நலி காலன் அணுகா --- துன்புறுத்துகின்ற காலன் என்னை அடையாதபடி,

     நின் அருள் அன்பு தாராய் ---  தேவரீருடைய திருவருட் கருணையைத் தந்து அருள வேண்டும்.

பொழிப்புரை


         வேடர்களை மூர்ச்சிக்குமாறு செய்து, வள்ளியம்மையாருடன் உறவு செய்து, பாவமாகிய இருளிலே வாழும் அரக்கர்களுடன், சிவந்த ஒளியுடன் கூடிய வேலாயுதத்தைக் கொண்டு போர் புரிந்து, சிறையினின்றும் மீளுமாறு செய்து, தேவர்கள் தலைவனாகிய இந்திரனை நிலையாக வாழும்படி வைத்த கல்வியில் பெரியவரே!

         கூலியாள் போன்று மாறுபட்ட உருவத்தோடு சென்று மதுரையம்பதியில் பல திருவிளையாடல்களைப் புரிந்து, வைகை ஆற்றில் மணலைச் சென்னிமிசை எடுத்த, மழுவாயுதத்தை ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரிபுரங்களின் கோட்டையை எரித்து உலகை ஆட்கொண்ட சிவலோகநாதரும்,  இடப வாகனரும் ஆகிய சிவபெருமானுடைய, இடப்பக்கத்தை உடைய உலக அன்னை, மலை போன்ற மார்பகங்களைத் தாங்கும் நூல் போன்ற இடையை உடையவர், கோடிச் சந்திரர்கள் உதயம் ஆனால் போன்ற குளிர்ந்த ஒளியுடன் கூடிய அழகிய சிவகாமி, வலிமை மிக்க கூற்றுவனை உதைத்த பேரழகி, திருவுள்ளம் மகிழ்ந்து பெற்றருளிய கந்தப் பெருமானே!

         வெள்ளாறு, மணிமுத்தா நதிகள் கூடுவதனால் நீர் தேங்கி இருக்கும் கூடலையாற்றூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள செம்மேனியனே!  மயில் வாகனரே!

         வள்ளியம்மை, தேவயானையம்மை ஆகிய இருவரோடு இணைந்து, இயம பயம் நீங்குமாறு ஞானத்தைத் தூண்டி, அடியேனுடைய உள்ளத்தில் வாழ்கின்ற குமார மூர்த்தியே! தனிப்பெரும் தலைவரே!

         அடியேனைத் துன்புறுத்திச் சூழ்ந்த வினையினால், பொன் முதலிய அந்த மூன்று ஆசையாகிய நெருப்பை மூட்டி, உலையிலே காய்ந்த மழுவைப் போல, ஒளியுடன், ஆசாபாசத்தில் அகப்படச் செய்து, என் மீது வேகமாகப் பாய்ந்து, மாயையிலே என்னைச் செலுத்தும் பிடிவாதமோடு நடித்து, அதிலே செலுத்தும் வித்தையினாலே, மணம் நிறைந்துள்ள மலர், சந்தனம், புனுகுச் சட்டம், சுகமான பனிநீர் முதலியவைகளோடு, தென்றல் காற்று வர, தாங்குதற்கு ஏற்றதான அழகிய மார்பில் அணிந்துகொள்ளும் பொன்மாலை முதலிய வாய்ப்பாக உள்ளது என்று அணிந்து, அழகாகவும் பெருமையுடனும் மகிழ்கின்ற வலிமையுடைய மை தீட்டிய கண்களுடைய ஒளி பொருந்திய பெண்களுடன் விளையாடி, அவர்கள் வலையிட்டு வசப்படுத்த, அவர்கள் பின்னேயே சென்று, நோய்களுடன் வலிசெய்கின்ற வாத நோயும் உண்டாக்கி விட, மீண்டும் வினைகள் மூடி, அடியேனும் தேவரீரிடத்தில் அன்பு இல்லாமல், விருப்பம் உற, உள்ளத் தேர்ச்சி அடைந்து உலக மார்க்கத்தை அமிர்தம் போல எண்ணிச் செல்ல, என்னைப் பற்றி வருமாறு இயமன் தனது தூதுவர்களை விரைந்து அனுப்ப, கோபித்து,  நியமிக்கின்ற பிரமன் எழுதிய அடையளத்துடன் கூடிய ஓலை வரப் பார்த்து, துன்புறுத்துகின்ற காலன் என்னை அடையாதபடி, தேவரீருடைய திருவருட் கருணையைத் தந்து அருள வேண்டும்.


விரிவுரை


வாட்டி எனைச் சூழ்ந்த வினை ---

வினையானது செய்தவனைத் துன்புறுத்த இறைவன் ஆணையின்படி சூழ்ந்து வரும். வினை சடம் ஆகும். அதுவாகவே வந்து பொருந்தாது. பொருந்துதற்கு ஏற்ற உடம்பை இறைவன் தனது அருள் காரணமாகப் பாடைத்து அருளுகின்றான்.  உடம்போடு பொருந்திய பின் வினை தனது வைலையைச் செய்கின்றது. அப்போது தீவினைகாளல் வரும் துன்பமானது வந்து வாட்டும். வினையை வெல்வது அரிது.  சிவஞானிகள் மட்டும் சஞ்சித வினையை வெல்வர்.

ஆசைய மூ ஆசை அனல் மூட்டி, உலை காய்ந்த மழுவாம் என விகாசமோடு மாட்டி ---

பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை முதலிய மூன்று ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டு, அதனால் நெருப்பிலை பட்ட இரும்பைப் போல தகித்து, ஆசை பாணங்களில் அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.

பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

4. எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட    எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து    அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று      பெயர்.

எந்தப் பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று
நிலையாமை காணப் படும்.                --- திருக்குறள்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு’        --- திருவாய்மொழி

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும். பிறப்பைக் கொடுக்கும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.                --- திருக்குறள்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்.

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

உலகமெல்லாம் கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கு அடங்காது, கங்கு கரை இன்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுரதாண்டவமே பேராசை.

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான். அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரை மீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன், குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

குதிரை மேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையையும் கொடுங்கள்” என்றான்.

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

நான் அடிக்கிறேன்.  நீ சிரிக்கிறாய். என்ன காரணம்?” என்று கேட்டான்.

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன். நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதல்ல, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

ஆசைக்குஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
         ஆளினும், கடல் மீதிலே
     ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
         அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
         நெடுநாள் இருந்த பேரும்
     நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
         நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில், பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
     உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
          ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்,
     பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.          --- தாயுமானார்.

ஆசைச் சுழல் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.  --- தாயுமானார்.

ஆசைஎனும் பெருங் காற்று ஊ டுஇலவம்
         பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும்
         கேட்டதும் தூர்ந்து முத்திக்கு ஆன
நேசமும் நல் வாசமும் போய், புலனாய்இல்
         கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே!
         நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?    --- தாயுமானார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி
                                    
கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.            --- திருக்குறள்.

  ஆசா நிகளம் துகள் ஆயின பின்
 பேசா அநுபூதி பிறந்ததுவே”             --- கந்தரநுபூதி

ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான் பிறவி நீங்கும்.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
   நாமம் கெடக்கெடும் நோய்”         --- திருக்குறள்.

தீட்டு விழிக் காந்தி மடவார்களுடன் ஆடி, வலை பூட்டி விடப் போந்து, பிணியோடு வலிவாதம் என சேர்த்து விட ---

காந்தி - அழகு, ஒளி, கதிர்.

காந்துதல் - எரிதல், வெப்பம் கொள்ளுதல், மனம் வேகுதல்.

காந்தி உள்ள விலைமாதர்களிடம் மேவினால், வினை மிகுந்து, மனம் காந்தும். விலைமாதர்கள் வீசிய வலையில் அகப்பட்டு, அவர்களுக்கு ஏவல் செய்து, அவரு தரும் கலவி இன்பத்தையே பெரிதாக எண்ணி இருக்க, நாளடைவில் பிணிகள் அத்தனையும் வந்து சேரும்.

"அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து, பிணி உழன்று, சுற்றித் திரிந்தது அமையும், உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ?" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து,
     அழகுபெறவே நடந்து, ...... இளைஞோனாய்,
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று,
     அதிவிதம் அதாய் வளர்ந்து, ...... பதினாறாய்,

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
     திருவடிகளே நினைந்து ...... துதியாமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையாய் உழன்று
     திரியும், டியேனை உன்தன் ...... அடிசேராய்.      ---  திருப்புகழ்.

வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.

என்னும் திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களால் ஒருவனுக்குக் கிடைக்கும் அணிகலன்கள் குறித்து விளக்கி அருளிச் செய்கின்றார்.

அரிதில் தேடிய பொருளை நல்வழியிற் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர்.

வாதம் --- இது பல வகையானது. அண்டவாதம், பட்சவாதம், முடக்குவாதம் முதலியவைகளும், பெரியவர்கள் பேச்சைக் கேளாமல் பிடிவாதம் முதலியவைகளும் அடங்கும்.

சூலை ---  வயிற்றுநோய் முதலியவை.

கண்டமாலை --- கழுத்தில் வரும் ஒருவித கட்டி. இது ஒன்று குணமாகும்; பின் மற்றொன்று வரும். இப்படி குணமாகியும் வந்துகொண்டும் இருக்கும். கழுத்தையும் திருப்ப முடியாமல் இருக்கும்.

குலை நோவு --- குடலில் எரிச்சல் உண்டாகும் ஒரு விதநோய்.

சந்து மாவலி வியாதி --- அடிவயிறும் தொடையும் சந்திக்கும் இடங்களில் இரு பக்கத்திலும் அல்லது ஒரு பக்கத்தில் வரும் கட்டி. இது பெரிய துன்பத்தைத் தரும். நடக்க முடியாது. இதனை அறையாப்புக் கட்டி என்று சிலர் சொல்வார்கள். Bubo என்று ஆங்கிலத்தில் பெயர்.

பரந்த தாமரை --- உடம்பில் வயிறு முதுகு கைகள் முதலிய இடங்களில், பவுன் அகலத்திற்குப் பல பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வருவது. படர்தாமரை யென்றும் சொல்வார்கள்.

பேர்ந்து வினைமூடி, அடியேனும் உனது அன்பு இலாமல் ---

வினையை அனுபவித்துத் தொலைப்பதற்கு உடம்பை எடுத்து வந்து,  வினைகளையே பெருக்கி, இறைவன் திருவடியில் அன்பு இல்லாமல் போகின்றது. "பெற்றது கொண்டு பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின் வெற்று அடியேன்" என்கின்றார் மணிவாசகப் பெருமான்.

தேட்டம் உரத் தேர்ந்தும் அமிர்து ஆம் எனவே ஏகி நமன் ஓட்டி விட ---

முருகப் பெருமானிடத்து ஒரு சிறிதும் அன்பில்லாமல் பொருள் தேடுவதிலேயே வாழ்நாளை எல்லாம் கழித்து உலவும் மனிதர்களை, அமிர்தத்தை ஒருவன் தேடி வருவது போல, இயமதூதர்கள் இயமனுடைய கட்டளைப்படித் தேடி வருவார்கள்.

வரி வேதன் அடையாளம் அருள் சீட்டு வர க(கா)ண்டு, நலி காலன் அணுகா, நின் அருள் அன்பு தாராய் ---

பிரமதேவன் எழுதிய விதிப்படி ஓலை கொண்டு வருவர் காலதூதர்கள். அருளாளர்களுக்கு மயில் வாகனர் சீட்டு வரும். எமதூதர்கள் வரமாட்டார்கள்.  "இந்தா, மயில்வாகனர் சீட்டு இது" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். எனவே, காலதூதர்கள் வராமல்படிக்கு, முருகனுடைய திருவடியைச் சார்தல் வேண்டும்.

அதற்கு முருகனருள் வேண்டும் என்பதால் அடிகளார் "அன்பு தாராய்" என வேண்டினார்.

வேட்டுவரைக் காய்ந்து ---

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                                
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                               
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கு உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார்.  நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள் தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந் நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.


சீறைமீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்ஞையோனே ---

சூராதி அவுணர்களை வென்று தேவர்கள் சிறையை மீட்டு, இந்திரனைப் பொன்னுலகத்தில் குடியேற்றி, முடிசூட்டி நிலைத்து வாழுமாறு கந்தவேள் கருணை புரிந்தனர்.

அயிராவத முதுகின் தோற்றி,
     அடையாம் என இனிது அன்பு ஏத்தும்
     அமரேசனை முழுதும் காத்த ...... பெருமாளே.  ---  முகிலாமெனும் திருப்புகழ்.

வைகை ஆற்றில் மணல் தாங்கு மழுவாளி ---

மழுவாயுதத்தைத் தாங்கியவர் சிவபெருமான். ஆதலினால் "மழுவாளி" என்றார். அவர் மணிவாசகப் பெருமான் பொருட்டு, வைகை ஆற்றின் மணலைத் தனது திருத்தலையில் தாங்கினார்.

அந்த அருளை மணிவாசகப் பெருமான் வியந்து பாடுகின்றார்.

"பண்சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும்
     பெண்சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
     கண்சுமந்த நெற்றிக் கடவுள், கலிமதுரை
மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,
     புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"   ---  திருவாசகம்.

"வாதவூரனை மதித்து, ஒரு குருக்கள் என,
     ஞான பாதம் வெளி இட்டு, நரியில் குழுவை
     வாசி ஆம் என நடத்து வகை உற்று, ரசன்.....அன்புகாண,

மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து, "வைகை
     ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து", மகிழ்
     மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் ...கந்தவேளே!"

என மதுரையம்பதிக்குப் போந்து முருகப் பெருமானை வழிபட்டுப் பாடிய திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான் இந்த அருள் விளையாடலைப் போற்றிப் பாடி உள்ளார்.

சிவபெருமான் மண் சுமந்த வரலாறு

மதுரையில் நாள்தோறும் அவித்த பிட்டை ஆலவாய் அண்ணலுக்கு என்று நிவேதித்து, அதனை விற்று வாழ்ந்தனள் வந்தி. அந்த அம்மைக்கு மகப்பேறு இல்லை. அதனால் அப்பேரைப் பெற்றனள். அந்த அம்மை சோமசுந்தரக் கடவுளிடம் இடையறாத மெய்யன்பு பூண்டவள்.

வையை ஆற்றில் பெருவெள்ளம் சிவபெருமான் ஆணையால் பெருகியது. அரிமர்த்தன பாண்டியன் கரையை உயர்த்துமாறு கட்டளை இட்டனன். செல்வம் உடையவர்கள் ஆள் வைத்துக் கரையை உயர்த்தினார்கள். ஏழைகள் தாமே சென்று கரையை மேடு செய்தனர்கள். வந்திக்குப் பணமும் இல்லை. ஆளும் இல்லை. என் செய்வாள்?  ஏங்கினாள்; இரங்கினாள்; மீனவன் ஆணையால் நடுங்கினாள்; அழுதாள்; தொழுதாள்.

துணைஇன்றி, மக்கள்இன்றி, தமர்இன்றி, சுற்றம் ஆகும்
பணையின்றி, ஏன்று கொள்வார் பிறர் இன்றி, பற்றுக்கோடாம்
புணைஇன்றி, துன்பத்து ஆழ்ந்து, புலம்புறு பாவியேற்குஇன்று,
இணைஇன்றி இந்தத் துன்பம் எய்துவது அறனோ எந்தாய்.

தேவர்க்கும் அரியன் ஆய தேவனே, அன்பர் ஆவார்
யாவர்க்கும் எளியன்ஆகும் ஈசனே, வேந்தன் ஆணைக்
காவல்செங் கோலார் சீற்றம் கடுகுமுன் கூலியாளாய்
ஏவல்செய் வாரைக் காணேன், ஏழையேன் இனிஎன் செய்வேன்.

என்று தளர்ந்த வயதுடைய வந்தியம்மை உள்ளம் தளர்ந்தாள். 

இறைவன் ஏழை பங்காளன். ஏழை - பெண். பங்கு ஆளன் - உமையை இடப் பாகத்தில் வைத்து ஆள்பவன்.

இப்போது ஏந்திழையாகிய வந்தியின் பங்குக்கு ஆளாக வருகின்றார். அவருடைய கருணையே கருணை. திருக் கயிலையில் இருந்தபடியே வந்தியின் பங்குக் கரையை சங்கல்பத்தினாலேயே உயர்த்தி விட்டு இருக்கலாம். வந்திக்கு ஆள்வேண்டும் என்ற கவலைதான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கின்படி எம்பெருமான் கூலியாளாக வந்தார்.

"திடங்காதல் கொண்டு அறவோர்
     திருவேள்வி தரும் அமுதும்
இடங்காவல் கொண்டு உறைவாள்
     அருத்து அமுதும் இனிது உண்டும்
அடங்காத பசியினர் போல்,
     ன்னை முலைப் பால் அருந்த
மடங்காத பெருவேட்கை
     மகவுபோல் புறப்பட்டார்".

அழுக்கடைந்த ஒரு பழந்துணியை உடுத்தி, சும்மாடு மேல் ஒரு பழங்கூடையைக் கவிழ்த்து, தேய்ந்த மண்வெட்டியை தோள்மேல் வைத்துக்கொண்டார்.

"ஆலுமறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக்
கூலிகொடுத்து என்வேலை கொள்வார் உண்டோ என்றென்று
ஓலமறைத் திருமொழிபோல் உரைபரப்பிக் கலுழ்கண்ணீர்
வேலையிடைப் படிந்து அயர்வாள் வீதியிடத்து அணைகின்றார்".

வேதமுடிவாகிய அதர்வ சிகையில் விளங்கும் அவருடைய திருவடிக்கமலம் மதுரையின் வீதியில் படுகின்றது. நிலமகள் செய்த பெருந்தவம். "கூலியோ கூலி" என்று ஓலமறைத் திருமொழிபோல் வாய்விட்டுக் கூவுகின்றார்.  கண்ணீர்க் கடலில் முழுகி இருக்கும் வந்தியம்மை வீட்டிற்கு நேராக வந்து "கூலியோ கூலி" என்று கூவியருளினார். 

தாய்தந்தை இல்லாத தற்பரனை வந்தி கண்டாள். ஆனந்தம் கொண்டாள்.

"அப்பா! இப்படி வா. உன்னைப் பார்த்தால் நன்றாக சுகத்தில் இருந்து வந்தவனைப் போல் காண்கின்றதே. ஏனப்பா இப்படி கூலியாளாக வந்தனை?” என்று வினவினாள். 

கூலியாளாய் வந்த குருபரன், "பாட்டீ! எனக்குத் தாய் தந்தைகள் ஒருவருமில்லை. சுடலையில்தான் இருப்பேன். பேய்கள் தான் எனக்கு உறவு. என் மனைவி அன்னபூரணி. அறம் வளர்த்தாள்.  ஆனால் என்னை பிட்சாடனம் செய்ய விட்டுவிட்டாள்.  இன்னொருத்தி தலைமீது ஏறிக்கொண்டாள். மூத்தபிள்ளைக்கு மகோதரம். ஊரில் என்ன விசேடம் ஆனாலும் அவன் போய்த்தான் ஆகவேண்டும். இளைய பிள்ளை தகப்பன் சுவாமி ஆகிவிட்டான். என்ன செய்வேன்? விடத்தையும் உண்டேன்.  எனக்கு மரணம் இல்லையென்று எல்லோரும் கூறுகின்றனர்.  அதனால் மண்ணெடுத்துப் பிழைக்கலாம் என்று வந்தேன்" என்றார்.

வந்தியம்மை, "அப்பனே! பாவம் உன்னைப் பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகின்றது. இந்த ஊரில் பெரும் பெருந்தனவந்தர்கள் இருக்கின்றனர். அங்கெல்லாம் போயிருந்தால் நல்ல கூலி கிடைத்திருக்கும். நான் பரம ஏழை. என்னிடம் வந்து சேர்ந்தாய்.  என்னிடம் காசு பணம் இல்லை. பிட்டு வியாபாரம் செய்பவள்.  பிட்டைத் தருவேன். பிட்டுக்கு மண்ணெடுக்கவேணும். உனக்கு உடன்பாடா" என்று கேட்டாள். 

கூலியாள், "பாட்டீ! மிகவும் நல்லது. நீ காசு பணம் தந்தால், நான் அதனை அப்படியே தின்னமுடியாது. கடையில் போய் ஆகாரம் வாங்கி அருந்தவேண்டும். நீ பிட்டாகவே தந்துவிட்டால், கடைக்குப் போகும் வேலை இல்லாது போகும். பிட்டுக்கே மண் சுமக்கிறேன்" என்றார்.

வந்தியம்மை, "அப்பனே! இன்னொரு சங்கதி. உதிர்ந்த பிட்டைத் தான் உனக்குத் தருவேன். உதிராத பிட்டை விற்று, நாளைக்கு அரிசி வாங்க வைத்துக் கொள்வேன். உனக்குச் சம்மதமா?” என்றாள். 

எம்பிரான், "பாட்டீ! மிக நல்லது. உதிராத பிட்டைத் தந்தால், நான் உதிர்த்துத் தானே சாப்பிடவேண்டும். உதிர்ந்ததைத் தந்தால், உதிர்க்கின்ற வேலை இல்லாது போகும். அந்தக் கவலை உனக்கு வேண்டா. இப்போது சிறிது கொடு" என்றார்.

வந்தியம்மை ஐந்தெழுத்தைச் செபித்தவண்ணமாகவே, அவித்த, தூய்மையும் இனிமையும் உடைய பிட்டை எடுத்து, "அருந்து, அப்பா!” என்று இட்டாள். 

பெம்மான் சும்மாட்டுத் துணியை விரித்து ஏந்தி, "ஆலவாய் அண்ணலுக்கு இது ஆகுக" என்று கூறி தலையை அசைத்து அசைத்து அமுது செய்தார். 

ஆலமுண்ட நீலகண்டன் அடியாள் தந்த பிட்டைப் பெருமகிழ்ச்சியுடன் உண்டு, "பாட்டியம்மா! இனி நான் போய் மண் சுமப்பேன். இன்னும் மாவு இருந்தால் பிட்டு சுட்டு வையும்" என்று கூறிவிட்டு, வையைக் கரையை அடைந்தார். 

பதிவு செய்த புத்தகத்தில், 'வந்தியின் ஆள் சொக்கன்' என்று பேர் பதிவு செய்தார்.

"வெட்டுவார், மண்ணைமுடி மேல்வைப்பார், பாரம் எனக்
கொட்டுவார், குறைத்து எடுத்துக் கொடுபோவார், சுமடுவிழத்
தட்டுவார், சுமை இறக்கி எடுத்ததனைத் தலைபடியக்
கட்டுவார், டன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார்".

"இவ்வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்துஇளைத்துக்
கைவண்ண மலர் கன்றக் கதிர்முடிமேல் வடு அழுந்த
மைவண்ணன் அறியாத மலரடி செம் புனல்சுரந்து
செவ்வண்ணம் படைப்ப ஒரு செழுந்தருவின் மருங்கு அணைந்தார்".

"வானத்தில் மண்ணில் பெண்ணின்
         மைந்தரில் பொருளில் ஆசை
தான் அற்றுத் தமையும் நீத்துத்
         தத்துவம் உணர்ந்த யோகர்
ஞானக்கண் கொண்டே அன்றி,
         நாட அருஞ் சோதி, மண்ணோர்
ஊனக்கண் கொண்டும் காண
         உடன் விளையாடல் செய்வார்".

வெட்டுவார். மண்ணை முடிமேல் வைப்பார். பாரம் என்று கீழே கொட்டுவார். குறைத்து எடுப்பார். சும்மாடு விழத் தட்டுவார்.  சுமை இறக்கி சும்மாட்டைத் தலை படியக் கட்டுவார்.  மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கில் கொட்டுவார்.  அதனால் சிறிது உயர்ந்த கரையை உடைப்பார். ஆடுவார்.  இனிது பாடுவார். நகை செய்வார். எல்லோரும் தன்னையே பார்க்குமாறு குதிப்பார். மணல்களைக் குவிப்பார். ஓடுவார்.  மீள்வார். கூடையைத் தண்ணீரில் போட்டு, அதனை எடுக்க வெள்ளத்தில் குதித்துத் தவிப்பதுபோல் நடிப்பார். கரை ஏறுவார்.  வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் ஆசையற்று, தனையும் அற்ற யோகியர் ஞானக்கண் கொண்டே அன்றி, நாடருஞ்சோதி, மண்ணோர் ஊனக்கண் கொண்டுங்காண உடன் விளையாடுவார்.

அருளினால் உலகமெல்லாம் ஆக்கியும் அளித்தும் நீத்தும் பெருவிளையாடல் செய்யும் பிறைமுடிப் பெம்மான் இவ்வாறு விளையாடல் செய்ய, ஓச்சுகோல் கையராகி அருகு நின்று ஏவல் கொள்வார் அடைகரை காண வந்தார். எல்லாப் பங்கும் அடைபட்டு இருக்கின்றன. வந்தி பங்கு மட்டும் அடைபடவில்லை. 

"வந்திக்குக் கூலியாளாய் வந்தவன் யார்?” என்று ஓடி, மன்மத மேனியராய் விளங்கும் பெருமானை நோக்கி,  "தம்பீ! அந்தப் பங்கெல்லாம் அடைபட்டனவே? ஏன் நீ இந்தப் பங்கை அடைக்காமல் வாளா கிடக்கின்றனை?” என்று வினவினார்.  விரிசடைப்பெருமான் சிரித்தனர். 

"இவன் என்ன பித்தனோ? பேய் பிடித்த மத்தனோ? வந்தியை ஏமாற்ற வந்த எத்தனோ? இந்திர சாலம் காட்டும் சித்தனோ? இவன் யாரோ தெரியவில்லையே?” என்று திகைத்தார்கள்.

அரிமர்த்தன பாண்டியர் கரைகாண வருகின்றார். அமைச்சர் பலர் புடைசூழ்ந்து வருகின்றனர். ஏவலர் வெண்சாமரை இரட்டுகின்றனர். கரையைக் காண்பாராகி வந்த காவலன், வந்தியின் பங்கைக் கண்டார். "ஏன் இந்தப் பங்கு அடையவில்லை?” என்று கேட்டார். கண்காணிப்பாளர், "மன்னரேறே இது வந்தியின் பங்கு. அவள் ஒரு ஆளை வைத்தனள். அந்த ஆள் இதனை அடைக்காமல் உன்மத்தனைப் போல் இருக்கின்றான்" என்றார். "எங்கே அவன்?” என்று சீறினார் மன்னர்.

வள்ளல்தன் சீற்றம்கண்டு மாறுகோல் கையர்அஞ்சித்
தள்ளரும் சினத்தராகி, தடக்கைதொட்டு ஈர்த்துப் பற்றி,
உள்ளொடு புறம்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்துநின்ற
கள்வனை இவன்தான் வந்தி ஆள்எனக் காட்டிநின்றார்.

எங்கும் நிறைந்து ஒளிந்திருக்கும் கள்வனை ஈர்த்துக் கொண்டுபோய், "இவன்தான் வந்தியின் ஆள்" என்று காட்டினார்கள்.

கண்டனன் கனன்று வேந்தன் கையில்பொன் பிரம்புவாங்கி
அண்டமும் அளவுஇலாத உயிர்களும் ஆகமாகக்
கொண்டவன் முதுகில்வீசிப் புடைத்தனன், கூடையோடு
மண்தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்தசோதி.

எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் தனது உடம்பாக உடைய எம்பிரானைப் பிரம்பால் பாண்டியன் முதுகில் ஓங்கி அடித்தான். அந்த அடி எல்லா உயிர்களின் மீதும், எல்லாப் பொருள்களின் மீதும் பட்டது. அவர் எங்கும் நிறைந்தவர்.  எம்பிரான் மறைந்தார். வந்திக்குக் காட்சி அளித்தார்.  திருக்கயிலையில் அவளைச் சேர்த்து அருளினார். பாண்டினுக்கு அசரீரியாக அருள் புரிந்தார்.

கூற்றுவனைக் காய்ந்த அபிராமி ---

இயமனை சிவபெருமான் இடத் திருவடியால் உதைத்தனர்.  இறைவர் மாதொரு கூறுடையவர். ஆதலால், இடப் பாகத் திருவடி உமையம்மையாருடையது. ஆதலினால், இயமனை உமையம்மை காய்ந்ததாகக் கூறுகின்றனர்.

கூட்டு நதித் தேங்கிய வெ(ள்)ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறைச் சேந்த ---

தரளம் - முத்து. மணிமுத்தாற்றினைக் குறிக்கும்.

வெள்ளாறு, மணிமுத்தா நதிகள் கூடுவதனால் நீர் தேங்கி இருக்கும் கூடலையாற்றூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள செம்மேனியனே என்றார் அடிகளார்.

திருக் கூடலையாற்றூர் நடு நாட்டுத் திருத்தலம். வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் திருக்கூடலையாற்றூர் திருத்தலம் அமைந்திருக்கிறது. இத்தலத்திற்குச் செல்ல விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி செல்லும் பாதையில் சென்று வளையமாதேவி என்னும் இடத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து காவாலக்குடி செல்லும் பேருந்தில் சென்று அதை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம். சிதம்பரத்திலிருந்து இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்து உள்ளது.

கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து திருமுட்டம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் திரும்பி, 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.

இறைவர் : நர்த்தனவல்லபேசுவரர், நெறிகாட்டுநாதர்.
இறைவியார் : பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)
தல மரம் : கல்லால மரம் - தற்போது இல்லை.
தீர்த்தம்  : சங்கமத்தீர்த்தம் (வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்)

எமதருமனின் உதவியாளரான சித்திரகுப்தருக்கு சந்நதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புறம்பயத்திலிருந்து பல திருத்தலங்களையும் வணங்கிக் கொண்டு செல்லும் பொழுது திருக்கூடலையாற்றூர் சார, அதனை அடையாது திருமுதுகுன்றத்தை நோக்கிச் செல்லுகின்ற பொழுது வழியில் சிவபெருமான் வேதியர் வடிவங்கொண்டு நம்பியாரூரர் முன் நின்றார். நம்பியாரூரர் எதிரில் நின்ற வேதியரை வணங்கி, 'திருமுதுகுன்றை எய்துதற்கு வழி இயம்பும்' எனக் கூற, சிவபெருமானும், 'கூடலையாற்றூர் ஏறச் சென்றது இவ்வழி தான்' என்று கூறி, வழித்துணையாய்ச் சென்று மறைந்து அருளினார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்தவர் சிவபெருமானே என்று அதிசயித்து, "அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே" எனத் திருப்பதிகம் பாடி, திருக்கூடலையாற்றூர்ப் பெருமானை வழிபட்டார்.

கூற்று விழத் தாண்டி, வளி தெய்வானையொடெ எனது ஆகம் அதில் வாழ் குமர ---

ஆகம் - உடம்பு. 

அருணகிரிநாதப் பெருமானாரின் உடம்பையே திருக்கோயிலாக முருகப் பெருமான் கொண்டு தேவியாரோடு எழுந்தருளி உள்ளான்.

"வள்ளி" என்னும் சொல் "வளி" எனக் குறுகி வந்தது. வள்ளிநாயகியார் முருகப் பெருமானுக்கு இச்சாசத்தி ஆவார். தெய்வயானை அம்மையார் கிரியாசத்தி ஆவார். பாசத்தை அறவே துறந்தவர்க்கு மரணம் இல்லை. மரணம் இல்லையெனவே, இயம வேதனையும் இல்லை. இறைவனையே எப்போதும் திருவுள்ளத்தில் கொண்டுள்ள அடியவர்கள் இதயத்தையே திருக்கோயில் ஆகக் கொண்டு இறைவன் குடி இருப்பான். "சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்" என்றும், "எந்தையே, ஈசா, உடல் இடம் கொண்டாய்" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியது காண்க.

"போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பார் அவர் தங்கள்
ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்" கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி நல்நுதன் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடியாரே.  ---  திருஞானசம்பந்தர்.

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை என் உள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.                    --- அப்பர்.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாயில்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்,
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே.    ---  திருமந்திரம்.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே.     --- தாயுமானார்.

கருத்துரை 

முருகா! இருவினையினால் அடியேன் கலங்கி, இயம பாசத்திற்கு ஆளாகாமல்படிக்கு ஆட்கொண்டருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...