சீகாழி - 0775. அலைகடல் சிலைமதன்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அலைகடல் சிலை  (சீகாழி)

அகத்துறைப் பாடல் - முருகனருள் வேண்டல்.

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

 
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்

அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்

முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே

முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
     முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ

சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
     திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி

திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
     சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே

மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு
     மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
     வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


அலைகடல், சிலைமதன், அந்தி ஊதையும்,
அரிவையர் வசையுடன் ங்கி போல்வர,
அசைவன விடைமணி, அன்றில் கோகிலம் ......அஞ்சி, நானும்

அழல்இடு மெழுகு என வெம்பி, வேர்வு எழ,
அகிலொடு ம்ருகமதம் நஞ்சு போல் உற,
அணிபணி மணிபல வெந்து நீளு எழ, ...... அங்கம்வேறாய்

முலைகனல் சொரிவர, முன்பு போல்நினைவு
அழி வசமற, அற நின்று சொர்வுற,
முழுதுகொள் விரக அனல் மொண்டு வீசிட, ...... மங்கிடாதே,

முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல், அணி
முளரியொடு அழகிய தொங்கல் தாரினை
     முனிவுஅற நினதுஅருள் தந்த்,ன் மாலை...முனிந்திடாதோ?

சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
     திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கம்ஏறி

திரள்படை அலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொடு அறைபறை நின்று மோதிட
     சிவன்உடன் நடம்வரு மங்கை மாதுஉமை ...... தந்தவேளே!

மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன்
மலர்அடி வருடியெ நின்று, நாள்தொறும்
     மயில்பயில் குயில்கிளி வம்பிலே கடி...... தொண்டினோனே!

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுரம்
மதிள்வயல் புடைஉற விஞ்சு காழியில்
     வரும்ஒரு கவுணியர் மைந்த! தேவர்கள் ...... தம்பிரானே!


பதவுரை

      சிலை நுதல் --- வில்லைப் போன்ற நெற்றியை உடையவள்,

     கயல் விழி --- மீனைப் போன்ற கண்களை உடையவள்,

     செம் சொல் வானவி --- செம்மையான சொற்களை உடைய தேவி,

      திரிபுரை ---  மூவருக்கும் முதல்வி,

     பயிரவி --- பயிரவி,

     திங்கள் சூடிய திகழ் சடை நெடியவள் --- பிறைச்சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற திருச்சடையை உடைய பெரியவள்,

      செம்பொன் மேனியள் --- சிவந்த அழகிய திருமேனியை உடையவள்,

     சிங்கம் ஏறி --- சிங்கத்தை வாகனமாக உடையவள்,

     திரள் படை அலகைகள் --- திரண்டுள்ள பேய்களின் படை,

    பொங்கு கோடுகள் --  ஊதுகின்ற கொம்புகள்,

     திமிலையொடு அறை பறை நின்று மோதிட --- திமிலை என்னும் பறைகளும், மற்றப் பறை வகைகளும் முழங்க

      சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே --- சிவபெருமானுடன் திருநடனம் புரிகின்ற அழகிய மங்கையாகிய, உமைதேவியார் அருளிய செவ்வேளே!

      நாள் தொறும் மலை தனில் ஒரு முநி தந்த மாது தன் மலர் அடி வருடியெ நின்று --- நாள் தோறும், வள்ளிமலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் கண்ணருளால் மானின் வயிற்று உதித்த வள்ளியிநாயகியின் திருவடியை வருடி நின்று,

      மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே --- (தினைப்பயிரை உண்ண வந்த) மயில், குயில், கிளி ஆகிய பறவை இனங்களை, புதிய கவண் கல் கொண்டு ஓட்டும்படி தொண்டு புரிந்தவரே!

      மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர மதிள் --- மழையைப் பொழிகின்ற கருமேகங்கள் தவழுகின்ற நெருங்கிய கோபுரங்களும், மதில்களும் நிறைந்து,

      வயல் புடை உற விஞ்சு காழியில் வரும் --- வயல்களால் சூழப்பட்டு விளங்கும் சீகாழியில் வந்து அவதரித்த

      ஒரு கவுணியர் மைந்த --- கவுணியர் குலத் தோன்றலாகிய ஆளுடைய பிள்ளையாரே!

     தேவர்கள் தம்பிரானே --- தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!

     அலைகடல் --- அலைகள் வீசுகின்ற கடல் ஓசையும்,

     சிலைமதன் --- வில்லை உடைய மன்மதன் எய்யும் மலர்க்கணைகளும்,

     அந்தி ஊதையும் --- மாலைக் காலத்து ஊதல் காற்றும்,

      அரிவையர் வசையுடன் அங்கி போல் வர --- மாதர்களின் வசைப் பேச்சுடன் நெருப்பு போல வர,

      அசைவன விடை மணி --- பசுக்களின் கழுத்தில் அசைகின்ற மணி ஓசைக்கும்,

     அன்றில் கோகிலம் --- அன்றில், குயில் ஆகியவைகளின் இனிய ஒலிகளுக்கும்

     அஞ்சி --- அஞ்சி,

      நானும் அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ --- அடியவளான நான் நெருப்பிலிட்ட மெழுகு போல் மனம் புழுங்கி, உடல் வியர்த்துப் போகவும்,

      அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற --- அகில், கத்தூரி ஆகிய நறுமணப் பொருள்கள் நஞ்சினைப் போல உடலில் வெப்பத்தைச் செய்ய,

      அணி பணி மணி பல வெந்து நீறு எழ ---  அதனால் நான் அணிந்துள்ள அணிகலன்கள், மணிமாலைகள் வெந்து சாம்பல் ஆக,

     அங்கம் வேறாய் --- உடல் நிலை மாறுபட்டு,

      முலை கனல் சொரி வர --- மார்பகங்கள் நெருப்பைச் சொரிய,

     முன்பு போல் நினைவு அழி --- முன்பு எப்போதும் போல எனது நினைவு அழிந்து,

     வசம் அற அற நின்று சோர்வு உற --- எனது வசம் அற்று நின்று உள்ளமும் உடலும் சோர்வு அடையவும்,

      முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட --- முழுமையாக உள்ள விரகமானது நெருப்பை அள்ளி வீசவும்,

     மங்கிடாதே ---  அதனால் நான் மங்கிடாமல்படிக்கு,

      முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் --- மணம் கமழும் திரண்ட புயத்தில் சேர்த்துள்ள வேலோடு

     அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை --- அணிந்து உள்ள ஆழகிய தாமரை மலர் மாலையை,

      முனிவு அற --- அடியாள் மீது வெறுப்புக் கொள்ளாமல்,

     நினது அருள் தந்து --- உமது அருளால் எனக்குத் தந்து,

     என் மாலை முனிந்திடாதோ --- எனது காம மயக்கத்தைப் போக்கக் கூடாதோ?


பொழிப்புரை

         வில்லைப் போன்ற நெற்றியை உடையவள். மீனைப் போன்ற கண்களை உடையவள். செம்மையான சொற்களை உடைய தேவி. மூவருக்கும் முதல்வி. பயிரவி. பிறைச்சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற திருச்சடையை உடைய பெரியவள்.
சிவந்த அழகிய திருமேனியை உடையவள். சிங்கத்தை வாகனமாக உடையவள். திரண்டுள்ள பேய்களின் படை, ஊதுகின்ற கொம்புகள், திமிலை என்னும் பறைகளும், மற்ற வகைப் பறைகளும் முழங்க சிவபெருமானுடன் திருநடனம் புரிகின்ற அழகிய மங்கையாகிய, உமைதேவியார் அருளிய செவ்வேளே!

         நாள் தோறும், வள்ளிமலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் கண்ணருளால் மானின் வயிற்று உதித்த வள்ளியிநாயகியின் திருவடியை வருடி நின்று,  தினைப்பயிரை உண்ண வந்த மயில், குயில், கிளி ஆகிய பறவை இனங்களை, புதிய கவண் கல் கொண்டு ஓட்டும்படி தொண்டு புரிந்தவரே!

     மழையைப் பொழிகின்ற கருமேகங்கள் தவழுகின்ற நெருங்கிய கோபுரங்களும், மதில்களும் நிறைந்து, வயல்களால் சூழப்பட்டு விளங்கும் சீகாழியில் வந்து அவதரித்த கவுணியர் குலத் தோன்றலாகிய ஆளுடைய பிள்ளையாரே!

     தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!

     அலைகள் வீசுகின்ற கடல் ஓசையும், வில்லை உடைய மன்மதன் எய்யும் மலர்க்கணைகளும், மாலைக் காலத்து ஊதல் காற்றும், மாதர்களின் வசைப் பேச்சுடன் நெருப்பு போல வர; பசுக்களின் கழுத்தில் அசைகின்ற மணி ஓசைக்கும், அன்றில், குயில் ஆகியவைகளின் இனிய ஒலிகளுக்கும் அஞ்சி, அடியவளான நான் நெருப்பிலிட்ட மெழுகு போல் மனம் புழுங்கி, உடல் வியர்த்துப் போகவும், அகில், கத்தூரி ஆகிய நறுமணப் பொருள்கள் நஞ்சினைப் போல உடலில் வெப்பத்தைச் செய்ய, அதனால் நான் அணிந்துள்ள அணிகலன்கள், மணிமாலைகள் வெந்து சாம்பல் ஆக, உடல் நிலை மாறுபட்டு, மார்பகங்கள் நெருப்பைச் சொரிய, முன்பு எப்போதும் போல எனது நினைவு அழிந்து, எனது வசம் அற்று நின்று உள்ளமும் உடலும் சோர்வு அடையவும், முழுமையாக உள்ள விரகமானது நெருப்பை அள்ளி வீசவும்,  அதனால் நான் மங்கிடாமல்படிக்கு, மணம் கமழும் திரண்ட புயத்தில் சேர்த்துள்ள வேலோடு அணிந்து உள்ள ஆழகிய தாமரை மலர் மாலையை, அடியாள் மீது வெறுப்புக் கொள்ளாமல், உமது அருளால் எனக்குத் தந்து, எனது காம மயக்கத்தைப் போக்கக் கூடாதோ?


விரிவுரை

சிவம் கதிரவனும் அதன் கதிரும் போலத் தானும் தன் திருவருளும் என இரு திறப்பட்டு நிற்கும் என்பது சித்தாந்தம். கதிரவன் தோன்றுவதற்கு முன்னே அதன் கதிர்கள் தோன்றிப் பரவுதலால் இருள் நீங்கும். அதுபோலச் சிவனை அடைதற்கு முன்னே திருவருளைப் பெறுதலால் ஆணவ இருள் நீங்கும். இவ்வாறு திருவருளை முதலில் அறிந்து அதனோடு ஒன்றுபடும் நிலையே அருள்நிலை என்றும், துரியநிலை என்றும் சொல்லப்படுகிறது. சிவயோகம் என்ற பெயரையும் இது பெறும். திருவருள் சிவத்தின் வேறாகாது அதன் குணமே. ஆதலால், சிவயோகம் என்பதில் உள்ள சிவம் என்ற சொல் திருவருளைக் குறிக்கும். யோகம் என்பதற்கு ஒன்றுதல் என்பது பொருள். எனவே, திருவருளோடு ஒன்றுதல் சிவயோகம் எனப்பட்டது. திருவருளோடு ஒன்றுபடுதலால் மலம் ஆகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறுதலால், சிவயோகம் ஆன்ம சுத்தியாகும்.

அருள் நிலையை எய்தினார் பாச நீக்கம் பெறுவர் என்பது இதனால் விளங்கும். பாச நீக்கம் என்பது துன்பம் அற்ற நிலையாகும். துன்ப நீக்கமே முடிந்த பயன் ஆகாது. அதற்கும் அப்பால் உள்ள இன்பப் பேற்றைப் பெறுதல் வேண்டும். அதுவே உயிர் அடைதற்குரிய முடிவான பயனாகும்.

அருள்நிலை என்பது கண்ணில்லாதவன் கண் பெற்றால் போன்றது. கண்ணில்லாதவன் கண்ணைப் பெற்ற அளவிலே இன்பத்தை அடையமுடியாது. கண் பெற்றதன் பயனாகப் பொருள்களை எல்லாம் கண்டு அவற்றுள் வேண்டாத பொருளை விட்டு நீங்கி, வேண்டும் பொருளை அடையும் பொழுதே இன்பம் உண்டாகும்.

அதுபோலத் திருவருளைப் பெற்ற அளவிலே இன்பம் உண்டாகாது. திருவருளைப் பெற்றதன் பயனாக முப்பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிந்து, வேண்டாத உலகியலினின்றும் நீங்கி, வேண்டும் பொருளாகிய சிவத்தை அடையும் போதே பேரின்பம் உண்டாகும். அருள்நிலை திருவருட்பேறு ஆகும். சிவத்தை அடையும் நிலை சிவப்பேறு ஆகும். திருவருட்பேறு ஆன்ம சுத்தியாகும் எனமேலே கூறினோம். சிவப் பேறாகிய இதுவே ஆன்ம லாபமாகும். அஃதாவது ஆன்மா பேரின்பத்தைத் துய்க்கும் நிலையாகும்.

அருள்நிலை துரியநிலை எனப்படுதலால், அதற்கு அப்பால் உள்ள இந்தப் பேரின்ப நிலையாகிய சிவப்பேறு துரியாதீத நிலை எனப்படுகிறது. இதனை அதீதநிலை எனச் சுருக்கமாகக் கூறுவர். இந்த அதீத நிலையே நிட்டை நிலை எனப்படுவது.

உலகத்தோடு தொடர்புற்று நில்லாமல், உலகை மறந்து, அறிகின்ற தன்னையும் மறந்து, சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்பதாகிய நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டையாகும். இந்நிலையில் பகல் இரவு முதலிய காலவேறுபாடுகள் தோன்றுவதில்லை. பிற நினைவுகள் எழுவதில்லை. இந்நிலையில் நிற்பார்க்கு எல்லையில்லாததோர் இன்பம் தோன்றும். அவ்வின்பம் மேலும் மேலும் பெருகி அவரை விழுங்கி நிற்கும். இதுவே பரமசுகம் எனப்படும். முடிந்த இன்பம் என்பது அதன் பொருள். மலரிலுள்ள மதுவினைப் பருகிய வண்டு எப்படி அம்மலரிலேயே மயங்கிக் கிடக்குமோ அப்படியே இறைவனது வியாபகத்துள் அடங்கி அழுந்திப் பேரின்ப வாரிதியில் திளைத்து நிற்பர்.

இந்நிலையைத் தலைப்பட்டவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் நிலையில் வைத்துக் காட்டுகிறார் திருநாவுக்கரசர்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
     மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
     பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
     அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
     தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

பெண் ஒருத்தி ஒருநாள் திருவாரூர்ப் பெருமானின் திருப்பெயரைக் கேட்டாள். அவனது பெயரைக் கேட்ட அளவிலேயே அவன் மீது அவளை அறியாமலே ஓர் ஈடுபாடு உண்டாயிற்று. அந்தப் பெயருக்கு உரியவன் எப்படி இருப்பான் என்பதை அறிய அவள் உள்ளம் விழைந்தது. தன் தோழியிடம் இதுபற்றி வினவினாள். அவன் கண்ணைக் கவரும் கட்டழகன். அவனது வடிவழகைச் சொற்களிலே வடித்துக் காட்ட முடியுமா? அடடா! என்ன அழகு! பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் என்று தோழி கூறினாள்.

முதலில் அவனது பெயரைத் தெரிந்து கொண்ட தலைவி இப்பொழுது அவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள். பின்னும் அவளது உள்ளத்தில் வேட்கை கிளர்ந்தெழுந்தது. நித்தம் மணாளன், நிரம்ப அழகியன் என்றெல்லாம் சொல்கிறாயே, அந்தச் செம்பவள மேனியன் எங்கே இருக்கிறான் என்பது பற்றிச் சொல் என்று தோழியிடம் கேட்டாள். அவன் இருக்குமிடம் திருவாரூர் என்று சொன்னாள் தோழி. இவ்வாறு பெயர், வண்ணம், ஊர் இவற்றைக் கேட்டறிந்தவுடன் அத்தலைவன் மீது அவள் தீராக் காதல் கொண்டு விட்டாள். எப்பொழுதும் அவனைப் பற்றிய நினைவுதான்! காதலினால் அவள் பிச்சியாகவே ஆகிவிட்டாள். பெற்று வளர்த்த தாய் தந்தை எல்லோரையும் தன் மனத்திலிருந்து அகற்றி விட்டாள். உலகத்தார் வகுத்து வைத்த ஆசாரத்தையும் கடக்கத் துணிந்து விட்டாள். அதாவது, தலைவனைத்தேடி அவனிருப்பிடத்திற்குத் தனியே செல்லத் துணிவு கொண்டாள். உணவை மறந்தாள். உறக்கத்தை மறந்தாள். தன்னையே மறந்தாள். தன்வசம் அழிந்து, தலைவன் வழிப்பட்டு விட்டாள்.

"கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே" என்னும் நிலையினை ஆன்மா அடையும்.

தலை அன்பினை உடைய இத் தலைவியின் நிலையில் உள்ளவர் சத்திநிபாதம் வாய்க்கப் பெற்ற உத்தமர். அவள் முதலில் தலைவனது பெயரைக் கேட்டாள் என்பது, ஞானாசிரியரிடம் உபதேசத்தைக் கேட்டு இறைவனது இயல்பைப் பொதுவாக உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது கேட்டல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அடுத்துத் தலைவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள் என்பது, பின்னர் இறைவனது இயல்பை ஆராய்ந்து உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது சிந்தித்தல் என்றபடி நிலையாகும். உலகியலில் ஒரு பெண் ஓர் இளைஞனைச் சந்தித்துப் பழக நேரிடும்போது முதலில் பொதுவாக நட்பு ஏற்படுகிறது. அவ்வளவில் நில்லாமல் அப்பெண் அவ் இளைஞனைப் பற்றி அடிக்கடி நினைக்கிறாள் என்றால் அந்நட்புக் காதலாக மலர்கிறது என்பது பொருளாகும். அதற்கும்மேல், அவள் அவ் இளைஞனுடைய இருப்பிடம், அவனது சூழ்நலை முதலியவற்றை அறிந்து அங்கே செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள் என்றால் அவள் காதலில் உறுதிகொண்டு விட்டாள் என்பது பொருள்.

அவ்வாறே தலைவி தலைவனது திருவாரூர் பற்றிக் கேட்டறிந்தாள் என்பது அவன் மீது கொண்ட காதலின் உறுதிப்பாட்டைப் புலப்படுத்தும். இது ஞானாசிரியரிடம் கேட்டு அதைப் பலகாலும் சிந்தித்துப் பின்னர் தெளிவுணர்வு பெற்ற நிலையைக் குறிப்பதாகும். இது தெளிதல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அவனுக்கே பிச்சியானாள் என்பது, தெளிவுணர்வின் பயனாக இறைவனிடத்தில் அழுந்தி நிற்பதாகிய நிலையைப் பெற்றதைக் குறிப்பதாகும். இது நிட்டை கூடுதல் என்றபடி நிலையாகும். அன்னையையும் தந்தையையும் நினைவிலிருந்து அகற்றினாள் அந் நங்கை என்பது ஞானநெறியில் என்ன பொருளைக் குறிக்கும் என்பதைக் காண்போம். ஞான நெறியில் அன்னையாக இருப்பது திரோதான சத்தி. அத்தனாக இருப்பவன் அச் சத்திக்குரிய தடத்த சிவன். திரோதான சத்தியே தாயாக நின்று பாசமாம் பற்றினை அறுத்து உயிரைப் படி முறையில் வளர்த்து வருகிறது. சத்தி நிபாதம் என்ற பரிபக்குவ நிலையில் திரோதான சத்தி நீங்கி விடுகிறது. தடத்த சிவன் என்ற நிலையும் அவ்வாறேயாம். இதுவே ஞானநெறியில் அன்னையையும் அத்தனையும் நீத்த நிலையாகும்.

அகலிடத்தார் ஆசாரம் என்பது திருமணப் பருவம் வந்த பெண் இல்லினை இகந்து செல்லாதிருத்தல் என்ற பழைய மரபாகும்; தலைவி அதனை அகன்றாள். அஃதாவது, இல்லிறந்து செல்லத் துணிந்தாள். ஞானநெறியில் அகலிடத்தார் ஆசாரம் என்பது, உலக மாந்தர் தன் முனைப்போடு கூடி வினைகளை ஈட்டியும் வினைப்பயனை நுகர்ந்தும் உழலுதல். நிட்டை கூடிய ஞானியர்க்குத் தன் முனைப்பும் இல்லை; வினைகளை ஈட்டுதலும் இல்லை; வினைப் பயனால் தாக்குறுதலும் இல்லை. ஆதலால் அவர் அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றவர் ஆவார். நங்கை தலைவன் ஒருவனையே நினைத்து தன்னை மறந்து நின்றாள். அவ்வாறே நிட்டை கூடியவரும் தம்மையும் உலகையும் மறந்து, இறைவன் ஒருவனையே அறிந்து நிற்பர். கன்னிப் பெண் என்ற பெயர் நிறை அழியாதிருக்கும் நிலையைக் குறிக்கும். இவள் தலைவனையே நினையும் நினைவினால் நிறையழிந்து நின்றாள் ஆதலால், தன் நாமம் கெட்டாள் எனப்பட்டாள். நிட்டை கூடியவரும் சீவத் தன்மை கெட்டு நிற்பர். ஆதலால் நாமம் கெடுதல் அவர்க்கும் பொருந்துவதேயாம். நங்கை தலைவன் தாளைத் தலைப்பட்டாள் என்பது, அவள் தனக்கென ஒன்று இன்றி அவன் வழிப்பட்டு விட்டாள் என்பதைக் குறிக்கும். ஞான நெறியில் தாளைத் தலைப்படுதல் என்பது நிட்டையில் நின்றார் எய்தும் இன்புறு நிலையை உணர்த்தும்.

இந்த இன்புறு நிலையைத் தலைப்பட்ட ஞானியர் சிவத்தை இறுகப் புல்லிப் புணர்ந்து தம்மை மறந்து தமது அறிவையும் மறந்து பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைப்பர்.

திருவாசகத்தில் "புணர்ச்சிப் பத்து" இந்த நிலையை அறிவுறுத்தும்.

நுகர்பவன், நுகர்ச்சி அறிவு, நுகரப்படும் பொருள் ஆகிய மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை தோன்றாத, உரை உணர்வுக்கு எட்டாத இன்ப நிலை அது. இதனை, "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" என்று அருணகிரிநாதப் பெருமான் காட்டினார். இன்புறு நிலைக்கு அடிப்படை இறைவனிடத்துச் செய்யும் அன்பாகும். இறைவன் செய்து வரும் இடையறா உதவியை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்து அவனிடத்து இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்பத்திற்கு வழி.

இத் திருப்புகழ்ப் பாடல் மேற்குறித்த தத்துவத்தில் அகத்துறையில் அமைந்தது. தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவிக்கு மாலைப் பொழுது தொடங்கி விரகதாபம் மிகுந்திருக்கும். அதற்குத் துணை புரிவது மன்மதனின் கணைகள். குளிர்ந்த நிலவொளி மனதிற்கு மகிழ்வைத் தரும். கடலில் எழும் அலைகளின் ஓசையானது உடம்பிற்குக் குளிர்ச்சியையும், உள்ளத்திற்கு மகிழ்வையும் தரும். ஆனால், இவை யாவும் தலைவனை நினைந்து வருந்தும் தலைவிக்கு வேதனையைத் தருவதாக அமைந்துள்ளது. அதனால், இரவுப் பொழுது என்பது விடியாமல், ஒரு ஊழிக் காலம் போல் நீண்டு துன்ப மிகுதிக்குத் துணை புரிகின்றது. அந்த விரகதாபம் தணியும்படிக்கு முருகப் பெருமான் தான் அணிந்துள்ள மலர்மாலையைத் தனக்குத் தந்து அருளவேண்டும் என்னும்படியாக இப் பாடல் அமைந்துள்ளது.

"குளிர் மாலையின் கண், ஆணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ" என்று திருச்செந்தூர்த் திருப்புகழிலும், "மால் கண்ட பேதைக்கு உன் மணம் நாறும் மார் தங்கு தாரைத் தந்து அருள்வாயே" எனப் பொதுத் திருப்புகழிலும் அடிகளார் அருளி இருத்தல் காண்க. இன்னும் பிற இடங்களிலும் அடிகளார் இக் கருத்துப் பொதிந்த பாடல்களை அருளி உள்ளார்.

இரவி என, வடவை என, ஆலால விடம் அது என,
     உருவுகொடு, ககனமிசை மீது ஏகி, மதியும்வர,
     இரதிபதி கணைகள் ஒரு நால் ஏவ, விருதுகுயில் ...... அதுகூவ,
எழுகடலின், முரசின் இசை, வேய் ஓசை, விடையின்மணி,
     இசை குறுகி, இருசெவியில் நாராசம் உறுவது என,
     இகல் புரிய, மதனகுரு ஓராத அனையர்கொடு ....வசைபேச,

அரஅர என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
     அமுதமயில் அதுகருதி யாரோடும் இகல்புரிவள்,
     அவசம்உற அவசம்உற ஆர்ஓமல் தரவும் மிக ......மெலிவு ஆனாள்,
அகுதி இவள் தலையில்விதி, ஆனாலும் விலக அரிது,
     அடிமைகொள உனதுபரம், ஆறாத ஒரு தனிமை
     அவளை அணை தர இனிதின் ஓகார பரியின்மிசை ......வருவாயே.
                                                                                --- திருப்புகழ்.

அலைகடல் ---

மன்மதனுக்குக் கடல் முரசம் ஆகும். அக் கடல் ஒலியானது, பிரிவுத் துன்பத்தைப் பெருக்கிப் பெருந்துயர் விளைக்கும். இனிமையான கடல் ஒலி நாராசம் போல் இருக்கும். கணவனைப் பிரிந்து உள்ளம் கரிந்து, மிகவும் பரிந்து ஒரு தலைவி புலம்புகின்றாள். உள்ளத்தை உருக்கும்அத் தமிழ்ப் பாடல் பின்னே வருகின்றது.

ஆழிவாய் சத்தம் அடங்காதோ, நான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ -- ஊழி
திரண்டதோ கங்குல், தினகரனும் தேரும்
உருண்டவோ பாதாளத்துள்.

பரவையாரைக் கண்ணுற்று, அவர் மீது காதல் கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள், கடலை நோக்கி, "இடைவிடாது ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி எழும் அலைகளையுடைய கடலே! என்னை முன் தடுத்தாட்கொண்ட இறைவனே, உண்ணுமாறு கொடிய நஞ்சை உன் அலைகளாகிய கைகளால் எடுத்துக் கொடுத்த நீ, எனக்கு இன்று யாது செய்யாய்? எக்கொடுமையும் செய்வாய்" என்பார்.

"அடுத்து மேன்மேல் அலைத்து எழும் ஆழியே!
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்
கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டும் நீ, என்னை இன்று என்செயாய்".

என வரும் பெரியபுராணப் பாடலைக் காண்க.

நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று
     நச்சு உமிழ் களங்க ...... மதியாலும்,
நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு
     நத்திரை வழங்கு ...... கடலாலும்,

இச்சை உணர்வு இன்று இச்சை என வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே,
எத்தனையி நெஞ்சில் எத்தனம் முயங்கி
     இத்தனையில் அஞ்சல் ...... எனவேணும்.
பச்சைமயில் கொண்டு பச்சை மற மங்கை
     பச்சை மலை எங்கும் ...... உறைவோனே! --- திருப்புகழ்.


சிலைமதன் ---

திருமாலின் மனத்தினின்றும் பிறந்தவனாதலின் மதவேள், மன்மதன் எனப்பட்டனன். சித்தசன் என்பதும் அப் பொருள் குறித்ததுவே.

மன்மதன் கருவேள் 
முருகப் பெருமான் செவ்வேள்.

எத்தகைய தேவர்களையும், பொறி புலன்களை வென்ற முனிவர்களையும் நான் வெல்லுவேன் என்று துள்ளுகின்றவன் மன்மதன். 

மால், அயன், இந்திரன், சந்திரன், வாயு, ஆதித்தன், அக்கினி முதலிய அமரரையும்,

காசிபன், விசுவாமித்திரன், பராசரன், புலத்தியன், வியாழன், விபாண்டகன் முதலிய முனிவரரையும், மதனன் மலர்க்கணைகளால் மயக்கி வெற்றி கண்டான்.

ஆனால் சிவபெருமானிடம் அவனது ஆற்றல் அழிந்து வெந்தான். சிவனடியார்களிடத்தில் அவன் ஆற்றல் அழியும்.  திருநாவுக்கரசு சுவாமிகளிடத்திலும், அருச்சுனனிடத்திலும், மாதவச் சிவஞான யோகிகளிடத்திலும் மதனன் ஆற்றல் அழிந்து தோல்வி உற்றான்.

இங்கே முருகனைக் காதலித்த பக்குவம் அடைந்த ஆன்மா, மதனனுடைய மலர்க்கணையினால் வருந்தி இறைவனைத் தழுவும் பொருட்டு அவாவுகின்றது.

மன்மதன் தேவர்கள் மீது மலர் வில்லும், மனிதர்கள் மீது கரும்பு வில்லும், அரக்கர்கள் மீது இரும்பு வில்லும் கொண்டு அமராடுவான்.

மன்மதனுடைய மலர்க்கணைகள். அது பரிமள மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம்.

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
     மலர்நீலம் இவைஐந் துமே
  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிகஅசோ கம்து யர்செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

 தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும், --- கொடி மகர மீன்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே     --- திருப்புகழ்.

வாரி மீதே எழு ...... திங்களாலே,
   மார வேள் ஏவிய ...... அம்பினாலே,
பார் எலாம் ஏசிய ...... பண்பினாலே,
   பாவியேன் ஆவி ...... மயங்கல் ஆமோ? --- திருப்புகழ்.

 
அந்தி ஊதையும் ---

மாலைக் காலத்து வீசும் தென்றல் உடலுக்கும் மனத்திற்கும் இதத்தைத் தரும். ஆனால், காதல் வயப்பட்டோர்க்கு அது துன்பத்தைப் புரியும்.

", தென்றல் காற்றே! நீ பிறந்தது எங்கள் சிவபெருமானுடைய சந்தனக் காடுகளை உடைய பொதியமலையில். நீ எப்போதும் பழகுவது தெய்வ நீராகிய காவிரி பாயும் தமிழ்நாட்டில்.  உயர்ந்த இடத்தில் பிறந்தும், குளிர்ந்த நாட்டில் பழகியும், எவ்வாறு இந்தக் கொடுமையை நீ பெற்றிருக்கின்றாய்?” என்று காதல் நோய் கொண்ட சுந்தரர் கூறுகின்றார். அந்த இனிய பாடல் பெரியபுராணத்திலிருந்து இது.

பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை,
சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில்,
புறம்பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ்மாருதம். ---  பெரியபுராணம்.


தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போய்உயிர் தீர்க்கின்றதே.  --- கந்தரந்தாதி.

இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதவுரை -----

தென் - வண்டுகள் இசை பாடுகின்ற, தலை - தலையிலே, அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார - மைந்தனே, திமிர - இருள் நிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த, தென் - அழகிய, தலை - பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசம் செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக - மருகோனே, செழு - செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கு திசையில் உள்ளதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலை அதிபனே, எரி - நெருப்பை, சிந்தி - கொட்டிக் கொண்டு, மன்றல் - வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றல் காற்றானது, ஐ அம்பு - (என் தேகத்தில் மன்மதனது) ஐந்து அம்புகளும், படு - தைத்த, நெறி - புண் வழியே, போய் - நுழைந்து, உயிர் - என் உயிரை, தீர்க்கின்றது - (வருத்தி) நீக்குகின்றது.

இதன் பொழிப்புரை ---

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண் கங்கை நீரைத் தரித்திருக்கும் பரமசிவனின் மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய பூதேவிக்கும், தாமரையில் வசிக்கும் சீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகரே,!வளமையான வேதங்கள் எல்லாம், பூசிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபரே! அக்கினியைக் கொட்டிக் கொண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது.

அரிவையர் வசையுடன் அங்கி போல் வர ---

காதல் வயப்பட்ட பெண்ணின் நிலையை உணராது, ஊரில் உள்ள மாதர்களின் வசை பேசுவார்கள். அந்த வசைச் சொற்கள் நெருப்பு போலத் தகிக்கும். "தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசை" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

காம வயப்பட்டு, தன் செயல் ஏதும் இன்றி வருந்தி நிற்கும் பெண்ணின் இயல்பினை உணராமல், ஊரில் உள்ள பெண்கள் இழித்துப் பேசுவர். அது அலர் தூற்றுதல் எனப்படும்.

ஊரவர் கவ்வை எரு இட்டு, ன்னை சொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே.   --- நம்மாழ்வார்.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.                       --- திருக்குறள்.

பட்டுப்படாத மதனாலும்
     பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
    துக்கத்தில்ஆழ்வது இயல்போதான்  --- திருப்புகழ்.

அசைவன விடை மணி ---

பசுக்களின் கழுத்தில் அசைகின்ற மணி ஓசை, காதல் வயப்பட்டோர்க்குத் துன்பத்தைத் தரும்.,

"எழுகடலின், முரசின் இசை, வேய் ஓசை, விடையின்மணி, இசை குறுகி, இருசெவியில் நாராசம் உறுவது என" என அடிகளார் பிறிதோர் திருப்புகழில் அருளியது காண்க.

அன்றில் கோகிலம் ---

அன்றில், குயில் ஆகியவைகளின் இனிய ஒலிகளும் காதல் வயப்பட்டோரின் காதுகளில் நாராசமாகப் புகும்.
   
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ ---

காதல் வயப்பட்டோரின் மனமானது நெருப்பிலிட்ட மெழுகு போலப் புழுங்கும்.  உடல் வியர்த்துப் போகும்.

அகிலொடு ம்ருகமதம் நஞ்சு போல் உற ---

மிருகமதம் - மிருகமாகிய மானின் உடலில் இருந்து பெறப்படும் நறுமணப் பொருள். மான்மதம் எனப்படும். கத்தூரி எனவும் வழங்கப்படும். உடலுக்குக் குளிர்ச்சியையும் நறுமணத்தையும் தரவல்லது. நறுமணப் பொருள்கள் நஞ்சு போல உடம்பை வதைக்கும்.

பரவை நாச்சியார்க்கு நேர்ந்த இந்நிலையை, தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்துள் காட்டுமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும்பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளம் தளிர்க்குளிரி படுத்து, மட
     வார்செய்த இவையும் எல்லாம்
பேரழலில் நெய்சொரிந்தால் ஒத்தன, மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

இதன் பொழிப்புரை :

மணம் கமழும் சந்தனக் குழம்பைப் பூசியும், அரிய நறுமணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் தெளித்தும், குளிர்ந்த குளிரியின் இளந் தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழியர் செய்த செயல்களும் இவை போன்ற பிற மகிழ்ச்சிக்குரிய செயல்களும், முன்னமேயே நெருப்பாய் மூண்ட அழல் மேல் அதனை வளர்க்கும் நெய்யைச் சொரிந்தது போல் ஆயின. அதன் மேலும் அந் நெருப்பை வளர்க்க ஆல் முதலிய சிறு குச்சிகளை இடுவது போல, மன்மதனும் வந்து, தன் ஒப்பற்ற வில் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

அணி பணி மணி பல வெந்து நீறு எழ --- 

அணிந்துள்ள ஆபரணங்கள், மணிமாலைகள் யாவும் உடல் கொதிப்பால் வெப்பத்தை மிகுக்கும். விரகதாபத்தின் மிகுதியைக் காட்ட அணிகலன்கள் மணிராலைகள் வெந்து போனதாகச் செல்லப்பட்டது.

அங்கம் வேறாய் ---

உடல் நிலை முன்பு இருந்த நன்னிலையில் இருந்து மாறுபட்டுப் போகும்.

முலை கனல் சொரி வர ---

குளிர்ச்சி ஊட்டுவதற்காக சந்தனக் குழம்பு பூசி உள்ள முலைகள் தன்னிலையில் மாறுபட்டு காய்ச்சலைத் தரும்.

முன்பு போல் நினைவு அழி, வசம் அற அற நின்று சோர்வு உற, முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட ---

பலமுறையும் இவ்வாறு காதல் வயப்பட்ட தலைவியின் கூற்று இது. முன்பு எப்போதும் போலவே இப்போதும், தான் விரும்பிய தலைவனை அடையப் பெறாமையால், அல்லது தலைவனைப் பிரிந்து வாடும் துன்பத்தால், மனமானது எப்போதும் அவன் நினைவாகவே இருந்து, தன் நினைவு இழக்கும். மனம் சோர்வு பெறும். உடலும் சோர்வு அடையும். படுக்கையில் படுத்தாலும் திலை கொள்ளாமல் தவிக்கும்.

சுந்தரமூர்த்தி நாயனார் மீது காடல் வயப்பட்ட பரவை நாச்சியாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுமாறு காண்க.

"மலர் அமளித் துயில் ஆற்றாள், வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள், மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள், நீர்மை யோடும்
கலவமயில் என எழுந்து, கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா-
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

இதன் பொழிப்புரை :

நிலா முற்றத்தின் கீழுள்ள மலர்ப்படுக்கையில் விழுந்த பரவையார், உறங்கார் ஆயினார். மெல்லெனத் தம் மீது வீசும் தென்றல் காற்று படுதலையும் பொறாதவர் ஆயினார். மேகங்கள் தவழும் வானத்தினின்றும் ஒளிவீசும் நிலவின் கதிர்களும் தம்மளவில் வெப்பம் தருதலின் அதனையும் பொறுத்துக் கொள்ளாதவர் ஆயினார். தம் பெண்மைக் குணமாய நிறையைக் கொண்டு செலுத்தவல்ல பொறையாற்றலையும், தாங்க இயலாதவர் ஆயினார். இவ்வாறாக அவர் சிறிய தோகைகளை உடையை மயிலைப் போல் எழுந்து, தம்கரிய கூந்தலின் பளுவையும் தாங்க முடியாதவர் ஆயினார். இந் நிலையில் இலவ மலரனைய சிவந்தவாய் நெகிழ்ந்து பொறுக்க இயலாத வருத்தத்தால் சில சொல்வாராயினார்.

"கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான், எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர் தவிரீர்.
வந்துஇங்கு உலவுந் நிலவும் விரையார்
     மலயா னிலமும் எரியாய் வருமால்,
அந்தண் புனலும் அரவும் விரவும்
     சடையான் அருள்பெற்று உடையார் அருளார்.

இதன் பொழிப்புரை :

`நறுமணம் பொருந்திய மென்மையான கூந்தலையுடைய தோழியர்களே! இது என்ன வியப்பு? அமிர்தகலை களையுடைய ஒளிபொருந்திய சந்திரனோ என்னைச் சுடுகின்றான். இச்சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என் மீது தடவுகின்ற கொடியவர்களே! இச்செயலைத் தவிரீர்! தவிரீர்! இங்கு வந்து உலவி நிற்கும் நறுமணம் பொருந்திய தென்றல் காற்றோ நெருப்பாய் வீசுகிறது. அழகிய குளிர்ந்த கங்கையையும் பாம்பையும் ஒருங்கே வைத்துள்ள சடையையுடைய சிவபெருமானின் அருளைப் பெற்று நிற்கும் ஆரூரரோ எனக்கு அருள்செய்கின்றார் அல்லர்` என்றவாறு.

"புலரும்படி அன்று இரவு என் அளவும்,
     பொறையும் நிறையும் இறையும் தரியா,
உலரும் தனமும் மனமும், வினையேன்
     ஒருவேன் அளவோ பெருவாழ்வு? உரையீர்!
பலரும் புரியும் துயர்தான் இதுவோ?
     படைமன் மதனார் புடைநின்று அகலார்,
அலரும் நிலவும் மலரும் முடியார்
     அருள் பெற்று உடையார் அவரோ அறியார்".

இதன் பொழிப்புரை :

என்னைப் பொறுத்த அளவில் இவ்விரவும் விடிவதாயில்லை. இக்காம வெப்பத்தைத் தாங்குதற்குரிய பொறையும், பிறர் அறியாமல் காத்தற்குரிய நிறையும் சிறிதும் என்னிடத்தில் இல்லை. மார்பகங்களும் மனமும் உலர்ந்தன. இத்துணைப் பெருவாழ்வுகளும் தீவினையாலாய என் ஒருத்தி அளவிலா நிகழ வேண்டும்? கூறுங்கள்! பலராக இருந்து தம்முள் கூடி இருந்து இவ்வாறு துன்பம் செய்வதா? மன்மதனாரும் என் அருகு இருந்து தம் படையை ஓயாது செலுத்தி வருகின்றார். கொன்றையும், நிலவும், கமழும் திருச்சடையை உடைய சிவபெருமானின் திருவருளைப் பெற்று வாழும் ஆரூரரோ யான் படும் துன்பங்களை அறியாதவராயுள்ளார்!


முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல், அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை, முனிவு அற, நினது அருள் தந்து, என் மாலை முனிந்திடாதோ  ---

முருகு - நறுமணம்,

முளரி - தாமரை.

முனிவு - வெறுப்பு. தவிர்த்தல்.

தாங்கல் தார் - தொங்குகின்ற மாலை.

மால் - மயக்கம்.

பெருமான் மீது தணியாத காதல் கொண்ட பெண், அவன் வேலாயுதத்தைத் தனது திரண்ட புயங்களில் தாங்கியுள்ள மலர்மாலையைத் தனது தாமரை மலர் போன்ற திருக்கரங்களால், வெறுப்புக் கொள்ளாமல், அருள் கூர்ந்து தந்து, தனது காம மயக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகின்றாள்.

"குளிர் மாலையின் கண், அணி மாலை தந்து, குறை தீர வந்து குறுகாயோ" எனவும், "மால் கொண்ட பேதைக்கு உன் மணம் நாறும் மார் நங்கு தாரைத் தந்து அருள்வாயே" எனவும் அடிகாளர் பாடி இருத்தல் காண்க.

சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ,
     துரந்து உற்ற குளிர் வாடை ...... அதனாலும்,
துலங்கு உற்ற மருவாளி விரைந்து உற்ற படி ஆல
     தொடர்ந்து உற்று வருமாதர் ...... வசையாலும்,

அரும்பு உற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலும்,
     அடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்,
அழிந்து உற்ற மடமானை அறிந்து, ற்றம் அது பேணி,
     அசைந்து உற்ற மது மாலை ...... தரவேணும்.            --- திருப்புகழ்.


சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே ---

சிவபெருமானுடன் திருநடனம் புரிகின்ற அழகிய மங்கையாகிய, உமைதேவியார் அருளிய செவ்வேளே என்கின்றார் அடிகளார். சிவபெருமானுடன் உமாதேவியார் திருநடம் புரிவதை,

"அந்தம்இல் குணத்தார் அவர்போற்ற
         அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் 
         தொழுது ஏத்த இடர்கெடுமே".

"பாடகம் மெல்லடிப் பாவையோடும்
     படுபிணக் காடிடம் பற்றிநின்று,
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய
     நம்பெருமான் இது என்கொல்சொல்லாய்"

எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளி இருத்தல் காண்க.


நாள் தொறும் மலை தனில் ஒரு முநி தந்த மாது தன் மலர் அடி வருடியெ நின்று, மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே ---

நாள் தோறும், வள்ளிமலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் கண்ணருளால் மானின் வயிற்று உதித்த வள்ளியிநாயகியின் திருவடியை வருடி நின்று, தினைப்பயிரை உண்ண வந்த மயில், குயில், கிளி ஆகிய பறவை இனங்களை, புதிய கவண் கல் கொண்டு ஓட்டும்படி முருகப் பெருமான் திருத்தொண்டு புரிந்ததாக அடிகளார் அருளுகின்றார்.

கந்தர் அனுபூதியிலும், "பணி யா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே" என்றார் அடிகளார்.

பின்வரும் திருப்புகழ்ப் பிரமாணங்களையும் காண்க.

"ஓது குறமான் வனத்தில் மேவி, அவள் கால் பிடித்து,
     உள் ஓம் என் உபதேச வித்தொடு ...... அணைவோனே!"   --- (சூலமென) திருப்புகழ்.

குறமறவர் கொடி அடிகள் கூசாது போய்வருட,
     கரடிபுலி திரி கடிய வார் ஆன கானில், மிகு
     குளிர் கணியின் இளமரம் அதே ஆகி, நீடு உயர் ......குன்று உலாவி,

கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவார் உடைய
     ஒருபுறமது உற வளரு மாதா பெறா அருள்செய்
     குமர! குருபர! அமரர், வான்நாடர் பேண அருள்....தம்பிரானே.
                                                                         ---  (உறவின்முறை) திருப்புகழ்.

மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
     கலகலன் கலின் கலின் என, இருசரண்
     மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும் ......மிகவேறாய்,

வலிய சிங்கமும் கரடியும் உழுவையும்
     உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
     மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ......உளம் நாடி,

அருகு சென்று டைந்து, வள் சிறு பதயுக
     சத தளம் பணிந்து, தி வித கலவியுள்
     அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன்.....அணைவோனே!
                                                                             --- (கருநிறம்) திருப்புகழ்.

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய மணவாளா...                                     --- (பாதிமதி) திருப்புகழ்.


மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர மதிள் வயல் புடை உற விஞ்சு காழியில் வரும் ஒரு கவுணியர் மைந்த ---

மழையைப் பொழிகின்ற கருமேகங்கள் தவழுகின்ற நெருங்கிய கோபுரங்களும், மதில்களும் நிறைந்து, வயல்களால் சூழப்பட்டு விளங்கும் சீகாழியில், கவுணியர் குலத் தோன்றலாக வந்து அவதரித்தவர் என்கின்றார் அடிகளார்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று, முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு, திருஞானசம்பந்தராக வந்த அவதாரம் புரிந்தது. முருகவேள் பிறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேல் அண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ அவை அனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி ஆராய்ந்து அறிக.

"மண்ஆர் முழவு அதிரும் மாடவீதி வயல்காழி" என்றும்,

"சேலும் வாளையும் கயலும் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலும் சாலிநல் கதிர்கள் அணிவயற் காழிநல் நகரே" என்றும்,

"மாடமொடு மாளிகைகள் நீடுவளர் கொச்சைவயம்" என்றும் 

திருஞானசம்பந்தப் பெருமான் சீகாழியின் வளத்தைக் குறித்து அருளியுள்ளமை காண்க.

சோழநாட்டில் உள்ள வளம் மிக்க சீகாழி நகரில், கவுணியர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் அந்தணர் இருந்தார். அவருக்கு அருந்துணைவியாக வாய்த்தவர் பகவதி அம்மையார். இருவரும் சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் பேரன்பு பூண்டவர்கள். அந்நாளில் தமிழ்நாட்டில் பௌத்தம், சமணம் என்னும் இரு சமயங்களும் ஆதிக்கம் பெற்றும், வேதநெறியும், எல்லை இல்லாத் திருநீற்று நெறியும் அருகியும் இருந்தன. செந்நெறியாகிய சைவத்தை ஒம்பவல்ல ஒரு புத்திரனை வேண்டி, சிவபாத இருதயரும் அவதர்தம் துணைவியாரும் தவம் கிடந்தனர். திருவருளால் பகவதி அம்மையார் கருவுற்றார். கோள்கள் நல்ல நிலையில் நின்ற வேளையில், திருவாதிரைத் திருநாளில், செந்நெறி தழைத்து ஓங்கவும், தென்னாடு சிறக்கவும், தமிழ் ஆக்கம் பெறவும், எதிர்காலம் நலம் பெறவும், சராசரங்கள் எல்லாம் சிவத்தைப் பெருக்கவல்ல பிள்ளையார் அவதரித்தார். சீகாழியில் உள்ளோர் அனைவரும் அதிசயித்து மகிழ்ந்தனர். பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க.

"அருக்கன்முதல் கோள் அனைத்தும்
     அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்க,
     பேணியநல் ஓரை எழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
     திசைவிளங்க, பரசமயத்
தருக்கு ஒழிய, சைவமுதல்
     வைதிகமும் தழைத்து ஓங்க".

இதன் பொழிப்புரை :

கதிரவன் முதலான கோள்கள் எல்லாம் தத்தமக்கு உரிய வலிமை மிகும் இராசிகளில் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் நல்ல வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் எண்திசையும் விளக்கம் அடையவும், மற்ற சமயங்களின் தருக்கிய நிலை ஒழியவும், முதன்மையான சைவத் துறையும் வைதிகத் துறையும் தழைத்து ஓங்கவும்,

"தொண்டர்மனம் களிசிறப்ப,
     தூயதிரு நீற்றுநெறி
எண்திசையும் தனிநடப்ப,
     ஏழ் உலகும் களிதூங்க,
அண்டர்குலம் அதிசயிப்ப,
     அந்தணர் ஆகுதி பெருக,
வண்தமிழ்செய் தவம்நிரம்ப,
     மாதவத்தோர் செயல்வாய்ப்ப,"

இதன் பொழிப்புரை :
அடியவர்களின் உள்ளம் களிப்பு அடையவும், தூய திருநீற்றின் நெறியானது எண்திசைகளிலும் இணையின்றி நடக்கவும், ஏழ் உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், தேவரினத்தவர் மிகுவியப்புடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், வண்மையுடைய தமிழ் செய்த தவம் முற்றுப் பெறவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப் பெறவும்,

"திசையனைத்தின் பெருமை எலாம்
     தென்திசையே வென்றுஏற,
மிசை உலகும் பிற உலகும்
     மேதினியே தனிவெல்ல,
அசைவு இல்செழுந் தமிழ்வழக்கே
     அயல்வழக்கின் துறைவெல்ல,
இசைமுழுதும் மெய்யறிவும்
     இடங்கொள்ளும் நிலைபெருக",

இதன் பொழிப்புரை :

எண்திசைகளின் பெருமைகள் எல்லாவற்றிலும், தென்திசையின் பெருமையே வெற்றி பெற்று மேன்மை அடையவும், மேல் உலகம், கீழ் உலகம் என்பனவற்றில், இம்மண்ணுலகமே சிறப்படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின் வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்,

"தாள் உடைய படைப்பு என்னும்
     தொழில்தன்மை தலைமைபெற
நாள் உடைய நிகழ்காலம்
     எதிர்கால நவைநீங்க,
வாள் உடைய மணிவீதி
     வளர்காழிப் பதிவாழ,
ஆள் உடைய திருத்தோணி
     அமர்ந்தபிரான் அருள்பெருக",

இதன் பொழிப்புரை :

உயிர்கள் உய்தி பெறுதற்கென இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் அடிநிலையான படைப்புத் தொழில் தலைமையும் தகவும் பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்விலும் எதிர்விலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், ஒளிபொருந்திய மணிகளையுடைய வீதிகள் சிறந்தோங்கும் சீகாழிப் பதி வாழவும், உயிர்களை அடிமையாகக் கொண்டு திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் அருளானது மேன்மேலும் தழையவும்,

"அவம்பெருக்கும் புல்லறிவின்
     அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
     பாழ்பட, நல் ஊழிதொறும்
தவம்பெருக்கும் சண்பையிலே
     தாவில் சராசரங்கள் எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
     திருஅவதாரம் செய்தார்".

இதன் பொழிப்புரை :

பயனில்லா செயல்களையே செய்து வரும் புல்ல றிவை உடைய சமண் சமயம் முதலிய பிற சமயங்களானவை எல்லாம் பிறப்பதற்கே தொழிலாக்கும் தீயநெறிகள் பலவும் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந் தோறும் தான் அழியாமல் மிதந்து நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பைத் திருநகரில், குற்றம் அற்ற இயங்கும் பொருள், இயங்காப் பொருள் என்ற வகையில் நிலவுகின்ற உயிர்கள் எல்லாம் சிவத்தன்மை பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தர் தோன்றி அருளினார்.

"அப்பொழுது பொற்பு உறு திருக் கழுமலத்தோர்
எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி, அறியாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்பு உற உரைப்பார்".

இதன் பொழிப்புரை :

அதுபொழுது அழகிய அக்கழுமலத்தில் எந்நெறியில் இருப்பவர்களும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம் இன்றி உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் தம்மை அறியாமல் ஒப்பற்ற மகிழ்ச்சி மிகுவதாகிய ஓர் உவகை தோன்றக் கூறுவாராய்,

"சிவன் அருள் எனப்பெருகு சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர எய்தியது என்?" என்பார்,
"கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்
அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார்".

இதன் பொழிப்புரை :

சிவபெருமானின் திருவருள் எனப் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம் யாது? என வினவுவார். கவுணியர் கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான், அங்ஙனம் அவன் அவதரித்ததன் நல் நிமித்தம் இது ஆகும் என்று மனம் தெளிந்து அதிசயித்தார்.

சீகாழிக்கு உள்ள பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.      ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...