சிதம்பரம் - 0598. அக்குப் பீளை
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அக்குப் பீளை (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
அடியேன் முத்தி நிலையில் சுகம் பெற அருள்.


தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான


அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
     டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
          லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி

அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
     ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
          ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்

சுக்கத் தாழ்கட லேசுக மாமென
     புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
          தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே

துக்கத் தேபர வாமல்ச தாசிவ
     முத்திக் கேசுக மாகப ராபர
          சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே

தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந்

தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
     கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
          சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா

திக்கத் தோகண தாவென வேபொரு
     சொச்சத் தாதையர் தாமென வேதிரு
          செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்

செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
     பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அக்கு, பீளை முளா இளை மூளையொடு
     புக்கு காய்பனி நீர்மயிர் தோல்குடில
          புச்சீ புழுவோடு அடை ஆர் தசை ......        உறமேவி

அத்திப் பால் பல நாடி குழாய், ள்
     வழுப்புச் சார் வலமே விளை ஊளை கொள்
          அச்சுத் தோல் குடிலாம் அதிலே பொறி ...... விரகாளர்

சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என
     புக்கிட்டு ஆசை, பெண் ஆசை மண்ஆசைகள்
          தொக்குத் தீவினை ஊழ்வினை காலமொடு ......அதனாலே

துக்கத்தே பரவாமல் சதாசிவ
     முத்திக்கே சுகமாக பராபர
          சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் ......   அருள்வாயே

தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ......    எனதாளம்

தத்திச் சூரர் குழாமொடு தேர் பரி
     கெட்டு, கேவலமாய் கடல் மூழ்கிட,
          சத்திக்கே இரையாம் எனவே விடு ......   கதிர்வேலா!

திக்கத் தோகண தா எனவே பொரு
     சொச்சத் தாதையர் தாம் எனவே திரு
          செக்கர்ப் பாதம் அதே பதியா சுதி ......    அவைபாட,

செப்பொன் பீலி உலாமயில் மாமிசை
     பக்கத்தே குற மாதொடு, சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ......   பெருமாளே.

பதவுரை

         தக்கத் தோகிட தாகிட தீகிட, செக்கச் சேகண தாகண தோகண, தத்தத் தானன டீகுட டாடுடு என தாளம் தத்தி --- தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி,

      சூரர் குழாமொடு --- அசுரர்களின் கூட்டத்தோடு,

     தேர் பரி கெட்டு --- அவர்களுடைய தேர்களும் குதிரைகளும் அழிந்து,

     கேவலமாய் கடல் மூழ்கிட --- ஒன்றும் இல்லாமல் கடலில் முழுகும்படி

     சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர்வேலா --- சத்திவேலுக்கே இவையெல்லாம் இரை ஆயின என்னும்படியாக விடுத்தருளிய ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவரே!

       திக்கத் தோகண தா எனவே பொரு --- திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற

     ஞொச்சத் தாதையர் தாம் எனவே --- இயல்பாகவே மலம் இல்லாதவராகிய தந்தை ஆகிய அம்பலவாணப் பெருமான் தேவரீரே என்று சொல்லும்படி,

     திரு செக்கர்ப் பாதம் அதே பதியா --- அழகிய சிவந்த திருவடிகளை அம்பலத்திலே ஊன்றி,

     சுதி அவை பாட --- வேதங்கள் பாட,

      செம் பொன் பீலி உலா மயில் மா மிசை --- சிறந்த பொன் போல ஒளிவிடும் தோகையுடன் விளங்கும் மயில் மீது,

     பக்கத்தே குற மாதொடு --- பக்கத்தில் குறமகளாகிய வள்ளிப்பிராட்டியோடு

     சீர் பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே --- சிறந்து விளங்குகின்ற தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      அக்குப் பீளை --- கண்ணில் வழிகின்ற பீளையும்,

     முளா இளை --- கண்டத்தில் இருந்து மேல் எழுகின்ற கோழையும்,

     மூளையொடுப் புக்கு --- மூளையில் உண்டாகும் புண்ணும்,

     காய் பனி நீர் --- துர் நாற்றம் வீசுகின்ற நீரும்,

     மயிர் --- மயிரும்,

     தோல் --- தோலும்,

     குடிலப் பூச்சி --- வளைந்துள்ள நாக்குப் பூச்சியும்,

     புழுவோடு --- நெளிகின்ற புழுக்களும்,

     அடை ஆர் தசை உற மேவி --- அடைந்துள்ள தசையால் மூடப்பட்டு உள்ள இந்த உடலில்,

      அத்திப் பால் பல நாடி குழாய் --- எலும்புகளும், நாடிக் குழாய்களும்,

     அள் வழுப்பு --- காதுகளில் வழிகின்ற குறும்பியும்,

     சார் வலமே விளை --- இவைகள் சேர்ந்து விளங்குகின்ற

     ஊளை கொள் --- பெருத்து இருக்கின்ற

     அச்சுத் தோல் குடிலாம் அதிலே --- பொருந்தி உள்ள தோலோடு அமைந்த குடிசையாகிய இந்த உடலில்,

       பொறி விரகாளர் --- ஐம்பொறிகளாகிய வஞ்சகர்கள்,

     சுக்கத்து ஆழ் கடலே --- ஆழ்த்துகின்ற கடல் போன்று பெரியதும் மாயமும் நிறைந்த வாழ்க்கையே

     சுகமாம் என புக்கிட்டு --- சுகம் என நினைத்து அதில் வீழ்ந்து,

     ஆசை --- பொன் ஆசை,

     பெ(ண்)ணாசை --- பெண் ஆசை,

     ம(ண்)ணாசைகள் தொக்கு --- மண் ஆசை என்னும் மூவாசைகளும் சேர்ந்து,

     தீ வினை ஊழ் வினை காலமொடு அதனாலே --- தீவினை ஆகிய ஊழ்வினையால் உண்டான காலக் கொடுமையால்

      துக்கத்தே பரவாமல் --- துன்பத்திலே விழுந்து அல்லல் படாமல்.

     சதாசிவ முத்திக்கே சுகமாக --- எப்பொழுதும் மங்களகரமாய் உள்ள முக்தி நிலையில் சுகமாக இருக்க,

     பராபர சொர்க்கப் பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே --- மேம்பட்ட சுவர்க்க பூமியில் அடியேன் கரை சேருமாறு தேவரீருடைய திருவடியைத் தந்து அருள வேண்டும்.


பொழிப்புரை


         தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி, அசுரர்களின் கூட்டத்தோடு, அவர்களுடைய தேர்களும் குதிரைகளும் அழிந்து, ஒன்றும் இல்லாமல் கடலில் முழுகும்படி சத்தி வேலுக்கே இவையெல்லாம் இரை ஆயின என்னும்படியாக விடுத்தருளிய ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவரே!

         திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற, இயல்பாகவே மலம் இல்லாதவராகிய தந்தையாகிய அம்பலவாணப் பெருமான் தேவரீரே என்று சொல்லும்படி, அழகிய சிவந்த திருவடிகளை அம்பலத்திலே ஊன்றி,  வேதங்கள் பாட, சிறந்த பொன் போல ஒளிவிடும் தோகையுடன் விளங்கும் மயில் மீது, அருகில் குறமகளாகிய வள்ளிப்பிராட்டியோடு, சிறந்து விளங்குகின்ற தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமையில் மிகுந்தவரே!

         கண்ணில் வழிகின்ற பீளையும்,  கண்டத்தில் இருந்து மேல் எழுகின்ற கோழையும், மூளையில் உண்டாகும் புண்ணும், துர் நாற்றம் வீசுகின்ற நீரும்,  மயிரும், தோலும், வளைந்துள்ள நாக்குப் பூச்சியும், நெளிகின்ற புழுக்களும்,  அடைந்துள்ள தசையால் மூடப்பட்டு உள்ள இந்த உடலில், எலும்புகளும், நாடிக் குழாய்களும், காதுகளில் வழிகின்ற குறும்பியும், இவைகள் சேர்ந்து விளங்குகின்ற பெருத்து இருக்கின்ற, பொருந்தி உள்ள தோலோடு அமைந்த குடிசையாகிய இந்த உடலில், ஐம்பொறிகளாகிய வஞ்சகர்கள், ஆழ்த்துகின்ற கடல் போன்று பெரியதும் மாயமும் நிறைந்த வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் வீழ்ந்து, பொன் ஆசை, பெண் ஆசை, மண் ஆசை என்னும் மூவாசைகளும் சேர்ந்து, தீவினை ஆகிய ஊழ்வினையால் உண்டான காலக் கொடுமையால் துன்பத்திலை விழுந்து அல்லல் படாமல். எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக இருக்க, மேம்பட்ட சுவர்க்க பூமியில் அடியேன் கரை சேருமாறு தேவரீருடைய திருவடியைத் தந்து அருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழின் முதல் பாதியில், ஆன்மாவானது இந்த உடம்பில் இருந்துகொண்டு படும் பாட்டை அடிகள் அருளுகின்றார்.

அக்கு ---

அட்சம், அக்கம் - கண்.  அக்கம் என்ற சொலு அக்கு என வந்தது.

முளா இளை ---

மூளுகின்ற ஈளை என்பது முளா இளை என வந்தது.

அத்தி ---

எலும்பு.

அள் வழுப்பு ---

அள் - காது.  வழுப்பு - குறும்பி.

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
     புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி
     ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
     மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
      இளைப்பையும் ஐயநீ அறிவாய்.         --- திருவருட்பா.

புற்புதக் குரம்பை, துச்சில், ஒதுக்கிடம்
என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டை
கல்லினும் வலிதாக் கருதினை, இதன் உள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி,
மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி,
சளியும் நீரும் தவழும் ஒரு பொறி,
வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி,
சலமும் சீயும் சரியும் ஒரு வழி,
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம், முடிவில் சுட்டு எலும்பு ஆகும்...     --- பட்டினத்தார்.


ஆசை, பெண்ஆசை, மண்ஆசைகள் , தொக்கு ---

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்; பிறப்பைக் கொடுக்கும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.                --- திருக்குறள்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்


பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை
விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

உலகமெல்லாம் கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கடங்காது, கங்கு கரையின்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுர தாண்டவமே பேராசை.

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரைமீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

குதிரைமேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சியடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையைக் கொடுங்கள்” என்றான்.

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

நான் அடிக்கிறேன்; நீ சிரிக்கிறாய்; என்ன காரணம்?” என்று கேட்டான்.

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன்; நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்று, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

ஆசைக்குஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
         ஆளினும், கடல் மீதிலே
     ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
         அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
         நெடுநாள் இருந்த பேரும்
     நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
         நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில், பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
     உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
          ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்,
     பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.          --- தாயுமானார்.

ஆசைச் சுழற் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.  --- தாயுமானார்.

ஆசைஎனும் பெருங் காற்றுஊடுஇலவம்
         பஞ்சுஎனவும் மனது அலையுங்காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும்
         கேட்டதும் தூர்ந்து முத்திக்குஆன
நேசமும்நல் வாசமும்போய், புலனாய்இல்
         கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!
         நிராசைஇன்றேல் தெய்வம் உண்டோ? --- தாயுமானார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி
                                    
கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டுள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

  ஆசா நிகளம் துகள் ஆயின பின்
 பேசா அநுபூதி பிறந்ததுவே”             --- கந்தரநுபூதி


தீ வினை ஊழ் வினை காலமொடு அதனாலே ---

உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன.  சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில்தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு முரணும்.  உயிர்களின் இருவினைக்கு ஏற்ப, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான்.  அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இன்று என்று அறிக.

நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் என்க.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு?  எனின், வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? ஆதலின் வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனின், உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே எனின், எய்தாது என்க.  குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு.  ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,
சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி
மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்
அலர் சோகம் செய்கமலத்து ஆம்.
  
வினை, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும்.

பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்திதத்துவத்தினிடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் என அறிக.

அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.

ஆகாமியம் - செய்யப்படுவது.
சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.
பிராரத்தம் - அநுபவிப்பது.

இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1)     ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள்.

அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்
திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்
ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்
ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்.

(2)     ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம்.

அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்
இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்
அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.

(3)     ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள்.

அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

பனியால் இடியால் படர்வாடை யினாலும்
துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய
நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு
ஓரில் பவுதிகம் ஆகும்.

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1.    உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2.    வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம்.  அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.

இருவினை முமலமுற இறவியொடு பிறவிஅற
ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனைஅருள் இடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா.        ---  (அறுகுநுனி) திருப்புகழ்.

அவையே தானே ஆய்இரு வினையில்
போக்குவரவு புரிய, ஆணையில்
நீக்கம்இன்றி நிற்கும்அன்றே.

என்ற சிவஞானபோத இரண்டாம் சூத்திரத்தினாலும், இதற்கு மாதவச் சிவஞான யோகிகள் எழுதிய பேருரையாலும், சித்தியார், சிவப்பிரகாசம் முதலிய வழிநூல் புடைநூல்களாலும் வினையின் விளக்கத்தை விரிவாகக் கண்டு தெளிக.

கருத்துரை

முருகா! அடியேன் முத்தி நிலையில் சுகம் பெற அருள்.


        


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...