அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கோதிக் கோதி
(சிதம்பரம்)
சிதம்பர முருகா!
பொதுமாதர் மயக்கில் ஆழ்ந்து
அழியாமல் காத்து அருள்.
தானத்
தானத் தாந்தன தானன
தானத்
தானத் தாந்தன தானன
தானத் தானத் தாந்தன தானன ...... தனதான
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித்
தாகச் சாந்தணி வார்முலை
கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ......குயில்போலக்
கூவிக்
கூவிக் காண்டிசை போலவெ
நாணிக்
கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள்
...... வருமோவென்று
ஓதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச்
சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில
...... விலைமாதர்
ஓருச்
சேரச் சேர்ந்திடு வார்கலி
சூளைக்
காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ......
லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட்
டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல்
...... விடும்வேலா
வேளைச்
சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ......
தருசேயே
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ......
சுரமானை
ஞானப்
பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக்
கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கோதிக் கோதிக் கூந்தலிலே மலர்
பாவித்து, ஆகச் சாந்து அணி வார்முலை
கோடுத் தானை, தேன் துவர் வாய்மொழி ......குயில்போலக்
கூவிக்
கூவி, காண்டுஇசை போலவெ
நாணிக்
கூனிப் பாய்ந்திடுவார் சிலர்,
கூடித் தேறிச் சூழ்ந்திடுவார், பொருள் ...... வருமோ என்று
ஓதித் தோளில் பூந்துகிலால் முலை
மூடி, சூதில் தூங்கம் இலார், தெரு
ஓடித் தேடிச் சோம்பிடுவார், சில ...... விலைமாதர்
ஓருச்
சேரச் சேர்ந்திடுவார், கலி
சூளைக்
காரச் சாங்கம் இலார்,சில
வோரைச் சாகத் தீம்பிடுவார் செயல்
...... உறவுஆமோ?
வேதத் தோனைக் காந்தள் கையால் தலை
மேல்
குட்டு ஆடி, பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆடக் காய்ந்து, அசுரார்கள்மெல் ...... விடும்வேலா!
வேளைச்
சீறித் தூங்கலொடே, வய
மாவைத் தோலைச் சேர்ந்து அணிவார்இடம்
மீது உற்றாள் பொன் சாம்பவி மாதுஉமை
...... தருசேயே!
நாதத்து
ஓசைக் காண் துணையே! சுடர்
மூலத் தோனைத் தூண்டிடவே உயிர்
நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் ......
சுரமானை,
ஞானப்
பால் முத்தேன் சுருபாள் வளி
மாதைக்
கானில் சேர்ந்து அணைவாய், சிவ
ஞானப் பூமித் தேன் புலியூர் மகிழ் ......
பெருமாளே.
பதவுரை
காந்தள் கையால் --- காந்தள் மலர்
போன்ற திருக்கையால்
வேதத்தோனை --- வேதத்தில் வல்ல
பிரமதேவரின்
தலைமேல் குட்டு ஆடி --- தலையில் குட்டி விளையாடி,
பாந்தள் சதாமுடி
வீரிட்டு ஆடக் காய்ந்து --- ஆதிசேடனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான
முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து,
அசுரார்கள் மெல்
விடும் வேலா --- சூராதி அவுணர்களின்
மேல் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
வேளைச் சீறி --- காமவேளைக்
கோபித்து,
தூங்கலொடே வயமாவைத் தோலைச் சேர்ந்து
அணிவார் இட மீது உற்றாள் --- யானையின் தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை ஆடையாகவும் அணிந்தவராகிய
சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும்
பொன் சாம்பவி மாது உமைதரு சேயே ...
அழகிய சாம்பவியாகிய மாதா, உமாதேவியார் பெற்றருளிய
திருக் குழந்தையே!
நாதத்து ஓசைக் காண்
துணையே
--- திருச்சிலம்பு ஓசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் பெருமானே!
சுடர் மூலத்தோனைத் தூண்டிடவே --- மூலாதாரக்
கனலைத் தூண்டி எழுப்பி,
உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள்
--- பிராணவாயு சுழுமுனை நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிபவரே!
சுரமானை --- சுரர்களிடையே
வளர்ந்த தேவயானை அம்மையையும்,
ஞானப்பால் முத்தேன் சுருபாள் வளி மாதை ---
ஞானப்பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய
வள்ளி நாயகியையும்,
கானில் சேர்ந்து அணைவாய் --- தினைப்
புனக் காட்டிலும் தழுவியவரே!
சிவஞானப் பூமி தேன்
புலியூர் மகிழ் பெருமாளே --- சிவஞானப் பூமியாகிய அழகிய பெரும்பற்றப்புலியூரில் மகிழ்ந்து விளங்கும் பெருமாளே!
கோதிக் கோதிக்
கூந்தலிலே மலர் பாவித்து --- ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில்
மலர்களைப் பரப்பிச் சூட்டி
ஆகம் சாந்து அணி --- உடலில் சந்தனம்
அணிந்து,
வார் முலை கோடுத் தானை --- கச்சு அணிந்த
முலைகள் என்னும் மலை போன்ற சேனையுடன்,
தேன் துவர் வாய் மொழி
குயில் போலக் கூவிக் கூவி --- பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து,
காண்டு இசை போலவெ நாணி கூனி
பாய்ந்திடுவார் சிலர் --- (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி
வெட்கப்பட்டும், குனிந்தும், பாய்ந்தும் சில பொதுமகளிர் நடிப்பர்.
கூடித் தேறிச்
சூழ்ந்திடுவார் --- ஒன்று கூடியும், தெளிவுற்றும்
சூழ்ந்து யோசிப்பவர்களாய்,
பொருள் வருமோ என்று ஓதி --- பொருள்
கிடைக்குமோ என்று பேசி,
தோளில் பூந்துகிலால் முலை மூடி --- தோள்
மீதுள்ள அழகிய புடவையால் முலைகளை மூடி,
சூதில் தூங்கம் இலார் தெரு ஓடித் தேடி ---
--- வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும்
வாடிக்கையாளரைத் தேடி,
சில விலைமாதர் சோம்பிடுவார் --- சில விலைமாதர்கள் சோம்பலாய்க் காலம் கழிப்பர்.
ஓருச் சேரச்
சேர்ந்திடுவார் --- ஒருமிக்கச் சேர்ந்தவர்களாய்,
கலி சூளைக்காரச் சாங்கமிலார் சிலவோரைச்
சாகத் தீம்பிடுவார் செயல் உறவு ஆமோ --- வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய
விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் ஆகுமோ? (ஆகாது).
பொழிப்புரை
காந்தள் மலர் போன்ற திருக்கையால் வேதத்தில் வல்ல பிரமதேவரின் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேடனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான
முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, சூராதி
அவுணர்களின் மேல் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!
காமவேளைக் கோபித்து, யானையின் தோலைப் போர்வையாகவும், புலியின் தோலை ஆடையாகவும் அணிந்தவராகிய
சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமாதேவியார் பெற்றருளிய திருக் குழந்தையே!
திருச்சிலம்பு ஓசை முதலிய நாதங்களைக்
கேட்பதற்குத் துணை புரியும் பெருமானே!
மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி,
பிராணவாயு சுழுமுனை நாடி மார்க்கத்தில்
சார்வதற்கு அருள் புரிபவரே!
சுரர்களிடையே வளர்ந்த தேவயானை அம்மையையும், ஞானப்பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியையும் தினைப் புனக் காட்டில்
தழுவியவரே!
சிவஞானப் பூமியாகிய அழகிய பெரும்பற்றப்புலியூரில் மகிழ்ந்து விளங்கும் பெருமாளே!
ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப்
பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம்
அணிந்து, முலைகள் என்னும் மலை போன்ற சேனையுடன், பவளம் போன்ற வாயால்
தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி
வெட்கப்பட்டும், குனிந்தும், பாய்ந்தும் சில பொதுமகளிர் நடிப்பர். ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் முலைகளை
மூடி, வஞ்சனை எண்ணத்துடன்
தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் வாடிக்கையாளரைத் தேடியும், சில விலைமாதர்கள் சோம்பலாய்க் காலம்
கழிப்பர். ஒருமிக்கச்
சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய
விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் ஆகுமோ? (ஆகாது).
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதரைப் பற்றி எடுத்துரைத்தார் அடிகளார். நல்லொழுக்கமும் நற்குணமும் இல்லாத விலைமாதர் சேர்க்கையால், இம்மையில் மட்டுமின்றி
மறுமையிலும் துன்பமே சம்பவிக்கும் என்று அறிவுறுத்தினார்.
வேதத்தோனைக் காந்தள் கையால் தலை
மேல்
குட்டு ஆடி ---
குமாரக் கடவுள் திருவிளையாடல் பல
புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி
தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ்
சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாயமலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த
எல்லாக் கணங்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத்
திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும்
புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன
எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.
பிரமதேவர்
குமரக் கடவுளைக் கண்டு வணங்காது,
“இவன்
ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப்
பெருமான் சிவன் வேறு தான் வேறன்று,
மணியும்
ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே
என்பதை உலகினர்க்கு உணர்த்தவும்,
பிரமனுடைய
செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.
தருக்குடன்
செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது
கைகுவித்து, வணங்கிடாத பாவனையாக
வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்?”
என்றனர். பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு
வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின்
முதல் வேதமாகிய இருக்க் வேத்தைக் கூறு,” என்று
குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை
மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து
திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி!
நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ
மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.
தாமரைத்தலை
இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை
எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று
உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம்
எனப்படு மொழிப்பொருள் இயம்புக",என்று உரைத்தான்.
---கந்தபுராணம்.
ஆறு
திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன்
வினவுதலும், பிரமன் அக்குடிலை
மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய
ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலை குனிந்தனன்.
நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளையும் உணராமல் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான்
கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.
பிரமன்
“ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.
அது
கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப்
பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும்
புரிகின்றனையோ? பேதாய்!” என்று
நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.
எட்ட
ஒணாத் தவக் குடிலையின் பயன் இனைத்து என்றே
கட்டு
உரைத்திலன் மயங்கலும் இதன் பொருள் கருதாய்
சிட்டி
செய்வது இத் தன்மைய தோ எனாச் செவ்வேள்
குட்டினான்
அயன் நான்குமா முடிகளும் குலுங்க. ---கந்தபுராணம்.
பிரமதேவனது
அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதன் ஆகும்படி
குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து
அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
“வேதநான்முக மறையோ
னொடும் விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” ---
(காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய
பெருமாளே” -- (பரவை) திருப்புகழ்.
“ஆரணன் தனை வாதாடி ஓர் உரை
ஓதுகின்று என, வாராது எனா, அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும்வேலா. --- (வாரணந்) திருப்புகழ்.
“.......................................படைப்போன்
அகந்தை
உரைப்ப, மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின் உண்மை -- புகன்றிலையால்
சிட்டித்
தொழில் அதனைச் செய்வது எங்ஙன் என்று, முனம்
குட்டிச் சிறை இருத்தும் கோமானே” --- கந்தர்
கலிவெண்பா.
வேளைச்
சீறி
---
வேள்
- மன்மதன். சீறி - சினந்து.
இந்திரன்
முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத
கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத்
தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.
"எந்தாய்!
அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள்.
அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள்
என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு
நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து
இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச்
செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல்
தோன்றி,
'உங்கள்
விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை
விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான்
திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும்
நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை
அடையாமையால்,
மீண்டும்
அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு
உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின்
உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை
விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில்
இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான்
ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின.
உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய
படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல
வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும்
துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும்
சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும்
மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம்
அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில்
அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு
உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.
இதைக்
கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு
உயிராய்,
அருவமும், உருவமும், உருவருவமும்
ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன்
ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான்
இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"
ஆவிகள்
அனைத்தும் ஆகி,
அருவமாய்
உருவமாகி
மூவகை
இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள்
தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள்
காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.
"சிவமூர்த்தியின்
பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி
மறந்து,
சிவமூர்த்தியை
நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம்
சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க
எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள்
அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு
இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள்
பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும்
மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில்
இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள்
அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம்
நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு
மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக
நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க
ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே
செய்யத்தக்கது" என்றார்.
அது
கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய
கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.
திருமால், "பிரதேவரே! நீர்
உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி
நகரை அடைந்து,
மன்மதனை
வருமாறு நினைந்தார். மாயவானகிய
திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை
நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான்.
"மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை
உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக்
காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.
கங்கையை
மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை
மேவ,
நின்
வாளிகள் தூவி,
அங்கு
உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள்
பொருட்டினால் ஏகுதி என்றான்.
பிரமதேவர்
கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச்
சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும்
என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை
எரிப்பது ஓர் அற்புதமா?
மன்மதன்
தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை
மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.
"அண்ணலே!
தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும்
வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம்
எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு
அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில்
ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய
மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே
மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப்
புணருமாறும்,
திலோத்தமையைக்
கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை
நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும்
செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல்
முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய
அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப்
புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப்
புணர்ந்து,
புதன்
என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய
தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக்
குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த
காசிபர்,
வசிட்டர், மரீசி முதலிய
முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத்
தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு
செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை
வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும்
என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி.
சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம்
நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப்
போல அவரையும் எண்ணுவது கூடாது".
"சண்ட
மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த
விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர்
யாரும் இல்லை".
"திரிபுர
சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான்
தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"
"தன்னையே
துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது
இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"
"முன்
ஒரு நாள்,
தாங்களும், நாராயணமூர்த்தியும்
'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட
போது,
அங்கு
வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில்
ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"
"சலந்தரன்
ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"
"உமது
மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய
வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"
"திருப்பாற்கடலில்
தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"
"உலகத்தை
எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது
சிவபெருமான் தானே!"
"தாருகா
வனத்தில்,
இருடிகள்
அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு
முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும்
அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"
"சர்வ
சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால்
உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய
பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு
வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."
இவ்வாறு
மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம்
ஆராய்ந்து,
பெரு
மூச்சு விட்டு,
மன்மதனைப்
பார்த்து,
"மன்மதனே!
ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய
விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே.
தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும்
தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது
முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும்.
எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன்
அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை
ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத்
துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய
துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது
என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத்
தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை
நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள
மறுத்து,
பின்னர்
நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை
விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும்
வந்து சேரும்.
ஏவர்
எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில்
குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி
விடினும் அறனே,
மறுத்து
உளரேல்
பாவம்
அலது பழியும் ஒழியாதே.
பிறர்க்கு
உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி
முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது
முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில்
எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால்
நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில்
ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம்
அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக
எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும்
வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத்
தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது
வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.
அது
கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு
எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப்
பொழுதில் செய்வேன்" என்றான்.
பிரமதேவர்
அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய்.
நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன்.
இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து
சொல்" என்றார்.
மனமதனை
அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு
தெளிந்து,
பிரமதேவரைப்
பார்த்து,
"நாமகள்
நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின்
நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால்
எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள
வேண்டாம்" என்றான்.
பிரமதேவர்
மனம் மகிழ்ந்து,
"நல்லது.
நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம். யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று
அறுப்பினார்.
மன்மதன், பிரமதேவரிடம்
விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள்
போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த
அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த
மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய்
முழங்க,
மீனக்
கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக
உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான்
எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு
இறங்கி,
தன்னுடன்
வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும்
அம்பும் கொண்டு,
பெரும்
புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல்
ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள்
மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த
நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை
என்று தெளிந்து,
'உம்' என்று
நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள்
மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர்
முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட
நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு
விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும்
உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர
சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை
எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை
எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே!
சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என்
உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை
நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு
திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.
மன்மதன்
திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல்
வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி
போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன்
மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன
காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர்
புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது
என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப்
போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன்.
விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன்
திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த
காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண்
ஏற்றி,
அரும்புக்
கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.
இது
நிற்க,
மனோவதி
நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய
போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை
மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல்
படுதலும்,
பெருமான்
தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில்
இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை
திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.
கருத்துரை
முருகா!
பொதுமாதர் மயக்கில் ஆழ்ந்து அழியாமல் காத்து அருள்.
No comments:
Post a Comment