சிதம்பரம் - 0620. கைத்தருண ஜோதி
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கைத்தருண சோதி (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
எல்லாமும் நீயே.


தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான


கைத்தருண சோதி யத்திமுக வேத
     கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்

கற்புசிவ காமி நித்யகலி யாணி
     கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்

வித்துருப ராம ருக்குமரு கான
     வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்

வெற்புளக டாக முட்குதிர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்

சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
     திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்

தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
     சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
     தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்

துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
     சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கை தருண சோதி அத்தி முக வேத
     கற்பக சகோத்ரப் ...... பெருமாள்காண்!

கற்பு சிவகாமி நித்ய கலியாணி
     கத்தர் குருநாதப் ...... பெருமாள்காண்!

வித்து ருப ராமருக்கு மருகு ஆன
     வெற்றி அயில் பாணிப் ...... பெருமாள்காண்!

வெற்புஉள கடாகம் உட்க, திர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்!

சித்ரமுகம் ஆறு முத்தும் அணி மார்பு
     திக்கினின் இலாதப் ...... பெருமாள்காண்!

தித்திமிதி தீதென ஒத்தி விளையாடு
     சித்திர குமாரப் ...... பெருமாள்காண்!

சுத்த விர சூரர் பட்டுவிழ, வேலை
     தொட்ட கவி ராஜப் ...... பெருமாள்காண்!

துப்பு வளியோடும் அப் புலியுர் மேவு
     சுத்த சிவஞானப் ...... பெருமாளே.


பதவுரை

      கை தருண சோதி --- தும்பிக்கையை உடையவரும், இளமை உடையவரும், ஒளிமயம் ஆனவரும்,

      அத்தி முக --- யானைமுகம் உடையவரும்,

     வேத --- வேதப் பொருள் ஆனவரும், 

      கற்பக சகோத்ரப் பெருமாள் காண் --- கற்பகம் போன்றவரும் ஆகிய விநாயகப் பெருமானுடைய இளைய சகோதரராகிய  பெருமாள் நீதான்.

      கற்பு சிவகாமி --- கற்பு நிறைந்த சிவகாமசுந்தரியும்,

     நித்ய கலியாணி --- நித்திய கல்யாணியுமான பார்வதிதேவியின்

      கத்தர் குருநாதப் பெருமாள் காண் ---  தலைவராகிய சிவபெருமானின் குருநாதராகிய பெருமாள் நீதான்.

      வித்துருப ராமருக்கு மருகான --- மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி விளங்கும்

      வெற்றி அயில் பாணிப் பெருமாள் காண் --- வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் தாங்கிய பெருமாள் நீதான்.

      வெற்பு உள கடாகம் உட்க, உதிர வீசு --- மலைகள் உள்ள அண்ட கோளங்கள் அஞ்சும்படி வலிமையான தோகையை வீசும்

      வெற்றிமயில் வாகப் பெருமாள் காண் --- வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாள் நீதான்.

      சித்ரமுகம் ஆறும் --- அழகிய திருமுகங்கள் ஆறும்,

     முத்தும் அணி மார்ப --- முத்துமாலைகள் புரளும் திருமார்பும்,

      திக்கினில் இலாதப் பெருமாள் காண் --- வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகும் போரொளியும் உடைய பெருமாள் நீதான்.

      தித்திமிதி தீதென ஒத்தி விளையாடு --- தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற

      சித்திர குமாரப் பெருமாள் காண் --- அழகிய குமாரக் கடவுள் என்னும் பெருமாள் நீதான்.

      சுத்த விர சூரர் பட்டுவிழ வேலை தொட்ட --- சுத்த வீரமூர்த்தியும், சூராதி அவுணர்கள் அழியும்படி வேலாயுதத்தை விடுத்தவரும்,

      கவி ராஜப் பெருமாள் காண் --- சிறந்த கவியரசன் ஆகியவனும் ஆகிய பெருமாள் நீதான்.

      துப்பு வளியோடும் அப்புலியுர் மேவு --- தூயவளான வள்ளி நாயகியுடன் அந்தப் புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,

      சுத்தசிவ ஞானப் பெருமாளே --- சுத்த சிவஞான மூர்த்தியாகிய பெருமையில் சிறந்தவரே.


பொழிப்புரை

         தும்பிக்கையை உடையவரும், இளமை உடையவரும், ஒளிமயமானவரும்,  யானைமுகமுடையவரும், வேதப் பொருளானவரும்,   கற்பகம் போன்றவரும் ஆகிய விநாயகப் பெருமானுடைய இளைய சகோதரராகிய பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         கற்பு நிறைந்த சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான பார்வதி தேவியின் தலைவராகிய சிவபெருமானின் குருநாதராகிய பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி விளங்கும் வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் தாங்கிய பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         மலைகள் உள்ள அண்ட கோளங்கள் அஞ்சும்படி வலிமையான தோகையை வீசும் வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         அழகிய திருமுகங்கள் ஆறும், முத்துமாலைகள் புரளும் திருமார்பும்,  வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகும் போரொளியும் உடைய பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற அழகிய குமாரக் கடவுள் என்னும் பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         சுத்த வீரமூர்த்தியும், சூராதி அவுணர்கள் அழியும்படி வேலாயுதத்தை விடுத்தவரும், சிறந்த கவியரசனாகியவனும் ஆகிய பெருமையில் சிறந்தவர் நீரே தான்.

         தூயவளான வள்ளி நாயகியுடன் அந்தப் புலியூர் என்னும்திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,  சுத்த சிவஞானமூர்த்தியாகிய பெருமையில் சிறந்தவரே.

விரிவுரை

இத் திருப்புகழும் துதிப்பாடலாகவே அமைந்தது.

கைத் தருண ஜோதி அத்திமுக வேத கற்பக சகோத்ர ---

கை - தும்பிக்கை. தருணம் - இளமை. விநாயகப் பெருமானுடைய தும்பிக்கை நீதி நம்பிக்கை வைக்கவேண்டும்.  விநாயகருக்குத் தருணகணபதி என்ற பேரும் உண்டு.

வேதப் பொருளும், கற்பகம் போல் நினைத்ததைத் தருபவராக விளங்குவபர் விநாயகர் என்று அருணகிரிநாதர் இந்த அடியில் நமக்கு உபதேசிக்கின்றார்.

அன்றியும் சிதம்பரத்தில் எழுந்தருளி உள்ள கணபதி, கற்பக விநாயகர் என்று பேர் பெற்றவர்.

"சகோதர" என்ற சொல் "சகோத்ர" என வந்தது.

கற்பு சிவகாமி நித்ய கலியாணி ---

கற்பு நெறியை உலகிற்கு உணர்த்துகின்றவர் உமாதேவியார்.  முன் பாடலிலும் சிதம்பரத்தின் அம்பிகையின் திருநாமத்தை 'சரண சிவகாமி' என்றார். இப்பாடலில், 'கற்பு சிவகாமி' என்றார்.

ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே. ஆதலின், அம்பிகை நித்ய கலியாணியாக விளங்குகின்றாள்.

வித்துருப ராம ---

"விந்து" என்ற சொல் சந்தத்தை நோக்கி "வித்து" என வந்தது. "ரூப" என்ற சொல்லும் சந்தத்தை நொக்கிக் குறுகி "ருப" என வந்தது. விந்து - மழைத்துளி. இது மேகத்தைக் குறிக்கின்றது.  இராமர் நீலமேகவண்ணர்.

வெற்புள கடாகம் உட்க உதிர வீசு ---

வெற்பு - மலை. கடாகம் - அண்ட கடாகங்கள். மயில் தன் கலாபத்தை விரிப்பதனால் அண்டகடாகங்கள் அஞ்சுகின்றன.

சுத்த விர

சுத்த வீர என்ற சொல் சுத்த விர என வந்தது.

கவிராஜ ---

முருகன் தமிழ்ப் புலவர்கள் அனைவர்க்கும் தலைவர். ஆதலின், கவிராஜ என்றார்.

"விருதுகவி ராஜ சிங்க" என்றார், "கருவினுரு" என்று தொடங்கும் திருப்புகழில்.

கருத்துரை

சிதம்பரம் மேவிய செவ்வேளே, நீர் எல்லாம் ஆனவர்.

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...