சிதம்பரம் - 0618. குகனே குருபரனே




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குகனே குருபரனே (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
அடியேனுடைய வினைகளும் நோயும் அற்று ஒழிய
மயில் மீது வந்து அருள்.


தனன தனதன தானன தந்தத்
     தனன தனதன தானன தந்தத்
          தனன தனதன தானன தந்தத் ...... தனதான


குகனெ குருபர னேயென நெஞ்சிற்
     புகழ அருள்கொடு நாவினி லின்பக்
          குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்

கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
          குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்

பகலு மிரவுமி லாவெளி யின்புக்
     குறுகி யிணையிலி நாடக செம்பொற்
          பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்

பவள மனதிரு மேனியு டன்பொற்
     சரண அடியவ ரார்மன வம்பொற்
          றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
     திகுட திகுதிகு தீதக தொந்தத்
          தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
          தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்

ககன மறைபட ஆடிய செம்புட்
     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
          கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா

கயிலை மலைதனி லாடிய தந்தைக்
     குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
          கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குகனெ குருபரனே என நெஞ்சில்
     புகழ, அருள்கொடு, நாவினில் இன்பக்
          குமுளி, சிவ அமுது ஊறுக, உந்திப் ...... பசிஆறி,

கொடிய இருவினை மூலமும், வஞ்சக்
     கலிகள், பிணி இவை வேரொடு சிந்திக்
          குலைய, நமசிவய ஓம் என கொஞ்சிக் ...... களிகூரப்

பகலும் இரவும் இலா வெளி இன்புக்
     குறுகி, இணை இலி நாடக செம்பொன்
          பரம கதி இது ஆம் என சிந்தித்து, ...... அழகாகப்

பவளம் அன திருமேனியுடன், பொன்
     சரண அடியவர்ஆர், மன் நவம் பொன்,
          தருண சரண் மயில் ஏறி, உன் அம்பொன் ......கழல்தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
     திகுட திகுதிகு தீதக தொந்தத்
          தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு ...... இயல்தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
          தடி அழன, க மாருத சண்டச் ...... சமர்ஏறிக்

ககன மறைபட ஆடிய செம்புள்
     பசிகள் தணிவுற, சூரர்கள் மங்க,
          கடல்கள் எறிபட, நாகமும் அஞ்சத் ...... தொடும்வேலா!

கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு
     உருக மனம் முன நாடியெ கொஞ்சிக்
          கனக சபைதனில் மேவிய கந்த, ...... பெருமாளே.


பதவுரை

      தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம் --- தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு என்று ஒலிக்கும் தாளமும்,

      தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி --- தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊதுகின்ற கருவியாகிய பூரிகை, பம்பை, கரடிகை என்ற பறை வகை,

      தமருகம் வீணைகள் பொங்க --- உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப,

     தடி அழன --- தடியப்பட்ட பிணங்கள் சிதறி விழ,

      உக மாருதம் சண்ட சமர் ஏறி --- யுக முடிவில் உண்டாகும் காற்றைப் போல் வேகத்துடன் போர் செய்யப் புகுந்து,

      ககனம் மறை பட ஆடிய செம்புள் --- ஆகாயம் மறைவுபட மகிழ்ச்சியால் கூத்தாடும் செவ்விய பறவைகளாகிய செங்கழுகுகளின்,

      பசிகள் தணிவுற --- பசிகள் அடங்கவும்,  

     சூரர்கள் மங்க --- அசுர வீரர்கள் உயிர் மங்குமாறும்,

      கடல்கள் எறிபட --- கடல்கள் வெம்மை அடையவும்,

     நாகமும் அஞ்ச தொடும் வேலா --- திக்கு யானைகள் பயப்படவும் தொடுத்த வேலாயுதத்தை உடையவரே!

      கயிலைமலை தனில் ஆடிய தந்தைக்கு --- திருக்கயிலாய மலையில் திருநடனம் புரிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு

      மனம் உருக ---  அவர் திருவுள்ளம் அன்பினால் உரு,

     முனம் நாடியே கொஞ்சி --- முன்னம் அப் பெருமானை நாடிக் கொஞ்சிப் பேசி,

      கனக சபைதனில் மேவிய கந்த --- பொற்சபையில் எழுந்தருளி உள்ள கந்தக் கடவுளே!

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

      குகனே குருபரனே என நெஞ்சில் புகழ --- குகப் பெருமானே, மேலான குருமூர்த்தியே, என்று மனதார அடியேன் புகழவும்,

      அருள் கொடு --- உமது திருவருளின் துணைக்கொண்டு

     நாவினில் இன்ப குமுளி --- அடியேனுடைய நாவிலே இன்பத்தேன் குமிழி பொங்க,

      சிவ அமுது ஊறுக --- சிவ அமிர்தமானது ஊற்றெடுக்க, அதனால்,

     உந்திப் பசி ஆறி --- வயிற்றுப் பசி ஆறி,

      கொடிய இருவினை மூலமும் --- பொல்லாத இருவினைகளின் அடிவேரும்,

      வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக் குலைய --- கொடிய கேடுகளும், நோய்கள் யாவும் வேருடன் தொலைந்து அழிவுறவும்,

      நமசிவய ஓம் என கொஞ்சி களி கூர --- ஓம் நமசிவய என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி அடையவும்,

      பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி --- நினைப்பும் மறப்பும் இல்லாத மேலை வெளியில் உண்டாகும் இன்பத்தை  அடைந்து,

      இணை இலி நாடக --- சமானம் இல்லாத நடன மூர்த்தியே!

     செம்பொன் பரமகதி இதுவாம் என சிந்தித்து அழகாக ---  செவ்விய பொன்னொளி வீசுவதாகிய பரமகதி இதுவேயாகும் என்று உணர்ந்து

      பவளம் அன திருமேனியுடன் --- பவளம் போன்ற திருவுருவத்துடன்

     பொன் சரண அடியவர் ஆர் --- பொன்னடியைச் சார்ந்த அடியவர்கள் நிறைய,

     மன் நவம் பொன் --- நிலை பெற்ற புதிய ஒளியும்,

      தருண சரண் மயில் ஏறி --- இளமையும் வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஆரோகணித்து வந்து, 

      உன் அம் பொன் கழல் தாராய் --- உமது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக.


பொழிப்புரை


     தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு என்று ஒலிக்கும் தாளமும், தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊதுகின்ற கருவியாகிய பூரிகை, பம்பை, கரடிகை என்ற பறை வகை, உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, தடியப்பட்ட பிணங்கள் சிதறி விழ, யுக முடிவில் உண்டாகும் காற்றைப் போல் வேகத்துடன் போர் செய்யப் புகுந்து, ஆகாயம் மறைவுபட மகிழ்ச்சியால் கூத்தாடும் செவ்விய பறவைகளாகிய செங்கழுகுகளின், பசிகள் அடங்கவும்,  அசுர வீரர்கள் உயிர் மங்குமாறும், கடல்கள் வெம்மை அடையவும், திக்கு யானைகள் பயப்படவும் தொடுத்த வேலாயுதத்தை உடையவரே!

         திருக்கயிலாய மலையில் திருநடனம் புரிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு அவர் திருவுள்ளம் அன்பினால் உரு, முன்னம் அப் பெருமானை நாடிக் கொஞ்சிப் பேசி, பொற்சபையில் எழுந்தருளி உள்ள கந்தக் கடவுளே!

     பெருமையில் சிறந்தவரே!

         குகப் பெருமானே, மேலான குருமூர்த்தியே, என்று மனதார அடியேன் புகழவும், உமது திருவருளின் துணைக்கொண்டு அடியேனுடைய நாவிலே இன்பத்தேன் குமிழி பொங்க, சிவ அமிர்தமானது ஊற்றெடுக்க, அதனால் வயிற்றுப் பசி ஆறி, பொல்லாத இருவினைகளின் அடிவேரும், கொடிய கேடுகளும், நோய்கள் யாவும் வேருடன் தொலைந்து அழிவுறவும், ஓம் நமசிவய என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி அடையவும், நினைப்பும் மறப்பும் இல்லாத மேலை வெளியில் உண்டாகும் இன்பத்தை  அடைந்து, சமானம் இல்லாத நடன மூர்த்தியே! செவ்விய பொன்னொளி வீசுவதாகிய பரமகதி இதுவேயாகும் என்று உணர்ந்து  பவளம் போன்ற திருவுருவத்துடன் பொன்னடியைச் சார்ந்த அடியவர்கள் நிறைய, நிலை பெற்ற புதிய ஒளியும், இளமையும் வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஆரோகணித்து வந்து,  உமது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக.

   
விரிவுரை

குகனே ---

முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம். தேவதேவ தேவாதி தேவன் முருகன். ஆதலின், நிலங்களை வகுத்த பண்டைச் சான்றோர்கள் மலைமீது அப் பெருமானை வைத்து வழிபட்டார்கள்.

மலைக் குகையில் முருகன் உறைவதனால் குகன் எனப் பேர் பெற்றான்.

ஆன்மாக்களின் இதய குகையிலே உறைவதனால், குகன் எனப் பெற்றான். இந்த இதய குகையில் உள்ளது சிதாகாசம் என்றும் தகராகாசம் என்றும் உபநிஷதங்கள் முறையிடுகின்றன. இந்தக் குகா என்ற பேர் தனிப்பெரும் சிறப்புடையது. இந்தத் தகரவித்தை யஜுர் வேதத்து பிரகதாரண்யக உபநிஷத்தில் விளக்கப்பட்டு இருக்கின்றது.

குருபரனே ---

கு - அந்தகார இருள்
ரு - போக்குபவன்.

ஆணவ இருளை அகற்றுபவன் குரு. முருகன் குரு என்ற பேருக்கு உரியவன். ஆதலின், அப் பெருமான் எழுந்தருளிய மலை குருமலை எனப்படும். குரு, குருபரன், குருநாதன், குருசாமி, குருமூர்த்தி, பரமகுரு என்றெல்லாம் அப் பெருமானுடைய பெயர்கள் அமைந்திருப்பதை அறிக.

நெஞ்சில்புகழ, அருள்கொடு நாவினில் குமிளி, சிவஅமுது ஊறுக உந்திப் பசியாறி ---

முருகப் பெருமானுடைய திருநாமங்களை உளமார நினைந்து ஓதினால், நாவினில் இன்பத் தேன் குமிளி விட்டுக் கொப்புளிக்கும்.  சிவ அமுதம் ஊற்றெடுத்துப் பெருகும்.  அதனால் வயிற்றுப் பசி ஆறும்.  உடம்பு உள்ளம் உணர்வு உயிர் யாவும் உரம் பெற்று மகிழும்.

சிவஞானமுதே பசியாறி...            ---  (சிவமாதுடனே) திருப்புகழ்.

இறைவன் உள்ளம் உருகித் துதிப்பதனால் இன்ப அமுதம் ஊறும்.  அதனை உண்டார்க்குப் பசி, நோய் முதலிய துன்பங்கள் எய்தா.

கொடிய இருவினை வேரொடு சிந்தி ---

முருகப் பெருமான் தரிசனம் தருவதனால் நல்வினை தீவினை என்ற இருவினைகளும் வேருடன் வெந்து சாம்பராகி விடுகின்றன.

அன்றி பாவங்களும் நோய்களும் அடியுடன் அழிந்து விடும்.

நமசிவய ஓம் என கொஞ்சி ---

அருணகிரிநாதர் முருக உபாசகர். ஐந்தெழுத்தை உச்சரித்தேன் என்கின்றார்.  இதனால் ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் ஒன்றென உணர்க.

நமசிவயப் பொருளோனே ….         --- (புமியதனில்) திருப்புகழ்.

பகலும் இரவும் இலா வெளி ---

பகல் இரவு என்பது நினைப்பு மறப்பு என்ற சகலகேவலங்கள் ஆகும். நினைப்பும் மறப்பும் அற்று அலையற்ற கடல் போல் ஆன்மா இன்புற்றிருக்கும் இடம்.

அந்திபகல் அற்ற நினைவு அருள்வாயே ….             --- (ஐங்கரனை) திருப்புகழ்.

அராப்புனை வேணியன் சேய்அருள்வேண்டும் அவிழ்ந்த அன்பால்
குராப்புனை தண்டை அம்தாள் தொழல்வேண்டும் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்புஅறல் வேண்டும்என்றால்
இராப் பகலற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே.
  
இராப் பகலற்ற இடம்காட்டி யான் இருந்தே துதிக்கக்
குராப்புனை தண்டை அம் தாள் அருளாய்; கரிகூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்ற கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்கிரம வேல நிருத சங்கார பயங்கரனே            --- கந்தர் அலங்காரம்

என்பனவாதி அருள் வாக்குகளை ஈண்டு சிந்திக்க.

பவளமன திருமேனி ---

முருகன் செவ்வான் உருவினன், பவளமேனியன்.
  
அடியவரார் மன ---

மன்ன – நெருங்க. மன்ன என்ற சொல் மன என வந்தது.

தபலை ---

தபேலா என்று சொல்லுகின்ற தோல்கருவி.

கரடி ---

கரடி என்பது ஒருவித பறை. மிகுந்த ஓசையுடன் கூடியது.  "சிவபூசையில் கரடி புகுந்ததுபோல்" என்ற பழமொழி இந்த வாத்தியத்தைக் குறித்தது.

தடி யழனவுக ---

தடி அழனம் உக.  தடி - தடியப்பட்ட,  அழனம் - பிணம்.  உக – சிந்த எனப் பதப்பிரிவு செய்து பொருள் கொள்க. 

ககன மறைபட ஆடிய செம்புள் ---

கருடன், கழுகு முதலிய சிவந்த பறவைகள் போர்க்களத்தில் இறைச்சியை உண்ணும் பொருட்டு குவிந்து வந்து விண்ணை மறைத்துப் பந்தரிட்டது போல் பறக்கின்றன.

கருத்துரை

பொற்சபை மேவும் கந்தவேளே, என் வினை அகல மயிலேறி வந்து காட்சி தந்தருள்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...