சிதம்பரம் - 0604. இரச பாகுஒத்த

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரசபாகு ஒத்தமொழி  (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் மயலில் வைத்த சிந்தையை மாற்றி,
உனது திருவடியில் வைக்க அருள்.


தனதனா தத்ததன தனதனா தத்ததன
     தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
     தனதனா தத்ததன தானனந் தனன
தனதனா தத்ததன தனதனா தத்ததன
     தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான

இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
     யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
     ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
     ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும்

இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
     லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி
     னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
     ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின்

வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
     வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
    மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
     வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ......ரம்பைமாதர்

மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
     மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
     மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
     வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ..... தந்துஆள்வாய்

முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
     முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
     முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
     டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட

முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
     முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
     முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
     முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே

அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
     ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
     ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
     ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா

அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
     யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
     யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
     டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ......தம்பிரானே.


பதம் பிரித்தல்

இரசபாகு ஒத்த மொழி, அமுர்த மாணிக்க நகை,
     இணைஇலா சத்தி விழியார், பசும்பொன் நிரர்,
எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச்செயல்கள்,
     எழுத ஒணாதப் பிறையினார், அரும் புருவர்,
எழுதுதோடு இட்டசெவி, பவள நீலக்கொடிகள்
     இகலி ஆட, படிகமோடு, டும் பொன்உரு, .....திங்கள்மேவும்

இலவு தாவித்த இதழ், குமிழை நேர் ஒத்த எழில்
     இலகு நாசி, கமுகு மால சங்கின் ஒளி
இணைசொல் க்ரீவ, தரள இன, ஒள் தாலப்பனையின்
     இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்தஅடி
இணைஇல் ஆனைக்குவடு என், ஒளிநிலா துத்திபடர்
          இகலி ஆரத் தொடையும், ஆரும் இன்ப ரச ......தங்கமார்பின்

வரிகள் தாபித்த முலை, இசைய ஆலில் தளிரின்
     வயிறு, நாபிக் கமலமாம் எனும் சுழிய
மடு, உரோமக் கொடி என் அளிகள்சூழ் வுற்றநிரை,
     மருவு நூல் ஒத்தஇடை, ர் சம்பை அல்குல்,
மணம் எலாம் உற்ற நறை கமலபோது, தொடை என்
     வளமைஆர்புக் கதலி, சேருசெம் பபொன் உடை ...... ரம்பைமாதர்

மயல்அதால் இற்று, டியென் அவர்கள் பால் உற்றுவெகு
     மதன பாணத்தினுடன் மேவி, மஞ்சம் மிசை
வதனம்வேர்வு உற்று விர, முலைகள் பூரிக்க, மிடர்
     மயில்புறா தத்தைகுயில் போல்இலங்கு அமளி
வசனமாய் பொத்தி, இடை துவள மோகத்துள் அமிழ்
     வசமெலாம் விட்டும் அற, வேறு சிந்தனையை ...... தந்து ஆள்வாய்.

முரசு பேரித் திமிலை துடிகள் பூரித் தவில்கள்
     முருடு காளப்பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர்வு உற்ற ஒலி, இடிகள் போல் ஒத்தமறை
     முதுவர் பாடிக் குமுறவே, இறந்த அசுரர்
முடிகளோடு எற்றி, அரி இரதமானைப் பிணமொடு,
         இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து, திசை ...... எங்கும்ஓட

முடுகிவேல் விட்டு, வட குவடுவாய் விட்டு, மரர்
     முநிவர் ஆடிப்புகழ, வேத விஞ்சையர்கள்
முழவு வீணைக் கினரி, அமுர்த கீதத் தொனிகள்,
     முறையதாகப் பறைய ஓதி, ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க, உடன் நடனமாடிற்று வர,
     முடி பதாகைப் பொலியவே நடம் குலவு ...... கந்தவேளே!

அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ்
     அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன்
அளவி, மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட, குயில்கள்
     அளிகள் தோகைக் கிளிகள் கோ எனம், பெரிய
அமுர்த வாவிக் கழனி வயலில் வாளைக் கயல்கள்
     அடையும் ஏர் அக் கனக நாடு எனும் புலியுர் ...... சந்தவேலா!

அழகு மோகக் குமரி, விபுதை, ஏனல் புனவி,
     அளிகுலா உற்றகுழல் சேர் கடம்பு தொடை
அரசி, வேதச் சொருபி, கமல பாதக் கரவி,
     அரிய வேடச்சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூபப் பதமொடு இவுளி தோகைச்செயல்கொடு
     அணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்து புணர் ...... தம்பிரானே.

பதவுரை

         முரசு, பேரி, திமிலை, துடிகள், பூரி, தவில்கள், முருடு காளப் பறைகள், தாரை, கொம்பு, வளை --- முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊது கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊது கொம்பு, சங்கு ஆகியவை

     முகடு பேர்வு உற்ற ஒலி ---  வான முகடு வரை மிகுந்து ஒலிக்க,

     இடிகள் போல் ஒத்த --- இடி ஓசையை ஒத்து முழங்க,

         மறை முதுவர் பாடிக் குமுறவே --- வேதத்திலே வல்ல பெரியோர்கள் பாடிப் பேரொலி எழுப்ப,

     இறந்த அசுரர் முடிகளோடு எற்றி --- போரில் இறந்து போன அசுரர்களின் தலைகளை மோதித் தள்ளி,

     அரி இரதம் யானைப் பிணம் ஒடு --- சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு,

     இவுளி வேலைக் குருதி நீர் மிதந்து --- குதிரை ஆகியவை இரத்தக் கடலில் மிதந்து

     திசை எங்கும் ஓட --- திசைகளில் எல்லாம் ஓட, 

      முடுகி வேல் விட்டு --- வேகமாக வேலாயுதத்தை விடுத்தருளி,

     வட குவடு வாய் விட்டு --- வடக்கிலே உள்ள மேரு மலையானது பிளவு படவும்,

     அமரர் முநிவர் ஆடிப் புகழ --- தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சியால் ஆடி, புகழ்ந்து பாடவும்,

     வேத விஞ்சையர்கள் முழுவு வீணைக் கி(ன்)னரி அமுர்த கீதத் தொனிகள் முறையதாகப் பறைய ஓதி --- வேதம் வல்லவர்கள் பாடவும்,  வித்தியாதரர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரி யாழ் அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறையாக ஒலியை எழுப்பி ஓதிட,

     ரம்பையர்கள் முலைகள் பாரிக்க --- அரம்பையர்கள் முலைகள் விம்ம,

     உடன் நடனம் ஆடிற்று --- உடன் நடனம் புரிந்து வரவும்,

     முடி பதாகைப் பொலியவே --- உயர்ந்த கொடியானது பொலிவுற்று விளங்,

     நடம் குலவு கந்த வேளே --- திருநடனம் புரிகின்ற கந்தவேளே!

      அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு --- அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம்,  ஆகிய இவற்றுடன்

     அரம்பை உடன் அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட --- வாழை மரம் மேக மண்டலம் வரை உயர்ந்துள்ள செழித்த சோலைகளில் அசையவும்,

     குயில்கள் அளிகள் தோகைக் கிளிகள் கோ என --- அங்கே உள்ள குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்யவும்,

      பெரிய அமுர்த வாவி --- பெரிய அமுதம் போன்ற குளிர்ந்த நீரைக் கொண்ட குளங்களிலும்,

     கழனி வயலில் --- கழனிகளிலும், வயல்களிலும்,

     வாளைக் கயல்கள் அடையும் --- வாளை மீன்களுடன் கயல் மீன்களும் நிறைந்திருக்க,

     ஏர் அக் கனக நாடெனும் புலியுர் சந்த வேலா --- அழகு பொலியும் பொன்னுலகம் என்று சொல்லப்படும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலாயுதரே!

      அழகு மோகக் குமரி --- கண்டோர் விரும்புகின்ற அழகு நிறைந்த இளம்பெண்,

     விபுதை --- தேவதை,

     ஏனல் புனவி --- தினைப்புனம் காவல் புரிபவள்,

     அளி குலா உற்ற குழல் சேர் கடம்பு தொடை --- வண்டுகள் குலவுகின்ற கடப்ப மலர் மாலையை அணிந்தவள்,

     அரசி --- உயிர்களை ஆளுபவள்,

     வேதச் சொருபி --- வேதத்தையே தனது இயல்பான வடிவமாகக் கொண்டவள்,

     கமல பாதக் கரவி --- தாமரை போன்ற திருவடிகளை உடையவள்,

     அரிய வேடச் சிறுமியாள் அணைந்த புகழ் --- அருமை வாய்ந்த வேடர் மகளாக அவதரித்த வள்ளிநாயகி அணைந்த புகழை உடையவரே!

       அருண ரூபப் பதம் ஒடு --- சிவந்த திருவடிகளுடன்,

     இவுளி தோகைச் செயல் கொடு --- தோகையோடு கூடி, வேகமாகச் செல்லும் குதிரை போன்ற மயிலையும் கொண்டு,

     அணை தெய்வானைத் தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே --- தேவயானை அம்மையின் மார்பகங்களையும் மகிழ்வோடு புணர்ந்த சேர்ந்த தனிப்பெரும் தலைவரே!
        
      இரச பாகு ஒத்த மொழி --- கருப்பம் சாறும், வெல்லப் பாகும் நிகர்த்த சொற்கள்,

     அமுர்த மாணிக்க நகை --- அமுதம் போன்று நன்மை செய்வதும், மாணிக்கம் போன்று ஒளி மிக்கதும் ஆகிய பற்கள்,

     இணையிலா சத்தி விழியார் --- இணை இல்லாத வேல் போன்ற கண்களை உடையுவர்கள்,

     பசும் பொன் நீரார் --- பசிய பொன்னைப் போன்ற தன்மையை உடையவர்கள்,

      எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச் செயல்கள் --- மேகம் போலும் கருத்து இருண்ட கூந்தலை விதவிதமாக முடிக்கும் செயல்களை உடையவர்கள்,

     எழுத ஒணாதப் பிறையினார் அரும் புருவர் --- ஓவியமாக எழுதுதற்கு முடியாத பிறை போன்ற அருமையான புருவத்தினை உடையவர்கள்,

      எழுது தோடிட்ட செவி --- அழகிய தோடு அணிந்துள்ள காதுகளை உடையவர்கள், 

     பவள நீலக் கொடிகள் இகலி ஆட --- பவளக் கொடியும், நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுகின்றது போல் சாயலை உடையவர்கள்,

     படிகமோடு அடும் பொன் உரு --- தெளிந்த படிகம் போன்றும், சுட்ட பொன்னைப் போலவும் ஒளி பொருந்திய மேனியை உடையவர்கள்,

     திங்கள் மேவும் இலவு தாவித்த இதழ் --- சந்திரனைப் போன்ற முகத்தில், இலவம் பூவைப் போலும் சிவந்த வாயிதழை உடையவர்கள்,

      குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி --- குமிழம் பூவைப் போன்று அழகு விளங்கும் மூக்கினை உடையவர்கள்,

     கமுகு மால சங்கின் ஒளி இணை சொல் க்ரீவத் தரள இன --- கமுகு போன்றும், திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைகளை அணிந்தவர்கள்,.

         ஒள் தாலப் பனையின் இயல் கலா புத்தகம் ஒடு ஏர் சிறந்த அடி --- வெண்மையான பனை ஓலையால் அமைந்த பெருமை வாய்ந்த புத்தகம் போல அழகிய சிறந்த பாதத்தினை உடையவர்கள்,

      இணை இலா ஆனைக் குவடு எனா --- இணை இல்லாத யானை என்றும், மலை முகடு என்றும் சொல்லும்படியான

     ஒளி நிலா --- ஒளி விளங்குகின்றதும்,

     துத்தி படர் --- தேமல் படர்ந்ததும்,

     இகலி ஆரத் தொடையும் ஆரும் --- ஒன்றுக்கொன்று பிணைந்து உள்ள முத்து மாலைகள் பொருந்திய,

     இன்ப ரச தங்க மார்பில் வரிகள் தாபித்த முலை ---  இன்ப ரசத்தைக் கொண்டுள்ள அழகிய மார்பில் ரேகைகள் கொண்டதான முலைகளை உடையவர்கள்,

      இசைய ஆலின் தளிரின் வயிறு --- புகழ்ந்து சொல்லப்படுகின்ற ஆலின் தளிர் போன்ற வயிறு உடையவர்கள்,

     நாபிக் கமலம் ஆம் எனும் சுழிய மடு --- நாபியானது தாமரை போலும், நீர்ச்சுழியைப் போலும் சுழிந்து உள்ளது,

     உரோமக் கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை ---  மயிர்க் கொடி என்னும்படியாக வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான, செழிப்புள்ள மின்னல் போன்ற இடை.

      அல்குல் மணம் எலாம் உற்ற நறை கமல போது --- பெண்குறியானது தேன் நிறைந்த நறுமணம் பொருந்திய தாமரை போன்றது,

     தொடை என் வளமை ஆர்புக் கதலி --- தொடையானது வளப்பம் நிறைந்த வாழைத் தண்டு போன்றது என்று சொல்லும்படியான

     சேரு செம் பொன் உடை ரம்பை மாதர் --- தேவ மாது ஆகிய அரம்பையைப் போலும் அழகு பொருந்திய விலைமாதர்களின்

     மயல் அதால் ---  மீது கொண்ட காம மயக்கத்தால்,

     அடியென் அவர்கள் பால் உற்று இற்று --- அடியவனாகிய நான்  அவர்களிடமே பொருந்தி இருந்து, பின் உள்ளம் அவர்களுக்காகவே நைந்து,

      வெகு மதன பாணத்தினுடன் மேவி --- காமவேளின் மலர் அம்புகளால் தாக்குண்டு,

     மஞ்ச மிசை வதனம் வேர்வுற்று அவிர --- மஞ்சத்தின் மேல் முகம் வேர்வை மிகுந்து இருக்க,

     முலைகள் பூரிக்க --- முலைகள் புளகாங்கிதம் அடைய,

     மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்க --- தொண்டையில் இருந்து மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல குரல்கள் அழகாக ஒலிக்க,

      அமளி வசனமாய் பொத்தி --- படுக்கையிலே இன்பரசம் ததும்பும் பேச்சுக்களைப் பேசி,

     இடை துவள --- இடையானது துவண்டு போ,

     மோகத்து உள் அமிழ் வசம் எலாம் --- மோகத்திலே முழுகி ஆழுகின்ற தன்மை எல்லாம்

     விட்டும் அற --- விட்டு ஓழிந்துபோக,

     வேறு சிந்தனையை தந்து ஆள்வாய் --- மாறான நல்ல சிந்தனைகளை எனக்குத் தந்து ஆட்கொண்டு அருளுக.


பொழிப்புரை


     முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊதுங் கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊதுங் கொம்பு, சங்கு ஆகியவை, வான முகடு பெயரும்படியாக மிகுந்து ஒலிக்க,  இடி ஓசை போல முழங்க, வேதத்திலே வல்ல பெரியோர்கள் பாடி ஒலி எழுப்ப, போரில் இறந்து போன அசுரர்களின் தலைகளை மோதித் தள்ளி, சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு, குதிரை ஆகியவை இரத்தக் கடலில் மிதந்து பல திக்குகளிலும் ஓட,  வேகமாக வேலாயுதத்தை விடுத்தருளி, வடக்கிலே உள்ள மேரு மலையானது பிளவு படவும், தேவர்களும் முனிவர்களும் மகிழ்ச்சியால் ஆடி, புகழ்ந்து பாடவும்,  வேதம் வல்லவர்கள் பாடவும்,  வித்தியாதரர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரி யாழ் அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறையாக ஒலியை எழுப்பி ஓதிட, அரம்பையர்கள் முலைகள் கனக்க, உடன் நடனம் புரிந்து வரவும், உயர்ந்த கொடியானது பொலிவுற்று விளங், திருநடனம் புரிகின்ற கந்தவேளே!

     அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம்,  ஆகிய இவற்றுடன் வாழை மரம் மேக மண்டலம் வரை உயர்ந்துள்ள செழித்த சோலைகளில் அசையவும், அங்கே உள்ள குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்யவும், பெரிய அமுதம் போன்ற குளிர்ந்த நீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும், வாளை மீன்களுடன் கயல் மீன்களும் நிறைந்திருக்க, அழகு பொலியும் பொன்னுலகம் என்று சொல்லப்படும் பெரும்பற்றப்புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலாயுதரே!

     கண்டோர் விரும்புகின்ற அழகு நிறைந்த இளம்பெண், தேவதை, தினைப்புனத்தைக் காவல் புரிபவள், வண்டுகள் குலவுகின்ற கடப்ப மலர் மாலையை அணிந்தவள், உயிர்களை ஆளுபவள், வேதத்தையே தனது இயல்பான வடிவமாகக் கொண்டவள், தாமரை போன்ற திருவடிகளையும் கைகளையும் உடையவள், அருமை வாய்ந்த வேடர் மகளாக அவதரித்த வள்ளிநாயகி அணைந்த புகழை உடையவரே!

         சிவந்த திருவடிகளுடன்,  தோகையோடு கூடி, வேகமாகச் செல்லும் குதிரை போன்ற மயிலையும் கொண்டு, தேவயானை அம்மையின் மார்பகங்களையும் மகிழ்வோடு புணர்ந்த சேர்ந்த தனிப்பெரும் தலைவரே!
        
         கருப்பம் சாறும், வெல்லப் பாகும் நிகர்த்த சொற்கள், அமுதம் போன்று நன்மை செய்வதும், மாணிக்கம் போன்று ஒளி மிக்கதும் ஆகிய பற்கள், இணை இல்லாத வேல் போன்ற கண்களை உடையுவர்கள், பசிய பொன்னைப் போன்ற தன்மையை உடையவர்கள், மேகம் போலும் கருத்து இருண்ட கூந்தலை விதவிதமாக முடிக்கும் செயல்களை உடையவர்கள், ஓவியமாக எழுதுதற்கு முடியாத பிறை போன்ற அருமையான புருவத்தினை உடையவர்கள், அழகிய தோடு அணிந்துள்ள காதுகளை உடையவர்கள், பவளக் கொடியும், நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுகின்றது போல் சாயலை உடையவர்கள்,  தெளிந்த படிகம் போன்றும், சுட்ட பொன்னைப் போலவும் ஒளி பொருந்திய மேனியை உடையவர்கள், சந்திரனைப் போன்ற முகத்தில், இலவம் பூவைப் போலும் சிவந்த வாயிதழை உடையவர்கள், குமிழம் பூவைப் போன்று அழகு விளங்கும் மூக்கினை உடையவர்கள், கமுகு போன்றும், திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைகளை அணிந்தவர்கள், வெண்மையான பனை ஓலையால் அமைந்த பெருமை வாய்ந்த புத்தகம் போல அழகிய சிறந்த பாதத்தினை உடையவர்கள், இணை இல்லாத யானை என்றும், மலை முகடு என்றும் சொல்லும்படியான ஒளி விளங்குகின்றதும், தேமல் படர்ந்ததும், ஒன்றுக்கொன்று பிணைந்து உள்ள முத்து மாலைகள் பொருந்திய, இன்ப ரசத்தைக் கொண்டுள்ள அழகிய மார்பில் ரேகைகள் கொண்டதான முலைகளை உடையவர்கள், புகழ்ந்து சொல்லப்படுகின்ற ஆலின் தளிர் போன்ற வயிறு உடையவர்கள், நாபியானது தாமரை மொட்டு போலும், நீர்ச்சுழியைப் போலும் சுழிந்து உள்ளது, மயிர்க் கொடி என்னும் படியாக வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான, செழிப்புள்ள மின்னல் போன்ற இடை. பெண்குறியானது தேன் நிறைந்த நறுமணம் பொருந்திய தாமரை போன்றது, தொடையானது வளப்பம் நிறைந்த வாழைத் தண்டு போன்றது என்று சொல்லும்படியான தேவ மாது ஆகிய அரம்பையைப் போலும் அழகு பொருந்திய விலைமாதர்களின் மீது கொண்ட காம மயக்கத்தால், அடியவனாகிய நான்  அவர்களிடமே பொருந்தி இருந்து, உள்ளம் அவர்களுக்காகவே நைந்து, காமவேளின் மலர் அம்புகளால் தாக்குண்டு, மஞ்சத்தின் மேல் முகம் வேர்வை மிகுந்து இருக்க, முலைகள் புளகாங்கிதம் அடைந்து, தொண்டையில் இருந்து மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல குரல்கள் அழகாக ஒலிக்க, படுக்கையிலே இன்பரசம் ததும்பும் பேச்சுக்களைப் பேசி, இடையானது துவண்டு போ, மோகத்திலே முழுகி ஆழுகின்ற தன்மை எல்லாம் விட்டு ஓழிந்துபோக, மாறான நல்ல சிந்தனைகளை எனக்குத் தந்து ஆட்கொண்டு அருளுக.
   
விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதி மாதர் அவயவங்களைப் பற்றி எடுத்து உரைக்கின்றது.

இரச பாகு ஒத்த மொழி ---

கனி ரசம் போலும் இனிமை நிறைந்தது. பாகு போல் இனிமை தருவது மாதர் மொழி.

இணையிலா சத்தி விழியார் ---

கொல்லுவதில் இணையாக வேறு ஒரு கருவியை இல்லாதது வேல். மாதர்களின் கண்கள் வேலைப் போன்று இருக்கும். ஆடவரின் இதயத்தைக் கொல்லும் தன்மை வாய்ந்தவை அவை.

எழிலி நேர் ஒத்த இருள் அளக பாரச் செயல்கள் ---

மேகம் போல் கருத்து நீண்டு உள்ள கூந்தலை, கண்டவர் மனம் மயங்குமாறு விதவிதமாக அழகு விளங்க முடித்து இருப்பார்கள்.

எழுத ஒணாதப் பிறையினார் அரும் புருவர் ---

ஓவியாமாகவும் எழுத முடியாத அழகு பொருந்திய நெற்றிப் புருவத்தை உடையவர்கள். அதை அழகுறத் தீட்டுவார்கள்.

பவள நீலக் கொடிகள் இகலி ஆட ---

பவளக் கொடியும், நீலக் கொடியும் ஒன்றோடொன்று மாறுபட்டுப் புரள்வதைப் போன்ற சாயலை உடையவர்கள். 

பெண்களைக் கொடிக்கு ஒப்பிட்டுக் கூறுவது மரபு.

குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி ---

மூக்கு முமிழம் பூவைப் போன்று இருக்கும்.

இவ்வாறு எல்லாம் பலவிதமாகப்பெண்களின் அழகு வருணிக்கப்படும். அது காமுகர் மட்டும் அல்லாது துறந்தோருடைய உள்ளத்தையும் பற்றி இழுக்கும்.

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள் எலும்பாலே மேவிய கணைக்கால்
துள்ளும் வரால் எனச் சொல்லித் திரிந்தும்,
தசையும் எலும்பும் தக்க புன் குறங்கை
இசையும் கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,
மலமும், சலமும், வழும்பும், திரையும்
அலையும் வயிற்றை ஆல் இலை என்றும்,
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீ பாய்ந்து ஏறி,
உகிரால் கீற உலர்ந்து உள் உருகி,
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரி மொட்டு என்றும்
குலையும், காமக் குருடர்க்கு ஒன்று உரைப்பேன்,
நீட்டவும் முடங்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கு இயற்றும்
அம் கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை
பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,
அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும்
முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளும் குறும்பியும் ஒழுகும் காதை
வள்ளத் தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்
தக்க தலை ஓட்டின் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்,
சொல்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்;
தோலும் இறைச்சியும் துதைந்து சீ பாயும்
காமப் பாழி, கருவிளை கழனி,
தூமைக் கட வழி, தொளை பெறு வாயில்,
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி;
மண்பால் காமம் கழிக்கும் மறைவு இடம்,
நச்சிக் காமுக நாய்தான் என்றும்
இச்சித்து இருக்கும் இடை கழி வாயில்,

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி,
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்
மால் கொண்டு அறியா மாந்தர் புகும் வழி,
நோய் கொண்டு ஓழியா நுண்ணியர் போம்வழி,
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி,
செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி,
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி,
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்,
இத்தை நீங்கள் இனிது என வேண்டா,

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியில் கடவுளை,
ஏக நாதனை, இணைஅடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே.

என்று மாதர் மேல் வைத்த ஆசையை மாற்றி, இறைவன் மேல் ஆசை வைக்குமாறு பட்டினத்தடிகள் வேண்டுகின்றார்.

வள்ளல் பெருமான் நமது நெஞ்சுக்கு அறிவுறுத்துமாறு காண்க....

.....           .....           .....       மந்திரத்தில்

பேய்பிடித்தால் தீர்ந்திடும்,ப் பெண்பேய் விடாதே,செந்
நாய்பிடித்தால் போலும் என்று நாடிலையே, --- ஆய்வில்உன்றன்

ஏழைமை என் என்பேன், இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே, --- ஊழ்அமைந்த

கார் இருளில் செல்லக் கலங்குகின்றாய், மாதர்சூழல்
பேர் இருளில் செல்வதனைப் பேர்த்திலையே --- பாரிடையோர்

எண்வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய், ஏந்திழையார்
கண்வாள் அறுப்பக் கனிந்தனையே, --- மண்வாழும்

ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய், மாதர்முலை
ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே --- சீரான

வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய், மாதர்முலை
வெற்பு என்றால் ஏற விரைந்தனையே, --- பொற்புஒன்றும்

சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய், மாதர் இடைச்
சிங்கம் எனில் காணத் திரும்பினையே, --- இங்குசிறு

பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய், மாதர் அல்குல்
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே, --- ஆம் பண்டைக்

கீழ்க்கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ, மாதர் அல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே, --- கீழ்க் கதுவும்

கல் என்றால் பின்னிடுவாய், காரிகையார் கால்சிலம்பு
கல் என்றால் மேல் எழும்பக் கற்றனையே, --- அல்அளகம்

மையோ கருமென் மணலோ என்பாய், மாறி
ஐயோ நரைப்பது அறிந்திலையோ? --- பொய் ஓதி

ஒண்பிறையே ஒள்நுதல் என்று உன்னுகின்றாய், உள்எலும்புஆம்
வெண்பிறை அன்றே அதனை விண்டிலையே, --- கண்புருவம்

வில் என்றாய், வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
சொல் என்றால் சொல்லத் துணியாயே, --- வல் அம்பில்

கண் குவளை என்றாய், கண்ணீர் உலர்ந்துமிக
உள்குழியும் போதில் உரைப்பாயே, --- கள்குலவு

மெய்க்குமிழே நாசி என வெஃகினையால், வெண்மலத்தால்
உய்க்குமிழுஞ் சீந்தல் உளதேயோ? --- எய்த்தல் இலா

வள்ளை என்றாய் வார்காது, வள்ளைதனக்கு உள்புழையோடு
உள்ளு நரம்பின் புனைவும் உண்டேயோ? --- வெள்ளைநகை

முல்லை என்றாய், முல்லை முறித்து ஒருகோல் கொண்டுநிதம்
ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ? --- நல்லதொரு

கொவ்வை என இதழைக் கொள்கின்றாய், மேல்குழம்பும்
செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே, --- செவ்வியகண்

ஆடி எனக் கவுட்கே ஆசை வைத்தாய், மேல்செழுந்தோல்
வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே? --- கூடியதோர்

அந்த மதிமுகம் என்று ஆடுகின்றாய், ஏழ்துளைகள்
எந்த மதிக்கு உண்டு? தனை எண்ணிலையே, --- நந்து எனவே

கண்ட மட்டும் கூறினை அக் கண்ட மட்டும் அன்றி, உடல்
கொண்டமட்டும் மற்று அதன்மெய்க் கூறு அன்றோ, --- விண்டவற்றைத்

தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய், அவ்வேய்க்கு
மூள்ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே? --- நாளொன்றும்

செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய், அம்மலர்க்குப்
பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே? --- மங்காத

செவ் இளநீர் கொங்கை எனச் செப்பினை, வல் ஊன் தடிப்புஇங்கு
எவ் இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே? --- செவ்வைபெறும்

செப்பு என்றனை முலையை, சீசீ சிலந்தி அது
துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே? --- வப்பு இறுகச்

சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய், கீழ்த்துவண்டு
வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே, --- தாழ்ந்த அவை

மண்கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய், முதிர்ந்து உடையாப்
புண்கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே? --- திண்கட்டும்

அந் நீர்க் குரும்பை அவை என்றாய், மேல் எழும்பும்
செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே, --- அந்நீரார்

கண்ணீர் தரும் பருவாய்க் கட்டு உரைப்பார், சான்றாக
வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே? --- தண்ணீர்மைச்

சாடி என்பாய் நீ, அயலோர் தாதுக் கடத்துஇடும் மேல்
மூடி என்பார் மற்று அவர்வாய் மூடுதியோ? --- மேடு அதனை

ஆல் இலையே என்பாய், அடர் குடரோடு ஈருளொடும்
தோல் இலையே ஆல் இலைக்கு, ன் சொல்லுதியே? --- நூல் இடைதான்

உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய், கைதொட்டுக்
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே, --- விண்டுஓங்கும்

ஆழ்ங்கடல் என்பாய் மடவார் அல்குலினை, சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே, --- தாழ்ங்கொடிஞ்சித்

தேர் ஆழி என்பாய் அச் சீக்குழியை, அன்றுசிறு
நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே, --- ஆராப்புன்

நீர் வீழியை ஆசை நிலை என்றாய், வன்மலம்தான்
சோர் வழியை என்என்று சொல்லுதியே, --- சார்முடைதான்

ஆறாச் சிலை நீர் கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப் புண் என்று விடுத்திலையே, --- ஊறு ஆக்கி          

மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி, மற்று அதன்மேல்
சீலை இடக் கண்டும் தெரிந்திலையே, --- மேலை உறு-

மே நரகம் என்றால் விதிர்ப்புறு நீ, மாதர் அல்குல்
கோ நரகம் என்றால் குலைந்திலையே, --- ஊனம் இதைக்

கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே, --- அண்டாது

போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய், மற்று அதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே, --- மாதர் அவர்  

தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய், தண்டுஊன்றி
வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே, --- நன்கு இலவாய்

ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய், புலால் சிறிதே
வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே --- சேந்த அடி

தண் தாமரை என்றாய், தன்மை விளர்ப்பு அடைந்தால்
வெண் தாமரை என்று மேவுதியோ? --- வண் தாரா

மேல் நாட்டுஞ் சண்பகமே மேனி என்றாய், தீயிடுங்கால்
தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ? --- வானாட்டும்

மின் தேர் வடிவு என்றாய், மேல்நீ உரைத்த உள் ஈது
ஒன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண், --- ஒன்றாச்சொல்

வேள் வாகனம் என்றாய், வெய்யநமன் விட்டிடும் தூது
ஆள்வாகனம் என்றால் ஆகாதோ? --- வேள் ஆனோன்

காகளமாய் இன்குரலைக் கட்டுரைத்தாய், காலன் என்போன்
காகளம் என்பார்க்கு என் கழறுதியே? --- நாகளவும்

சாயைமயில் என்றே தருக்குகின்றாய், சார்பிரம
சாயை ஃது என்பார்க்கு என் சாற்றுதியே, --- சேயமலர்

அன்ன நடைஎன்பாய், அஃது அன்று, ருந்துகின்ற
அன்னநடை என்பார்க்கு என் ஆற்றுதியே, --- அன்னவரை

ஓர ஓவியம் என்பாய், ஓவியமேல் ஆங்கு எழுபத்து
ஈராயிர நாடி யாண்டு உடைத்தே? --- பார் ஆர்ந்த

முன்னுமலர்க் கொம்பு என்பாய், மூன்றொடரைக் கோடியெனத்
துன்னும் உரோமத் துவாரம் உண்டே? --- இன் அமுதால்

செய்த வடிவு என்பாய்,ச் செய்கை மெய்யேல், நீ அவர்கள்
வைதிடினும் மற்று அதனை வையாயே, --- பொய் தவிராய்

ஒள்ளிழையார் தம் உபு ஓர் உண்கரும்பு என்றாய், சிறிது
கிள்ளி எடுத்தால் இரத்தம் கீழ்வருமே, --- கொள்ளும் அவர்

ஈடில் பெயர் நல்லார் என நயந்தாய், நாய்ப்பெயர் தான்
கேடில் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ? --- நாடில்அவர்

மெல்இயலார் என்பாய், மிகு கருப்ப வேதனையை
வல்இயலார் யார் பொறுக்க வல்லார்காண்? --- வில்லியல்பூண்

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய், வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே, --- வேய்ந்தாங்கு

சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய், வெம்புலிப்பின்
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே, --- சென்றாங்கு

நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய், கண்மூடி
நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே, --- ஒன்றாது

கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய், கல் அணைத்துக்
கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே, --- பெண்டுஆனார்

வைதாலும் தொண்டு வலித்தாய், பிணத்தொண்டு
செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே, --- கைதாவி

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினை நீ,
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே, --- வைத்தாடும்

மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ, மற்றொழிந்து
துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே --- வஞ்சியரைப்

பார்த்து ஆடி ஓடிப் படர்கின்றாய், வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே --- சேர்த்தார் கைத்

தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய், வன்பூதம்
தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே --- நட்டாலும்

தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய், தீ விடத்தை
வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே, --- செவ்விதழ்நீர்

உண்டால் மகிழ்வாய் நீ, ஒண்சிறுவர் தம்சிறுநீர்
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே --- கண்டு ஆகக்

கவ்வுகின்றாய் அவ் இதழை, கார் மதுகம் வேம்பு இவற்றைக்
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே, --- அவ்இளையர்

மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய், நீ வெறும்வாய்
மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே, --- முன்தானை

பட்டால் மகிழ்வு பதிந்தாய், பதைக்க அம்பு
பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே, --- கிட்டாமெய்த்

தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய், செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கு ஓர் திறன்உண்டே, --- வேண்டி அவர்

வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய், மற்ற அதைஓர்
நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே, --- தாக்கவர்க்காய்த்

தேட்டாண்மை செய்வாய், த் தேட்டாண்மையைத்தெருவில்
போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே, --- வாட்டாரைக்

கொண்டார் உடன் உணவு கொள்கின்றாய், குக்கலுடன்
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே --- மிண்டு ஆகும்

இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய், புன்மலத்தை
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே, --- மங்கையர்தம்

ஏத்தா மனை காத்து இருக்கின்றாய், ஈமம் அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே, --- பூத்தாழ்வோர்

காட்டாக் குரல் கேட்பாய், கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே, --- கோட்டாவி

ஆழ்ந்தார் உடன்வாழ ஆதரித்தாய், ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே --- வீழ்ந்தார் உள்

வீட்டால் முலையும், எதிர் வீட்டால் முகமும் உறக்
காட்டா நின்றார் கண்டும் காய்ந்திலையே, --- கூட்டாட்குச்

செய்கை இடும்படி தன் சீமான் தனது பணப்
பை கையிடல் கண்டும் பயந்திலையே, --- சைகை அது

கையால் ஒருசிலர்க்கும், கண்ணால் ஒருசிலர்க்கும்,
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே, --- எய்யாமல்

ஈறு இகந்த இவ்வகையாய், இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல், அம்ம! குடர் குழம்பும்; --- கூறும்இவர்

வாய் ஒருபால் பேச, மனம்ஒருபால் செல்ல, உடல்
ஆய்ஒருபால் செய்ய அழிவார்காண்; --- ஆயஇவர்

நன்று அறியார், தீதே நயப்பார், சிவதலத்தில்
சென்று அறியார், பேய்க்கே சிறப்பு எடுப்பார், --- இன்று இவரை

வஞ்சம் என்கோ? வெவ்வினையாம் வல்லியம் என்கோ?பவத்தின்
புஞ்சம் என்கோ? மாநரக பூமி என்கோ? --- அஞ்சுறும் ஈர்

வாள் என்கோ? வாய்க்கு அடங்கா மாயம் என்கோ? மண்முடிவு
நாள் என்கோ? வெய்ய நமன் என்கோ? --- கோள்என்கோ?

சாலம் என்கோ? வான் இந்த்ர சாலம் என்கோ? வீறு ஆல
காலம் என்கோ? நின் பொல்லாக் காலம் என்கோ? ---  ஞாலம்அதில்

பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்,
மண் நின்றார் யார் நடுங்க மாட்டார் காண்.....


மறை முதுவர் பாடிக் குமுறவே ---

குமுறுதல் - பேரொலி செய்தல். கலப்போசை எழுதல்.

முதுவர் - மூத்தோர், அறிவால் உயர்ந்தோர், புலவர்,

அறிவில் சிறந்தோர் வேதங்களை உணர்ந்து ஓதும் ஓசை பெருக.

பார் இசையும் பண்டிதர்கள்  பல் நாளும்
பயின்று ஓதும் ஓசை......                                  --- திருஞானசம்பந்தர்.

அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப...    ---  சுந்தரர்.

கீதத்து இசையோடும், கேள்விக் கிடையோடும்,
வேதத்து ஒலி ஓவா வீழிமிழலை....                     ---  திருஞானசம்பந்தர்.

கருத்துரை

முருகா! மாதர் மயலில் வைத்த சிந்தையை மாற்றி, உனது திருவடியில் வைக்க அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...