திருவண்ணாமலை - 0580. மானை விடத்தை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மானை விடத்தை (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்


தான தனத்தத் தனத்த தத்தன
     தான தனத்தத் தனத்த தத்தன
          தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான


மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
     மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
          வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை

வாளை வனத்துற் பலத்தி னைச்செல
     மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
          மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும்

ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
     வூறு முபத்தக் கருத்த டத்தினை
          யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும்

ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு
     பாதி யையொப்பித் துனிப்ப வத்தற
          வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ......தெளியாதோ

சான கிகற்புத் தனைச்சு டத்தன
     சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
          தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச்

சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
     வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
          தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே

சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
     லானை மதத்துக் கிடக்கு மற்புத
          சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத்

தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி
     யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர்
          சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மானை, விடத்தை, தடத்தினில் கயல்
     மீனை நிரப்பி, குனித்து விட்டு அணை
          வாளியை, வட்டச் சமுத்திரத்தினை, ...... வடிவேலை,

வாளை, வனத்து உற்பலத்தினை, செல
     மீனை, விழிக்கு ஒப்பு எனப் பிடித்து, வர்
          மாய வலைப்பட்டு, இலை, துடக்கு உழல் ......மணநாறும்

ஊன இடத்தை, சடக்கு என கொழு
     ஊறும் உபத்தக் கருத் தடத்தினை,
          ஊது பிணத்தை, குண த்ரயத்தொடு ...... தடுமாறும்

ஊசலை, நித்தத் த்வம் அற்ற செத்தை,
     உபாதியை ஒப்பித்து உனி, பவத்து அற
          ஓகை செலுத்தி, ப்ரமிக்கும் இப்ரமை ......தெளியாதோ?

சானகி கற்புத் தனைச் சுட, தன்
     அசோக வனத்தில் சிறைப் படுத்திய
          தானை அரக்கர் குலத்தர் அத்தனை ...... வரும் மாள,

சாலை மரத்துப் புறத்து ஒளித்து, அடல்
     வாலி உரத்தில் சரத்தை விட்டு, ஒரு
          தாரை தனைச் சுக்ரிவற்கு அளித்தவன் ....மருகோனே!

சோனை மிகுத்துத் திரள் புனத்தினில்,
     ஆனை மதத்துக் கிடக்கும் அற்புத
          சோணகிரிச் சுத்தர் பெற்ற கொற்றவ! ...... மணிநீபத்

தோள் கொடு சக்ரப் பொருப்பினைப் பொடி
     ஆக நெருக்கி, செருக்களத்து எதிர்
          சூரனை வெட்டித் துணித்து அடக்கிய ...... பெருமாளே.


பதவுரை

     சானகி கற்புத் தனைச் சுட --- சீதையின் கற்புத் தீ தன்னைச் சுடும்படி,

     தன் அசோக வனத்தில் சிறைப்படுத்திய --- தன்னுடைய அசோகவனத்தில் சிறையிட்டு வதைத்த,

     தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள --- சேனைகளுடன் கூடிய இராவணனுடைய குலத்தைச் சேர்ந்த எல்லோரும் இறந்து ஒழியவும்,

     சாலை மரத்துப் புறத்து ஒளித்து --- சாலையில் இருந்த மரங்களின் அருகே ஒளிந்திருந்து,

     அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு --- வலிமை மிக்க வாலியின் மார்பில் கணையைச் செலுத்தியும்,

     ஒரு தாரை தனைச் சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே --- ஒப்பற்ற தாரையை சுக்ரீவனிடம் அடைக்கலமாகத் தந்தவராகிய ஸ்ரீராமரின் திருமருகரே!

      சோனை மிகுத்துத் திரள் புனத்தினில் --- இடையறாத மழை பொழிய, செழித்த தினைப்புனத்தினில்

     ஆனை மதத்துக் கிடக்கும் --- யானை மதம் கொண்டு இருக்கும்,

     அற்புத சோணகிரிச் சுத்தர் பெற்ற கொற்றவ --– அற்புதம் மிகுந்த திருவண்ணாமலையில் விளங்கும் பரிசுத்த மூர்த்தியாகிய சிவபெருமான் பெற்ற வீரமூர்த்தியே!

      மணி நீபத் தோள் கொடு --- அழகிய கடப்ப மலர் மாலையை அணிந்த தோள்கொண்டு,

     சக்ரப் பொருப்பினைப் பொடியாக நெருக்கி --- சக்கரவாளகிரியைத் தூளாகுமாறு நெருக்கி,

     செருக்களத்து எதிர் சூரனை வெட்டித் துணித்து அடக்கிய பெருமாளே --- போர்க்களத்தில் எதிர்த்து வந்த சூரபன்மனை வெட்டி, துண்டாக்கி அடக்கின பெருமையில் சிறந்தவரே!

      மானை, விடத்தை, தடத்தினில் கயல் மீனை நிரப்பி --- மானையும், நஞ்சையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீன்களையும்,

     குனித்து விட்டு அணை வாளியை --- வில்லை வளைத்து விடுக்க வருகின்ற அம்பையும்,

     வட்டச் சமுத்திரத்தினை --- வட்டமாக வளைந்துள்ள கடலையும்,

     வடிவேலை --- கூர்மையான வேலையும்,

      வாளை --- வாளாயுதத்தையும்,

     வனத்து உற்பலத்தினை --- நீரில் மலர்கின்ற செங்கழுநீர் மலரையும்,

     செல மீனை விழிக்கு ஒப்பு எனப் பிடித்து ---  அழகிய சேல் மீனையும், கண்ணுக்கு ஒப்பு என்று உவமை கூறிப் பற்றி,

     அவர் மாய வலைப்பட்டு --- அம் மாதர்களின் மாய வலையில் சிக்கி,

     இலை --- அரசிலை போன்றதும்,

     துடக்கு உழல் மணநாறும் ஊன இடத்தை --- சூதகமாம் துர்நாற்றம் உடையதும், இழிந்ததும் ஆன இடத்தை,

      சடக்கு எனக் கொழு ஊறும் --- வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற

     உபத்தக் கருத் தடத்தினை --- ஜனன இந்திரியமான கரு உண்டாகும் இடத்தை,

     ஊது பிணத்தை --- வீங்கிப் பிணமாவதை,

     குண த்ரயத்தொடு தடுமாறும் ஊசலை --- முக்குணத்தோடும் தடுமாறுகின்ற அழுகும் பொருளை,

       நித்தத் த்வம் அற்ற செத்தை உபாதியை ஒப்பித்து --- நிலைபேறு இல்லாத செத்தை சருகு போன்ற வேதனையை அலங்கரித்தும்,

      உனி  --- அதனை எப்போதும் நினைத்தும்,

     பவத்து அற ஓகை செலுத்தி --- பிறவிலேயே மிகவும் மகிழ்ச்சியைச் செலுத்தி,

     ப்ரமிக்கும் இப்ரமை தெளியாதோ --- மயங்குகின்ற இம் மயக்கம் தெளியமாட்டாதோ?


பொழிப்புரை


         சீதையின் கற்புத் தீ தன்னைச் சுடும்படி, தன்னுடைய அசோகவனத்தில் சிறையிட்டு வதைத்த, சேனைகளுடன் கூடிய இராவணனுடைய குலத்தைச் சேர்ந்த எல்லோரும் இறந்து ஒழியவும், சாலையில் இருந்த மரங்களின் அருகே ஒளிந்திருந்து, வலிமை மிக்க வாலியின் மார்பில் கணையைச் செலுத்தியும், ஒப்பற்ற தாரையை சுக்ரீவனிடம் அடைக்கலமாகத் தந்தவராகிய ஸ்ரீராமரின் திருமருகரே!

         இடையறாத மழை பொழிய, செழித்த தினைப்புனத்தினில் யானை மதம் கொண்டு இருக்கும், அற்புதம் மிகுந்த திருவண்ணாமலையில் விளங்கும் பரிசுத்த மூர்த்தியாகிய சிவபெருமான் பெற்ற வீரமூர்த்தியே!

         அழகிய கடப்ப மலர் மாலையை அணிந்த தோள்கொண்டு, சக்கரவாளகிரியைத் தூளாகுமாறு நெருக்கி, போர்க்களத்தில் எதிர்த்து வந்த சூரபன்மனை வெட்டி, துண்டாக்கி அடக்கின பெருமையில் சிறந்தவரே!

         மானையும், நஞ்சையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீன்களையும், வில்லை வளைத்து விடுக்க வருகின்ற அம்பையும், வட்டமாக வளைந்துள்ள கடலையும, கூர்மையான வேலையும், வாளாயுதத்தையும், நீரில் மலர்கின்ற செங்கழுநீர் மலரையும், அழகிய சேல் மீனையும், கண்ணுக்கு ஒப்பு என்று உவமை கூறிப் பற்றி, அம் மாதர்களின் மாய வலையில் சிக்கி, அரசிலை போன்றதும், சூதகமாம் துர்நாற்றம் உடையதும்,
இழிந்ததும் ஆன இடத்தை, வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற ஜனன இந்திரியமான கரு உண்டாகும் இடத்தை, வீங்கிப் பிணமாவதை, முக்குணத்தோடும் தடுமாறுகின்ற அழுகும் பொருளை, நிலைபேறு இல்லாத செத்தை சருகு போன்ற வேதனையை அலங்கரித்தும், அதனை எப்போதும் நினைத்தும், பிறவிலேயே மிகவும் மகிழ்ச்சியைச் செலுத்தி, மயங்குகின்ற இம் மயக்கம் தெளியமாட்டாதோ?


விரிவுரை


இத் திருப்புகழின் முதல் பகுதியில் மாதரது தன்மையைக் கூறுகின்றார்.

மானை ---

மான் மிரண்டு பார்க்கும் இயல்பு உடையது.  இது மகளிரின் பார்வைக்கு நிகரானது.
  
விடத்தை ---

நஞ்சு உண்டாரைக் கொல்லும். மாதர் விழி கண்டாரையே கொல்லும் கொடுமை உடையது.

தடத்தினில் கயல்மீனை நிரப்பி --- 

தடத்தினில் நிரப்பி கயல் மீன் என்று கொண்டு கூட்டவும். 
தடம் - குளம். குளத்தினில் நிரப்பி விட்ட கயல் மீன் போன்ற கண்கள்.

மீன்கள் இப்படியும் அப்படியுமாகப் புரளும் தன்மை உடையன.  கண்கள் அதுபோல் புரளும் தன்மை உடையவை.

குனித்து விட்டு அணை வாளி ---

வாளி - அம்பு. குனித்தல் - வளைத்தல். அவாய் நிலையாக வில்லைக் குறிக்கும். வில்லை வளைத்து விட நெருங்கி வருகின்ற அம்பு போன்றது.

செல் மீன் ---

சேல் என்ற சொல் செல் எனக் குறுகி வந்தது. சேல் அம் மீன் என்று பதப்பிரிவு செய்க. கயல்மீன் போன்ற கண்கள்.

துடக்கு உழல் மணநாறும் ---

துடக்கு ஊழல் மணம். துடக்கு - சூதகம்.  உழல் மணம் - துர்நாற்றம்.
  
ஊசலை ---

ஊசிப் போகும் தன்மையுடைய உடம்பு.

நித்தத்வம் அற்ற செத்தை ---

நித்தத்வம் - நிலைபேறு.  நிலையில்லாத காய்ந்த சருகு போன்ற உடம்பு.

உபாதி ---

உபாதி - துன்பம்.  துன்பத்துக்கு இடமான உடம்பு.

ஒப்பித்து உனி ---

ஒப்பித்து - ஒப்பனை செய்து.  உனி - உன்னி. அதனையே நினைந்து.

பவத்து அற ஓகை செலுத்தி ---

அற – மிகுதியாக. பிறப்பிலேயே மிகுதியாகக் களிப்புற்று மயங்குதல்.

சானகி கற்புச் சுட ---

சீதாதேவியின் கற்புக் கனல் இராவணனைச் சுட்டது. அனுமன் சுடவில்லை.

கோ நகர் முழுவதும், நினது கொற்றமும்,
சானகி எனும் பெயர் உலகீன்ற அம்மனை
ஆனவள் கற்பினால் வெந்தது, அல்லது, ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ.  ---  கம்பராமாயணம்.
 
சாலை மரத்துப் புறத்தொளித்தடல் வாலியுரத்தில் சரத்தைவிட்டு ---

வாலியை இராமர் மரத்தின் புறத்தே மறைந்திருந்து கணை விட்டுக் கொன்றார்.

தாரை தனைச் சுக்ரீவற்கு அளித்தவன் ---

தாரை வாலியின் மனைவி.  இவள் மாசில்லாத கற்புள்ளவள்.

கணவனை இழந்து துணை அற்று இருந்த இவளை சுக்கிரீவனிடம் அடைக்கலப் பொருளாக இராமர் தந்தருளினார் என்பது இதன் பொருள்.

ஆனைமதத்துக் கிடக்கும் அற்புத சோணகிரி ---

திருவண்ணாமலையில் மதம் கொண்டுள்ள யானைகள் மிகுதியாக உள்ளன.  இந்தக் கருத்தைப் பின்வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும் அறிக.

"ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே".


கருத்துரை


அருணை அண்ணலே, மாதர் மயக்கம் அற அருள் செய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...