அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கழைமுத்து மாலை (திருமுட்டம்)
முருகா!
முத்துமாலைகள் திருமார்பில்
விளங்க
அடியார் குழுவுடன்
மயில்மிசை வந்து
அடியேனை ஆட்கொண்டு
அருள்.
தனனத்த
தான தனனத்த தான
தனனத்த தான ...... தனதான
கழைமுத்து
மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை ...... மலைமேவுங்
கடிமுத்து
மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை ...... யரவீனும்
அழல்முத்து
மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ ...... அடியேன்முன்
அடர்பச்சை
மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி ...... யெமையீனு
மதமத்த
நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு ...... முருகோனே
செழுமுத்து
மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் ...... மணவாளா
சிறையிட்ட
சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கழைமுத்து
மாலை, புயல்முத்து மாலை,
கரிமுத்து மாலை, ...... மலைமேவும்
கடிமுத்து
மாலை, வளைமுத்து மாலை,
கடல்முத்து மாலை, ...... அரவு ஈனும்
அழல்முத்து
மாலை, இவைமுற்றும் மார்பின்
அடைவு ஒத்து உலாவ, ...... அடியேன்முன்,
அடர்
பச்சை மாவில், அருளில் பெணோடும்,
அடிமைக் குழாமொடு ...... அருள்வாயே.
மழை
ஒத்த சோதி, குயில் தத்தை போலும்
மழலைச் சொல் ஆயி, ...... எமை ஈனும்,
மத
மத்த, நீலகள நித்த, நாதர்
மகிழ் சத்தி ஈனும் ...... முருகோனே!
செழுமுத்து
மார்பின் அமுதத் தெய்வானை
திருமுத்தி மாதின் ...... மணவாளா!
சிறை
இட்ட சூரர் தளைவெட்டி, ஞான
திருமுட்டம் மேவு ...... பெருமாளே.
பதவுரை
மழை ஒத்த சோதி --- மேகத்தை
நிகர்த்து கருணை பொழியும் சோதி வடிவினரும்,
குயில் தத்தை போலு
மழலைச்சொல் ஆயி --- குயிலைப் போலவும் கிளியைப் போலவும் மழலை மொழி இனிமையாகப்
பேசும் உலகன்னையும்,
எமை ஈனும் --- எம்மை ஈன்றவரும்,
மதமத்த --- தேன் துளிர்க்கும்
ஊமத்தை மலரை அணிந்த,
நீல கள --- நீலகண்டரும்,
நித்த நாதர் மகிழ்சத்தி --- என்றும் உள்ள
சிவபெருமான் மகிழ்கின்ற அருட்சத்தியும் ஆகிய உமாதேவியார்
ஈனும் முருகோனே ---
பெற்றருளிய முருகக் கடவுளே
செழுமுத்து மார்பின்
அமுதத் தெய்வானை --- செழிப்புள்ள முத்துமாலைகளை அணிந்த திருமார்பை உடையவரும், அமுதம் போன்ற தெய்வயானை அம்மையாரும்
திரு முத்தி மாதின்
மணவாளா
--- மேலான முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளரே
சிறை இட்ட சூரர் தளை வெட்டி --- தேவர்களைச் சிறை
வைத்த சூராதி அவுணர்கள் இட்ட தளையை வெட்டி எறிந்து,
ஞான திருமுட்டம் மேவு
பெருமாளே
--- அறிவு மயமாகிய திருமுட்டம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள
பெருமையில் மிக்கவரே
கழை முத்து மாலை --- கரும்பு தரும்
முத்தால் ஆன மாலை,
புயல் முத்து மாலை --- மேகம் தரும்
மழைத்துளிகளால் ஆன முத்து மாலை,
கரி முத்து மாலை --- யானையின்
தந்தத்தில் பிறந்த முத்தால் ஆன மாலை,
மலை மேவும் கடிமுத்து
மாலை
--- மலையில் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை,
வளை முத்து மாலை --- சங்கிலிருந்து
கிடைக்கும் முத்தால் ஆன மாலை,
கடல் முத்து மாலை --- கடலில்
பெறப்படும் முத்தால் ஆன மாலை,
அரவு ஈனும் அழல் முத்து
மாலை
--- பாம்பு தரும் ஒளியுள்ள முத்தால் ஆன மாலை,
இவை முற்றும்
மார்பின் அடைவு ஒத்து உலாவ --- இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே
முறையாகப் புரண்டு அசைய,
அடியேன் முன் --- அடியேனின் எதிரே
அடர் பச்சை மாவில் --- வலிமை மிக்க
பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில்
அருள் இல் பெணோடும் ---
அருளையே
இல்லமாகக் கொண்ட வள்ளியம்மையாருடனும்,
அடிமைக் குழாமொடு அருள்வாயே --- அடியார்
கூட்டத்துடனும் வந்து அருள்
புரிவாயாக
பொழிப்புரை
மேகத்தை நிகர்த்து கருணை பொழியும் சோதி
வடிவினரும், குயிலைப்
போலவும் கிளியைப் போலவும் மழலை மொழி இனிமையாகப் பேசும் உலகன்னையும், எம்மை ஈன்றவரும், தேன்
துளிர்க்கும் ஊமத்தை மலரை அணிந்த,
நீலகண்டராகிய, என்றும் உள்ள சிவபெருமான் மகிழ்கின்ற
அருட்சத்தியும் ஆகிய உமாதேவியார் பெற்றருளிய முருகக் கடவுளே!
செழிப்புள்ள முத்துமாலைகளை அணிந்த
திருமார்பை உடையவரும், அமுதம் போன்ற
தெய்வயானை அம்மையாரும் மேலான
முக்தியைத் தரவல்ல மாதரசியின் மணவாளரே!
தேவர்களைச் சிறை வைத்த சூராதி அவுணர்கள்
இட்ட தளையை வெட்டி எறிந்து, அறிவு மயமாகிய திருமுட்டம் என்ற
திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!
கரும்பு தரும் முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துக்களால் ஆன மாலை, யானையின்
தந்தத்தில் பிறந்த முத்தாலான மாலை,
மலையிற்
கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, சங்கிலிருந்து
கிடைக்கும் முத்தாலான மாலை, கடலில் பெறப்படும்
முத்தாலான மாலை, பாம்பு தரும் ஒளியுள்ள முத்தாலான மாலை, இப்படி எல்லா
மாலைகளும் மார்பிலே முறையாகப் புரண்டு அசைய, அடியேனின் எதிரே வலிமை மிக்க பச்சை
நிறத்துக் குதிரை போன்ற மயிலில், அருளையே
இல்லமாகக் கொண்ட வள்ளியம்மையாருடனும், உன்
அடியார் கூட்டத்துடனும், வந்து அருள்
புரிவாயாக.
விரிவுரை
கழைமுத்து
மாலை ---
முத்து
- விடு படுவது. முத்து பிறக்குமிடம் பதின்மூன்று எனவும் இருபது எனவும்
கூறப்படுகின்றது.
அவையாவன...
சங்கு, மேகம், மூங்கில், பாம்பு, பன்றிக்கோடு, நெல், இப்பி, மீன்தலை, கரும்பு, யானைக்கோடு, சிங்கம், கற்புடை மகளிர் கழுத்து, கொக்கின் கழுத்து, நந்து, முதலை, உடும்பு, பசுவின்பல், கழுகு, வாழை, தாமரை.
இதுவேயும்
அன்றி சந்திரனிடத்தும் முத்து பிறக்கும் எனக் கூறுவர். ஆனால், இப்போது சிப்பியிலிருந்து முத்து
தோன்றுவது தான் காணக் கிடக்கின்றது.
தக்கமுத்து
இரண்டு வேறு
தலசமே சலசம் என்ன,
இக்கதிர்
முத்தம் தோன்றும்
இடன்பதின் மூன்று, சங்கம்,
மைக்கரு
முகில்,வேய், பாம்பின்
மத்தகம், பன்றிக் கோடு,
மிக்கவெண்
சாலி, இப்பி,
மீன்தலை, வேழக் கன்னல்.
இதன்
பொருள் --- தக்க
முத்து தலசமே சலசமே என்ன இரண்டு வேறு - குற்றமில்லாத
முத்துக்கள் தலசமென்றும் சலசமென்றும் இரண்டு வகைப்படும்;
இ கதிர் முத்தம் தோன்றும் இடன்
பதின்மூன்று - இந்த ஒளியையுடைய முத்துக்கள் தோன்றும் இடம் பதின்மூன்றாம்;
சங்கம் மைக்கரு முகில் வேய் பாம்பின்
மத்தகம் பன்றிக்கோடு - சங்கும் மிகக் கரிய முகிலும் மூங்கிலும் அரவின்
தலையும் பன்றிக் கொம்பும்,
மிக்க வெண்சாலி இப்பி
மீன் தலை வேழக் கன்னல் - மிகுந்த வெண்ணெல்லும் சிப்பியும் மீனினது தலையும்
வேழக்கரும்பும்.
தலசம்
- நிலத்தில் தோன்றுவது. சலசம் - நீரில் தோன்றுவது.
வேழக்
கன்னல் - வேழமாகிய கன்னல். வேழம் - கரும்பின் ஒரு வகை.
கரிமருப்பு, ஐவாய் மான்கை,
கற்புடை மடவார்
கண்டம்,
இருசிறைக்
கொக்கின் கண்டம்,
எனக்கடை கிடந்த
மூன்றும்
அரியன, ஆதிப் பத்து
நிறங்களும், அணங்கும் தங்கட்கு
உரியன
நிறுத்த வாறே
ஏனவும் உரைப்பக்
கேண்மின்.
இதன்
பொருள் --- கரிமருப்பு
ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம் - யானையின் தந்தமும் சிங்கத்தின் கையும்
கற்புடை மகளிரின் கழுத்தும்,
இருசிறைக் கொக்கின்
கண்டம் என - இரண்டு சிறைகளையுடைய கொக்கின் கழுத்தும் என்று;
கடை கிடந்த மூன்றும் அரியன ஈற்றிற்
கூறிய மூவகையும் கிடைத்தற்கரியன;
ஆதிப்பத்து
நிறங்களும் - முதற்கண் உள்ள பத்து வகை
முத்துக்களின்
நிறங்களும்
தங்கட்கு உரியன அணங்கும் - அவற்றிற்கு உரியவாகிய தெய்வங்களும்,
ஏனவும் - பிறவும்,
நிறுத்தவாறே உரைப்பக் கேண்மின் -
நிறுத்த முறையே சொல்லக் கேளுங்கள்.
---
திருவிளையாடல்
புராணம்.
மலைமேவும்
கடிமுத்து மாலை ---
மூங்கிலிலே
பிறக்கும் முத்தால் ஆன மாலை. மூங்கில் மலையிலே இருப்பதனால், இடமாகுபெயராக மலைமேவும் கடி முத்துமாலை
என்றனர்.
இவை
முற்றும் மார்பின் அடைவு ஒத்து உலாவ ---
மேற்கூறிய
முத்துமாலைகள் அத்தனையும் அணியணியாக மார்பில் விளங்க அடியேன் முன் வந்து காட்சி தர
வேண்டும் என்பார்.
முருகவேள்
உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த முத்துக்குமாரசுவாமி ஆதலின், இத்தனை முத்து மாலைகளுடன் வரவேண்டும்
என்று குறிக்கின்றனர்.
கஞ்ச
முகத்தில் முழுமுத்தம்,
கண்ணில் பனிரண்டு உயர் முத்தம்,
கன்னத்தினில்
ஆறு இரு முத்தம்,
கனிவாயினில் மூவிரு முத்தம்,
அஞ்சல்
கரத்து ஆறு இரு முத்தம்,
அகன்ற பார்பில் ஓர் முத்தம்,
அம்பொன்
புயத்து ஆறு இரு முத்தம்,
அழகுஆர் உந்திக்கு ஒரு முத்தம்,
தஞ்சத்து
அருள் சேவடி மலரில்
தகவு ஆர் இரண்டு முத்தம் எனத்
தழுவிக்
கவுரி அளித்து மகிழ்
தனயா! எனை ஆள் இனியோனே!
செஞ்சல்
குறமின் முத்து உகந்த
சேயே! முத்தம் தருகவே!
தெய்வத்
தணிகை மலைவாழும்
தேவே! முத்தம் தருகவே. --- திருத்தணிகை முருகன்
பிள்ளைத்தமிழ்.
கத்துந்
தரங்கம் எடுத்தெறியக்
கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
கரையில்
தவழ்ந்து வாலுகத்திற்
கான்ற மணிக்கு விலை உண்டு,
தத்துங்
கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம்
தனக்கு விலை உண்டு,
தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்
கொத்தும்
சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலை உண்டு,
கொண்டல்
தரு நித்திலம் தனக்குக்
கூறும் தரம் உண்டு, உன்கனிவாய்
முத்தம்
தனக்கு விலைஇல்லை,
முருகா! முத்தந் தருகவே!
முத்தம்
சொரியும் கடல் அலைவாய்
முதல்வா! முத்தந் தருகவே. --- திருச்செந்தூர்
முருகன் பிள்ளைத்தமிழ்.
பிற
மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட
வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து
கொள்வதால் நன்மைகள் பல உண்டு. குளர்ச்சியைத் தரும்.
முத்துநல்
தாமம்பூ மாலை தூக்கி,
முளைக்குடம்
தூபம்நல் தீபம் வைம்மின்
என்பார்
மணிவாசகர்.
முத்தே
பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன்
உள்ளத் தெளிவே பராபரமே
என்பார்
தாயுமானார்.
இப்பொன்
நீ, இம் மணி நீ, இம்முத்தும் நீ,
இறைவன்
நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே
என்பார்
அப்ப மூர்த்திகள்.
அடர்
பச்சை மயில் ---
அடல்
- வலிமை. "அடல்" என்பது போலியாக "அடர்" என வந்தது.
ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக தனக்கு ஒப்பார் மிக்கார்
ஒருவரும் இன்றி மாலயனாதி வானவர் யாவரையும் அடக்கி அரசு புரிந்த சூரபன்மன் பண்டு
செய் தவத்தினால் மயில் உருவம் பெற்றனன். ஆதலின், மயிலின் வலிமையை யாரே அளக்க வல்லார்.
மா
- குதிரை. இங்கே மயிலைக் குறிக்கின்றது.
அருள்
இல் பெணோடும் ---
அருள்
இல் பெண் எனப் பிரித்துக் கொள்க.
அருளே
ஒரு வடிவாகி இல்லக் கிழத்தியாக விளங்கும் வள்ளியம்மை எனவும் பொருள்படும். அருளையே
தனக்கு இல்லமாகக் கொண்டவர் என்று முன்னே பொருள் செய்யப்பட்டது.
அடிமைக்
குழாமொடு அருள்வாயே ---
ஆறுமுகப்
பெருமான் அடியார்களை ஆட்கொள்ள வந்தருளும்போது, அடியவர்களுடன் வருவார். அருணகிரிநாதப் பெருமான்
பல இடங்களில் அடியார்களுடன் வரவேணும் என்று விண்ணப்பிக்கின்றனர்.
மறைஅறைய
அமரர்தரு பூமாரியே சொரிய
மதுஒழுகு
தரவில்மணி மீதேமு நூல்ஒளிர
மயிலின்மிசை
அழகுபொலி ஆளாய்முன் ஆர்அடியர் வந்துகூட...
---
(உறவின்முறை)
திருப்புகழ்.
பழைய
அடியவருடன் இமையவர் கணம்
இருபுடையும்
மிகு தமிழ்கொடு மறைகொடு
பரவ
வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணும்....
---
(கொடியமறலியும்)
திருப்புகழ்.
கருணை அடியரொடு அருணையில் ஒருவிசை
சுருதி புடை தர வரும், இரு பரிபுர
கமல மலர்அடி கனவிலும் நனவிலும்
...... மறவேனே.
--- (குமரகுருபர) திருப்புகழ்.
மழை
ஒத்த சோதி
---
அம்பிகை
மேகம் போல் அகிலாண்டங்களில் வாழும் உயிர்கட்குக் கைம்மாறு கருதாது அருள்
பொழிபவள். முப்பத்திரண்டு அறங்களையும்
வளர்ப்பவள் அவ் அன்னையே. "அறம்
வளர்த்தாள்" என்று ஒரு நாமம் அம்பிகைக்கு உண்டு.
குயில்
தத்தை போலும் மழலைச் சொல் ஆயி ---
உமாதேவியார்
கிளியைப் போலவும், குயிலைப் போலவும் மிக
மிக இனிமையாக மழலை மொழியாகக் கொஞ்சிப் பேசுவர்.
கங்கைஓர்
வார்சடைமேல் கரந்தான், "கிளிமழலைக்
கேடில்
மங்கைஓர்
கூறுஉடையான்" மறையான் மழுஏந்தும்
அம்
கையினான் அடியே பரவி அவன்மேய ஆரூர்
தம்
கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. ---
திருஞானசம்பந்தர்.
"தேன்
நோக்கும் கிளிமழலை உமை கேள்வன்", செழும்
பவளம்
தான்
நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான்
நோக்கும் வளர்மதி சேர் சடையானை;
வானோர்க்கும்
ஏனோர்க்கும்
பெருமானை, என் மனத்தே வைத்தேனே! --- அப்பர்.
மத
மத்தம்
---
மதம்
- தேன். மத்தம் - ஊமத்தை. தலைக்குறையாக மத்தம் என வந்தது.
மத்தமும்
மதியமும் வைத்திடும் அரன்மகன் …. ---
கைத்தல
திருப்புகழ்.
வன்னி
கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்
இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன
என்றுவரி வண்டுஇசை செய் திருவாஞ்சியம்
என்னை
ஆள் உடையான் இடமாக உகந்ததே. ---
திருஞானசம்பந்தர்.
கள்ளார்ந்த
பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த
சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய
சம்பாதி சடாயென்பார் தாம் இருவர்
புள்ளானார்க்கு
அரையன் இடம் புள்ளிருக்கு வேளூரே. ---
திருஞானசம்பந்தர்.
ஊமத்த
மலர் சிவார்ச்சனைக்குச் சிறந்தது.
நீலகள
நித்த நாதர்
---
நீலம்
- விடம் உண்டதால் நீல நிறமானது.
களம்
- கழுத்து, கண்டம்.
பாற்கடலில்
தோன்றிய ஆலகால விஷத்தை உண்டு, சிவபெருமான்
தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார். தேவர்கள் இறவாமல் இருக்கும்பொருட்டு
அமிர்தத்தை அருந்தினர். ஆனால், அமிர்தம் உண்ட
தேவர்களுக்கு அழிவு உண்டு. ஆலால விடம் உண்ட விமலனுக்கு எப்போதும் அழிவில்லை.
அதனால், நித்தன் எனப்படுவர்.
நூறுகோடி
பிரமர்கள் நொங்கினார்,
ஆறுகோடி
நாராயணர் அங்ஙனே
ஏறுகங்கை
மணல்எண்ணில் இந்திரர்
ஈறுஇலாதவன்
ஈசன் ஒருவனே. --- அப்பர்.
மாலும்
துஞ்சுவன் மலரவன் இறப்பான்
மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
ஏலும்
நல்துணை யார்நமக்கு என்றே
எண்ணி நிற்றியோ, ஏழைநீ நெஞ்சே,
கோலும்
ஆயிரம் கோடி அண்டங்கள்
குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
நாலு
மாமறைப் பரம்பொருள் நாமம்
நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.--- திருவருட்பா.
அமுத்
தெய்வானை திருமுத்தி மாது ---
இந்திரன்
மகளாக வளர்ந்தபடியால் அமிர்தத்தை அருந்தியவராகக் கூறுவர். அமுதம்போல் அழிவற்ற
தன்மையை அருளுபவர்.
"முத்தைத்
தரு பத்தித் திருநகை அத்தி" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
"வினை
ஆனவை தொடர் அறுத்திடும்
ஆரிய! கேவலி மணவாளா!" என்று அருளிய அடிகளார், தெய்வயானை அம்மையாரை, "கேவலி" என்றும், "முத்தி மாது"
என்றும் கூறியிருப்பது மிகவும் சிந்தனைக்கு உரியது. முத்தியைத் தரவல்ல முதல்வி
தெய்வயானை அம்மையார் எனத் தெரிகின்றது.
கேவலம், கைவல்யம், வீடுபேறு. வீடுபேற்றினை அருளும்
கேவல ஞானத்தை அருள்பவள் ஆகிய தெய்வயானை அம்மையாரை, அடிகளார் "கேவலி"
என்ற அருமை சிந்தனைக்கு உரியது.
கருத்துரை
முருகா!
முத்துமாலைகள் திருமார்பில் விளங்க அடியார் குழுவுடன் மயில்மிசை வந்து அடியேனை
ஆட்கொண்டு அருள்.
No comments:
Post a Comment