தூய்மை


41.  தூய்மை

வாம்பரி தனக்கு அதிக புனிதம்முகம் அதனிலே;
     மறையவர்க்கு உயர்பு னிதமோ
  மலர்அடியி லே;புனிதம் ஒளி கொள்கண் ணாடிக்கு
     மாசில்முற் புறம்அ தனிலே;

மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;
     மிக்கமட மாத ருக்கோ
  மேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடு
     மேவுவனி தையர்த மக்கும்

தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண் கலம்அயம்
     தங்கம்ஈ யந்த மக்கும்
  தரும்புனிதம் வருபெருக் கொடுபுளி சுணம்சாம்பல்
     சாரும்மண் தாது சாணம்

ஆம்புனிதம் இவையென்பர்; மாமேரு வில்லியே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     மாமேரு வில்லியே --- திரிபுர சங்கார காலத்தில் பெருமை மிக்க மேரு மலையை வில்லாக வளைத்தவரே!

     அனகனே --- குற்றம் அற்றவரே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வாம் பரி தனக்கு முகம் அதனிலே அதிக புனிதம் ---தாவி ஓடுகின்ற குதிரைக்கு அதனுடைய முகத்திலே மிகுந்த தூய்மை,

     மறையவர்க்கு மலர் அடியிலே உயர் புனிதம் --- வேதங்களை உணர்ந்த அந்தணர்க்கு அவலது மலர் போன்ற பாதங்களிலே மிகுதியும் தூய்மை,

     ஒளி கொள் கண்ணாடிக்கு மாசு இல் முற்புறம் அதனிலே புனிதம் --- ஒளி பொருந்திய கண்ணாடிக்கு தூய்மையான அதன் முன்புறத்திலே தூய்மை,

     மேம்படும் பசுவினுக்குப் பின் புறத்திலே --- உயர்ந்த பசுவுக்குப் பின் புறத்திலே தூய்மை,

     மிக்க மட மாதருக்கு மேனி எல்லாம் புனிதம் ஆகும் --- அழகு மிக்க இளம்பெண்களுக்கு உடம்பெல்லாம் தூய்மை ஆகும்,

     ஆசௌசமொடு மேவும் வனிதையர் தமக்கும் --- பூப்படைந்து தீட்டு உற்ற பெண்களுக்கும்,

     தாம்பிரம் அதற்கும் --- தாமிரத்திற்கும்,

     மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம் தமக்கும் --- சிறப்பு மிக்க வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும் பொன்னுக்கும் ஈயத்தினுக்கும்,

     புனிதம் தரும் --- தூய்மையைத் தருபவை,

     வரு பெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை புனிதம் ஆம் என்பர் --- வருகின்ற வெள்ளத்துடன், முறையே புளியும், சுண்ணாம்புப் பொடியும் சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக் கல்லும், சாணமும் ஆகிய இவைகள் என்று மேலோர் கூறுவர்.

          விளக்கம் ---  வாவுதல் - தாவுதல்.  வாவும் பரி என்றது வாம் பரி என வந்தது.

 

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...