36. இதற்கு இது வேண்டும்
தனக்குவெகு
புத்திஉண் டாகினும் வேறுஒருவர்
தம்புத்தி கேட்க வேண்டும்;
தான்அதிக சூரனே ஆகினும் கூடவே
தளசேக ரங்கள் வேண்டும்;
கனக்கின்ற
வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலில்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற
சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டுகோல் ஒன்று வேண்டும்;
அனல்கண்ண
னே!படிக சங்கம்நிகர் வண்ணனே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
அனல் கண்ணனே --- நெற்றியில்
நெருப்புக்
கண்ணை
உடையவனே!
படிகம் சங்கம் நிகர் வண்ணனே --- பளிங்கு
போலவும்
சங்கைப் போலவும் வெண்மையான நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே!
ஐயனே --- தலைவனே!
அருமை மதவேள் --- அருமை மதவேள்
என்பான்,
அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும்
உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---
சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தனக்கு வெகு புத்தி உண்டு ஆயினும், வேறு ஒருவர்
தம் புத்தி கேட்கவேண்டும் --- தனக்கு மிகுந்த அறிவு இருந்தாலும் மற்றவரின்
அறிவுரையையும் கேட்டுத் தெளிதல் வேண்டும்,
தான் அதிக சூரனே ஆகினும், கூடவே தள சேகரங்கள்
வேண்டும் --- தான் பெரிய வீரனே ஆனாலும், தன்னுடன் படைகளையும் படைக்
கருவிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்,
கனக்கின்ற வித்துவான் ஆகினும், தன்னினும் கற்றோரை
நத்தவேண்டும் --- பெருமை பொருந்திய புலவனே ஆனாலும் தன்னை விடப் புலமை உடையோரை
அடுத்து இருக்க வேண்டும்,
காசினியை ஒரு குடையில் ஆண்டாலும், வாசலில்
கருத்து உள்ள மந்திரி வேண்டும் --- உலகம் முழுவதையும் தான் ஒருவனே ஆண்டாலும், தனது வாயிலில் ஓர் அறிவு ஆராய்ச்சி உடைய
அமைச்சன் இருக்க வேண்டும்.
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்,
சுதி கூட்ட ஒருவன் வேண்டும்
--- இசையிலே
திறமை படைத்த இசைப் புலவனே ஆனாலும் சுருதி கூட்டித் தர ஒருவன் வேண்டும்,
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டுகோல் ஒன்று வேண்டும் -- ஒளி தருகின்ற விளக்கே ஆனாலும், அது நன்றாக எரிவதற்குத்
தூண்டுகோல் ஒன்று இருக்க வேண்டும்.
விளக்கம் --- சிவபெருமான் செந்தீ
வண்ணர். ஆயினும் வெண்ணீறு பூசியிருப்பதால்
படிகமும் சங்கும் உவமை ஆயின. "பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" என்பார்
அப்பர் பெருமான். "பவள மாமலையைப் பனி படர்ந்து அனையது ஓர் படர் ஒளி தரு திருநீறும்"
என்பது திருவிசைப்பா. ஒரு தொழிலில் ஊக்கம் உடையோனுக்கு அதன்மேல் உள்ள ஆவலால் சிந்தனை
குறைபடும். ஆதலால் தான் அறிவுடையவனே ஆகினும் பிறர் அறிவுரையைக் கேட்டல் வேண்டும்
என்றார். விளக்கிற்குத் தூண்டுகோல் வேண்டும் என்பது உவமை. சேகரம்
- சேகரித்தல். தளம் - படை. சுருதி என்பது சுதி எனப்பட்டது.
No comments:
Post a Comment