சிதம்பரம் - 0624. கொள்ளை ஆசை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொள்ளை ஆசை (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
எனது உள்ளத்திலே தியானப் பொருளாக விளங்கி, மெய்யுணர்வைத் தந்து அருள்.



தய்ய தானத் தானன தானன
     தய்ய தானத் தானன தானன
          தய்ய தானத் தானன தானன ...... தனதான


கொள்ளை யாசைக் காரிகள் பாதக
     வல்ல மாயக் காரிகள் சூறைகள்
          கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
     வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
          கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு .....மவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்
     அல்லை நேரொப் பாமன தோஷிகள்
          உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
     கையு நீபத் தார்முக மாறுமுன்
          உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே

கள்ள மாயத் தாருகன் மாமுடி
     துள்ள நீலத் தோகையின் மீதொரு
          கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே

கல்லி லேபொற் றாள்பட வேயது
     நல்ல ரூபத் தேவர கானிடை
          கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே

தெள்ளி யேமுற் றீரமு னோதிய
     சொல்வ ழாமற் றானொரு வானுறு
          செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா

தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
     வள்ளி வேளைக் காரம னோகர
          தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொள்ளை ஆசைக் காரிகள், பாதகம்
     வல்ல மாயக் காரிகள், சூறைகள்
          கொள்ளும் ஆயக் காரிகள், வீணிகள், ...... விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள், யாரையும்
     வெல்லும் மோகக் காரிகள், சூதுசொல்
          கொவ்வை வாய் நிட்டூரிகள், மேல்விழும் .....அவர்போலே

உள்ள நோ வைத்தே உறவு ஆடியர்,
     அல்லை நேர் ஒப்பு ஆம் மன தோஷிகள்,
          உள் விரோதக் காரிகள், மாயையில் ...... உழல்நாயேன்

உய்யவே, பொன் தோள்களும், ஆறுஇரு
     கையும், நீபத் தார், முகம் ஆறும், முன்
          உள்ள ஞானப் போதமும் நீதர ...... வருவாயே!

கள்ள மாயத் தாருகன் மாமுடி
     துள்ள, நீலத் தோகையின் மீது, ரு
          கையின் வேல் தொட்டு ஏவிய சேவக! ......முருகோனே!

கல்லிலே பொன் தாள் படவே, அது
     நல்ல ரூபத்தே வர, கான் இடை
          கெளவை தீரப் போகும் இராகவன் ...... மருகோனே!
  
தெள்ளி ஏம் உற்று ஈரம் முன் ஓதிய
     சொல் வழாமல் தான் ஒரு வான்உறு
          செல்வி மார்பில் பூஷணமாய் அணை ...... மணவாளா!

தெள்ளும் ஏனல் சூழ்புனம் மேவிய
     வள்ளி வேளைக்கார! மனோகர!
          தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      கள்ள மாயத் தாருகன் --- கள்ளத்தனத்திலும் மாயையிலும் வல்லவனாகிய தாருகாசுரனுடைய

     மாமுடி துள்ள --- தலை அற்று விழ

     நீலத் தோகையின் மீது --- நீல மயில் மீது விளங்கி,

      ஒரு கையில் ---  ஒப்பற்ற திருக்கரத்தில் பொருந்தி உள்ள,

     வேல் தொட்டு ஏவிய சேவக --- வேலாயுத்ததை விடுத்து அருளிய வீரரே!

     முருகோனே --- முருகப் பெருமானே!

      கல்லிலே பொன் தாள் படவே --- கல்லின் மீது அழகிய திருவடி பட்டதும்,

     அது நல்ல ரூபத்தே வர --- அது நல்ல பெண் உருவாய் வர,

      கான் இடை --- கானகத்தில்

     கெளவை தீர --- அகலிகைக்கு உண்டான துன்பம் தீருமாறு

     போகும் இராகவன் மருகோனே --- சென்ற இராமச்சந்திர மூர்த்தியின் திருமருகரே!

      தெள்ளி ஏம் உற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் --- தெளிந்து, மனமகிழ்வோடு, முன்பு சொன்ன சொல் தவறால்,

      தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் --- விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையம்மையைத் தன் மார்பில்

     பூஷணமாய் அணை மணவாளா --- ஆபரணம் போல் அணைந்த மணவாளரே!

      தெள்ளும் ஏனல் சூழ் புன மேவிய --- கொழித்து வளர்ந்துள்ள தினைப் புனத்தில் இருந்த

     வள்ளி வேளைக்கார --- வள்ளியம்மையாருடன் பொழுதைப் போக்குபவரே!

     மனோகர --- மனத்துக்கு இனியவரே!

      தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே --- தில்லைத் திருக்கோயிலின் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      கொள்ளை ஆசைக்காரிகள் ---  அளவற்ற ஆசை கொண்டவர்கள்,

     பாதக வல்ல மாயக்காரிகள் --- பாதகச் செயல்களைச் செய்வதில் வல்ல மாயக்காரிகள்,

      சூறைகள் கொள்ளும் ஆயக்காரிகள் --- காண்போருடைய உள்ளத்தையும் பொருளையும் சூறை கொள்ளும் வேட்டைக்காரிகள்,

     வீணிகள் --- பயன் அற்றவர்கள்,

     விழியாலே கொல்லும் லீலைக்காரிகள் --- பார்வையாலேயே ஆடவர் மனத்தைக் கொல்லுகின்ற லீலைகளில் வல்லவர்கள்,

      யாரையும் வெல்லும் மோகக்காரிகள் --- மோக உணர்வை மூட்டி யாரையும் வெற்றி கொள்பவர்கள்,

     சூது சொல் கொவ்வை வாய் நிட்டூரிகள் --- கொவ்வைக் கனி போலும் சிவந்த வாயால் சூதான சொற்களைப் பேசும் கொடுமைக்காரிகள்,

         மேல் விழும் அவர் போலே உள்ள நோ(வ) வைத்து உறவாடியர் ---  மேலே விழுபவர் போல உள்ளன்பு உள்ளவர் போலக்காட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள்,

         அல்லை நேர் ஒப்பா(ம்) மன தோஷிகள் --- இருளுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள்,

     உள் விரோதக்காரிகள் --- உள்ளத்தில் பகைமை உணர்வு கொண்டவர்கள்,

     மாயையில் உழல் நாயேன் உய்யவே --- இத்தகைய பொது மாதர்களின் மீதுகொண்ட காம மயக்கத்தால் உழலுகின்ற நாயேன் பிழைத்து உய்யுமாறு,

      பொன் தோள்களும் --- அழகிய திருத்தோள்களும்,

     ஆறு இரு கையும் --- பன்னிரு திருக்கரங்களும்,

     நீபத் தார் --- கடப்பமலர் மாலையும்,

     முகம் ஆறும் --- திருமுகங்கள் ஆறும்,

     முன் உள்ள --- அடியேனது உள்ளத்தில் தியானப் பொருளாய் விளங்,

     ஞானப் போதமும் நீ தர வருவாயே --- மெய்யறிவை எனக்குத் தருவதற்கு தேவரீர் வந்தருளுக.

பொழிப்புரை


         கள்ளத்தனத்திலும் மாயையிலும் வல்லவனாகிய தாருகாசுரனுடைய தலை அற்று விழ, நீல மயில் மீது விளங்கி, ஒப்பற்ற திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலாயுத்ததை விடுத்து அருளிய வீரரே!

     முருகப் பெருமானே!

         கானகத்தில் சென்று கொண்டிருந்து போது ஆங்கே இருந்த ஒரு கல்லின் மீது அழகிய திருவடி பட்டதும், அது நல்ல பெண் உருவாய் வர, அகலிகைக்கு உண்டான துன்பம் தீருமாறு  திருவருள் புரிந்த இராமச்சந்திரமூர்த்தியின் திருமருகரே!

         தெளிந்து, மனமகிழ்வோடு, முன்பு சொன்ன சொல் தவறால், விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானை அம்மையைத் தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளரே!

         கொழித்து வளர்ந்து உள்ள தினைப் புனத்தில் இருந்த  வள்ளி அம்மையாருடன் பொழுதைப் போக்குபவரே!

     மனத்துக்கு இனியவரே!

         தில்லைத் திருக்கோயிலின் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         அளவற்ற ஆசை கொண்டவர்கள். பாதகச் செயல்களைச் செய்வதில் வல்ல மாயக்காரிகள். காண்போருடைய உள்ளத்தையும் பொருளையும் சூறை கொள்ளும் வேட்டைக்காரிகள். பயன் அற்றவர்கள். பார்வையாலேயே ஆடவர் மனத்தைக் கொல்லுகின்ற லீலைகளில் வல்லவர்கள். மோக உணர்வை மூட்டி யாரையும் வெற்றி கொள்பவர்கள். கொவ்வைக் கனி போலும் சிவந்த வாயால் சூதான சொற்களைப் பேசும் கொடுமைக்காரிகள். மேலே விழுபவர் போல உள்ளன்பு உள்ளவர் போலக்காட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள். இருளுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள். உள்ளத்தில் பகைமை உணர்வு கொண்டவர்கள்,

     இத்தகைய பொது மாதர்களின் மீதுகொண்ட காம மயக்கத்தால் உழலுகின்ற நாயேன் பிழைத்து உய்யுமாறு, அழகிய திருத்தோள்களும், பன்னிரு திருக்கரங்களும், கடப்பமலர் மாலையும், திருமுகங்கள் ஆறும்,  அடியேனது உள்ளத்தில் தியானப் பொருளாய் விளங், மெய்யறிவை எனக்குத் தருவதற்கு தேவரீர் வந்தருளுக.

விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதி பொதுமாதரின் இயல்புகளை விரித்து உரைக்கின்றது.


கல்லிலே பொன் தாள் படவே, அது நல்ல ரூபத்தே வர, கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே ---

கௌவை - துன்பம்.

காட்டிலே இராம்பிரான், தனது தம்பியாகிய இலக்குவனோடும், விசுவாமித்திர மாமுனியோடும் வருகையில், அங்கிருந்த கல் ஒன்றின் மீது, இராமபிரானுடைய அழகிய திருவடி பட்டதும், முன் ஒரு சாபத்தால் கல்லாய் இருந்த அகலிகை, தன் துன்பம் தீர்ந்து பழைய உருவினை அடைந்தாள்.

இந்திரன் கௌதம முனிவரின் பன்னியான அகலிகை மேல் காதல் கொண்டு,  முனிவரைத் தமது குடிலை விட்டு, காலைக் கடன் கழிக்கச் செல்லுமாறு உபாயம் செய்து போக்கி, கௌதமர் வடிவில் வந்து அகலிகையைத் தழுவினான். இதனை அறிந்ததும் அமலிகையைக் கல்லாகுமாறு கௌதம முனிவர் சபித்தார்.

முனிவர் அருளியபடியே, இராமபிரானுடைய திருவடியின் துகள் பட்டவுடன் கௌதமருக்கு மனைவியாக ஆவதற்கு முன் இருந்த கன்னி அகலிகையாக அத் திருவடித் துகள் அருளியது.

கோதமன் தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்து இவன்
போதுநின்றது எனப்போலிந்த பொலன் கழல்கால் பொடிகண்டாய்
காதல் என்றன் உயிர்மேலும் மிக்கரியோன் பால் உண்டால்,
ஈது இவன் தன் வரலாறும் புயவலியும் என உரைத்தான்     --- கம்பராமாயணம்.

கௌதமர் மணப்பதற்கு முன் கன்னி அகலிகை; மணந்த பின்
பன்னி அகலிகை. இந்திரன் தீண்டிய பின் தூய்மை இழந்த அகலிகை.

இராமருடைய திருவடியில் துகள், கல்லான அகலிகையை, அமுதத்துடன் பாலாழியில் பிறந்தபோது இருந்த கன்னி அகலிகையாகச் செய்துவிட்டது.
 

மேலை வானொர் உரைத் தசரற்கொரு
     பாலன் ஆகி உதித்து ஒர் முநிக்கு ஒரு
          வேள்வி காவல் நடத்தி, அ கற்கு உரு ...... அடியாலே

மேவியே, மிதிலைச் சிலை செற்று, மின்
     மாது தோள் தழுவிப் பதி புக்கிட,
          வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின் ...... னவனோடே

ஞால மாதொடு புக்கு அ வனத்தினில்,
     வாழும் வாலி படக்கணை தொட்டவன்,
          நாடி இராவணனைச் செகுவித்தவன் ...... மருகோனே!
                                                --- (ஆலகாலப் படப்பை) திருப்புகழ்.

   
தெள்ளி ஏம் உற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் ---

தேவசேனை முருகப் பெருமானை நோக்கி வள்ளியின் வரலாறு யாது எனக் கேட்டார்.  அதற்கு முருகப் பெருமான், "நீங்கள் இருவரும் திருமாலிடத்தே தோன்றியவர்கள். பன்னிரண்டு ஆண்டுக் காலமாக என்னை அடையத் தவம் செய்தீர்கள். அப்போது யாம், ஒருவர் விண்ணிலும், ஒருவர் மண்ணிலும் தோன்றுவீர்கள். தக்க காலத்தில் உங்களை மணம் புணர்வோம் என்று அருளினோம். நீ தேவர் கோனாகிய இந்திரன் மகளாய்த் தோன்றி, அவனுடைய வெள்ளை யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்டாய். யாம் முன்பு கூறியவாறே முதலில் உன்னை மணந்து கொண்டோம். உனது இளையாள் ஆகிய வள்ளி, மான் வயிற்றில் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தாள். இவளைப் பின்னர் "அந்தம் இல் மாயைகள் ஆற்றிய பின்னர்" மணந்துகொண்டோம் என்றார். இதனைக் கந்தபுராணம் விளக்குகின்றது. முருகப் பெருமான், முன்பு வாக்களித்த படியே அம்மையர் இருவரையும் மணம் புரிந்துகொண்டார்.


கருத்துரை

முருகா! பொதுமாதர் மயல் நீங்க, எனது உள்ளத்திலே தியானப் பொருளாக விளங்கி, மெய்யுணர்வைத் தந்து அருள்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...