சிதம்பரம் - 0612. கதித்துப் பொங்கு
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கதித்துப் பொங்கு (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
பொதுமாதர் மயல் அற அருள்.


தனத்தத்தம் தனத்தத்தத்
     தனத்தத்தம் தனத்தத்தத்
          தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான


கதித்துப்பொங் கலுக்கொத்துப்
     பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
          கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின்

கழுத்தைப்பண் புறக்கட்டிச்
     சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
          கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்

பதித்துத்தந் தனத்தொக்கப்
     பிணித்துப்பண் புறக்கட்டிப்
          பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப்

பறித்துப்பின் துரத்துச்சொற்
     கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
          பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ

கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
     கொதித்துச்சங் கரித்துப்பற்
          கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக்

கழித்துப்பண் டமர்க்குச்செப்
     பதத்தைத்தந் தளித்துக்கைக்
          கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா

சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
     கயத்தைச்சென் றுரித்துத்தற்
          சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்

செவிக்குச்செம் பொருட்கற்கப்
     புகட்டிச்செம் பரத்திற்செய்த்
          திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கதித்துப் பொங்கு அலுக்கு ஒத்துப்
     பணைத்து, கொம்பு எனத் தெற்றி,
          கவித்துச் செம்பொனைத் துற்றுக் ...... குழலார்பின்

கழுத்தைப் பண்பு அறக்கட்டி,
     சிரித்து, தொங்கலைப் பற்றிக்
          கலைத்து, செம் குணத்தில் பித்து ...... இடுமாதர்

பதித்து, தம் தனத்து ஒக்கப்
     பிணித்து, பண்பு உறக் கட்டிப்
          பசப்பி, பொன் தரப் பற்றி, ...... பொருள் மாளப்

பறித்து, பின் துரத்து, சொல்
     கபட்டுப் பெண்களுக்கு இச்சைப்
          பலித்துப் பின் கசுத்திப் பட்டு ...... உழல்வேனோ?

கதித்துக் கொண்டு எதிர்த்து, பின்
     கொதித்து, சங்கரித்து, ல்
          கடித்து, சென்று உழக்கித் துக்க ...... அசுரோரைக்

கழித்து, பண்டு அமர்க்குச் செப்
     பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
          அணி குச்சம் தரத்து, ச் சுத்த ...... ஒளிர்வேலா!

சிதைத்திட்டு ம் புரத்தை, சொல்
     கயத்தைச் சென்று உரித்து, தற்
          சினத் தக்கன் சிரத்தைத்தள் ...... சிவனார்தம்

செவிக்குச் செம் பொருள் கற்கப்
     புகட்டி, செம்பரத்தில் செய்த்
          திருச்சிற்றம்பலச் சொக்கப் ...... பெருமாளே.


பதவுரை

         கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்து --- விரைந்து எழுந்து எதிர்த்தும், பிறகு கோபம் கொண்டு அழித்தும்,

     பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து --- பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை அழித்து,

         பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்து --- முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி

     கைக்கு அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா ---கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலாயுதத்தை உடையவரே!

        
சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று உரித்து --- அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று, அதன் தோலை உரித்து,

     தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம் --- தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்கன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய

        
செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டி --- திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி,

     செம் பரத்தில் செய்த் திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே --- செவ்விய மேலான வகையில் அமைந்த திருச்சிற்றம்பலத்தில்  எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

      கதித்துப் கொங்கு அலுக்கு ஒத்துப் பணைத்து --- நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று,

     கொம்பு எனத் தெற்றிக் கவித்துச் செம் பொனைத் துற்றுக் குழலார் --- கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின்

      பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்து --- பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும்,

     தொங்கலைப் பற்றிக் கலைத்து --- தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும்,

     செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து --- நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து,

      தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பி --- தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து, இன்முகம் காட்டி ஏய்த்தும்,

     பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்து --- பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகும் அளவும் கைப்பற்றி,

     பின் துரத்துச் சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்து --- பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு,

     பின் கசுத்திப் பட்டு உழல்வேனோ --- பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ?


பொழிப்புரை

         விரைந்து எழுந்து எதிர்த்தும், பிறகு கோபம் கொண்டு அழித்தும், பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை அழித்து, முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலாயுதத்தை உடையவரே!

        
அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று, அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்கன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச்சிற்றம்பலத்தில்  எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமையில் சிறந்தவரே!

         நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து, இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ?


விரிவுரை

இத் திருப்புகழில் முதல் நான்கு அடிகளில் பொதுமகளிரின் சாகசங்கள் பேசப் பெறுகின்றன.

5, 6 அடிகளில் அசுர வதம் பற்றிக் கூறப்படுகின்றது.


சிதைத்திட்டு அம் புரத்தை ---

திரிபுரத்தைச் சிவபெருமான் சிரித்து எரித்தருளினார்.

முப்பரம் என்பன ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களைக் குறிக்கும்.

அப்புஅணி செஞ்சடை ஆதிபு ராதனன்
முப்புரம் எய்தனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை ஆர்அறி வாரே.             ---  திருமந்திரம்.

         தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வான்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டும் என்ன, மூவரும் பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக்கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தால் அன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை சேர்ந்தனன்.

         தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தர உலகில் வெள்ளிமதிலும், விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதி என்று மனதில் கொண்டு, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபால் சென்று பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள், விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

         திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம் மூவர்களையும் பாராது ஒழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலையை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்தில் இருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச் சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

         மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கண்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக் கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

வண்டிஇரு சுடராக,வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கற் அனைவரும் பரிவாரமாக, மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டுமலை சிலை, அக அரவு நாணாக, மால் கோலாக, அழலாகவாய்
கோல்இறகு காலாக, வெந்து முப்புரம்எரி கொளுந்த எய்தவர் குமரனே.
                                --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

நந்தியெம்பெருமான் சந்நிதியுட் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தருங்கருங் குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை யடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதிற் காலூன்ற, அதன் அச்சு முறிந்தது.

தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற                  --- திருவாசகம்.

உடனே, நாராயணர் இடபமாக, அவ் இடபம் மேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள் கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மார காலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகர் மறைமொழியாலும் காண்க.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவரருளால் இரதம் முன்போல் ஆக, சிவபெருமான் தேவியாருடன் தேர் மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்றண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.

         அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லிற் பணியரசாகிய நாணையேற்றினர். (அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை யழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தையுறுவர் என்றும், தனக்கோர் ஆயுதமெனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையும் இன்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கனுப்பி வெள்ளிமாமலைக் கெழுந்தருளினார். இமையவர் இடுக்கணகன்று இன்புற்றனர்.

சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்
  திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்”       --- அப்பர்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
   உளைந்தன முப்புரம் உந்தீபற
   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.
  
ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
   ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
   ஒன்றும் பெருமிகை உந்தீபற.        --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
         இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை
         ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
         மணிமு ழாமுழக் க அருள் செய்த
தேவ தேவநின் திருவடி அடைந்தேன்
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.       ---  சுந்தரர்.


கயத்தைச் சென்று உரித்து ---

யானை வடிவாக வந்த கயமுகாசுரனை உரித்து, யானைத் தோலை சிவமூர்த்தி மேல் போர்வையாகப் போர்த்திக் கொண்டார்.

'ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று
இரு பூத வீட்டில் இராமல்' என்றான் இருகோட்டு ஒருகைப்
பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்
குரு, பூதவேலவன் நிட்டூர சூர குல அந்தகனே.           --- கந்தரலங்காரம்.

சினத் தக்கன் சிரத்தைத் தள் ---

அகந்தை கொண்டு சிவநிந்தை செய்த தக்கனுடைய தலையைக் கொய்து, அவனுக்கு ஆட்டுத் தலையை அரனார் அருளினார்.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி உந்தீ பற,
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற.           --- மணிவாசகம்.

மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை
வன்வாளியில் கொளும் தங்கரூபன்.. --- (என்னால்) திருப்புகழ்.

கருத்துரை

சிதம்பரம் மேவிய செவ்வேளே, மாதர் மயக்கில் உழலாமல் உய்வித்து அருள்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...