அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முகத் துலக்கிகள்
(திருவருணை)
திருவருணை முருகா!
பொதுமாதரொடு கலந்து அழிவதை
விட்டு,
உனது திருவடியில் கலந்து
நிற்க அருள்
தனத்த
தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான
முகத்து
லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள்
...... முந்துசூது
மொழிப்ப
ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு
...... கின்றமூடர்
செகத்தி
லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ......
சிந்தைமாயத்
திரட்பொ
றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ....யென்றுசேர்வேன்
தொகுத்தொ
குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு .....தொந்ததீதோ
துடுட்டு
டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் .....தொண்டர்பேணும்
அகத்தி
யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ......
நின்றகோவே
அமர்க்க
ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
முகத்
துலக்கிகள், ஆசார இனிகள்,
விலைச் சிறுக்கிகள், நேரா அசடிகள்,
முழுச் சமர்த்திகள், காமா விரகிகள்,
...... முந்துசூது
மொழிப்
பரத்தைகள், காசு ஆசையில் முலை
பலர்க்கும் விற்பவர், நானா அநுபவம்
முயற்று பொட்டிகள், மோக அவலம்உறு.....கின்றமூடர்,
செகத்தில்
எத்திகள், சார்வாய் மயக்கிகள்,
திருட்டு மட்டைகள், மாயா சொருபிகள்,
சிரித்து உருக்கிகள், ஆகா என நகை,
...... சிந்தைமாயத்
திரள் பொறிச்சிகள், மா பாவிகள், அப-
கடத்து அசட்டைகள், மூதேவிகளொடு
திளைத்தல் அற்று, இரு சீர்பாதமும் இனி.....
என்று சேர்வேன்?
தொகுத்தொ
குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு .....தொந்ததீதோ
துடுட்டு
டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ என ஒரு
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர், ......தொண்டர்
பேணும்
அகத்தி
அப்பனும், மால், வேதனும், அறம்
வளர்த்த கற்பக மாஞாலியும், மகிழ,
உற்ற நித்த பிரானே! அருணையில்
......நின்ற கோவே!
அமர்க்களத்து
ஒரு சூர ஈசனை விழ
முறித்து, உழக்கி, அ வானோர் குடிபுக
அமர்த்தி விட்ட சுவாமீ! அடியவர் ......
தம்பிரானே.
பதவுரை
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி
குத்திகு தீதோ என ஒரு துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் ---- தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு
தீதோ ஓன்ற ஓசை நயத்துடன், ஒப்பற்றதாய்
தொடங்கும் நடனத்தை ஆடி வீற்றிருப்பவரும்,
தொண்டர் பேணும்
அகத்தி அப்பனும் --- அடியார்கள் விரும்புகின்றவரும் ஆகிய அகத்தீச்சுரரும்,
மால் --- நாராயணரும்,
வேதனும் --- பிரமதேவனும்,
அறம் வளர்த்த கற்பக மாஞாலியும் மகிழ உற்ற
நித்த பிரானே --- காஞ்சிபுரத்தில் அறம் வளர்த்த நாயகியும், கற்பகத் தரு போன்றவளும், சிறந்த உலகத்தவளும் ஆகிய பார்வதியும்
மகிழுமாறு இருக்கும் அழிவற்ற பெருமானே!
அருணையில் நின்ற கோவே
--- திருவண்ணாமலையில் எழுந்தருளிய தலைவரே!
அமர்க் களத்து ஒரு
சூரேசனை விழ முறித்து உழக்கி --- போர்க்களத்திலே ஒப்பற்ற தலைவனான
சூரபன்மன் விழும்படி முறித்துக் கொன்று,
அ
வானோர் குடிபுக அமர்த்தி விட்ட சுவாமீ --- அந்தத் தேவர்கள் தங்கள் உலகில்
குடி புகும்படி வாழ வைத்த உடையவரே!
அடியவர் தம்பிரானே --- அடியவர்கள்
போற்றும் தனிப்பெரும் தலைவரே!
முகத் துலக்கிகள் --- முகத்தைக் கழுவி
மினுக்குபவர்கள்,
ஆசார ஈனிகள் --- ஆசாரம் குறைந்தவர்கள்,
விலைச் சிறுக்கிகள் --- உடலை விற்கும்
சிறுக்கிகள்,
நேரா அசடிகள் --- பொருந்துதல் இல்லாத
அறிவற்றவர்கள்,
முழுச் சமர்த்திகள் --- முழுச்
சாமர்த்தியம் உடையவர்கள்,
காமா விரகிகள் --- ஆசை லீலையில்
தந்திரசாலிகள்,
முந்து சூதுமொழிப்
பரத்தைகள் ---
முற்பட்டுள்ள வஞ்சக வார்த்தைகளை உடைய வேசைகள்,
காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் ---
பணத்து ஆசையால் முலைகளைப் பலருக்கும் விற்பவர்கள்,
நானா அநுபவம் முயற்று பொட்டிகள் --- பலவகையான
அநுபவத்துடன் முயலுகின்ற உள்ளீடு இல்லாதவர்கள்,
மோக அவலம் உறுகின்ற மூடர் --- காம
மயக்கத்தால் துன்பமடைகின்ற மூடர்கள்,
செகத்தில் எத்திகள் --- உலகில் ஆடவரை
ஏமாற்றுபவர்கள்,
சார்வாய் மயக்கிகள் --- சார்ந்தவர்போல்
நடித்து மயக்குபவர்கள்,
திருட்டு மட்டைகள் --- திருட்டுத்தனம்
உடைய பயனிலிகள்,
மாயா சொருபிகள் --- மாயையின்
வடிவமானவர்கள்,
சிரித்து உருக்கிகள் --- தங்கள்
சிரிப்பினாலே உள்ளத்தை உருக்குபவர்கள்,
ஆகா என நகை சிந்தைமாயத் திரள் பொறிச்சிகள்
--- ஆ ஆ என்று நகை செய்து தங்களிடம் வந்தவர்களின் உள்ளத்தைக் கொல்லும் திரண்ட
தந்திரசாலிகள்,
மா பாவிகள் --- பெரிய பாவிகள்,
அபகடத்து அசட்டைகள் --- வஞ்சம் கொண்டு
புறக்கணிப்போர்,
மூதேவிகளொடு திளைத்தல் அற்று --- மூதேவிகள்
ஆகிய இத்தகைய பொதுமகளிரோடு நெருங்கிக் கலத்தல் ஒழிந்து,
இரு சீர்பாதமும் இனி என்று சேர்வேன் ---
உமது இரு திருவடிகளை இனி அடியேன் என்று அடைவேன்.
பொழிப்புரை
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ ஓன்ற ஓசை நயத்துடன், ஒப்பற்றதாய் தொடங்கும் நடனத்தை ஆடி
வீற்றிருப்பவரும், அடியார்கள்
விரும்புகின்றவரும் ஆகிய அகத்தீச்சுரரும், நாராயணரும், பிரமதேவனும், காஞ்சிபுரத்தில் அறம் வளர்த்த நாயகியும், கற்பகத் தரு போன்றவளும், சிறந்த உலகத்தவளும் ஆகிய பார்வதியும்
மகிழுமாறு இருக்கும் அழிவற்ற பெருமானே!
திருவண்ணாமலையில் எழுந்தருளிய தலைவரே!
போர்க்களத்திலே ஒப்பற்ற தலைவனான
சூரபன்மன் விழும்படி முறித்துக் கொன்று, அந்தத்
தேவர்கள் தங்கள் உலகில் குடி புகும்படி வாழ வைத்த உடையவரே!
அடியவர்கள் போற்றும் தனிப்பெரும்
தலைவரே!
முகத்தைக் கழுவி மினுக்குபவர்கள், ஆசாரம் குறைந்தவர்கள், உடலை விற்கும் சிறுக்கிகள், பொருந்துதல் இல்லாத அறிவற்றவர்கள், முழுச் சாமர்த்தியம் உடையவர்கள், ஆசை லீலையில் தந்திரசாலிகள், முற்பட்டுள்ள வஞ்சக வார்த்தைகளை உடைய
வேசைகள், பணத்தாசையால் முலைகளைப்
பலருக்கும் விற்பவர்கள், பலவகையான
அநுபவத்துடன் முயலுகின்ற உள்ளீடு இல்லாதவர்கள், காம மயக்கத்தால் துன்பமடைகின்ற மூடர்கள், உலகில் ஆடவரை ஏமாற்றுபவர்கள், சார்ந்தவர்போல் நடித்து மயக்குபவர்கள், திருட்டுத்தனம் உடைய
பயனிலிகள், மாயையின்
வடிவமானவர்கள், தங்கள் சிரிப்பினாலே
உள்ளத்தை உருக்குபவர்கள், ஆ ஆ என்று நகை செய்து தங்களிடம்
வந்தவர்களின் உள்ளத்தைக் கொல்லும் திரண்ட தந்திரசாலிகள், பெரிய பாவிகள், வஞ்சம் கொண்டு புறக்கணிப்போர், மூதேவிகள், ஆகிய இத்தகைய பொதுமகளிரோடு
நெருங்கிக் கலத்தல் ஒழிந்து, உமது இரு திருவடிகளை இனி
அடியேன் என்று அடைவேன்.
விரிவுரை
இத்
திருப்புகழின் முதற்பகுதி இருமனப் பெண்டிரின் இழிவை உணர்த்துகின்றது.
சார்வாய்
மயக்கிகள் ---
உடன்
உறைபவராய் இருந்து மயக்குபவர். மயக்கிகள்
என்ற சொல் மயகிகள் எனச் சந்தத்தை நோக்கி வந்தது.
திரள்
பொறிச்சிகள்
---
பொறி
- தந்திரம்.
சீர்
பாதம்
---
முருகப்
பெருமானுடைய திருவடி ஞானமேயாகும்.
திருவடியின் பெருமையைச் சீர்பாத வகுப்பை ஓதி உணர்க.
துவக்க
நிர்த்தனம் ஆடா உறைபவர் ---
நடராஜ
மூர்த்தியின் நடனத்தின் ஒலிக் குறிப்பையும், தாள வகைகளையும் இனிது இயம்புகின்றார்.
அகத்தி
அப்பனும்
---
அகத்திய
முனிவரால் பூசிக்கப் பெற்றதனால் சிவபெருமான் அகத்தீச்சுரர் எனப் பேர் பெற்றார்.
அகத்தியர்
பூசித்த தலம், வேதாரணியத்தின் அருகே
அகத்தியான்பள்ளி என்ற திருத்தலம் ஆகும்.
ஓதியெல்லாம்
உலகுக்கோர் ஒண்பொருள் ஆகி,மெய்ச்
சோதிஎன்று
தொழுவார் துயர் தீர்த்திடும்
ஆதி,எங்கள்
பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால்
தொழுவார் அவர் வினை நீங்குமே. ---
திருஞானசம்பந்தர்.
அறம்
வளர்த்த கற்பக மாஞாலி.... சுவாமீ ---
உலகங்களையும்
உயிர்களையும் சொத்தாக உடையவர். சுவாமி என்ற சொல் உடையான் என்ற பொருள் தருவது. சுவாமி
என்ற பெயர் முருகப் பெருமானுக்கே உரியது.
கருத்துரை
அருணை
மேவும் முருகவேளே, மாதர் மயலின்
தொடர்பிலிருந்து விலகி உன் திருவடியைச் சேர அருள் செய்.
No comments:
Post a Comment