சிதம்பரம் - 0607. இருள் காட்டு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருள்காட்டு செவ்வி (சிதம்பரம்)
 
தில்லை முருகா!
வினையால் அடியேன் நலிதல் ஆமோ?


தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான


இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
     னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
     நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
     இடுகாட்டி னெல்லை ...... நடவாத

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
     வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
     மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருள்காட்டு செவ்வி ததி காட்டி, வில்லின்
     நுதல் காட்டி வெல்லும் ...... இருபாண

இயல் காட்டு, கொல் குவளை காட்டி, முல்லை
     நகை காட்டு வல்லி ...... இடைமாதர்

மருள் காட்டி, நல்குரவு காட்டும் இல்ல
     இடுகாட்டின் எல்லை ...... நடவாத

வழி காட்டி, நல் அறிவு காட்டி, மெல்ல
     வினை வாட்டி அல்லல் ...... செயல்ஆமோ?

தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல்
     மொழி காட்டு தில்லை ...... இளையோனே!

தினை காட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா!

அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ!
     அடல் காட்டு வல் ...... அசுரர் கோபா!

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
   
பதவுரை

      தெருள் காட்டு --- அறிவிலே தெளிவைத் தருகின்,

     தொல்லை மறை காட்டும் --- பழமையான வேதங்களில் சொல்லப்பட்டுள்ள,

     மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே --- வளப்பத்தைத் தருகின்ற உபதேசத் திருமொழியை அடியேனுக்கு அருளிய தில்லைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணரே!

      தினை காட்டு கொல்லை வழிகாட்ட வல்ல --- தினை விளையும் புனத்திற்குச் செல்லும் வழியைக் காட்ட வல்ல

     குறவாட்டி புல்லு மணிமார்பா --- குறமகளாகிய வள்ளியம்மையாரைத் தழுவுகின்ற அழகிய திருமார்பரே!,

      அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ --- அருள் நெறியைக் காட்டுகின்ற கல்வி நெறியைக் காட்டுகின்ற செல்வமே!

      அடல் காட்டு வல் அசுரர் கோபா --- ஆற்றலைக் காட்டிய வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவரே!

      அடி போற்றி --- திருவடிகளைத் தொழுது,

     அல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு --- தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு

     நல்ல பெருமாளே --- நல்லவராகத் திகழும் பெருமையில் சிறந்தவரே!

      இருள்காட்டு செவ்வி ததி காட்டி --- இருளைப் போன்று கருத்துள்ள கூந்தலைக் காட்டி,

     வில்லின் நுதல் காட்டி --- வில்லைப் போல் வளைந்துள்ள நெற்றிப் புருவத்தைக் காட்டி,

       வெல்லும் இருபாண --- வெல்லக் கூடிய இயல்பு உள்ள இரண்டு அம்புகள் போன்று

     கொல் இயல்காட்டு குவளை காட்டி --- கொல்லும் தன்மையை உடைய குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி,

      முல்லை நகை காட்டு --- முல்லை அரும்பைப் போன்ற பற்களைக் காட்டும்,

     வல்லி இடைமாதர் --- கொடி போலும் இடையை உடைய விலைமாதர்கள் மீது

      மருள்காட்டி --- காம மயக்கத்தை வைத்து,

     நல்குரவு காட்டும் இல்ல --- அதனால் வருகின்ற வறுமையைக் காட்டும் உலக வாழ்வின் முடிவான

     இடுகாட்டின் எல்லை நடவாத வழிகாட்டி --- இடுகாட்டினை அடையாதபடி, நல்வழி காட்டி,

         நல் அறிவு காட்டி --- பிறவாத நெறியைச் சாரும் நல்ல அறிவைக் காட்டி,

     மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ --- மெல்ல எனது வினையை வாட்டியும், மேலும் இந்த உடம்போடு வாழும் துன்ப வாழ்வை அடியேனுக்குத் தரல் ஆகுமோ?

பொழிப்புரை


         அறிவிலே தெளிவைத் தருகின், பழமையான வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, வளப்பத்தைத் தருகின்ற உபதேசத் திருமொழியை அடியேனுக்கு அருளிய தில்லைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணரே!

         தினை விளையும் புனத்திற்குச் செல்லும் வழியைக் காட்ட வல்ல  குறமகளாகிய வள்ளியம்மையாரைத் தழுவுகின்ற அழகிய திருமார்பரே!,

         அருள் நெறியைக் காட்டுகின்ற கல்வி நெறியைக் காட்டுகின்ற செல்வமே!

         ஆற்றலைக் காட்டிய வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவரே!

     திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவராகத் திகழும் பெருமையில் சிறந்தவரே!

         இருளைப் போன்று கருத்துள்ள கூந்தலைக் காட்டி, வில்லைப் போல் வளைந்துள்ள நெற்றிப் புருவத்தைக் காட்டி, வெல்லக் கூடிய இயல்பு உள்ள இரண்டு அம்புகள் போன்று கொல்லும் தன்மையை உடைய குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி, முல்லை அரும்பைப் போன்ற பற்களைக் காட்டும், கொடி போலும் இடையை உடைய விலைமாதர்கள் மீது காம மயக்கத்தை வைத்து, அதனால் வருகின்ற வறுமையைக் காட்டும் உலக வாழ்வின் முடிவான இடுகாட்டினை அடையாதபடி, நல்வழி காட்டி, பிறவாத நெறியைச் சாரும் நல்ல அறிவைக் காட்டி,மெல்ல எனது வினையை வாட்டியும், மேலும் இந்த உடம்போடு வாழும் துன்ப வாழ்வை அடியேனுக்குத் தரல் ஆகுமோ?

விரிவுரை

மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல ---

காம மயக்கத்திலேயே உள்ளம் செல்லுவதால், அதற்கு உரிய செயல்களிலேயே உள்ள செல்வ வளம் எல்லாம் அழிந்து, அதனால் வறுகின்ற நல்குரவு என்னும் வறுமை.

இடுகாட்டின் எல்லை நடவாத வழிகாட்டி ---

சமுசார வாழ்க்கை என்னும் உள்ளம் வேகின்ற துக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து, வாழ் நாள் இறுதி வந்தபோது, உயிர் பிரிந்த பின்னர், உடலைச் சுடுகாட்டிற்குக் கொண்டு போவார்கள்.
அந்த இழி நிலையை அடையாத படி முருகப் பெருமானின் அருளைப் பெறவேண்டும்.

நல் அறிவு காட்டி ---

பிறவாத நெறியை அடையும்படி, அறிவு வடிவான இறைவனைத் தொழுது உய்யும் நல்ல அறிவினை இறையருளாலேயே பெற முடியும். நன்மை தீமைகளின் பயன்களை ஆராய்ந்து அறிந்து, மனத்தில் தோன்றும் பொறாமை முதலிய தீய எண்ணங்களை விலக்கி, மெய்ந் நூல்களைப் பிழை இல்லாமல் ஓதி உணர்ந்து, தனது கடமைகள் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்குரிய நெறியில் வாழ்வதே அறிவுடையார் செயல். மெய்ந்நெறியில் நின்றோர்க்கு, இறைவனே உள்ளிருந்து நல்ல அறிவினைக் கொளுத்தி அருளுவான்.

பண்ணாரும் இசையினொடு பாடிப் படித்து, அருட்
          பான்மைநெறி நின்று, தவறாப்
  பக்குவ விசேடராய் நெக்குநெக் குருகிப்
          பணிந்து எழுந்து, இருகைகூப்பிக்
கண்ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம்
          கைவிடாக் காட்சியுறவே..                          --- தாயுமானார்.

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித் தலைவனு மாய்நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.      ---  திருமூலர்.

மெல்ல வினை வாட்டி, அல்லல் செயல் ஆமோ ---

படிப்படியாகப் பக்குவ நிலைக்கு அருளால் உயர்த்தி, பரம குருவாய் எழுந்தருளி என் வினைகளை எல்லாம் அறுத்த பின்னரும், அடியேனைத் திருவடியில் சேர்த்துக் கொள்ளாமல், இன்னமும் உலக வாழ்வில் உழல வைத்துத் துன்பத்தை அனுபவிக்கும்படி செய்தல் முறையல்ல என்கின்றார்.

தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே ---

வேதங்களிலும் அருள் நூல்களிலும் இலை மறை காயாகப் பல உண்மைகள் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றினைத் தக்கோர் பால் ஓதி உணர்ந்து தெளிய வேண்டும். தக்கோர் கிடைப்பது இறையருளால் மட்டுமே முடியும். நாமாகத் தேடினால் நல்ல குரு வாய்க்கமாட்டார். குருட்டினை நீக்காத குருவை நமது தெளிந்த அறிவு இன்மையால் கொள்வோம்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே.      

என்பார் திருமூல நாயனார்.

குருட்டுத் தன்மை என்பது இங்கே ஆணவ மலத்தின் மறைப்பால் உண்டான அஞ்ஞானம் அல்லது அறியாமையைக் குறிக்கும்.
    
பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

போலி மருத்துவரால் நோயானது தீராது. ஆனாலும், போலி மருத்துவரும் உண்மை மருத்துவர் போலவே காணப்படுவார்.  அது போல, போலியான குருமார்களும் தமது கோலத்தால் குருவைப் போலவே தோன்றுவார்கள். அவர்களது தோற்றம் நமது அறிவை மயக்கும். ஆனால், அவர்களால் அறிவுத் தெளிவைப் பெற முடியாது.

பக்குவம் உடையார்க்கு இறையருளால் உண்மைக் குருவின் அருள் கிடைக்கும். மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப, அவர் மெய்ப்பொருளை உணர்த்துவார். மாணவரின் நிலைக்கு ஏற்ப ஆசிரியர் பாடம் நடத்துவது போல.

மல்லல் - வளப்பம்.  மல்லல் மொழி - உயிருக்கு அருள் வளப்பத்தைத் தருகின்ற மொழி. அது உபதேச மொழி ஆகும். அருணகிரி நாதப் பெருமானுக்கு முருகப் பெருமானை குருவாக இருந்து அருள் உபதேசம் செய்தார்.


அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ ---

கல் - தோண்டுதல்.  கல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு வந்தது கல்வி.

ஆன்மாவிற்கு இயல்பாகவே மல மறைப்பால் அறியாமை என்னும் அஞ்ஞானம் நிறைந்து உள்ளது. அஞ்ஞானம் என்னும் அறியாமையைக் கல்லி எடுத்து, அறிவுடைமை என்னு ஞானத்தை நிரப்ப வேண்டும்.

ஆன்மா அறிவுப் பொருள்.  இறைவனும் அறிவுப் பொருள்.
ஆன்மாவுக்கு உள்ளது சிற்றறிவு. அறிவித்தால் அறிந்து கொள்ளும். ஆணவம் உள்ளதால், எதையும் முழுமையாக அறிந்து கொள்ள முயலாமல், அறிந்ததைக் கொண்டு நான் அறிந்தேன் என்று செருக்கு உறும். அறிவித்தால் அறியும்.  ஒவ்வொன்றாக அறியும். அறிந்ததை மறக்கும். எல்லாவற்றையும் ஒருசேர அறிய அதனால் முடியாது.

இறைவன் பேரறிவு வடிவமானவன். இயல்பாகவே மலமற்றவன். எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் இயல்பு உடையவன்.

ஆன்மா அறிவைப் பெறவேண்டுமானால் அறிவு நூல்களைக் கற்று உணர்ந்து அவற்றின் வழி நிற்கவேண்டும். அறிவு நூல் வேறு. உலக நூல் வேறு.

அறிவு என்பது நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் எள்ளவாறு உணர்ந்து தெளிவதே ஆகும். எது நன்மை பயக்குமோ அதைப் பற்ற வேண்டும். எது தீமை தருமோ, அதை விலக்க வேண்டும். இதை "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். மேலும், "அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்" என்றும் காட்டினார்.

உலக நூல்கள் அறிவிலே தெளிவைத் தரமாட்டா. தடுமாற்றத்தையே அவை மிகுக்கும். அறிவு நூல்கள் தடுமாற்றத்தைத் தவிர்க்கும்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒந் துணை அறிவார் இல்.                     --- நாலடியார்.

ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கல்லாது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர்.  அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநுல்.  இதனை நீ பயில்வதனால் பயனில்லை.  சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும், காமத்து உரையும், மயங்கிய
 பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
 கேட்கும் திருவுடை யாரே பிறவியை
 நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர், அவர்
நூல்களும் பொய்யே, அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்கு. உரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கள் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

எனவே, அருளைக் காட்டும் அருள் நூல்களையே ஒருவன் கற்க வேண்டும். அந்த ஊற்றம் இருக்குமானால், இறைவனே குருவாக எழுந்தருளி, அறிவு நூல்களை அறிவுறுத்தி அருள்வான்.

இறைவன் அறிவு வடிவமானவன்.  அவனை அறிவு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும் என்பதைப் பின்வரும் அருள் வாக்கியங்களால் தெளிக..

அறிவால் அறிந்து உன் அரு தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே.  
                                --- (விறல்மாரன்) திருப்புகழ்.

அரவுபுனைதரு புனிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
     அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே
                               --- (குமரகுருபர) திருப்புகழ்.

அரு மறைகளே நினைந்து, மநுநெறியிலே நடந்து,
    அறிவை அறிவால் அறிந்து,              நிறைவாகி,
  அகில புவனாதி எங்கும் வெளி உற, மெய்ஞ்ஞான இன்ப
    அமுதை ஒழியாது அருந்த          அருள்வாயே.
                                --- (சுருள் அளகபார) திருப்புகழ்.

.....           .....           அறநூலும்
அகலிய புராணமும், ப்ரபஞ்ச
     சகலகலை நூல்களும், பரந்த
          அருமறை அநேகமும் குவிந்தும் ...... அறியாத
அறிவும், அறியாமையும் கடந்த
     அறிவு திருமேனி என்று உணர்ந்து, உன்
          அருண சரணாரவிந்தம் என்று ...... அடைவேனோ.      ---திருப்புகழ்.

கரை ஏற அறிவு நூல் கல்லா மூடர்..              --- (இரதமான) திருப்புகழ்.

கருத்துரை

முருகா! பிறவித் துயர் தீர அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...