வறுமையின் கொடுமை





37. வறுமையின் கொடுமை

மேலான சாதியில் உதித்தாலும் அதில்என்ன?
     வெகுவித்தை கற்றும் என்ன?
  மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்துஎன்ன?
     மிகுமானி ஆகில் என்ன?

பால்ஆன மொழி உடையன் ஆய்என்ன? ஆசார
     பரனாய் இருந்தும் என்ன?
  பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?
     பாக்கியம் இலாத போது;

வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!
     வந்தசுற் றமும்இ கழுமே!
  மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!
     மனைவியும் தூறு சொல்வாள்!

ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

         
இதன் பொருள் ---

     ஆலாலம் உண்ட கனி வாயனே --- ஆலகால விடத்தை உண்ட, கனிபோலச் சிவந்த திருவாயை உடையவனே!

     நேயனே --- அன்பு வடிவானவனே!

     அனகனே --- குற்றம் இல்லாதவனே! 

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     பாக்கியம் இலாத போது --- ஒருவனுக்குச் செல்வம் இல்லாவிட்டால், அவன்

     மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன --- உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் அதனால் பயன் இல்லை.

     வெகுவித்தை கற்றும் என்ன --- மிகுதியான கலைகளைப் படித்து உணர்ந்தாலும் பயன் இல்லை,

     மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன --- பேரழகுடன் நற்பண்புகள் பொருந்தி இருந்தாலும் பயன் இல்லை,

     மிகு மானி ஆகில் என்ன --- சிறந்த மானம் உடையவன் ஆனாலும் பயன் இல்லை.

     பால் ஆன மொழி உடையன் ஆய் என்ன --- இனிய மொழிகளையே பேசுபவன் ஆனாலும் பயன் இல்லை,

     பார் மீது வீரமொடு ஞானவான் ஆய் என்ன --- உலகிலே வீரமும் அறிவும் உடையவன் என்றாலும் பயன் இல்லை.

     பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் --- அவனைப் பெற்றெடுத்த தாயும் இயல்பாகவே வெறுப்பாள்,

     வந்த சுற்றமும் இகழும் --- வருகின்ற உறவினரும் அவனை இகழ்வர்,

     அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் --- எல்லோரும் மதிப்பு இல்லாமல் பேசுவார்கள்,

     மனைவியும் தூறு சொல்வாள் --- இல்லாளும் குறை கூறுவாள்.

     கருத்து --- ஒருவனிடம் எத்தனை நலங்கள் இருந்தாலும், அவனுக்குச் செல்வ வளம் இல்லையானால், அவனை தாயும் இகழ்வாள். சுற்றத்தார் மதிக்க மாட்டார்கள். எல்லோரும் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். மனைவியும் இகழ்ந்து பேசுவாள். வறுமையின் கொடுமையை ஆசிரியர் இவ்வாறு காட்டினார். 

"கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப்பிராட்டி.

இன்மை என ஒரு பாவி, மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்.

என்று திருவள்ளுவ நாயனார் வறுமையின் கொடுமையை உணர்த்தினார். "இன்மை என ஒரு பாவி" என்றார்.

"மிடி என்னும் ஒரு பாவி" என்றார் வள்ளல் பெருமான். 

"மிடி என்று ஒரு பாவி வெளிப்படின்" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடி போகியவா,
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே!
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள், 
செல்லாது அவன்வாயில் சொல்.                       --- நல்வழி.

நேரா அழுக்குத் துணி ஆகில், உன் தனை நேரில்கண்டும்
பாராதவர் என நிற்பார், உடுத்தது பட்டு எனிலோ
வாராது இருப்பது என், வாரும்என்பார், இந்த வஞ்சகர்பால்
சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனைச் சேர் விரைந்தே.    --- திருவருட்பா.

 

No comments:

Post a Comment

பொது --- 1080. கலந்த மாதும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கலந்த மாதும் (பொது) தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங...