திரு முதுகுன்றம் - 0762. திருமொழி உரைபெற





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருமொழி (திரு முதுகுன்றம்)

முருகா!
உனது திருவருளில் அன்பு இல்லாதவர்கள் படுகின்ற துன்பத்தை அடியேன் படுகின்றேன்.
அடியேன் படும் துன்பத்தை ஒழித்து அருள்வாய்.


தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான


திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே

திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே

ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ

உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா

கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய்

கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே

முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே

முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திருமொழி உரைபெற, அரன் உனது உழிபணி
     செய முனம் அருளிய ...... குளவோனே!

திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே!

ஒருவரும் உனது அருள் பரிவிலர், வர்களின்
     உறுபடர் உறும் எனை ...... அருள்வாயோ?

உலகினில் அனைவர்கள் புகழ்வுற, அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா!

கருவரி உறுபொரு கணைவிழி குறமகள்
     கணின் எதிர் தரு என ...... முனம் ஆனாய்!

கருமுகில் பொருநிற அரிதிரு மருமக!
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே!

முருகு அலர் தருஉறை அமரர்கள் சிறைவிட
     முரண் உறும் அசுரனை ...... முனிவோனே!

முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.

 
பதவுரை


         உலகினில் அனைவர்கள் புகழ்வுற --- உலகத்தில் உள்ள மக்கள் யாவரும் புகழ்ந்து போற்ற,

         அருணையில் ஒரு நொடி தனில்வரு மயில்வீரா --- திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலின் மீது வந்து உதவிய வீரரே,

         கரு வரி உறு பொரு கணைவிழி குறமகள் --- கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூர்மையான  திருக்கண்களை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியின்

         கணின் எதிர் தரு என முனம் ஆனாய் --- கண் எதிரில் முன் ஒரு நாள் வேங்கை மரமாக ஆனவரே!

         கருமுகில் பொரு நிற அரி திருமருமக --- கார்மேகத்தை ஒத்த வண்ணம் உடைய திருமாலின் அழகிய மருகரே!

         கருணையில் மொழி தரு முதல்வோனே --- கருணையால் உபதேச மொழியை அளித்த முதல்வோனே,

         முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட --- நறுமணம் கமழும் மலர் உள்ள கற்பகமரம் உள்ள தேவலோகத்தில் வாழ்ந்திருந்த தேவர்ககைச் சிறையில் இருந்து விடுவிக்க,

         முரண் உறும் அசுரனை முனிவோனே --- மாறுபட்டு நின்ற அசுரனைக் ககோபித்தவரே!

         முடிபவர் வடிவு அறு சுசிகரம் உறை --- இறப்பவர்கள் மீண்டும் பிறப்பதை அறுத்து, தூய்மை அடையச் செய்கின்ற

         தமிழ் முதுகிரி வலம் வரு பெருமாளே --- தமிழ் விளங்கும் முதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         திருமொழி உரை பெற அரன் உனது உழி பணிசெய --- அருள்மொழியின் பொருள் விளங்க உபதேசத்தைப் பெறும்பொருட்டு சிவபரம்பொருள் உமது ஏவலின் வழி பணிந்து இருக்க,

         முனம் அருளிய --- முன்பு அருள் புரிந்தவரே!

        குளவோனே --- சிவபரம்பொருளின் நெற்றி விழியில் இருந்து அவதரித்தவரே!

         திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் --- ஒளிமிக்க மதுரையில் சமணர்களை அவர்களின் உயிர்

         கழு தெறிபட மறுகிட விடுவோனே --- கழுவில் சிதறி வருந்துமாறு செய்தவரே!

         ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ --- நீக்க அரிய உனது திருவருளில் அன்பு இல்லாதவர்களைப் போலத் துன்புறும் அடியேனைக் காத்து அருள் புரிவாயோ?


பொழிப்புரை

         உலகில் உள்ளோர் யாவரும் புகழ்ந்து போற்ற, திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலின் மீது வந்து திருக்காட்சி புரிந்து உதவிய வீரரே,

         கரிய ரேகைகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூர்மையான  திருக்கண்களை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் கண் எதிரில் முன் ஒரு நாள் வேங்கை மரமாக ஆனவரே!

     கார்மேகத்தை ஒத்த வண்ணம் உடைய திருமாலின் அழகிய மருகரே!

      கருணையால் உபதேச மொழியை அளித்த முதல்வவோனே!

     நறுமணம் கமழும் மலர் உள்ள கற்பகமரம் உள்ள தேவலோகத்தில் வாழ்ந்திருந்த தேவர்ககைச் சிறையில் இருந்து விடுவிக்க, மாறுபட்டு நின்ற அசுரனைக் கோபித்தவரே!

      இறப்பவர்கள் மீண்டும் பிறப்பதை அறுத்து, தூய்மை அடையச் செய்கின்ற தமிழ் விளங்கும் முதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் வெற்றியோடு வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

     அருள்மொழியின் பொருள் விளங்க உபதேசத்தைப் பெறும்பொருட்டு சிவபரம்பொருள் உமது ஏவலின் வழி பணிந்து இருக்க, முன்பு அருள் புரிந்தவரே!

     சிவபரம்பொருளின் நெற்றி விழியில் இருந்து அவதரித்தவரே!

      ஒளிமிக்க மதுரையில் சமணர்களை அவர்களின் உயிர் கழுவில் உடல் சிதறி வருந்துமாறு செய்தவரே!

     நீக்க அரிய உனது திருவருளில் அன்பு இல்லாதவர், அவர்களைப் போலத் துன்புறும் அடியேனைக் காத்து அருள் புரிவாயோ?


விரிவுரை


திருமொழி உரை பெற அரன் உனது உழி பணிசெய முனம் அருளிய குளவோனே ---

திருமொழி - குருமொழி என்பதே திருமொழி ஆகும்.

உழி - பக்கம், இடம்.

திருவை மொழிவது திருமொழி. திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை ஆகும். இலகியல் நிலையில் உள்ளார் விரும்புவது பொருள் என்பதால் அது திரு எனப்பட்டது. அருளியல் நிலையில் நாட்டத்தை வைத்துளார் விரும்புவது இறையருள் என்பதால் அது அவர்க்குத் திரு ஆனது.

உபதேச முகமாகப் பெறுவது திருமொழி ஆகும். அந்த ஒருமொழியே திருமொழி ஆகும். அந்த ஒரு மோழியே பல மொழிக்கும் இடம் தரும். அதுவே உயிர்க்குத் துன்பத்தைத் தரும் மலத்தை ஒழிக்கும். அந்த குருமொழியையே மலை இலக்காகக் கொள்ளவேண்டும். மற்ற மொழிகள் எல்லாம் கருமொழிகள். அவை அரங்கு இல்லாமலேயே வட்டு ஆடுதலை ஒக்கும். கோடு கிழிக்காமலேயே வட்டு ஆடுதலைப் போன்றது. "அரங்கு இன்றி வட்டு ஆடி அற்றே" என்றார் திருவள்ளவ நாயனார். இடம் நிறைந்து இருந்தாலும், ஆடுவதற்கு ஏற்ற அரங்காக ஒரு இடத்தை வரைந்து கொள்ளவேண்டும்.

ஒருமொழியே பலமொழிக்கும் இடம்கொடுக்கும், அந்த
     ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த
குருமொழியே மலை இலக்கு, மற்றைமொழி எல்லாம்
     கோடு இன்றி வட்டு ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய்,
கருமொழி இங்கு உனக்கு இல்லை, மொழிக்குமொழி ருசிக்கக்
      கரும்பு அனைய சொல் கொடு உனைக் காட்டவும் கண்டனை, மேல்
தருமொழி இங்கு உனக்கு இல்லை, உன்னைவிட்டு நீங்காத்
      தற்பரமாய் ஆனந்தப் பொற்பொதுவாய் நில்லே.

என்றார் தாயுமான அடிகளார்.

இதன் பொருள் ---

ஒப்பில்லாத ஓர் உறுதிச் சொல்லாம் "சிவசிவ" என்னும் செந்தமிழ்த் திருமாமறையே ஒரு மொழியாகும்; அம் மொழியே பலவகையான மொழிகட்கும் பெற்றோர் போன்று இடங் கொடுக்கும். அம் மொழியே தொன்மை மலப் பிணிப்பினை அகற்றி ஒழிக்கும், ஒழிக்கும் என மொழிந்த அக் குருமொழியே, மாறாத மலைக்குறி போன்று அசையாது நிலை நிற்பது. அம்மொழி அல்லாத பிறமொழிகளெல்லாம் பயன்தரக் கூடிய வாயில் இல்லாத வெறுமொழிகளாகும். இதற்கு ஒப்பு சிறுபிள்ளைகள் கோடு கிழியாமல் வட்டாடும் விளையாட்டாகும். 'சிவசிவ' யென்னும் செந்தமிழ்த் திருமாமறையினைச் சீர் பெற இடையறாது ஓதிக் கொண்டிருப்பாயானால், இன்னம் ஓர் அன்னை வயிற்றில் தோன்றுவாய் எனச் சொல்லும் கருமொழி உனக்கு உண்டாவதில்லை. இனிய கரும்பின் திண்ணிய கணுக்களாகிய மொழிக்கு மொழி இன்சுவை தரத்தக்க மேலான சொல்லைக் கொண்டு உன் உண்மையினைக் காட்டியருளவும், நீ கண்டு கொண்டாய்; அதற்கு மேலாக உனக்குப் போதிக்கத்தக்க எந்த மொழியும் இல்லை (ஆதலினால்) உன்னை விட்டு நீங்காது தானே தனிமுதலாகவும், பேரின்பப் பொன்னம்பலமாகவும் இருக்கின்ற சிவனடிக்கீழ் நிற்கக் கடவாய்.

அந்தச் சிறப்பு மிக்க திருமொழியை குருமுகமாகப் பெறுதல் வேண்டும் என்பதை உயிர்களுக்கு உணர்த்த சிவபரம்பொருள் ஆடிய அருள் விளையாடல், அவர் முருகப் பெருமானிடமிருந்து உபதேசம் பெற்றது.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.
  
திருக்கைலாய மலையானது உலகெலாம் அழிந்து ஒழிகின்ற ஊழிக் காலத்தில்ம் அழியாத சிறப்பினை உடையது. அம்மலையில் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். அவர்கட்கு நடுவில் முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். அப்பொழுது அந்த இடத்திற்குச் சந்திரகாசன் என்பவன் வந்தான். அவன் சிவகணங்களுக்குள் சிறந்தவன். அவன் சிவபெருமானைப் பலவாறு புகழ்ந்து போற்றினான். தனக்குப் பிரணவப் பொருளை உரைத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் திருவருள் செய்து சந்திரகாசனுக்குப் பிரணவப் பொருளை உரைத்தருளினார். முருகக் கடவுள் சிவபெருமான் சந்திரகாசனுக்கு உரைத்தருளிய பிரணவப் பொருளுரையைத் தெரிந்துகொண்டார். ஆனால் தாம் அதனைக் கேட்டுணர்ந்து கொண்ட தன்மையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நாட்கள் பல சென்றன.

பிறகு முருகக்கடவுள் இறைவனையும் இறைவியையும் விட்டுத் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்து இருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடும் பொருட்டுத் திருக்கயிலாய மலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டு அருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப்போயினர்.

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால் எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால் என் தம்பியால் இப்போது பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்கமாட்டாய்.  எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று கூறுவாயாகில் உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுது கூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந்த நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர்.

பிறகு தாம் திருவேங்கடமலையை அடைந்து திருக்கோயில் கொண்டருளியதோடு படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டு அருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடந் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞான சத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனில் இருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினையுடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர். பிழை செய்தவர்கள் நம்மிடத்திற் பிழை செய்தவர்கள் ஆவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் "நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்கள்.

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு யாம் கூறியதாகக் கூறி விடச்செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கி, சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கைலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மை உடையவர்களாகிய பெரியவர்கள் செய்தற்கு அரிய பிழைகளை மனதறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். ஒறுக்க வேண்டிய காலத்தும் கடிது ஓச்சி மெல்ல எறிவர். தன்னிடத்தில் சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது நம் பக்கல் அடைந்தனன். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ ?" என்று உசாவினார்.

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவற்றவன் என்றாய். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல், கண்டபடி சொல்லலாமோ ?" என்றார்.

சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருள் உரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகாசல முருகனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

தனக்குத்தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கம் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவார்த்த நகர்" என்னும் பெயரையும் பெற்றது. இத் தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.    --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”                     ---(ஆலமேற்ற) திருப்புகழ்.


நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்                   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே--- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.         ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக.`சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.   --- அபிராமி அந்தாதி.
 
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டுசெய்தே. --- அபிராமி அந்தாதி.
  
சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.  --- சிவஞான சித்தியார்.

குளம் - நெற்றி. சிவபெரானின் நெற்றி விழியில் அவதரித்தவர் முருகப் பெருமான் என்பதால், "குளவோனே" என்றார் அடிகளார்.

கல்லாடம் கூறுமாறு காண்க..

"கடுவினை அங்குரம் காட்டி, உள் அழுக்காறு
எண்திசைச் சாகைகொண்டு, இருள்மனம் பொதுளி,
கொடும் கொலை வடுத்து, கடும்பழிச் சடை அலைந்து,
இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம்
சுற்று உடல் பெற்று, துணைப் பதினாயிரம்            
மற்று அது நீண்டு, மணி உடல் போகி,
ஐம்பது நூறுடன் அகன்று, சுற்று ஒழுக்கி,
பெருங்கள இணர் தந்த், வை கீழ்க் குலவிய
விடமாக் கொன்ற நெடுவேல் குளவன்"

நஞ்சை ஒத்த மாயையாகிய முளையைத் தோற்றுவித்து, தன் நெஞ்சத்தின்கண் உள்ள பொறாமையாகிய கிளைகளை எட்டுத் திசைகளிலும் பரப்பி, இருண்ட நெஞ்சமாகிய தளிர்களைத் தளிர்த்து, தன் உடலின் சுற்றளவு ஆயிரம் காத தூரம் திரட்சியாகப் பெற்று, அந்த மரமானது, இருபதினாயிரம் காவத தூரம் உயர்ந்து, அழகிய உடலானது சென்று, சுற்றிலும் ஐயாயிரம் காததூரம் அகலப் பரப்பி, மிக்க வஞ்சகமாகிய பூங் கொத்துக்களை ஈன்று, கொடிய கொலையாகிய பிஞ்சுகளை அரும்பி, அக்கிளை முதலியவைகள் தலைகீழாகப் பொருந்தியதாகி மிகுந்த பழியாகிய வேர்கள் மேலே அலையப்பெற்ற, நஞ்சை ஒத்த சூரபதுமனாகிய மாமரத்தைத் தடிந்த நெடிய வேற்படையினையுடைய முருகக் கடவுள்.

திறல் உயர் மதுரையில் அமணரை உயிர், கழு தெறிபட மறுகிட விடுவோனே ---

இறைவனுக்கு எம்மதமும் சம்மதமே. "விரிவு இலா அறிவினோர்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்" என்பார் அப்பர் பெருமான். நதிகள் வளைந்து வளைந்து சென்று முடிவில் கடலைச் சேர்வன போல், சமயங்கள் தொடக்கத்தில் ஒன்றோடு ஒன்று பிணங்கி, முடிவில் ஒரே இறைவனைப் போய் அடைகின்றன. ஒரு பாடசாலையில் பல வகுப்புக்கள் இருப்பன போல், பல சமயங்கள், அவ்வவ் ஆன்மாக்களின் பக்குவங்கட்கேற்ப வகுக்கப்பட்டன. ஒன்றை ஒன்று அழிக்கவோ நிந்திக்கவோ கூடாது.

ஏழாம் நூற்றாண்டில் பாண்டி யாட்டில் இருந்த சமணர்கள் அவர்களுக்கே உரிய கொல்லாமை என்னும் நெறியை விடுவித்து, நன்மையின்றி வன்மையுடன் சைவசமயத்தை எதிர்த்து பலரையும் பலவாறாகத் துன்புறுத்தி வந்தனர்.  திருநீறும் கண்டிகையும் புனைந்த திருமாதவரைக் கண்டவுடன் "கண்டு முட்டு" என்று நீராடுவர். "கண்டேன்" என்று ஒருவன் கூறக் கேட்டவுடன் "கேட்டுமுட்டு" என்று மற்றொருவன் நீராடுவான். தங்கள் குழந்தைகளையும் "பூச்சாண்டி" (விபூதி பூசும் ஆண்டி) வருகின்றான், "பூச்சுக்காரன்" வருகின்றான் என்று அச்சுறுத்துவர். இப்படி பலப்பல அநீதிகளைச் செய்து வந்தனர்.  அவைகட்கெல்லாம் சிகரமாக திருஞானசம்பந்தருடன் வந்த பதினாறாயிரம் அடியார்கள் கண்துயிலும் திருமடத்தில் நள்ளிரவில் கொள்ளி வைத்தனர்.

இவ்வாறு அறத்தினை விடுத்து, மறத்தினை அடுத்த சமணர்கள், அனல்வாது, புனல்வாது புரிந்து, தோல்வி பெற்று, அரச நீதிப்படி வழுவேறிய அவர்கள் கழுவேறி மாய்ந்தொழிந்தனர்.

அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்து, திருநீற்றால் அமராடி, பரசமய நச்சு வேரை அகழ்ந்து, அருள் நெறியை நிலைநிறுத்தியது.

ஒருவு அரும் உனது அருள் பரிவு இலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ ---

ஒருவுதல் - நீக்குதல், விடுத்தல்.

அரும் - அரியது.

பரிவு - அன்பு.

படர் - துன்பம்.

உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில்தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு முரணும். உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என அறிக.

நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர்சோகம் செய்கமலத்து ஆம்.
  
வினை மூவுருவம் கொள்ளும்

வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.

பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினிடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றினுக்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

கன்மநெறி திரிவிதம், நல் சாதிஆயுப் போகக்
         கடன் அது என வரும், மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்,
தொன்மையது ஊழ்அல்லது உணவுஆகா, தானும்
         தொடங்குஅடைவில் அடையாதே தோன்றும், மாறித்
தன்மைதரு தெய்விகம் முற்பௌதிகம் ஆன்மிகம் ஆம்,
         தகையில்உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்
நன்மையொடு தீமைதரு சேதனனுக்கு இவண் ஊண்
         நாடில்அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே.           --- சிவப்பிரகாசம்.

வினைக்கு ஈடாக, இனம், வாழ்நாள், துய்த்தல் ஆகிய மூன்றும் ஓர் உயிருக்குத் தொன்று தொட்டுப் பொருந்தி வரும். அவ்வினை பக்குவம் அடைந்த காலத்தே உயிர்களுக்குப் பயன் தரும். உயிர்களால் நுகரப்படும். அப்போது அது ஊழ் என்ற பெயரைப் பெறும். வினை ஈட்டப்பட்ட கால அடைவிலே உயிர், வினைப் பயன்களை நுகர்வதில்லை. வினையின் வன்மை மென்மைகளுக்கு ஈடாகவும், பக்குவப்பட்ட முறைமையிலும் உயிர்கள் அவற்றின் பயன்களை நுகருமாறு இறைவன் கூட்டுவான். வினைகள் உயிரை வந்து சாரும் போது மூன்று வழிகளிலே வந்தடையும். அவற்றை ஆதி தெய்விகம் ஆதி ஆன்மிகம் ஆதி பவுதிகம் என்று கூறுவர். அறிவற்ற பொருள்களாலும் அறிவுடைப் பொருள்களாலும் வினைப்பயன் வினைசெய்த உயிரைச் சாரும். ஓர் ஆன்மாவின் இப்பிறவியில் அவ்வுயிர் நல்லனவும் தீயனவும் நுகர்வதனை ஆய்ந்து பார்த்தால் அவை அவ்வுயிரின் முன்னை வினைப் பயனைப் பொறுத்தே அமைகின்றன என்பது புலனாகும்.

வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.

அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும். "பிராரத்தம்" என்பதே மக்கள் வழக்கில் "பிராப்தம்" என வழங்கப்படுகின்றது.

ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.

இனி, பிராரத்தம் என்பது ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1)     ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

(2)     ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

(3)     ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1.    உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2.    வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை --- சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும்அன்றே.

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

இவ்வினைகளே பிறப்பு இறப்புக்குக் காரணமாம். வினை ஒழிந்தால் இத் தேகம் தினைப் போது அளவும் இராது.

வினைப்போக மேஒரு தேகம் கண்டாய்,
         வினைதான் ஒழிந்தால்
தினைப்போது அளவுநில்லாது கண்டாய்,
         சிவன் பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை
         நீங்கி நெறியின் நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே!
         எனக்கு உற்றவரே.                  ---  பட்டினத்தார்.

", மனமே! இவ்வுடம்பானது இருவினையின் காரியத்தால் ஆகியது. அக் கன்மத்தை நுகர்ந்து முடிந்தால், இவ்வுடம்பு ஒரு கணமும் நில்லாது அழியும். ஆதலினால், சிவபெருமானை நினைப்பாயாக. சிவசிந்தை செய்யும் அடியாருடன் உறவு கொள்வாயாக. சிவசிந்தை இல்லாதவரை விட்டு விலகுதி.  இங்ஙனம் நீ நடப்பாயேல் எனக்கு உற்ற துணைவர் உன்னைப்போல் ஒருவர் உண்டோ?” என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க.

உயிர்கட்கு முற்பிறப்பில் செய்யப்பட்டுக் கிடந்த இருவினைக்கு ஈடாக இப்பிறப்பின் கண் இன்ப துன்பங்கள் எய்தும். 

வினை சடமாகலின் அதனை இறைவன் உயிர்கட்கு உரிய காலத்தில் ஊட்டுவன். மருத்துவனும் மன்னனும் போல் என்று உணர்க.

இருவினை இன்பத் துன்பத்து இவ்வுயிர் பிறந்து இறந்து
வருவது போவது ஆகும், மன்னிய வினைப் பலன்கள்
தரும் அரன் தரணியோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவும் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே.      ---  சிவஞான சித்தியார்.

நல்வினை தீவினை என்னும் இருவகை வினைகளால் உயிர்களானது பிறந்து இறந்து துன்பத்தையே அனுபவித்து வருகின்றன. நல்வினையும் துன்பத்தைத் தருமா என்னும் வினா எழலாம். "இருள்சேர் இருவினை" என்று திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்ததைக் கருத்தில் கொள்ளவேண்டும்.  நல்வினையின் பயனை அனுபவித்துக் கழித்த உயிரானது, மீண்டும் பிறவிக்கு வரும். பிறவியே துன்பத்தைத் தருவது. பிறவிக்கு வந்தாலும் துன்பமே. எனவேதான்,

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்,
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது"

என்ற காட்டினார் மணிமேகலை ஆசிரியர்.

பிறவியால் வரும் துன்பமும், பிறவியாகிய துன்பமும் தீர வேண்டுமானால், இறையருளைப் பெறவேண்டும். இறையருளைப் பெற இறைவனை உள்ளன்போடு வழிபடுதல் வேண்டும். இறையருள் இல்லாதவர் துன்பப் படுதல் இயல்பு. இறையருளைப் பெற்ற அப்பர் பெருமான், "இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை" என்று பாடினார். அப் பெருமான் பாடி அருளிய பின்வரும் அருட்பாடல்களையும் கருத்தில் கொள்க.

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும், நீர்,
இன்பம் வேண்டில், இராப்பகல் ஏத்துமின்!
என் பொன், ஈசன், இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.

துன்பம் இல்லை, துயர் இல்லையாம் இனி,
நம்பன் ஆகிய நன்மணி கண்டனார்
என் பொனார் உறை வேட்கள நன்னகர்
இன்பன் சேவடி ஏத்தி யிருப்பதே.

துன்பம் இல்லாமல், துயரம் இல்லாமல், என்றும் இனப்த்தோடு வாழவேண்டுமானால், நமது வினைகளைத் துடைத்து, நல்லருள் புரியும் பரம்பொருளை நாடி, அவனது அருளைப் பெறுதல் வேண்டும். அடியவர்களாக வேண்டும்.  அடியவர்கள் என்றால் வேடத்தைப் புனைந்து கொள்வது மட்டுமல்ல. வேடத்திற்கு உரிய நெறியில் ஒழுகுதல்.  இதனை, திருமூல நாயனார் பின்வரும் பாடலால் தெளிவுபடுத்துகின்றார்.

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப்
பொருளாம் தனது உடல் பொற்பு அது நாடி
இருளானது இன்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

இதன் பொழிப்புரை :

சிவனது சத்திபதிவால் தாம் அவனுக்கு அடிமை ஆதலை உணர்ந்து, அதற்கேற்ப ஒழுகும் ஒழுக்கம் உடையவராய்த் தமது உடம்பும் ஏனைய பொருள்கள்போலச் சிவனது உடைமையே ஆகும் என்னும் சிறப்பை உணர்ந்து, அவ் இரண்டு உணர்வையும் தடுத்து நிற்கும் இருள் நீங்கப் பெற்று, தம்செயல் அற்று இருப்போர் வேடமே `சிவவேடம்` எனக் கொள்ளப்படும் சிறப்புடைய வேடமாம்.

இறையருள் இல்லாதவர்கள் துன்பத்தையே அனுபவிப்பர்.  சுந்தரர் பெருமானை நினைந்து துன்பத்திலு ஆழ்ந்த பரவை நாச்சியார், திருவாரூர்ப் பெருமானை நினைந்து,

தேருங் கொடியும் மிடையும் மறுகில்
     திருவா ரூரீர்! நீரே அல்லால்
ஆர் என் துயரம் அறிவார்? அடிகேள்,
     அடியேன் அயரும் படியோ இதுதான்?
நீரும் பிறையும் பொறிவாள் அரவின்
     நிரையும், நிரைவெண் தலையின் புடையே
ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்!
     உமது அன்பு இலர்போல் யானோ உறுவேன்?“

பாடியதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

"முன்னோன் அருள்முன்னும் உன்னா
    வினையின் முனகர் துன்னும்
இன்னாக் கடறு இது, ப் போழ்தே
    கடந்து இன்று காண்டும் சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத்
    தென்புலி யூர்ப் புகழ்வார்
தென்னா என உடை யான் நடம்
    ஆடுசிற் றம்பலமே"

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையார்ப் பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

இதன் பொருள் --- முன்னைப் பழம்பொருள் ஆகிய இறைவனது திருவருளை முற்பிறப்பில் நினைந்து வழிபடாது, தீவினையைப் புரிந்த நீசர்களைச் சேரும் துன்பம் போன்றதாகிய இந்தக் காட்டை இப்பொழுதே கடந்து, மணிகள் விளங்கும் மாளிகைகளை உடைய தில்லையிலே இறைவனைப் போற்றி வழிபடுகின்றவர்கள், "தென்னா, தென்னா" என்று கூற, அவர்களை ஆட்படுத்தி அருள் புரிந்த இறைவன் கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தை இன்றே சென்று காண்போம்.

"கலர் ஆயினர் நினையாத் தில்லை
    அம்பலத்தான் கழற்கு அன்பு
இலர் ஆயினர் வினை போல், ருள்
    தூங்கி முழங்கி மின்னிப்
புலரா இரவும் பொழியா
    மழையும் புண்ணில் நுழைவேல்
மலரா வரும், மருந்தும் இல்லை-
    யோ, நும் வரை இடத்தே".

இதன் பொருள் ---

கீழ்நிலையில் உள்ளவர்கள் நினைந்து வழிபடா, தில்லை அம்பலவாணனின் திருவடிகளே நமக்குப் புகலிடம் என்று நினைந்து அன்பு செய்யாதவர்களின் வினையைப் போல, இருள் செறிந்து இருக்கின்ற இந்தப் பொழுதில் தோன்றுகின்ற மின்னலும், இடித்துப் பெய்யும் மழையும், புண்ணில் நுழைந்த வேல் போலத் துன்பத்தைச் செய்தன. இதற்கு ஒரு மருந்து உமது மலையில் இல்லையா?

எனவே, அடிகளார் நீக்குதற்கு அரிய இறைவன் திருவருள் இல்லாதார் படுவது போன்ற துன்பத்தை அனுபவிக்கின்ற அடியேனுக்கு அருள் புரிய வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டுகின்றார். நாமும் வேண்டுதற்கு உரியது இதுவே ஆகும்.


உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடி தனில்வரு மயில்வீரா ---

உலகத்தில் உள்ள மக்கள் யாவரும் புகழ்ந்து போற்ற, திருவண்ணாமலையில் ஒரு நொடியில் மயிலின் மீது வந்து முருகப் பெருமான் உதவிய பெருங்கருணையை அடிகளார் வியந்து பாடுமாறு காண்க.

குமர! குருபர! குணதர! நிசிசர
     திமிர தினகர! சரவணபவ! கிரி
     குமரி சுத! பகிரதி சுத! சுரபதி ...... குலமானும்
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய!
     முருக! சரண் என உருகுதல் சிறிதும் இல்,
     கொடிய வினையனை, அவலனை, சடனை .....அதிமோகக்

கமரில் விழவிடும் அழகு உடை அரிவையர்,
     களவினொடு பொருள் அளவு அளவு அருளிய
     கலவி அளறு இடை துவள்உறும் வெளிறனை,...... இனிது ஆளக்
கருணை அடியரொடு அருணையில் ஒருவிசை
     சுருதி புடைதர வரும், ரு பரிபுர
     கமல மலர்அடி கனவிலும் நனவிலும் ...... மறவேனே.
     
கரு வரி உறு, பொரு கணைவிழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய் ---

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.   
    
உலைப்படு மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி, தன் பரிசனங்கள் சூழ அங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

கரிய வரிகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூர்மையான  திருக்கண்களை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் கண் எதிரில் முன் ஒரு நாள் முருகப் பெருமான் வேங்கை மரமாக ஆனதை அடிகாளர் பாடுவதைக் காண்க.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட, மாமுனியும்
     வேங்கையுமாய் மறமின் ...... உடன்வாழ்வாய்!
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக!
     பாண்டியன் நீறு அணிய ...... மொழிவோனே!


வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே!
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே.         --- திருவேங்கடத் திருப்பகழ்.

வனசரர் ஏங்க, வான முகடுஉற ஓங்கி, ஆசை
     மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக
மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி,
     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே!      --- சீகாழித் திருப்புகழ்.
  
கருணையில் மொழி தரு முதல்வோனே ---

இறைவனே அருட்குருவாக எழுந்தருளி, அருள் உபதேசம் அருள் புரிந்து உயிர்களை ஆட்கொள்வான்.

இதனை, தாயுமான அடிகள் காட்டுமாறு காண்க.

"காண அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்
     கட்டாக விளையும், அதைக் கட்டோடே தான்
வீணினில் கர்ப்பூர மலை படு தீப் பட்ட
     விந்தை எனக் காண, ஒரு விவேகம் காட்ட,
ஊண் உறக்கம் இன்ப துன்பம் பேர் ஊர் ஆதி
      ஒவ்விடவும், எனைப்போல உருவம் காட்டிக்
கோண் அற ஓர் மான்காட்டி மானை ஈர்க்கும்
      கொள்கை என அருள் மௌன குருவாய் வந்து".

காணுதற்கு அரியன ஆகிய துன்பங்கள் அனைத்தும், ஒன்றே பலகால் வருதலும், பலவும் ஒருகால் வருதலுமாகக் கூட்டங் கூட்டமாக வந்து பெருகித் துன்புறுத்தும்.  அவ் வினைகள் அனைத்தும் பயன் இன்றிக் கழியுமாறு, கருப்பூர மலையானது தீப்பட்ட இடத்து எஞ்சாது முற்றும் அழியும் வியப்புப் போன்று, காணும்படி ஒப்பில்லாத ஒரு மெய்யுணர்வினை அடியேனுக்கு விளக்கியருளும் பொருட்டு, முழுமுதல் இறைவனாம் சிவபெருமானும் ஆருயிர்கட்கு உரிய உணவும் உறக்கமும் இன்பமும் துன்பமும் பெயரும், ஊரும் முதலிய ஏதும் ஒரு சிறிதும் யாண்டும் இயையா எனினும், மானைக் காட்டி மானைப் பிடிப்பது  போன்று1 மானுடச் சட்டையாகிய உருவினை நிலைக்களனாகக் கொண்டு எழுந்தருளி வந்து அடியேனுடைய மலக் கோணலை நீக்க மௌன குருவாய் எழுந்தருளி;

 
"தானேயும் இவ்வுலகம் ஒருமுதலும் ஆகத்
     தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையது ஆன
கோனாக ஒருமுதல் இங்கு உண்டு எனவும் யூகம்
     கூட்டியதும், சகமுடிவில் குலவுறு மெய்ஞ் ஞான
வானாக அம்முதலே நிற்கும் நிலை நம்மால்
     மதிப்பரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே,
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே, உண்மை
     அறிவித்த இடம் குருவாம், அருள் இலது ஒன்று இலையே".

தோற்றம், நிலை, இறுதி என்னும் மூன்று நிலைகளை உடைய இவ்வுலகம் தானாகவே அன்பு அறிவு ஆற்றல்களை உடையதாய்க் காணப்படும் ஒரு முழுமுதலாகாத தன்மையினால், இதனைத் திருக்குறிப்பு அளவால் படைத்துக் காக்கும் தன்மைத் தலைமையதான முதல்வனாய் ஒருவன் இங்கு உண்டு என்று உய்த்து உணரும்படி கூட்டியதும், உலக முடிவில் விளங்கா நின்ற மெய்யுணர்வுப் பெருவெளியாகிய அம் முழுமுதல் நிற்கும் நிலை நம்மால் அளவிட்டுக் கூற முடியாததாம் என்று வாய்வாளா நிலைமை எனப்படும் மோனமாய் இருத்தல் வேண்டும் என வைத்ததும் உன் மனமே ஆம். ஆனாலும் அம் மனத்தை அறிவில்லாத சடமென்று வருத்தம் கொள்ளாதே. மெய்யுணர்வுக் குரவனாய் வந்து அறிவித்து அருளுதற்கு இடமாய் நின்ற மனமும் அறிவுள்ளது போன்றாகும். எனவே, திருவருளின் இயக்கத்தின் முன் அருட்செறிவு இல்லாத பொருள்கள் ஒன்றுமில்லை. இவ் உண்மையை அறிவித்த இடத்திலே குருவருள் விளங்கும். வேறு ஒன்றும் இல்லை.

முருகப் பெருமான் தனக்கு குருவாக எழுந்தருளி அருள் புரிந்த கருணையை அடிகளார் வியந்து, "செபமாலை தந்த சற்குரு நாதா" என்று பாடினார்.


முடிபவர் வடிவு அறு சுசிகரம் உறை தமிழ் முதுகிரி வலம் வரு பெருமாளே --- 

சுசிகரம் - நன்மை, தூய்மை, மேன்மை.

"முதுகிரி" என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் "விருத்தகிரி" என வழங்கப்பட்டது. திருமுறைகளில் முதுகுன்றம் என்று வழங்குகின்றது. மக்கள் வழக்கில் விருத்தாசலம் என்று வழங்கப் படுகின்றது.

இந்தத் திருத்தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

  "தூசினால் அம்மைவீசத் தொடையின்மேல் கிடத்தித் துஞ்சும்
 மாசிலா உயிர்கட்கு எல்லாம் அஞ்செழுத்து இயல்பு கூறி
 ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால், அந்த
 காசியின் விழுமிது ஆன முதுகுன்ற வரையும் கண்டான்."
                                                           (கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

இத்திருத்தலம் "விருத்தகாசி" என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

கருத்துரை

முருகா! உனது திருவருளில் அன்பு இல்லாதவர்கள் படுவது போன்ற துன்பத்தை அடியேன் படுகின்றேன். அடியேன் படும் துன்பத்தை ஒழித்து அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...