வெளியில் சொல்லக் கூடாதவை




குரு உபதேசம்; மாதர்
     கூடிய இன்பம்; தன்பால்
மருவிய நியாயம், கல்வி,
     வயது; தான் செய்த தர்மம்;
அரிய மந்திரம்; விசாரம்;
     ஆண்மை; இங்கு இவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது,
     உரைத்திடில் அழிந்து போமே.

     இதன் பொருள் ---

     குரு உபதேசம் --- ஞானாசாரியர் இடத்திலே ஒருவன்தான் பெற்ற உபதேசம்,

     மாதர் கூடிய இன்பம் --- பெண்ணோடு கூடி அனுபவித்த இன்பம்,

     தன்பால் மருவிய நியாயம் --- தன்னிடத்திலை பொருந்தி உள்ள நீதி,

     கல்வி --- தான் கற்ற கல்வி,

     வயது --- தனது வயது,

     தான் செய்த தர்மம் --- செய்த தருமம்,

     அரிய மந்திரம் --- தனக்குச் சொல்லி வைக்கப்பட்ட அரியதான மந்திரம்,

     விசாரம் --- தனக்கு நேர்ந்த துன்பம்,

     ஆண்மை ---  தனது வீரச் செயல்கள்,

     இங்கு இவைகள் எல்லாம் --- இந்த உலகத்திலே இவைகள் யாவும்,

     ஒருவரும் தெரிய ஒண்ணாது --- பிறர் அறியல் ஆகாது.
    
     உரைத்திடில் அழிந்து போமே --- பிறர் அறியுமாறு சொன்னால் கேடு வரும்.

     விளக்கம் --- குருவின்பால் பெற்ற உபதேசத்தை வெளியிட்டால் அதற்கு மதிப்புக் குறைவு உண்டாகும். மாதரால் அனுபவித்த இன்பத்தைப் பிறர் அறியுமாறு நடந்துகொண்டால், பிறர் தூற்ற நேரிடும். பிறர் பகையும் உண்டாகும். ஒரு வழக்கிலே தான் நிச்சயித்து உள்ள நியாயத்தை முன்னதாக வெளியிடக் கூடாது. அதனால் பல கேடுகள் உண்டாகும். தான் கற்ற கல்வியை வெளிப்படுத்தினால், மூடர்கள் ஏற்றுக் கொள்ளாமல் பழித்துப் பேசுவர். ஒருவன் தனது வயதையும் வாழ்நாளையும் அளவிட்டுக் கூறக் கூடாது.  கூறினால் வாழ்நாள் குறையும் என்று பெரியோர் கூறுவர். தான் செய்த அறச் செயல்களை ஒருவன் வெளிப்படுத்தினால், அது தற்புகழ்ச்சியாகக் கருதப்படும். செய்த தருமச் செயல்களுக்கு உரிய பலனும் அற்றுப்போகும் என்பர் பெரியோர். ஆசாரியர் தனக்குச் சொல்லி வைத்த மந்திரத்தினை வெளியிட்டால், அது பலன் இன்றிப் போகும் என்பர். தனக்கு வந்த துன்பத்தை வெளியிட்டால், மூடர்கள் சிலர் அதனைப் பலரிடத்திலும் பரிகசித்துக் கூறி இகழ்வர். தனது ஆண்மையை அல்லது வீரத்தை வெளியிட்டால், வாய் வீரம் பேசுவதாக இகழப்பட நேரிடும்.

பிறரிடம் சொல்லக் கூடாதவை இன்னின்ன, சொல்லத் தக்கவை இன்னின்ன என்று அறப்பளீசுர சதகத்தில் வரும் ஒரு பாடலின் மூலம் முன்னர் ஒரு இடுகையில் காட்டப்பட்டது.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...