ஒளியின் உயர்வு
43. ஒளியின் உயர்வு

செழுமணிக்கு ஒளி அதன் மட்டிலே! அதினுமோ
     செய்யகச் சோதம் எனவே
  செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
     தீபத்தின் ஒளிஅ திகமாம்!

பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
     பகல்வர்த்தி அதில்அ திகமாம்!
பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
     பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!

விழைதரு பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும்
     வீரவித ரணிக ருக்கும்
  மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன
     விரகுளோர் உரைசெய் குவார்!

அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அழல் விழிகொடு எரி செய்து மதனவேள் தனை வென்ற அண்ணலே --- நெருப்பு விழியினாலே மன்மதனை எரித்து, அவனது செயலை வென்ற பெரியோனே! (கொண்டு என்னும் சொல் பாடலின் அழகு நோக்கி, கொடு என வந்தது)

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     செழுமணிக்கு அதன் மட்டிலே ஒளி --- நல்ல மாணிக்கத்துக்கு அதன் அளவிலே தான் ஒளி உண்டு,

     அதினும் செய்ய கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம் ஒளி --- அந்த மாணிக்கத்தைக் காட்டினும் சிவந்த மின்மினி எனக் கூறப்படும் பூச்சிக்கு மிகுதியான ஒளி உண்டு,

     அதனினும் தீபத்தின் ஒளி அதிகம் ஆம் --- அந்த மின்மினிப் பூச்சியை விடவும் விளக்கின் ஒளி மிகுதி ஆகும்,

     தீபத்தின் பழுது இலாத் தீவர்த்தி அதிகம் ஆம் --- தீபத்தை விடவும் குற்றமற்ற தீவட்டியின் ஒளி அதிகம் ஆகும்,

     அதில் பகல் வர்த்தி அதிகம் ஆம் --- அதனினும் பகல் வர்த்தியின் ஒளி அதிகம் ஆகும்,

     அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் --- பகல் வர்த்தியை விடவும் பெரிய மத்தாப்பின் ஒளி அதிகம் ஆகும்,

     அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம் ஆம் --- அந்த மத்தாப்பினை விடவும் குளிர்ந்த சந்திரனின் ஒளி மிகுதி ஆகும்,

     விழைவு தரு பரிதிக்கும் --- உயிர்கள் எல்லாவற்றாலும் விரும்பப் படுகின்ற கதிரவனுக்கும்,

     மனுநீதி மன்னர்க்கும் --- செங்கோல் செலுத்துகின்ற அரசருக்கும்,

     வீர விதரணிகருக்கும் ---- வீரமும், கொடைப் பண்பும் உள்ளவருக்கும்,

     மிக்க ஒளி திசை தொறும் போய் விளங்கிடும் என்ன --- மிக்க புகழானது திசைகள் எங்கும் மிகுந்து விளங்கும் என்று

     விரகு உளோர் உரை செய்குவார் --- அறிவு உடையோர் கூறுவார்கள்.

          விளக்கம் --- வேள் - விருப்பம். மதனவேள் - காமத்திலே விருப்பம் உடையார்க்குத் துணை புரிவான். அது பிறப்பை அறுக்க உதவாது.  முருகவேள் வீட்டு நெறியில் நிற்க விழைவோர்க்கு அருள் புரிந்து, என்றும் அழியாத வீட்டின்பத்தில் வைப்பவன். கச்சோதம் - மின்மினிப் பூச்சி. விதரணம் - கொடை. சொல்வன்மை. அறிவு உடைமை. ஒளி - வெளிச்சம், அறிவு, மதிப்பு, புகழ் என்னும் பொருள்களைத் தருவது. வெளிச்சம் பொருள்களை விளக்கிக் காட்டும். அறிவு, மதிப்பு, புகழ் ஆகியவையும் ஒருவரை இன்னார் என்று விளக்கிக் காட்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...