அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாரும் இங்கே
(கடம்பூர்)
முருகா!
விலைமாதர் வசமாகி
அழியாமல்,
திருவடியை அருள்வாய்
தானனம்
தானான தானனம் தானான
தானனம் தானான ...... தனதான
வாருமிங்
கேவீடி தோபணம் பாஷாண
மால்கடந் தேபோமெ ...... னியலூடே
வாடிபெண்
காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி ...... யணைமீதே
சேருமுன்
காசாடை வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ ...... னடமாதர்
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார ...... மருள்வாயே
நாரணன்
சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன் ...... மருகோனே
நாரதும்
பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
சூரியன் தேரோட ...... அயிலேவீ
தூநறுங்
காவேரி சேருமொண் சீறாறு
சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாரும்
இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம்,
மால் கடந்தே போம் ...... என்இயல் ஊடே,
வாடி
பெண்காள், பாயை போடும் என்று ஆசார
வாசகம் போல் கூறி, ...... அணை மீதே
சேரும்
முன், காசு ஆடை வாவியும் போதாமை,
தீமை கொண்டே போம் ...... என் அட மாதர்
சேர்
இடம் போகாமல், ஆசுவந்து ஏறாமல்,
சீதளம் பாதாரம் ...... அருள்வாயே.
நாரணன், சீராம, கேசவன், கூராழி
நாயகன், பூவாயன், ...... மருகோனே!
நார
தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு
நாடகஞ் சேய் தாளர் ...... அருள்பாலா!
சூர்
அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட
சூரியன் தேர் ஓட ...... அயில் ஏவீ!
தூ
நறும் காவேரி சேரும் ஒண் சீறாறு
சூழ் கடம்பூர் தேவர் ...... பெருமாளே.
பதவுரை
நாரணன் சீராம கேசவன்
கூர்ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே --- நாராயணர், ஸ்ரீராமர், கேசவர், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த
தலைவர், பூலோகத்தில் இடையர்
குலத்தில் அவதரித்த கண்ணபிரானின் திருமருகரே!
நார(தர்) தும்பூர்
கீதம் ஓத
--- நாரத முனிவரும், தும்புருவரும்
கீதங்களை இசைக்க,
நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா ---
நின்று திருநடனம் புரிகின்ற சிவந்த திருவடியை உடைய சிவபெருமான் அருளால்
வந்த பாலகுமாரரே!
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட --- சூரபதுமனும் அவனுடைய வருத்தும் செயல்களும் கடலிலே கிடந்து
அழியவும்,
சூரியன் தேர் ஓட அயில் ஏவீ --- சூரியனுடைய தேர் பழைய
முறைப்படி ஓடவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
தூநறும் காவேரி
சேரும் ---
தூய நறுமணமுள்ள காவிரி ஆற்றுடன் சேருகின்ற,
ஒண் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே ---
ஒளி பொருந்திய நீரை உடைய சிறிய ஆறு சூழ்ந்துள்ள கடம்பூர் என்னும் திருத்தலத்தில்
எழுந்தருளி உள்ள, தேவர்கள்
போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
வாரும் இங்கே வீடு
இதோ
--- இங்கே வாருங்கள், என்னுடைய வீடு இதோ (அருகில்
உள்ளது),
பணம் பாஷாணம் --- எனக்குப் பணம் விடத்தைப்
போன்றது,.
என் இயல் ஊடே மால் கடந்தே போம் --- என்னை
அன்புடன் கலந்து அனுபவித்து, உமது இச்சையைத்
தீர்த்துக் கொண்டு போங்கள்,
வாடி பெண்காள் --- பெண்களே
வாருங்கள்,
பாயை போடும் என்று ஆசார வாசகம் போல்
கூறி --- பாயைப் போடுங்கள் என்று உபசாரம் போன்ற வார்த்தைகளைக் கூறி,
அணை மீதே சேரும் முன்
காசு ஆடை வாவியும் --- படுக்கையில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, உள்ள பொருளையும், ஆடைகளையும் பறித்தும்,
போதாமை --- அவை போதாது என்று,
தீமை கொண்டே போம் என அட மாதர் --- குற்றம்
கூறி ஓடிப் போம் என்று வருத்துகின்ற விலைமாதர்கள்
சேர் இடம் போகாமல் --- உள்ள இடத்தில்
நான் போகாமல்,
ஆசு வந்து ஏறாமல் --- குற்றங்கள்
வந்து என்னைப் பொருந்தாமல்,
சீதளம் பாதாரம் அருள்வாயே ---
குளிர்ந்த திருவடித் தாமரைகளை அருள்வாயாக.
பொழிப்புரை
நாராயணர், ஸ்ரீராமர், கேசவர், கூர்மை கொண்ட சக்ராயுதத்தைத் தரித்த
தலைவர், பூலோகத்தில் இடையர்
குலத்திலு அவதரித்த கண்ணபிரானின் திருமருகரே!
நாரத முனிவரும், தும்புருவரும் கீதங்களை இசைக்க, நின்று திருநடனம்
புரிகின்ற சிவந்த திருவடியை உடைய
சிவபெருமான் அருளால் வந்த பாலகுமாரரே!
சூரபதுமனும் அவனுடைய வருத்தும்
செயல்களும் கடலிலே கிடந்து அழியவும்,
சூரியனுடைய
தேர் பழைய முறைப்படி ஓடவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
தூய நறுமணமுள்ள காவிரி ஆற்றுடன்
சேருகின்ற, ஒளி பொருந்திய நீரை
உடைய சிறிய ஆறு சூழ்ந்துள்ள கடம்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள, தேவர்கள்
போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
இங்கே வாருங்கள், என்னுடைய வீடு இதோ அருகில் உள்ளது. எனக்குப்
பணம் விடத்தைப் போன்றது. என்னை அன்புடன் கலந்து அனுபவித்து, உமது இச்சையைத் தீர்த்துக் கொண்டு
செல்லுங்கள்.
பெண்களே வாருங்கள். பாயைப் போடுங்கள் என்று உபசாரம் போன்ற வார்த்தைகளைக் கூறி, படுக்கையில்
கலந்துகொள்வதற்கு முன்னதாக, உள்ள பொருளையும், ஆடைகளையும் பறித்தும், அவை போதாது என்று,
குற்றம்
கூறி ஓடிப் போம் என்று வருத்துகின்ற விலைமாதர்கள் உள்ள
இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து
என்னைப் பொருந்தாமல், குளிர்ந்த திருவடித் தாமரைகளை அருள்வாயாக.
விரிவுரை
வாரும்
இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம், என் இயல் ஊடே மால் கடந்தே போம் ---
நடு
வீதியில் நின்று அவ்வீதிவழியே செல்லும் இளைஞர்களை வலிந் தழைத்து பல இனிய
வார்த்தைகளைக் கூறி கண்வலை வீசித் தமது நடை உடைகளால் மயக்குவார்கள். பொருளில்
தமக்குப் பற்று இல்லாத்து போலச் சாகசமாகப் பேசுவார்கள். ஆனாலும் பொருளைப் பறித்த
பின்னரே கலவிக்கு உடன்படுவார்கள். மனமுடனே பொருளையும் ஆவியையும் பறிமுதல் புரியும்
விலைமகளிரது சாகசங்களை எடுத்துக் கூறி, அவர்களிடத்து
மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார் அடிகளார். சிவஞானம் தலைப்படுமாறு
பக்திநெறி சென்று முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி மாதர் ஆசையை நீக்குவதே
ஆகும். முதலில் விலைமகளிரை வெறுத்து, இல்லறத்தில் இருந்து, பின்னர் அதனையும்
வெறுத்து, நிராசையை மேற்கொள்ள வேண்டும்.
பிற
திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளது காண்க.
எங்கேனும்
ஒருவர்வர, அங்கேகண் இனிதுகொடு,
"இங்குஏவர் உனதுமயல் தரியார்"என்று
"இந்தாஎன்
இனியஇதழ் தந்தேனை உறமருவ"
என்றுஆசை குழைய,விழி இணையாடி
தங்காமல்
அவருடைய உண்டான பொருள் உயிர்கள்
சந்தேகம் அறவெ பறி கொளுமானா
சங்கீத
கலவிநலம் என்று ஓது முத்திவிட
தண்பாரும் உனது அருளை அருள்வாயே” ---
திருப்புகழ்.
அங்கை
மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ...... அறியீரோ?
அன்று
வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ......துயில்வாரா,
எங்கள்
அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்? ......இதுபோதாது?
இங்கு
நின்றது என்? வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே ---
திருப்புகழ்.
அம்கை
நீட்டி அழைத்து, பாரிய
கொங்கை காட்டி மறைத்து, சீரிய
அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ...... உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை
பங்கம்
ஆக்கி அலைத்து, தாடனை
கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு
இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே.. --- திருப்புகழ்.
வாடி
பெண்காள், பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி ---
தனது
பணிப்பெண்களிடம் "ஏ,பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள்" என வந்தவர் காதில் படும்படியாக என்று உபசார வார்த்தைகளைக்
கூறுவார்கள். வந்தவர் மனம் மயங்கிவிடும். தன் மீது மிக்க அன்பு கொண்டவர் போலும் என
எண்ணி மயங்குவர்.
அணை
மீதே சேரும் முன் காசு ஆடை வாவியும், போதாமை, தீமை கொண்டே போம் என அட மாதர், சேர்
இடம் போகாமல்
---
வவ்வுதல்
- கவர்தல். வவ்வியும் என்னும் வாவியும் என நீண்டது.
அடுதல்
- துன்புறுத்துதல்,
அட்டம்
என்று கொண்டால் பிடிவாதமாக என்று பொருள். அடம் பிடித்தல்.
பேசுகின்ற
உபசார வார்த்தைகளிலும், புரிகின்ற உபசாரச் செயல்களிலும் மனம் மயங்கிய, கலவிக்கு இசைந்த பின்னர், பொருளைப்
பறித்துக் கொண்டு தான், தனது உடம்பை வழங்குவர் விலைமாதர். அதுவும் போதாது என்று
உணர்ந்தால், குற்றங்களைக் கறிபித்துக் கொண்டு, அதற்கு ஏற்ப வசைச் சொற்களைப் பேசி,
தமது இடத்தை விட்டுப் போகுமாறு துரத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சேரக்
கூடாது என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.
ஆசு
வந்து ஏறாமல், சீதளம் பாதாரம் அருள்வாயே ---
ஆசு
- குற்றம்.
சீதளம்
- குளிர்ச்சி.
பாத
அரவிந்தம் - பாத தாமரை. பாதாரம் என்று வந்தது.
உயிர்க்
குற்றங்கள் வந்து பொருந்தாமல்படிக்கு, முருகப் பெருமான் தனது குளிர்ந்த தாமரை
போன்ற திருவடிகளைத் தந்து அருள் புரிய வேண்டுகின்றார். "சீதள வாரிஜ பாதா"
என்றும், "சீதள பத்மம் தருவாயே" என்றும் அடிகளார் பிற இடங்களில் அருளி இருத்தல்
காண்க.
இறைவன் திருவடி மிகவும் குளிர்ந்து இருப்பது. பிறவி வெப்பத்தை ஆற்றுவது.
ஈசன் எந்தை இணையடி நீழல், மாசில் வீணை போன்றது. மாலை
மதியம் போன்றது. வீசு தென்றலை ஒத்தது.
வீங்கு இள வேனிலை நிகர்த்தது. மூசு வண்டு அறை பொய்கையைப் போன்றது.
பூவாயன் ---
பூ + ஆயன் = பூவாயன் என்று கொண்டு பூமியிலை ஆயர் குலத்தில் அவதரித்தவர் திருமால்
என்று பொருள் கொள்ளலாம்.
பூ + வாயன் = பூவாயன் என்று கொண்டு, "மலர் வாயன்", தாமரை போன்ற வாயை
உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
சூரர்
அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட ---
அணங்கு
- அச்சம், வருத்தம், கொலை, மயக்கம்.
சூரபதுமனாதியரும்,
அவரால் உண்டான அச்சமும் வருத்தமும், அவர்கள் மாண்டொழிந்த போதே அழிந்தது.
சூரியன்
தேர் ஓட அயில் ஏவீ ---
தனது
தலைநகரம் ஆகிய வீரமகேந்திரபுரத்தின் வீதிகளின் வழியாகச் செல்லும்போது, சூரியன் தனது வெம்மையான கிரணங்களை
ஒடுக்கிக் கொண்டு, குளிர்ந்த ஒளியைப் பரப்பிச்செல்ல வேண்டும் என்பது சூரபதுமன்
ஆணை. இவ்வாறு சூரியனைச் சூரபதுமன் துன்புறுத்தினான். ஒருவரை அவரது இயல்பில்
செயல்பட விடாமல் தடுப்பது துன்பத்தைத் தருவது.
அறத்தினை
விடுத்த தீயோன்,
அருக்கனை
நோக்கி,
"நம்
ஊர்ப்
புறத்தினில்
அரணம் மீதாய்ப் போகுதல் அரிது, கீழ்மேல்
நிறுத்திய
சிகரி ஊடு நெறிக்கொடு புக்கு, வான்போய்
எறித்தனை
திரிதி,
நாளும்
இளங் கதிர் நடாத்தி" என்றான். --- கந்த
புராணம்
சூரபதுமனுடைய
ஆணாயால், வானுலகத்தில் இருந்த
பன்னிரு சூரியர்களும் தமது நிலை அழிந்து, தம்முடைய செயல் அற்ற நிலையில் துன்பம்
அடைந்து,
முருகப்
பெருமாளைப் புகலாக அடைந்தார்கள். தன்னிடம் தஞ்சம் புகுந்த அவர்களுக்கு
எம்பெருமான் கருணை புரிந்தார்.
அகர
நெருங்கின் ஆமயம் ...... உற ஆகி,
அவசமொடும் கையாறொடும் ...... முனம் ஏகிக்
ககனம்
மிசைந்த சூரியர் ...... புக, மாயை,
கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே. --- (சிகரமருந்த)
திருப்புகழ்.
வேலாயுதத்தை
விடுத்து முருகப் பெருமான் சூரபதுமனாதியரை அழித்தமையால்,சூரியனுடைய தேர் பழைய
முறைப்படி ஓடத் தொடங்கியது.
தூநறும்
காவேரி சேரும் ஒண் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே ---
தூய
நறுமணமுள்ள காவிரி ஆற்றுடன் சேருகின்ற, ஒளி பொருந்திய நீரை உடைய சிறிய ஆறு
சூழ்ந்துள்ள கடம்பூர் என்னும் திருத்தலம், சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்
ஆகும்.
சிதம்பரம்
- காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து
தென்மேற்கே 32 கி.மீ. தொலைவில்
கடம்பூர் உள்ளது.
காட்டுமன்னார்குடியில்
இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து
மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில்
உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம்.
இறைவர்
: அமிர்தகடேசுவரர்
இறைவியார்
: சோதி மின்னம்மை, வித்யுஜோதி நாயகி
தல
மரம் : கடம்பு
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
பாற்கடலில்
அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல்
அதனை பருகச்சென்றனர். இதைக் கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுத கலசத்தை எடுத்துச் சென்று விட்டார்.
அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி
தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை
உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு
வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர்
சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர்
இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி
அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு
வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட
இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை
இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன்
காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச் சக்கரத்தை
தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோயிலை ஒரு அடிகூட
நகர்த்த முடியவில்லை. இந்தின் இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து
"தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாக சொல்லி", இந்திரனை இங்கு வந்து தன்னை வணங்கும்
படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான்.
தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
இந்திரன்
கோயிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது விநாயகர் சக்கரத்தை மிதித்தன்
அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறை பின்பக்க
சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை
வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர்.
இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன்
இருக்கிறார். கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி
ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி
புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும்
காட்சியை தரிசிக்கலாம். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார்.
இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர்
ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது
நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன்
இருக்க, அவருக்கு கீழே அரங்கநாதர்
பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. அம்பாளைத் தன்தொடை மீது இருத்தி ஆலிங்கன
மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பமும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.
ரிஷபதாண்டவமூர்த்தி:
இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார்.
இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை
தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் உள்ளனர்.
இந்திரனின்
ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த
கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை
மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை
இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.
திருஞானசம்பந்தப்
பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டு, திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
கருத்துரை
முருகா!
விலைமாதர் வசமாகி அழியாமல், திருவடியைத் தந்து அருள்.
No comments:
Post a Comment