இருந்தும் இறந்தோர்
32. இருந்தும் இறந்தோர்

மாறாத வறுமையோர், தீராத பிணியாளர்,
     வருவேட் டகத்தில் உண்போர்,
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்,
     மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய்து உய்குவோர், சிவிகைகள்
     சுமந்தே பிழைக்கின்றபேர்,
தொலையா விசாரத்து அழுந்துவோர், வார்த்தையில்
     சோர்வுபடல் உற்றபெரியோர்,

வீறாக மனையாள் தனக்கு அஞ்சி வந்திடு
     விருந்தினை ஒழித்துவிடுவோர்,
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
     மிக்கசபை ஏறும்அசடர்,

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்தசவம்
     ஆகி, ளி மாய்வர்கண்டாய்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     மாறாத வறுமையோர் --- என்றும் நீங்காத வறுமையில் உள்ளோர்,

     தீராத பிணியாளர் --- தீராத நோயால் பீடிக்கப்பட்டோர்,

     வரு வேட்டகத்தில் உண்போர் --- மாமனார் வீட்டில் உண்டு வாழ்பவர், 

     மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் --- மனைவியைத் தீய ஒழுக்கத்திலே ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளால் வாழ்க்கை நடத்துவோர்,

     மன்னும் ஒரு ராச சபையில் தூறாக நிந்தை செய்து உய்குவோர் --- அரச சபையிலே வீணான பழியைக் கூறி, அதனால் தனது சீவனத்தை நடத்துவோர்,

     சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் --- மனிதர்கள் அமர்ந்து செல்லும் பல்லக்கைச் சுமந்து வயிறு வளர்ப்போர்,

     தொலையாத விசாரத்து அழுந்துவோர் --- நீங்காத கவலையிலே மூழுகியவர்,

     வார்த்தையினில் சோர்வுபடல் உற்ற பெரியோர் --- சொன்ன சொல்லில் இருந்து மாறுபாடு கொண்ட பெரியோர்கள்,

     வீறாக மனையாள் தனக்கு அஞ்சி, வந்திடும் விருந்தினை ஒழித்து விடுவோர் --- மனைவிக்குப் பயந்து, வந்த விருந்தினரை விலக்கி விடுவோர்,

     செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை வீம்புடன் ஏறும் அசடர் --- செல்லுபடி ஆகாத வழக்கை நீதிமன்றங்களிலே பிடிவாதமாகச் சொல்லும் அசடர்கள்,

     இவர் எலாம் --- ஆகிய இவர்கள் எல்லாரும்,

     மாறாக --- முந்தைய பாடலிலே சொல்லப்பட்டவருக்கு மாறா,

     உயிருடன் செத்த சவம் ஆகி  ஒளி மாய்வர் --- உயிரோடு இருந்தாலும்,  இறந்த பிணமாகக் கருதப்பட்டு புகழ் குன்றுவர்.

     விளக்கம் --- வேட்டகம் - மாமனார் வீடு. வேட்ட அகம் -
விரும்பிய வீடு. விருந்து - புதுமை. விருந்தினர் - புதியவர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. சமைத்து உண்ண வழி இல்லாதவரை விருந்தினர் என்று கொள்ள வேண்டும்.

    இருந்து முகம்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
    விருந்து வந்தது என்று விளம்ப, வருந்திமிக
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடினான் தான்.

    ஔவையை விருந்தாளியாக அழைத்துச் சென்ற ஒருவன் ஔவையை வெளிப்புறம் காத்திருக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று தன் மனைவி பக்கத்தில் அமர்ந்து அவன் முகத்தை உருவி முத்தமிட்டான். அவன் தலையைப் பேன் பார்த்து விட்டான். இப்படியெல்லாம் அன்பைக் காட்டிவிட்டு விருந்து வந்திருக்கிறதுஎன்றான். உடனே அவள் கொடைத்தன்மை இல்லாத தனது பிறவிக் குணத்தைக் காட்டலானாள். ஆட்ட பாட்டத்தோடு கணவனை ஓட ஓட முறத்தால் அடித்தாள். கொடை என்பது பிறவிக்குணம் என்றார் ஔவைப் பிராட்டியார்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம், - நித்தம்
நடையும் நடைப்பழக்கம், நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

     சித்திரம் தீட்டுதல் கைப்பழக்கத்தால் கைகூடும். நாப்பழக்கத்தால் தமிழைம் கற்கலாம். கல்வி அறிவும் பாராயணம், எழுத்துப் பயிற்சி ஆகியவற்றால் கூடும். நடைப் பழக்கத்தால் நடை வரும். ஆனால், நட்பு உள்ளம், தயவு உள்ளம், கொடைப் பண்பு ஆகியவை உயிர்க்குணங்கள் என்பதால், அவைகள் ஒருவனுக்குப் பிறவிக் குணமாகவே பொருந்தி இருக்கவேண்டும்.

இறந்தும் இறவாதவர்

31. இறந்தும் இறவாதவர்

அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
     டாக்கினோர், நீதிமன்னர்,
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்,
     அகரங்கள் செய்தபெரியோர்,

தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்,பொருது
     சமர்வென்ற சுத்தவீரர்,
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
     தருமங்கள் செய்தபேர்கள்,

கனவித்தை கொண்டவர்கள், ஓயாத கொடையாளர்,
     காவியம் செய்தகவிஞர்,
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
     கடிமணம் செய்தோர்கள்,இம்

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
     மனிதர் இவர் ஆகும் அன்றோ!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
  
        இதன் பொருள் ---

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் --- எல்லோருக்கும் பயன்படுமாறு குளங்களையும் கிணறுகளையும் வெட்டி வைத்தவர்கள்,

     நீதி மன்னர் --- நீதி நெறி தவறாத அரசர்கள்,

     அழியாத தேவ ஆலயம் கட்டி வைத்து உளோர் --- அழியாத திருக்கோயில்களைக் கட்டி வைத்தவர்களும்,

     அகரங்கள் செய்த பெரியோர் --- மறையவர் வாழிடங்களை உண்டாக்கிய பெரியோர்களும்,

     தனை ஒப்பிலாப் புதல்வனைப் பெற்ற பேர் --- தனக்கு உவமையற்ற ஒரு மகனைப் பெற்றவர்களும்,

     பொருது சமர் வென்ற சுத்த வீரர் --- போரிலே சண்டையிட்டு வென்ற தூய வீரர்களும்,

     தரணி தனில் நிலை நிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் --- உலகிலே எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய மாறாத அறச்செயல்களைச் செய்த சான்றோர்களும்,

     கன வித்தை கொண்டவர்கள் --- பெருமைக்கு உரிய கலைகளைப் பயின்றவர்களும்,

     ஓயாத கொடையாளர் --- இல்லை என்று வந்தவருக்கு எப்போதும் கொடுத்து உதவியவர்களும்,

     காவியம் செய்த கவிஞர் --- காவியங்களை எழுதிய கவிஞர்களும்,

     கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையைக் கடிமணம் செய்தோர்கள் --- கற்பிலே சிறந்தவளும், கொண்டானைக் கொண்டு ஒழுகுபவளும் ஆகிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர்களும்,

     இம் மனிதர்கள் --- ஆகிய இந்த மனிதர்கள் யாவரும்,

     சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ --- பூத உடல் அழிந்தாலும், அழியாத புகழுடலைப் பெற்றவர்கள் ஆவார்கள் அல்லவா?

     விளக்கம் --- அகரம் என்பது ஊரின் பெயரே, அந்தணர் குடியிருப்பு அல்ல என்பாரும் உளர். ஆயினும்,

அகரம் ஆயிரம் ஆரியர்க்கு ஈயில் என்?
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்?
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு
நிகர்இலை என்பது நிச்சயம் தானே.  

என்னும் திருமூலர் திருவாக்கால் அகரம் என்பது அந்தணர் குடியிருப்பு என்பது தெளிவாகும். மேலும்,  அந்தணர்களுக்கு இறையிலியாக நிலங்களும், திருக்கோயிலுக்கு அருகிலேயே வீடுகளும், முற்காலத்தில் அரசாண்ட மன்னர்களால் விடப்பட்டதும் வரலாற்றுக் குறிப்புக்களால் அறியலாம். வாவி - குளம். கூபம் - கிணறு. கூவம் என்றும் சொல்லப்படும். "கூவல் ஆமையைக் குரை கடல் ஆமை" என்னும் அப்பர் தேவார வாசகத்தைக் காண்க.

நன்றும் தீதாய்த் தோன்றும்.44.  நன்று தீது ஆதல்

வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு
     மாறாத வல்வி டமதாம்!
  மகிழ்நன் தனைக்காணில் இதமிலா விபசரிய
     மாதருக் கோவி டமதாம்!

மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
     மிக்கபேர்க் கதிக விடமாம்!
  வித்தியா திபர்தமைக் கண்டபோது அதிலோப
     வீணர்க்கெ லாம்வி டமதாம்!

ஈனம்மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபைகாணில்
     ஏலாத கொடிய விடமாம்!
  ஏற்றம்இல் லாதபடு பாவிகட்கு அறம் என்னில்
     எந்நாளும் அதிக விடமாம்!

ஆனதவ யோகியர்கள் இதயதா மரைஉறையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும் அண்ணலே --- ஆக்கம் என்னும் வீடுபேற்றைத் தரும் தவயோகத்தைப் பயிலுகின்றவரின் இதயத் தாமரை மலரில் எழுந்தருளி இருக்கும் பெரியோனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின் மாறாத வல்விடமது ஆம் --- திருடருக்கும் காமாந்தகாரர்களுக்கும் வானத்தில் தோன்றும் முழுநிலவானது நீங்காத கொடிய நஞ்சு போல வெறுப்பைத் தரும்.

     இதம் இலா விபசரிய மாதருக்கு மகிழ்நன் தனைக் காணில் விடமது ஆம் --- உள்ளத்திலே நன்மை இல்லாத, பரத்தைத் தொழில் உடைய மாதருக்குத் தனது கணவனைப் பார்த்தால் நஞ்சு போல் இருக்கும்,

     சுர ரோகம் மிக்க பேர்க்கு மேன்மை தரு நல்சுவை பதார்த்தமும் அதிக விடம் ஆம் --- காய்ச்சல் நோய் மிகுந்தவர்க்கு உயர்ந்த இனிய சுவைமிக்க பதார்த்தங்கள் மிகுந்த விடத்தைப் போல வெறுப்பை உண்டாக்கும்.

     அதி லோப வீணர்க்கு எலாம் வித்தியாதிபர் தமைக் கண்டபோது விடமது ஆம் --- மிகுந்த ஈகைப் பண்பு இல்லாத வீணர்கள் யாவருக்கும் கலைவாணரைக் கண்டால், நஞ்சினைக் கண்டது போல வெறுப்பு உண்டாகும்.

     ஈனம் மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபை காணில் ஏலாத கொடிய விடம் ஆம் --- இழிவு மிக்க புன்மையான கவிகளைப் பாடுகின்றவருக்கு, அறிவுடையோர் கூடியுள்ள சபையைக் கண்டால், பொறுக்க முடியாத கொடிய விடத்தைக் கண்டது போல் இருக்கும்.

     ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில் எந்நாளும் அதிகவிடம் ஆம் --- மேன்மைக் குணம் இல்லாத பெரும் பாவிகளுக்கு அறம் என்றால் எப்போதும் பெருநஞ்சு போல வெறுப்பை உண்டாக்கும்.

          விளக்கம் --- நிலவு ஒளியை உலகில் உள்ளோர் யாவரும் விரும்புவார்கள். ஆனால், அது திருடர்களுக்கும், காமுகர்களுக்கும் இனிமையைத் தராது. மகளிருக்குத் தனது கணவனைக் கண்டால் பெருமகிழ்ச்சி உண்டாகும். பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம்போல் கணவைனைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி உண்டாகும். ஆனால், பரத்தைத் தொழிலிலே ஈடுபட்டு உள்ள பெண்ணுக்குக் கணவனைக் கண்டால் வெறுப்புத் தோன்றும். காய்ச்சல் நோயாளனுக்கு நாவிலே கசப்பு உணர்வு இருக்கும். எல்லோராலும் விரும்பப்படும் இனிய சுவை உணவு அவனுக்கு கசக்கும். வெறுப்புணர்வை உண்டாக்கும். யாருக்கும் உதவாமல் உள்ள, கஞ்சப் புத்தி உள்ளவனுக்கு, அறிவு உடைய புலவர்களைக் கண்டால் பிடிக்காது. பாவத்தையே பயின்று வருபவனுக்கு அறம் செய்வது பிடிக்காது. ஆக, நல்ல நிலையில் இல்லாதவர்க்கு, நல்லவையும் தீயவையாய்த் தோன்றும்.


ஒளியின் உயர்வு
43. ஒளியின் உயர்வு

செழுமணிக்கு ஒளி அதன் மட்டிலே! அதினுமோ
     செய்யகச் சோதம் எனவே
  செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
     தீபத்தின் ஒளிஅ திகமாம்!

பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
     பகல்வர்த்தி அதில்அ திகமாம்!
பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
     பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!

விழைதரு பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும்
     வீரவித ரணிக ருக்கும்
  மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன
     விரகுளோர் உரைசெய் குவார்!

அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அழல் விழிகொடு எரி செய்து மதனவேள் தனை வென்ற அண்ணலே --- நெருப்பு விழியினாலே மன்மதனை எரித்து, அவனது செயலை வென்ற பெரியோனே! (கொண்டு என்னும் சொல் பாடலின் அழகு நோக்கி, கொடு என வந்தது)

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     செழுமணிக்கு அதன் மட்டிலே ஒளி --- நல்ல மாணிக்கத்துக்கு அதன் அளவிலே தான் ஒளி உண்டு,

     அதினும் செய்ய கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம் ஒளி --- அந்த மாணிக்கத்தைக் காட்டினும் சிவந்த மின்மினி எனக் கூறப்படும் பூச்சிக்கு மிகுதியான ஒளி உண்டு,

     அதனினும் தீபத்தின் ஒளி அதிகம் ஆம் --- அந்த மின்மினிப் பூச்சியை விடவும் விளக்கின் ஒளி மிகுதி ஆகும்,

     தீபத்தின் பழுது இலாத் தீவர்த்தி அதிகம் ஆம் --- தீபத்தை விடவும் குற்றமற்ற தீவட்டியின் ஒளி அதிகம் ஆகும்,

     அதில் பகல் வர்த்தி அதிகம் ஆம் --- அதனினும் பகல் வர்த்தியின் ஒளி அதிகம் ஆகும்,

     அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் --- பகல் வர்த்தியை விடவும் பெரிய மத்தாப்பின் ஒளி அதிகம் ஆகும்,

     அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம் ஆம் --- அந்த மத்தாப்பினை விடவும் குளிர்ந்த சந்திரனின் ஒளி மிகுதி ஆகும்,

     விழைவு தரு பரிதிக்கும் --- உயிர்கள் எல்லாவற்றாலும் விரும்பப் படுகின்ற கதிரவனுக்கும்,

     மனுநீதி மன்னர்க்கும் --- செங்கோல் செலுத்துகின்ற அரசருக்கும்,

     வீர விதரணிகருக்கும் ---- வீரமும், கொடைப் பண்பும் உள்ளவருக்கும்,

     மிக்க ஒளி திசை தொறும் போய் விளங்கிடும் என்ன --- மிக்க புகழானது திசைகள் எங்கும் மிகுந்து விளங்கும் என்று

     விரகு உளோர் உரை செய்குவார் --- அறிவு உடையோர் கூறுவார்கள்.

          விளக்கம் --- வேள் - விருப்பம். மதனவேள் - காமத்திலே விருப்பம் உடையார்க்குத் துணை புரிவான். அது பிறப்பை அறுக்க உதவாது.  முருகவேள் வீட்டு நெறியில் நிற்க விழைவோர்க்கு அருள் புரிந்து, என்றும் அழியாத வீட்டின்பத்தில் வைப்பவன். கச்சோதம் - மின்மினிப் பூச்சி. விதரணம் - கொடை. சொல்வன்மை. அறிவு உடைமை. ஒளி - வெளிச்சம், அறிவு, மதிப்பு, புகழ் என்னும் பொருள்களைத் தருவது. வெளிச்சம் பொருள்களை விளக்கிக் காட்டும். அறிவு, மதிப்பு, புகழ் ஆகியவையும் ஒருவரை இன்னார் என்று விளக்கிக் காட்டும்.


நமது உடம்பில் உள்ள தச வாயுக்கள்

  நமது உடம்பில் உள்ள பத்து வாயுக்கள் ----        "காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா - மாயானாராம் குயவ...