அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விந்துப் புளகித
(திருவருணை)
திருவருணை முருகா!
ஒரு பிடி சாம்பரும் காணாத
இந்த மாய உடம்பை ஒழித்து,
உனது திருவடியை அடைய அருள்.
தந்தத்
தனதன தந்தத் தனதன
தந்தத்
தனதன தந்தத் தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான
விந்துப்
புளகித இன்புற் றுருகிட
சிந்திக்
கருவினி லுண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு
...... மருள்கூர
மென்பற்
றுருகிமு கந்திட் டனைமுலை
யுண்டித்
தரகொடு வுண்கிச் சொலிவளர்
வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
விதித்த முறைபடி படித்து மயல்கொள
தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
நடித்தவர்கள்மயல் பிடித்தி டவர்வரு
.....வழியேபோய்ச்
சந்தித்
துறவொடு பஞ்சிட் டணைமிசை
கொஞ்சிப்
பலபல விஞ்சைச் சரசமொ
டணைத்து மலரிதழ் கடித்து இருகர
மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ......நரைமேவித்
தன்கைத்
தடிகொடு குந்திக் கவியென
உந்திக்
கசனம றந்திட் டுளமிக
சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
விழிப்பு மறைபட கிடத்தி மனையவள்
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல
சந்தித்
தவரவர் பங்குக் கழுதி
ரங்கப்
பிணமெடு மென்றிட் டறைபறை
தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
கொளுத்தி யொருபிடி பொடிக்கு
மிலையெனு ......முடலாமோ
திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு
செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி
பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்
களித்து வகைமனி முழக்க அசுரர்கள்
......களமீதே
சிந்திக்
குருதிக ளண்டச் சுவரகம்
ரம்பக்
கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
சிமக்கு முரகனு முழக்கி விடபட
மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
பொங்கப்
பரிபுர செம்பொற் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
மிகுத்த புரமதை யெரித்த நகையினர்
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
நிறத்தி முயலக பதத்தி அருளிய ......முருகோனே
துண்டச்
சசிநுதல் சம்பைக் கொடியிடை
ரம்பைக்
கரசியெ னும்பற் றருமகள்
சுகிப்ப மணவறை களிக்க அணையறு
முகத்தொ டுறமயல் செழித்த திருபுய
செம்பொற் கரகம லம்பத் திருதல
மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ....
பெருமாளே.
பதம் பிரித்தல்
விந்துப்
புளகித இன்புற்று உருகிட,
சிந்தி, கருவினில் உண்பச் சிறுதுளி
விரித்த கமலமெல் தரித்து, உள் ஒருசுழி
இரத்த குளிகையொடு உதித்து, வளர்மதி
விண்டு உற்று, அருள்பதி கண்டு உற்று, அருள்கொடு
மிண்டிச் செயலின் நிரம்பி, துருவொடு
மெழுக்கில் உரு என வலித்து, எழுமதி
கழித்து, வயிர்குடம் உகுப்ப, ஒரு பதில்
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
வந்து, புவிமிசை பண்டைச் செயல்கொடு,
விழுப்பொடு உடல்தலை அழுக்கு மலமொடு
கவிழ்த்து விழுது, அழுது உகுப்ப அனைவரும்......அருள்கூர,
மென்
பற்று உருகி முகந்திட்டு, அனை முலை
உண்டித்
தரகொடு உண்கி, சொலிவளர்
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை
துடித்து, தவழ்நடை வளர்த்தி, என தகு
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட-
மும் கட்டி இயல் முடி பண்பித்து, இயல்கொடு
விதித்த முறைபடி படித்து, மயல்கொள
தெருக்களினில் வரு வியப்ப, இளமுலை,
விந்தைக் கயல்விழி, கொண்டல் குழல்,மதி
துண்டக் கரவளை, கொஞ்ச, குயில்மொழி
விடுப்ப, துதைகலை நெகிழ்த்தி, மயில் என
நடித்தவர்கள் மயல் பிடித்திட, அவர்வரு .....வழியேபோய்ச்
சந்தித்து
உறவொடு பஞ்சுஇட்ட அணைமிசை
கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு
அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்
அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்
சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்
சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,
சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்
வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத
சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,
வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை
சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி
பிடித்திட, அனைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி,
தன்
கைத் தடிகொடு, குந்தி கவி என,
உந்திக்கு
அசனமும் மறந்திட்டு, உளமிக
சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி
விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்
சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,
சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு
எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை
பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,
சந்தித்து
அவர் அவர் பங்குக்கு அழுது,
இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை
தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு
கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை
எனும்...... உடல் ஆமோ?
திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்ப, துடிகள், தவுண்டை, கிடுபிடி,
பம்பை, சலிகைகள், சங்கப் பறை, வளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு
செம்பொன் குடமுழவுவு தப்பு உடன் மணி
பொங்க, சுரர் மலர் சிந்தப் பதம் மிசை,
செழித்த மறை சிலர் துதிப்ப, முநிவர்கள்
களித்து வகைமனி முழக்க, அசுரர்கள் ......களமீதே
சிந்திக்
குருதிகள் அண்டச் சுவர் அகம்
ரம்ப, கிரியொடு பொங்கிப் பெருகியெ
சிவப்ப, அதில் கரி மதர்த்த புரவிகள்
சிரத்தொடு இரதமும் மிதப்ப, நிணமொடு
செம்புள் கழுகுகள் உண்ப, தலைகள்
ததும்ப, கருடன் நடம் கொட்டிட, கொடி
மறைப்ப, நரிகணம் மிகுப்ப, குறளிகள்
நடிக்க, இருள்மலை கொளுத்தி, அலைகடல்
செமபொன் பவளம் முடங்கிக் கமர் விட,
வெந்திட்டு இகமலை விண்டுத் துகள் பட,
சிமக்கும் உரகனும் முழக்கி, விடபடம்
அடைத்த சதமுடி நடுக்கி, அலைபட ...... விடும்வேலா!
தொந்தத் தொகுகுட என்பக் கழல்ஒலி
பொங்க, பரிபுர செம் பொன் பதமணி
சுழற்றி நடமிடு நிருத்தர், அயன்முடி
கரத்தர், அரி கரி உரித்த கடவுள், மெய்
தொண்டர்க்கு அருள்பவர், வெந்தத் துகள் அணி,
கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்,
தொடுத்த மதன்உரு பொடித்த விழியினர்,
மிகுத்த புரம் அதை எரித்த நகையினர்,
தும்பைத் தொடையினர், கண்டக் கறையினர்,
தொந்திக் கடவுளை தந்திட்டவர் இட
சுகத்தி, மழுவுழை கரத்தி, மரகத
நிறத்தி, முயலக பதத்தி அருளிய ......முருகோனே!
துண்டச்
சசிநுதல் சம்பைக் கொடி இடை
ரம்பைக்கு
அரசி என் உம்பல் தருமகள்
சுகிப்ப, மணவறை களிக்க, அணை,அறு
முகத்தொடு உற, மயல் செழித்த திருபுய!
செம் பொன் கர கமலம் பத்து இருதலம்,
அம் பொன் சசி எழ, சந்தப் பலபடை
செறித்த கதிர்முடி, கடப்ப மலர் தொடை,
சிறப்பொடு, ஒருகுடில் மருத்து வனமகள்
தொந்தப் புணர்செயல் கண்டு உற்று, அடியென்
இடைஞ்சல் பொடிபட முன்பு உற்று அருள் அயில்
தொடுத்தும், இளநகை பரப்பி, மயில்மிசை
நடித்து, அழல்கிரி பதிக்குள்
மருவிய .... பெருமாளே.
பதவுரை
திந்தித் திமிதிமி
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்ப --- திந்தித்
திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி
திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்ற ஒலியுடன்
துடிகள் --- உடுக்கைகள்,
தவுண்டை ---
பேருடுக்கை,
கிடுபிடி --- வட்டவடிவமான
வாத்தியம்,
பம்பை --- பம்பை என்ற வாத்தியம்,
சலிகைகள் --- சல்லிகைகள்,
சங்கப் பறை --- கூட்டமான பறை
வாத்தியங்கள்,
வளை --- சங்கு,
திகுர்த்த திகுதிகு
டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என --- திகுர்த்த திகுதிகு டுடுட்டு
டுடுடுடு இடிக்கு நிகர் என
உடுக்கை
--- உடுக்கை,
முரசொடு --- முரசு வாத்தியம்,
செம்பொன் குடமுழவும் --- சிவந்த
அழகிய குடமுழா,
தப்பு உடன் --- தப்பு என்ற
வாத்தியத்துடன்,
மணி பொங்க --- மணி முதலிய
வாத்தியங்கள் பேரொலி எழுப்ப,
பதம் மிசை சுரர் மலர் சிந்த --- தேவர்கள் மலர்களைத்
திருவடியில் சொரிய,
செழித்த மறை சிலர் துதிப்ப --- வளமையான
வேத வாக்கியங்களைச் சொல்லிச் சிலர் தோத்திரம் செய்ய,
முனிவர்கள் களித்து --- முநிவர்கள்
மகிழ்ந்து,
வகை மன்னி முழக்க ---- முறையுடன்
பொருந்தி, அம் மறைகளை முழக்க,
அசுரர்கள் களம் மீதே
சிந்தி
--- அசுரர்கள் போர்க்களத்திலே சிதறி விழுந்து,
குருதிகள் அண்டச் சுவர் அகம் ரம்ப --- உதிரமானது
அண்டச் சுவர் அளவும் நிரம்ப,
கிரியொடு பொங்கிப் பெருகியெ சிவப்ப
--- மலைபோலப் பொங்கி எழுந்து பெருகிச் சிவப்ப,
அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு
இரதமும் மிதப்ப --- அந்த உதிர வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், சிரத்தோடு அறுபட்ட தலைகளும், தேர்களும் மிதக்க,
நிணமொடு செம்புள் கழுகுகள் உண்ப --- தசை முதலியவற்றை
உண்ண,
தலைகள் ததும்ப ---உண்பதால் உண்டான
மகிழ்ச்சியால் அவைகளின் தலைகள் அசைய,
கருடன் நடம் கொட்டிட --- கருடன்
நடனம் செய்து வட்டமிட,
கொடி மறைப்ப --– காக்கைகள் மறைவு
செய்ய,
நரி கணம் மிகுப்ப --- நரிக் கூட்டங்கள்
மிகுதிப்பட,
குறளிகள் நடிக்க --- குறளிப் பேய்கள்
கூத்தாட,
இருள் மலை கொளுத்தி --- இருண்ட கிரவுஞ்ச
மலையைக் கொளுத்தி,
அலைகடல் செம்பொன் பவளம் மடங்கிக் கமர்விட
--- அலை வீடும் கடலில்
உள்ள சிவந்த அழகிய பவளங்கள் சுருங்கிப் பிளவுபட,
வெந்திட்டு --- வெந்துப் போய்,
இக மலை விண்டுத் துகள்பட --- இங்குள்ள
மலைகள் எல்லாம் பிளந்து தூளாக,
சிமக்கும் உரகனும் முழக்கி --- பூமியைச் சுமக்கும்
ஆதிசேடனும் ஓலமிட்டு,
விட படம் அடைத்த சதமுடி நடுக்கி அலைபட
விடும்வேலா --- நஞ்சுள்ள படங்களை உடைய நூற்றுக் கணக்கான தனது முடிகள்
நடுக்கமுற்று வருந்தும்படி செலுத்திய வேலாயுதரே!
தொந்தத் தொகுகுட
என்பக் கழல் ஒலி பொங்க --- தொந்தத் தொகுகுட என்னும்
வீரக்கழலின் ஒலி மிகவும்,
பரிபுர செம்பொன் பதமணி சுழற்றி நடமிடு
நிருத்தர் --- சிலம்பு அணிந்துள்ள சிவந்த அழகிய திருவடியை அழகாகச் சுழற்றி
நடனம் செய்கின்ற நிருத்தமூர்த்தி,
அயன் முடி கரத்தர் --- பிரமனது தலையைக் கையில் கொண்டவர்,
அரி கரி உரித்த கடவுள் --- சிங்கத்தையும்
யானையையும் உரித்த கடவுள்,
மெய்த் தொண்டர்க்கு அருள்பவர் --- உண்மையான அடியவர்க்கு
அருள் புரிபவர்,
வெந்தத் துகள் அணி --- வெந்த
வெண்ணீற்றை அணிபவர்,
கங்கை, பணி, மதி கொன்றைச் சடையினர் --- கங்கை பாம்பு
சந்திரன் கொன்றைமலர் இவைகளைத் தரித்த சடைமுடி உடையவர்,
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர்
--- பாணத்தைத் தொடுத்த மன்மதனுடைய உருவைப் பொடி செய்த கண்ணினர்,
மிகுத்த புரம் அதை எரித்த நகையினர்
--- ஆணவம் மிகுந்த திரிபுரங்களை எரித்த
புன்சிரிப்பினர்,
தும்பைத் தொடையினர் --- தும்பை மலர்
மாலை அணிந்தவர்,
கண்டக் கறையினர் --- கழுத்தில் கரிய
அடையாளம் உடையவர்,
தொந்திக் கடவுளை
தந்திட்டவர் இட சுகத்தி --- பெரிய வயிற்றை உடைய கணபதியைத்
தந்தவர், இத்தகை
சிவபெருமானுடைய இடப்பக்கத்தில் உள்ள சுகசொரூபி,
மழு உழை கரத்தி --- மழுமான் ஏந்திய
கரத்தை உடையவள்,
மரகத நிறத்தி --- மரகதம் போன்ற பச்சை
நிறம் உடையவள்,
முயலக பதத்தி அருளிய முருகோனே ---
முயலகனை மிதித்த திருவடியை உடையவளாகிய பார்வதிதேவி பெற்றருளிய திருமுருகவேளே!
துண்டச் சசி நுதல் --- பிறைத்துண்டம்
போன்ற நெற்றியையும்,
சம்பைக் கொடி இடை --- மின்னல் கொடி
போன்ற இடையையும் உடையவள்,
அரம்பைக்கு அரசி என் உம்பல் தருமகள்
சுகிப்ப --- அரம்பைக்கு அரசி
என்னும் ஐராவத யானை வளர்த்த மகளாகிய தெய்வயானை சுகம் பெற,
மணவறை களிக்க அணை --- அப்
பெருமாட்டியின் மண அறை இன்பமயமாகத் தழுவிய
அறுமுகத்தொடு உற மயல் செழித்த திரு புய --–ஆறுமுகங்களுடன்
சேர்ந்து, இன்ப மையல் மிகுத்த
அழகிய புயங்களை உடையவரே!
செம்பொன் கர கமலம்
பத்து இரு தலம் அம்பொன் சசி எழ --- செவ்விய அழகிய தாமரை போன்ற பன்னிரு
கரதலங்களும் அழகிய சந்திர ஒளியை வீச,
சந்தப் பலபடை --- அழகிய பல ஆயுதங்கள்,
செறித்த கதிர்முடி --- ஒளி மிகுத்த
மணிகள் பதித்த மகுடம்,
கடப்ப மலர்தொடை --- கடப்ப மலர் மாலை,
சிறப்பொடு
--- இவைகளின் சிறப்புடன்,
ஒருகுடில் --- ஒப்பற்ற குடிசையில்
இருந்த,
மருத்து --- அமுதம் போன்ற,
வனமகள் தொந்தப் புணர் செயல் கண்டு உற்று
--- வனத்தில் வசித்த வள்ளிநாயகியுடன் தொடர்புற்று மருவிய செயலைச் செய்து,
அடியென் இடைஞ்சல் பொடிபட முன்பு உற்று ---
அடியேனுடைய துன்பங்கள் பொடிபட்டு ஒழிய, அடியேன்
முன் காட்சி தந்து,
அருள் அயில் தொடுத்தும் --- கருணை
நிறைந்த வேலைச் செலுத்தியும்,
இளநகை பரப்பி --- புன்னகை புரிந்தும்,
மயில்மிசை நடித்து --- மயில் மீது
நடனம் செய்து,
அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே ---
நெருப்பு மலையாம் திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
விந்துப் புளகித
இன்புற்று உருகிட சிந்தி --- விந்துவானது புளகாங்கிதத்தால் இன்ப
நிலையை அடைந்து வெளிவந்து ஒழுகச் சிந்தி,
கருவினில் உண்பச் சிறுதுளி --- ஒரு
மாதின் கருவில் உட்கொள்ளப்பட்டதான சிறிய துளியானது,
விரித்த கமலமெல் தரித்து --- விரிந்துள்ள
தாமரை போன்ற கருப்பையில் தங்கி,
உள் ஒரு சுழி இரத்த குளிகையொடு உதித்து
--- அங்கு உள்ளே ஒரு சுழற்சியில்,
உதிரத்தின்
மாத்திரை அளவுடன் சுரோணிதத்துடன் கலத்தலால் கரு உதித்துத் தோன்றி,
வளர் மதி விண்டு உற்று --- மாதம் ஏற ஏற வயிறு
பருத்து வெளிப்பட,
அருள்பதி கண்டு உற்று அருள் கொடு --- ஈன்ற
தந்தை இதை அறிந்து அன்பு பூண,
மிண்டிச் செயலின் நிரம்பித் துருவொடு மெழுக்கில்
உரு என வலித்து --- வலி ஏற்பட்டு, வாந்தி, ஆட்டம் அசைவு முதலியன நிரம்ப ஏற்பட்டு, குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்ந்த உருவம் போல் உருவம்
நன்கு பொருந்தி,
எழுமதி கழித்து --- ஏழு மாதம்
முற்றிய பின்,
வயிர்குடம் உகுப்ப --- வயிறு குடம் போல
வெளிக்காட்ட,
ஒரு பதில் --- ஒரு பத்தாவது மாதத்தில்,
விஞ்சைச் செயல் கொடு --- மாயவித்தைச்
செயல்போல்,
கஞ்சச் சல வழி வந்து --- தாமரை போன்ற நீர்த்
துவார வழியே குழந்தையாய் வெளிவந்து,
புவிமிசை பண்டைச்
செயல் கொடு
--- பூமியின் மேல், பழைய வினைச் செயல்கள்
உடன் தொடருதலோடும்,
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து
---
அசுத்த நிலையோடும், உடலும் தலையும்
அழுக்கும் மலமும் மூடக் கவிழ்ந்து
விழுது அழுது உகுப்ப --- விழுந்து
அழுது வெளிப்பட,
அனைவரும் அருள்கூர --– அது கண்டு
எல்லோரும் ஆசை மிகவும் கொள்ள,
மென் பற்று உருகி
முகந்திட்டு
--- மெல்ல பாசத்தினால் உள்ளம் உருகி, தாங்கி
எடுத்து,
அனைமுலை உண்டித் தர கொடு உண்கி --- தாய் முலைப்பால்
தரக் கொண்டு உண்டு,
சொலி வளர் --- ஜொலிப்புடன்
வளர்ந்து,
வளத்தொடு
அளை மல சலத்தொடு உழை கிடை துடித்து --- வளப்பத்துடன் துழாவுகின்ற மல ஜலத்திலே
உழைத்துக் கிடந்து துடித்தும்,
தவழ் நடை வளர்த்தி என தகு ---
தவழ்கின்ற நடையுடன் தக்கபடி வளர்கின்றது எனச் சொல்லும்படி,
வெண்டைப் பரிபுர
தண்டைச் சரவடமும் கட்டி --- வெண்டையம் என்னும் காலணியும், சிலம்பும், தண்டையும், மணி வடமாகிய கண்டசரமும் அணிவித்து,
இயல் முடி பண்பித்து --- தக்கபடி
உச்சி வரையும் சீர் திருத்தி,
இயல்கொடு விதித்த முறைபடி படித்து --- ஒழுக்கத்துடன்
விதித்துள்ள முறைப்படி நூல்களைக் கற்று,
மயல் கொள --- காம மயக்கம் உண்டாக,
தெருக்களினில் வரு வியப்ப இளமுலை --- தெருக்களிலே
வருகின்ற வியக்கத்தக்க இளம் முலைகள்,
விந்தைக் கயல் விழி --- விசித்திரமான
மீன் போன்ற கண்கள்,
கொண்டல் குழல் --- மேகம் போன்ற
கூந்தல்,
மதி துண்டக் கரவளை கொஞ்ச --- சந்திரனைப்
போன்ற முகம், கைவளை ஒலிக்க,
குயில் மொழி விடுப்ப --- குயில் போன்ற இனிய சொற்கள் வெளிவர,
துதை கலை நெகிழ்த்தி --- நெருங்கிய
ஆடையை நெகிழ்த்தி,
மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்திட
--- மயில் போல நடித்தவர்களாம் பொதுமாதர் மீது ஆசை மயக்கம் கொள்ள,
அவர் வரு வழியே போய்ச் சந்தித்து --- அம் மகளிர் வரும் வழியில் போய் சந்தித்து,
உறவொடு பஞ்சு இட்ட அணைமிசை கொஞ்சி
--- அவர்களுடன் நட்பாகி, பஞ்சு இட்ட படுக்கை
மீது அவர்களுடன் கொஞ்சிப் பேசி,
பலபல விஞ்சைச் சரசமொடு அணைத்து --- பலவகைப்பட்ட
விசித்திரமான காம லீலைகளுடன் அவர்களை அணைத்து,
மலர் இதழ் கடித்து --- குமுத மலர்
போன்ற வாயிதழ்களைக் கடித்து,
இருகரம் அடர்த்த குவிமுலை அழுத்தி ---
இரண்டு கைகளாலும் நெருங்கிக் குவிந்துள்ள முலைகளை மார்புடன் அழுத்தி,
உரம் மிடர் சங்குத் தொனியொடு பொங்க --- கண்டத்தினின்றும் சங்கின் நாதம் போன்ற புட்குரல்கள் எழும்ப,
குழல் மலர் சிந்த --- கூந்தலிலே உள்ள
மலர்கள் உதிர,
கொடி இடை தங்கிச் சுழல் இட --- வஞ்சிக் கொடி
போன்ற இடையில் தங்கிச் சழற்சி உற,
சரத் தொடிகள் வெயில் எறிப்ப --- மணி வடமும்
தோள்வளையும் ஒளி வீச,
மதிநுதல் வியர்ப்ப --- பிறைபோன்ற
நெற்றி வியர்க்க,
பரிபுரம் ஒலிப்ப --- கால்சிலம்பு ஒலி
செய்ய,
எழுமத சம்பத்து இது செயல் --- உண்டாகும்
காமவேட்கை என்கின்ற செல்வத்தின் இந்தச் செய்கையால்,
இன்பத்து இருள் கொடு --- சிற்றின்பமாகிய
இருள் கொண்டு,
வம்பில் பொருள்கள் வழங்கி --- வீணாகப்
பொருள்களைக் கொடுத்து,
இற்று
இது, பினை சலித்து --- பொருள் செலவழிந்த
பின்னர் சலித்துப் போய்,
வெகுதுயர் இளைப்பொடு --- மிகுந்த துயரமும்
சோர்வும் கொண்டு,
உடல்பிணி பிடித்திட --- உடலில்
நோய்கள் பீடிக்க,
அனைவரும் நகைப்ப --- எல்லோரும்
பரிகசித்துச் சிரிக்க,
கருமயிர் நரைமேவி --- கரிய மயிர்கள்
நரைத்து வெளுக்க,
தன் கைத்தடி கொடு
குந்தி கவியென --- தனது கைத் தடியோடு குரங்கு போல் குந்தி நடந்து,
உந்திக்கு அசனம் மறந்திட்டு --- வயிற்றுக்கு உணவையும்
மறந்துபோய்,
உளம் மிக சலித்து --- உள்ளம் மிகவும்
சலிப்புற்று,
உடல் சலம் மிகுத்து --- உடலில் நீர்
அதிகம் சோர்ந்து,
மதி செவி விழிப்பு மறைபட கிடத்தி --- அறிவு
காது பார்வை இவைகள் மறைந்து போக,
படுக்கையில்
படுக்க வைத்து,
மனையவள் --- மனையாளும்,
சம்பத்து உறை முறை --- செல்வத்தில்
உள்ள உறவின் முறையினரும்
அண்டைக் கொளுகையில் --- பக்கத்தில்
வந்து சேரும்பொழுது,
சண்டக் கரு நமன்
அண்டி
--- வேகமுள்ள கரிய இயமன் நெருங்கி,
விசை கொடு பிடித்து --- வேகத்துடன்
பிடித்து,
உயிர்தனை பதைப்ப --- உயிரைப்
பதைபதைக்க,
தனிவழி அடித்து கொடு செல --- தனி
வழியில் அடித்துக்கொண்டு செல்ல,
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது
இரங்க --- உறவினர் வந்து அவர் அவர் பங்குக்கு அழுதும் இரக்கம் காட்டியும்
நிற்க,
பிணம் எடும் என்றிட்டு --- "பிணத்தை
எடுங்கள்" என்று கூறி,
அறை பறை தடிப்ப --- ஒலிக்கின்ற
பறைகள் முழங்க,
சுடலையில் இறக்கி --- இடுகாட்டில்
கொண்டு இறக்கி வைத்து,
விறகொடு கொளுத்தி --- விறகை அடுக்கிக்
கொளுத்தி,
ஒருபிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ ---
ஒரு பிடி சாம்பல் பொடி கூட இல்லை என்று
சொல்லத்தக்க இந்த உடல் ஆமோ? (ஆகாது).
பொழிப்புரை
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்ற ஒலியுடன் உடுக்கைகள், பேருடுக்கை, வட்டவடிவமான வாத்தியம், பம்பை என்ற வாத்தியம், சல்லிகைகள், கூட்டமான பறை வாத்தியங்கள், சங்கு, திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
இடிக்கு நிகர் என உடுக்கை, முரசு வாத்தியம், சிவந்த அழகிய குடமுழா, தப்பு என்ற வாத்தியத்துடன், மணி முதலிய வாத்தியங்கள் பேரொலி எழுப்ப, தேவர்கள் மலர்களைத் திருவடியில் சொரிய, வளமையான வேத வாக்கியங்களைச் சொல்லிச்
சிலர் தோத்திரம் செய்ய, முநிவர்கள் மகிழ்ந்து, முறையுடன் பொருந்தி, அம் மறைகளை முழக்க,
அசுரர்கள்
போர்க்களத்திலே சிதறி விழுந்து,
உதிரமானது
அண்டச் சுவர் அளவும் நிரம்ப, மலைபோலப் பொங்கி
எழுந்து பெருகிச் சிவப்ப, அந்த உதிர
வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள
குதிரைகளும், சிரத்தோடு அறுபட்ட
தலைகளும், தேர்களும் மிதக்க, தசை முதலியவற்றை உண்பதால் உண்டான
மகிழ்ச்சியால் அவைகளின் தலைகள் அசைய, கருடன்
நடனம் செய்து வட்டமிட, காக்கைகள் மறைவு
செய்ய, நரிக் கூட்டங்கள்
மிகுதிப்பட, குறளிப் பேய்கள்
கூத்தாட, இருண்ட கிரவுஞ்ச
மலையைக் கொளுத்தி, அலை வீடும் கடலில்
உள்ள சிவந்த அழகிய பவளங்கள் சுருங்கிப் பிளவுபட, வெந்துப் போய், இங்குள்ள மலைகள் எல்லாம் பிளந்து தூளாக, பூமியைச் சுமக்கும் ஆதிசேடனும் ஓலமிட்டு, நஞ்சுள்ள படங்களை உடைய நூற்றுக் கணக்கான
தனது முடிகள் நடுக்கமுற்று வருந்தும்படி செலுத்திய வேலாயுதரே!
தொந்தத் தொகுகுட என்னும் வீரக்கழலின்
ஒலி மிகவும், சிலம்பு அணிந்துள்ள
சிவந்த அழகிய திருவடியை அழகாகச் சுழற்றி நடனம் செய்கின்ற நிருத்தமூர்த்தி, பிரமனது தலையைக் கையில் கொண்டவர், சிங்கத்தையும் யானையையும் உரித்த கடவுள், உண்மையான அடியவர்க்கு அருள் புரிபவர், வெந்த வெண்ணீற்றை அணிபவர், கங்கை பாம்பு சந்திரன் கொன்றைமலர்
இவைகளைத் தரித்த சடைமுடி உடையவர்,
பாணத்தைத்
தொடுத்த மன்மதனுடைய உருவைப் பொடி செய்த கண்ணினர், ஆணவம் மிகுந்த திரிபுரங்களை எரித்த
புன்சிரிப்பினர், தும்பை மலர் மாலை
அணிந்தவர், கழுத்தில் கரிய
அடையாளம் உடையவர், பெரிய வயிற்றை உடைய கணபதியைத் தந்தவர், இத்தகை சிவபெருமானுடைய இடப்பக்கத்தில்
உள்ள சுகசொரூபி, மழுமான் ஏந்திய
கரத்தை உடையவள், மரகதம் போன்ற பச்சை
நிறம் உடையவள், முயலகனை மிதித்த
திருவடியை உடையவளாகிய பார்வதி தேவி பெற்றருளிய திருமுருக வேளே!
பிறைத்துண்டம் போன்ற நெற்றியையும், மின்னல் கொடி போன்ற இடையையும் உடையவள், அரம்பைக்கு அரசி என்னும் ஐராவத யானை
வளர்த்த மகளாகிய தெய்வயானை சுகம் பெற, அப்
பெருமாட்டியின் மண அறை இன்பமயமாகத் தழுவிய ஆறுமுகங்களுடன் சேர்ந்து, இன்ப மையல் மிகுத்த அழகிய புயங்களை
உடையவரே!
செவ்விய அழகிய தாமரை போன்ற பன்னிரு
கரதலங்களும் அழகிய சந்திர ஒளியை வீச, அழகிய
பல ஆயுதங்கள், ஒளி மிகுத்த மணிகள்
பதித்த மகுடம், கடப்ப மலர் மாலை, இவைகளின் சிறப்புடன், ஒப்பற்ற குடிசையில் இருந்த, அமுதம் போன்ற, வனத்தில் வசித்த வள்ளிநாயகியுடன்
தொடர்புற்று மருவிய செயலைச் செய்து,
அடியேனுடைய
துன்பங்கள் பொடிபட்டு ஒழிய, அடியேன் முன் காட்சி
தந்து, கருணை நிறைந்த வேலைச்
செலுத்தியும், புன்னகை புரிந்தும், மயில் மீது நடனம் செய்து, நெருப்பு மலையாம் திருவண்ணாமலை நகரில்
வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
விந்துவானது புளகாங்கிதத்தால் இன்ப
நிலையை அடைந்து வெளிவந்து ஒழுகச் சிந்தி, ஒரு
மாதின் கருவில் உட்கொள்ளப்பட்டதான சிறிய துளியானது, விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில்
தங்கி, அங்கு உள்ளே ஒரு
சுழற்சியில், உதிரத்தின் மாத்திரை
அளவுடன் சுரோணிதத்துடன் கலத்தலால் கரு உதித்துத் தோன்றி, மாதம் ஏற ஏற வயிறு பருத்து வெளிப்பட, ஈன்ற தந்தை இதை அறிந்து அன்பு பூண, வலி ஏற்பட்டு, வாந்தி, ஆட்டம் அசைவு முதலியன நிரம்ப ஏற்பட்டு, குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்ந்த உருவம் போல் உருவம்
நன்கு பொருந்தி, ஏழு மாதம் முற்றிய
பின், வயிறு குடம் போல
வெளிக்காட்ட, ஒரு பத்தாவது
மாதத்தில், மாயவித்தைச் செயல்போல், தாமரை போன்ற நீர்த் துவார வழியே
குழந்தையாய் வெளிவந்து, பூமியின் மேல், பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலோடும், அசுத்த நிலையோடும், உடலும் தலையும் அழுக்கும் மலமும் மூடக்
கவிழ்ந்து விழுந்து அழுது வெளிப்பட,
அது
கண்டு எல்லோரும் ஆசை மிகவும் கொள்ள,
மெல்ல
பாசத்தினால் உள்ளம் உருகி, தாங்கி எடுத்து, தாய் முலைப்பால் தரக் கொண்டு உண்டு, ஜொலிப்புடன் வளர்ந்து, வளப்பத்துடன் துழாவுகின்ற மல ஜலத்திலே
உழைத்துக் கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன்
தக்கபடி வளர்கின்றது எனச் சொல்லும்படி, வெண்டையம்
என்னும் காலணியும், சிலம்பும், தண்டையும், மணி வடமாகிய கண்டசரமும் அணிவித்து, தக்கபடி உச்சி வரையும் சீர் திருத்தி, ஒழுக்கத்துடன் விதித்துள்ள முறைப்படி
நூல்களைக் கற்று, காம மயக்கம் உண்டாக, தெருக்களிலே வருகின்ற வியக்கத்தக்க இளம்
கொங்கைகள், விசித்திரமான மீன்
போன்ற கண்கள், மேகம் போன்ற கூந்தல், சந்திரனைப் போன்ற முகம், கைவளை ஒலிக்க, குயில் போன்ற இனிய சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையை நெகிழ்த்தி, மயில் போல நடித்தவர்களாம் பொதுமாதர்
மீது ஆசை மயக்கம் கொள்ள, அம் மகளிர் வரும்
வழியில் போய் சந்தித்து, அவர்களுடன் நட்பாகி, பஞ்சு இட்ட படுக்கை மீது அவர்களுடன்
கொஞ்சிப் பேசி, பலவகைப்பட்ட
விசித்திரமான காம லீலைகளுடன் அவர்களை அணைத்து, குமுத மலர் போன்ற வாயிதழ்களைக் கடித்து, இரண்டு கைகளாலும் நெருங்கிக்
குவிந்துள்ள கொங்கைகளை மார்புடன் அழுத்தி, கண்டத்தினின்றும் சங்கின் நாதம் போன்ற புட்குரல்கள் எழும்ப, கூந்தலிலே உள்ள மலர்கள் உதிர, வஞ்சிக் கொடி போன்ற இடையில் தங்கிச்
சழற்சி உற, மணி வடமும்
தோள்வளையும் ஒளி வீச, பிறைபோன்ற நெற்றி வியர்க்க, கால்சிலம்பு ஒலி செய்ய, உண்டாகும் காமவேட்கை என்கின்ற
செல்வத்தின் இந்தச் செய்கையால்,
சிற்றின்பமாகிய
இருள் கொண்டு, வீணாகப் பொருள்களைக்
கொடுத்து, பொருள் செலவழிந்த
பின்னர் சலித்துப் போய், மிகுந்த துயரமும்
சோர்வும் கொண்டு, உடலில் நோய்கள்
பீடிக்க, எல்லோரும்
பரிகசித்துச் சிரிக்க, கரிய மயிர்கள்
நரைத்து வெளுக்க, தனது கைத் தடியோடு
குரங்கு போல் குந்தி நடந்து, வயிற்றுக்கு உணவையும்
மறந்துபோய், உள்ளம் மிகவும்
சலிப்புற்று, உடலில் நீர் அதிகம்
சோர்ந்து, அறிவு காது பார்வை
இவைகள் மறைந்து போக, படுக்கையில் படுக்க
வைத்து, மனையாளும், செல்வத்தில் உள்ள உறவின் முறையினரும்
பக்கத்தில் வந்து சேரும்பொழுது,
வேகமுள்ள
கரிய இயமன் நெருங்கி, தான் கொண்டு வந்த
பாசக் கயிற்றை எடுத்து, வேகத்துடன் பிடித்து, உயிரைப் பதைபதைக்க, தனி வழியில் அடித்துக்கொண்டு செல்ல, உறவினர் வந்து அவர் அவர் பங்குக்கு
அழுதும் இரக்கம் காட்டியும் நிற்க,
"பிணத்தை
எடுங்கள்" என்று கூறி, ஒலிக்கின்ற பறைகள்
முழங்க, இடுகாட்டில் கொண்டு
இறக்கி வைத்து, விறகை அடுக்கிக்
கொளுத்தி, ஒரு பிடி சாம்பல்
பொடி கூட இல்லை என்று சொல்லத்தக்க இந்த உடல் ஆமோ? (ஆகாது)
விரிவுரை
விந்துப்
புளகித ---
இந்த
அடியில் கரு உண்டாகும் தன்மையை விரிவாக உணர்த்தினார் ஆசிரியர். சுக்கிலச்
சுரோணிதச் சேர்க்கையினால் கரு அமைகின்றது.
கமலமெல் ---
கமலமேல்
என்ற சொல் கமலமெல் என வந்தது.
அருள்பதி
கண்டு உற்று அருள் கொடு ---
மனைவி
கருவுற்று வயிறு வளர்ந்து இருப்பதைக் கண்டு கணவன் களிப்புறுகின்றான்.
மிண்டி
---
மிண்டி
- வலிகொண்டு. கரு முதிர்வதால் வலி
ஏற்படும்.
வயிர்க்குட
முகுப்ப ---
வயிறு
என்ற சொல் வயிர் என வந்தது. தாயின் வயிறு
பனைபோல் பருத்து வெளிப்படும்.
பண்டைச்
செயல்கொடு
---
குழந்து
பிறக்கும் போதே, பழைய வினையின்
தொடர்ச்சியும் உடன் தோன்றுகின்றது.
அனைவரும்
அருள்கூர
---
குழந்தை
பிறந்தவுடன் அதனைக் கண்டு உற்றார்,
பெற்றார், உறவினர் ஆசை மீதூர்ந்து மகிழ்கின்றார்கள்.
மென்பற்று
உருகி முகர்ந்திட்டு அனை முலை உண்டித் தர ---
பற்றுருகி
- பாசத்தால் உருகி. முகர்ந்து - தாங்கி
எடுத்து,
தாய்
மெல்லத் தாங்கி எடுத்து, அன்பால் முலைப்பால்
தருகின்றாள்.
உண்கிச்
சொலிவளர்
---
உண்கி
- உண்டு. சொலிவளர் - சொலித்து வளர்ந்து.
பிணி
பிடித்திட அனைவரும் நகைப்ப ---
பீடித்திட
என்ற சொல் பிடித்திட என வந்தது. பிடித்திட
அனைவரும் எனப் பதப் பிரிவு செய்க.
தன்கைத்
தடியொடு குந்திக் கவியென ---
கவி
- குரங்கு. தடி ஊன்றி குரங்குபோல் கூனிக்
குறுகி நடப்பர். இது கண்ட அமைவரும் எள்ளி
நகையாடுவார்கள்.
ஒருபிடி
பொடிக்கும் இலையெனும் உடலாமோ ---
கடவுள்
பூசையும் செய்யாமல், எழுந்தவுடன்
வயிற்றுக்குச் சுவையான உணவு தந்து,
வேளை
தவறாமல் உண்டு உவக்கின்றார்கள் பலர்.
அவ்வாறு மிகக் கவனமாக வளர்த்த உடம்பு சுட்ட பின் ஒரு பிடி சாம்பரும் இன்றி
ஒழிகின்றது.
ஒருபிடி
சாம்பரும் காணாது மாயவுடம்பு இதுவே... --- கந்தர் அலங்காரம்.
அரண்மனையில்
வாழ்ந்து தேனும் பாலும் பழமும் உண்ட மன்னவன் உடம்பும் இதே கதிதான்.
முடிசார்ந்த
மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய்
வெந்து மண் ஆவதும் கண்டு, பின்னும் இந்த
படிசார்ந்த
வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து
நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே. --- பட்டினத்தார்.
எனவே, இந்த உடம்பின் மீதுள்ள பற்றை விடுத்து, இறைவனை அடுத்து, ஜெபதபங்கள் தியானம் செய்து, அன்பு நெறி நின்று, பிறவாத பெற்றியைப் பெறவேண்டும் என்று
அருணகிரிநாதர் உபதேசிக்கின்றார்.
சலிகைகள் ---
சல்லிகை. சல் என்ற ஓசை கொண்டதனால் இப் பெயர் பெற்றது.
சுவரகம்
ரம்ப
---
நிரம்ப
என்ற சொல், முதற்குறையாக ரம்ப என
வந்தது.
கொட்டிட ---
கோட்டிட
என்ற சொல் கொட்டிட என வந்தது. கோட்டிட –
வளைக்க. வட்டமிட.
இகமலை ---
இங்குள்ள
மலைகள்.
சிமக்கும் ---
சுமக்கும்
என்ற சொல் சிமக்கும் என வந்தது.
அரிகரி
உரித்த கடவுள் ---
சிவமூர்த்தி
சிங்கத்தையும், யானையையும் உரித்து
அவைகளின் தோலை உடுத்திக் கொண்டருளினார்.
கருத்துரை
அருணை
மேவும் அண்ணலே, ஒரு பிடி சாம்பரும்
காணாத உடம்பு வேண்டாம். பிறவாமையைத் தந்து அருள்.
No comments:
Post a Comment