நிம்பபுரம் - 0765. அஞ்சுவித பூதமும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அஞ்சுவித பூதமும் (நிம்பபுரம்)

முருகா!
அருந்தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு,
வீடுபேற்றை அடைய அருள்.

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

 
அஞ்சுவித பூத முங்கரண நாலு
     மந்திபகல் யாது ...... மறியாத

அந்தநடு வாதி யொன்றுமில தான
     அந்தவொரு வீடு ...... பெறுமாறு

மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
     மங்கைதனை நாடி ...... வனமீது

வந்தசர ணார விந்தமது பாட
     வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே

குஞ்சரக லாப வஞ்சியபி ராம
     குங்குமப டீர ...... வதிரேகக்

கும்பதன மீது சென்றணையு மார்ப
     குன்றுதடு மாற ...... இகல்கோப

வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
     வென்றிவடி வேலை ...... விடுவோனே

விம்பமதில் சூழு நிம்பபுர வாண
     விண்டலம கீபர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அஞ்சுவித பூதமும், கரணம் நாலும்,
     அந்தி பகல் யாதும் ...... அறியாத,

அந்தம் நடு ஆதி ஒன்றும் இலது ஆன
     அந்த ஒரு வீடு ...... பெறுமாறு,

மஞ்சு தவழ் சாரல் அம் சயில வேடர்
     மங்கை தனை நாடி, ...... வனமீது

வந்த, சரண அரவிந்தம் அது பாட
     வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.

குஞ்சர கலாப வஞ்சி, அபிராம
     குங்கும படீர ...... அதி ரேகக்

கும்பதனம் மீது சென்று அணையும் மார்ப!
     குன்று தடுமாற ...... இகல் கோப!

வெம் சமர சூரன் நெஞ்சு பக, வீர
     வென்றி வடிவேலை ...... விடுவோனே!

விம்ப மதில் சூழு நிம்பபுர வாண
     விண்தல மகீபர் ...... பெருமாளே.
  
பதவுரை

      குஞ்சர --- ஐராவதம் என்ற யானையினால்  வளர்க்கப் பெற்றவரும்,

     கலாப வஞ்சி --- மயிலின் தோகையைப் போன்ற அழகிய  சாயல் உடையவரும் ஆகிய தெய்வயானை அம்மையாருடைய மங்கை தேவயானையின்

      அபிராம --- மிக்க அழகும்,

     குங்கும படீர --- குங்குமப் பூவுடன் கூடிய சந்தனமும்,

     அதி ரேக கும்ப தனம் மீது சென்று அணையும் மார்ப --- அதிசயமும் நிறைந்த குடம் போன்ற தனபாரங்களை அடைந்து தழுவிக்கொள்ளும் திருமார்பை உடையவரே!

      குன்று தடுமாற இகல் கோப --- கிரவுஞ்ச மலை தடுமாற்றம் அடையுமாறு சினம்கொண்டு பகைத்து நின்றவரே!

      வெம் சமர சூரன் நெஞ்சு பக --- வெம்மையான போரினுக்கு உரியவனும் ஆன சூரபன்மனுடைய மார்பு பிளவுபடுமாறு

      வீர வென்றி வடிவேலை விடுவோனே --- வீரமும் வெற்றியும் கூர்மையும் வாய்ந்த வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      விம்ப மதில் சூழு நிம்பபுர வாண --- வட்டமான திருமதிலால் சூழப்பெற்ற வேப்பூர் என்ற திருத்தலத்தில் வாழ்பவரே!

      விண்தல மகீபர் பெருமாளே --- விண்ணுலகத் தலைவர் யாவரும் போற்றும் பெருமையின் மிக்கவரே!

      அஞ்சுவித பூதமும் --- மண், புனல், கனல், வளி, வெளி என்ற ஐம்பெரும் பூதங்களாலும்,

      கரணம் நாலும் --- மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும்,

      அந்தி பகல் யாதும் அறியாத --- இரவு பகல் என்பனவாதி ஒன்றாலும் அறியமாட்டாது விளங்குவதும்,

     அந்தநடு ஆதி ஒன்றும் இலது ஆன --- முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததும் ஆகிய

     அந்த ஒரு வீடு பெறுமாறு --- அழகிய ஒப்பற்ற வீட்டை அடியேன் பெற்று உய்யும்படி,

      மஞ்சு தவழ் --- மேகம் தவழ்ந்து

     சாரல் அம் சயில --- குளிர்ந்த காற்றுடன் சிறுமழைத்துள் வீசும் அழகிய மலையில் வசிக்கும்

     வேடர் மங்கை தனை நாடி --- வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியம்மையாரை விரும்பி,

     வனம் மீது வந்த --- கானகத்தில் வந்தருளிய

     சரண அரவிந்தம் அது பாட --- தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பாடுவதற்கு எனக்கு

     வண்தமிழ் விநோதம் அருள்வாயே --- தெளிவும் அழகும் உடைய தமிழை அருள் புரிவீர்.


பொழிப்புரை


         ஐராவதம் என்ற யானையினால் வளர்க்கப் பெற்றவரும், மயிலின் தோகையைப் போன்ற அழகிய சாயல் உடையவரும் ஆகிய தெய்வயானை அம்மையாருடைய மங்கை தேவயானையின் மிக்க அழகும், குங்குமப் பூவுடன் கூடிய சந்தனமும், அதிசயமும் நிறைந்த குடம் போன்ற தனபாரங்களை அடைந்து தழுவிக்கொள்ளும் திருமார்பை உடையவரே!

         கிரெளஞ்ச மலை தடுமாற்றம் அடையுமாறு சினம்கொண்டு பகைத்து நின்றவரே! 

     வெம்மையான போரினுக்கு உரியவனும் ஆன சூரபன்மனுடைய மார்பு பிளவுபடுமாறு வீரமும் வெற்றியும் கூர்மையும் வாய்ந்த வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         வட்டமான திருமதிலால் சூழப்பெற்ற வேப்பூர் என்ற திருத்தலத்தில் வாழ்பவரே!

         விண்ணுலகத் தலைவர் யாவரும் போற்றும் பெருமையின் மிக்கவரே!

         மண், புனல், கனல், வளி, வெளி என்ற ஐம்பெரும் பூதங்களாலும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களாலும், இரவு பகல் என்பனவாதி ஒன்றாலும் அறியமாட்டாது விளங்குவதும், முடிவு, நடு, முதல் ஒன்றும் இல்லாததும் ஆகிய அழகிய ஒப்பற்ற வீட்டை அடியேன் பெற்று உய்யும்படி, மேகம் தவழ்ந்து குளிர்ந்த காற்றுடன் சிறு மழைத்துளிகள் வீசும் அழகிய மலையில் வசிக்கும் வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியம்மையாரை விரும்பி, கானகத்தில் வந்தருளிய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பாடுவதற்கு எனக்கு தெளிவும் அழகும் உடைய தமிழை அருள் புரிவீர்.


விரிவுரை

அஞ்சுவித பூதமும் ---

"ஐந்து" என்பது "அஞ்சு" எனப் போலியாக வந்தது. இவ்வாறு வரும் சிவஞானபோதச் செய்யுளாலும் அறிக.

அஞ்செழுத்தால் உள்ளம் அரன்உடைமை கண்டு, அரனை
அஞ்செழுத்தால் அர்ச்சித்து, இதயத்தில் --- அஞ்செழுத்தால்
குண்டலியில் செய்துஓமம் கோதண்டம் சானிக்கில்
அண்டனாம் சேடனாம் அங்கு.

சத்தம், பரிசம்,ரூபம், ரசம், கந்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும். ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும். சுவை நீரின் குணமாய் நிற்கும். நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும். ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல் வேண்டும்.

மின்உருவை விண்அகத்தில் ஒன்றாய், மிக்கு
         வீசுங்கால் தன்அகத்தில் இரண்டாய், செந்தீத்
தன்உருவின் மூன்றாய், தாழ் புனலின் நான்காய்,
         தரணிதலத்து அஞ்சுஆகி, எஞ்சாத் தஞ்ச
மன்உருவை, வான்பவளக் கொழுந்தை, முத்தை,
         வளர்ஒளியை, வயிரத்தை, மாசுஒன்று இல்லாப்
பொன்உருவை, புள்ளிருக்கு வேளூ ரானைப்
         போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

எனவும்

மண்ணதனில் ஐந்தை, மா நீரில் நான்கை,
         வயங்குஎரியில் மூன்றை, மாருதத்து இரண்டை,
விண்ணதனில் ஒன்றை, விரிகதிரை,
         தண்மதியை, தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை, ஏழிசையை, காமன்
         எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனை, கற்குடியில் விழுமியானை,
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

எனவும் வரும் அப்பர் திருத்தண்டகங்களில் ஐம்பூதங்களின் குணங்கள் கூறப்பட்டுள்ளமை காணலாம்.

இக்கருத்து அமைந்த,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

என்னும் திருவாசகப் பகுதி பலரும் அறிந்தது.

பூதங்கள் இக்குணங்களையே அன்றி, வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது.  பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்தில் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கு எல்லாம் முதற்காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம். அது தாமதகுணக் கூறு. தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது.அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவில் கொள்ள உதவும். தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவமாகும். தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை.

அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு எவ்வாறு கருவியாய் நின்று உதவுகின்றன. தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன.

பஞ்ச பூதங்களின் சம்பந்தம் இல்லாத இடமே முத்தி வீடு.
  
கரணம் நாலும் ---

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன அந்தக் கரணங்கள். 
இதன் விளக்கம் வருமாறு ---

சித்தம் --- முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி, பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.
  
புத்தி --- முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாமம் அடைகிறது என்பது கருத்தாகும். பரிணாமாவது மாற்றம் இதுபற்றி ஓர் ஐயம் எழக்கூடும். அதாவது குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும் எனப் பார்த்தோம். இப்பொழுது கூறியபடி குணதத்துவம் புத்தியாய்ப் பரிணமிக்கும் என்றால் அவ்வாறு புத்தியாய்ப் பரிணமித்த பின்பு அக்குணதத்துவம் தன்நிலையில் நின்று தனக்குரிய செயலை எப்படிச் செய்யும் என்னும் ஐயம் நிகழலாம். பரிணாமத்தில் இரண்டு வகை உண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத் தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் ஏகதேச பரிணாமம் எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அன்று; வெண்ணெயில் புழுத் தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே. ஆகையால் ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.

முக்குணங்களும் அறவே தோன்றாத நிலையைப் பார்த்தோம். அதுவே பிரகிருதி, முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலையைப் பார்த்தோம். அதுவே குண தத்துவம். அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை குறைந்தும் உள்ள நிலையைப் பார்த்தோம். அதுவே புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களில் எல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும். ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும். இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும்.  தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும். சாத்துவிக குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும். குண தத்துவத்தில் புத்தி தோன்றும் என அறிந்தோம். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் இது இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்கு உடையதாய் இருத்தல் நோக்குதற்கு உரியது.

அகங்காரம் --- புத்தி தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக் கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். நான் இதனை அறிவேன். நான் இதனைச் செய்வேன். நான் இதனை நுகர்வேன் என்றால் போல எச்செயலிலும் ஆன்மா முனைத்தெழுவதற்கு இவ்வகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்கு உடையதாய் இருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித்தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது.

அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன.

சாத்துவிக குணக் கூறு தைசத அகங்காரம் என்றும்,
இராசத குணக்கூறு வைகாரிக அகங்காரம் என்றும்,
தாமத குணக்கூறு பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும்.

மனம் ---  அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும் முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தே உள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றனோடு இம்மனமும் சேர, அந்தக்கரணம் நான்கு என அறியலாம்.

இந்த அந்தக் கரணங்களால் அறிய ஒண்ணாதது முத்தி நலம்.

 
அந்தி பகல் ---

அந்தி - மறப்பு, இறப்பு. பகல் - நினைப்பு,  பிறப்பு.(கேவல சகலம்) நினைப்பும் மறப்பும், பிறப்பும் இறப்பும் அற்றார்க்கே இறைவனது தெரிசனம் உண்டாகும். நினைப்பு மறப்பு நீங்கப் பெறுதல் அவசியம். இதனை அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளார்.

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
அந்திபகல் அற்ற நினைவு அருள்வாயே     --- (ஐங்கரனை) திருப்புகழ்.


இதம்அகிதம் விட்டுஉருகி, இரவுபகல்அற்ற விடம்
 எனதுஎன இருக்கைபுரி யோகப் புராதனனும்   --- வேடிச்சிகாவலன் வகுப்பு

ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார் தினைப்போது அளவு
ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளே முருகன் உருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யமதூதருக்கே. --- கந்தர் அலங்காரம்.

அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும், அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டைஅம் தாள்தொழல் வேண்டும்,கொடிய ஐவர்
பராக்குஅறல் வேண்டும், மனமும் பதைப்புஅறல் வேண்டும், என்றால்,
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.      --- கந்தர் அலங்காரம்.

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே.             --- கந்தர்அநுபூதி.

பிற ஆன்றோர்கள் வாக்குகளையும் நோக்குக.

நினைப்பு மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப் பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில் அவன் நீளியன் ஆமே     --- திருமந்திரம்.

இரவுபகல் இல்லா இன்ப வெளியூடே
 விரவி விரவி நின்று உந்தீபற       --- திருவுந்தியார்


அங்குஇங் குஎனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
                    ஆனந்த பூர்த்தியாகி
     அருளொடு நிறைந்ததுஎது, தன்அருள் வெளிக்குளே
                    அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும் படிக்குஇச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
               தழைத்ததுஎது, மனவாக்கினில்
     தட்டாமல் நின்றதுஎது, சமயகோ டிகளெலாம்
                    தம்தெய்வம் எம்தெய்வம் என்று
எங்குந் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது,
                    எங்கணும் பெருவழக்காய்
     யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
                    என்றைக்கும் உள்ளதுஎது, மேல்
கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎது, அது
                    கருத்திற் கிசைந்தது, அதுவே
     கண்டன எலாம் மோன உருவெளியது ஆகவும்
                    கருதிஅஞ் சலிசெய்குவாம்.          --- தாயுமானவர்.


மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும், மனம் அது ஒன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும், இப்பேய்ப் பிறவி
இறக்கின்ற எல்லைக்கு அளவில்லையே, இந்த சன்ம அல்லல்
துறக்கின்ற நாள் எந்த நாள்? பரமே! நின் தொழும்பனுக்கே. --- தாயுமானவர்

அந்தம் நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு ---

முதலும் நடுவும் முடிவும் இல்லாதது முத்தி வீடு.

வீடு என்பது விடுபடுவது. பந்தத்தினின்றும் விடுபடுவதே முத்தி எனப்படும். 

அந்த – சேய்மைச் சுட்டு எனவும் பொருள்படும். 

வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாதது.

ஒரு - ஒப்பற்றது. "ஒருபூதரும் அறியாத் தனிவீட்டில்  உரை உணர்வு அற்று இரு, பூத வீட்டில் இராமல்" என்பார் கந்தர் அலங்காரத்தில்.


மஞ்சு தவழ் சாரல் அம் சயிலம் ---

சயிலம் - மலை.  மஞ்சு - மழை பொழியும் பொருட்டுத் திரண்டு தாழ்ந்துள்ள மேகம்.  "மஞ்செனத் திரண்ட கோலமேனிய" என்பார் கம்பராமாயணத்தில்.

சாரல் --- மழைத்துளியுடன் கூடிய குளிர்ந்த காற்று.


வனம் மீது வந்த சரண அரவிந்தம் ---

மூவர்க்கும் தேவர்க்கும் அரிய பிரானாகிய முருகவேளின் திருவடி, குறவர் கூட்டத்தில் வளர்ந்து, குருவி ஓட்டித் திரிந்த வள்ளபிராட்டியை, அவர் புரிந்த தவம் காரணமாக, எளிதில் கொடிய கானகத்தின்கண் வந்தது. அது அவருடைய அளப்பரிய கருணையின் பெருக்கு. ஆதலின் அந்த கருணை மிகுந்த திருவடியைப் பாடுதல் வேண்டும்.

எறுழிபுலி கரடிஅரி கரிகடமை வருடைஉழை
    இரலைமரை இரவுபகல்  ......  இரைதேர்க டாடவியில்
எயினர்இடும் இதண்அதனில் இளகுதினை கிளிகடிய
    இனிதுபயில் சிறுமிவளர்  ......  புனமீது உலாவுவதும்.... ---  சீர்பாத வகுப்பு.

சுனையோடு, அருவித் துறையோடு, பசும்
தினையோடு, இதணோடு திரிந்தவனே...   ---  கந்தர் அநுபூதி.

இமையவர் முடித்தொகையும், வனசரர் பொருப்பும்,எனது
இதயமும் மணக்கும்இரு பாதச் சரோருகனும் ….   ---  வேடிச்சிகாவலன் வகுப்பு.

வீடும், சுரர்மா முடி,வேதமும், வெம்
காடும் புனமும் கமழும் கழலே..          ---  கந்தர் அநுபூதி.


குஞ்சர கலாப வஞ்சி …..  சென்று அணையும் மார்ப ---

தெய்வயானை அம்மையாரது சிறப்பை இதில் விளக்குகின்றனர்.  அவரை முருகன் மணப்பதனால் உலகம் தொழில்படுகின்றது.  தெய்வயானை அம்மையார் கிரியாசத்தி.

வண்தமிழ் விநோதம் ---

வண் - தெளிவு. விநோதம் - அழகு.  தெளிவும் அழகும் உடைய தமிழால் முருகப்பெருமானுடைய திருவடிக் கமலங்களைப் பாடவேண்டும்.

நிம்பபுரம் ---

நிம்பம் - வேம்பு.  நிம்பபுரம் - வேப்பூர்.

தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழுகின்ற தொண்டை நன்னாட்டில், பாலாற்றின் கரையில் விளங்குவது வேப்பூர் என்னும் திருத்தலம். ஆர்க்காட்டிற்கு மேற்கிலும், வேலூருக்குக் கிழக்கிலும் நெடுஞ்சாலையை ஒட்டி, பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம். திருக்கோயிலின் மூலவராக வசிட்டேசுவரர் உள்ளார். ஏழுமுனிவர்களில் ஒருவரான வசிட்டர் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இவர் வசிட்டேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். சிவன் இங்கு வசிட்டருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்ததாகக் கூறுகின்றனர். இறைவி பாலகுஜாம்பிகை ஆவார். இறைவி தனி சன்னதியில் உள்ளார். சிவனின் சந்நிதியில் வசிட்டர், சிவனை வணங்கிய நிலையில் உள்ளார். இவருக்கு பூசை செய்த பின்னர் சிவனுக்கு பூசை செய்கிறார்கள். சரபேசுவரர், சப்த மாதர், செல்வ விநாயகர், காசி விசுவநாதர், அகோர வீரபத்திரர், கால பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலிலுள்ள வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரைப் போற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கருத்துரை


முருகா! அருந்தமிழால் உம்மைப் பாடி வழிபட்டு, வீடுபேற்றை அடைய அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...