30. ‘தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று
நினைக்கும்'
மான்ஒன்று
வடிவு எடுத்து மாரீசன்
போய் மடிந்தான்! மானே என்று
தேன்ஒன்று
மொழிபேசிச் சீதைதனைச்
சிறைஇருக்கத் திருடிச் சென்றோன்
வான்ஒன்றும்
அரசு இழந்தான்! தண்டலையார்
திருவுளத்தின் மகிமை காணீர்!
தான்ஒன்று
நினைக்கையிலே தெய்வம்ஒன்று
நினைப்பதுவும் சகசம் தானே.
இதன் பொருள் ---
தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் --- திருத்தண்டலை என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள இறைவருடைய திருவுள்ளத்தின் பெருமையைப் பாருங்கள்!
மான் ஒன்று வடிவு எடுத்துப்போய் மாரீசன்
மடிந்தான் --- மானைப் போல் ஒன்றிய வடிவை எடுத்துச் சென்ற மாரீசன் தன் காரியம்
முற்றுப் பெறாமலேயே இறந்தான்,
மானே என்று தேன் ஒன்றும் மொழி பேசிச் சீதை தனைச் சிறை இருக்கத் திருடிச் சென்றோன் --- மானே எனத்
தேனைப்போல இனிக்கும் மொழிகளை மொழிந்து, சீதையைத் திருடிச் சிறைக்குக் கொண்டு சென்ற இராவணன் தனது
காரியம் முற்றுப்பெறாமலே,
வான் ஒன்றும் அரசு இழந்தான் --- மண்ணலகத்தோடு
விண்ணுலகத்தையும் ஆண்ட தனது ஆட்சியை இழந்தான்,
இவைகளை எண்ணிப் பார்க்கையில்,
தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று
நினைப்பதுவும் சகசம் தான் --- ஒருவன் ஒரு காரியத்தைத் தான்
எண்ணியவாறு முடிக்க எண்ணும்போது, தெய்வம் வேறு ஒன்று
எண்ணுவது இயல்பே.
விளக்கம் --- ‘தானொன்று நினைக்கத்
தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது பழமொழி. மாரீசன்
மற்றும் இராவணன் ஆகியோர் எண்ணியதையும், அவர்களின்
எண்ணம் முற்றுப் பெறாமலே அழிந்ததையும் எண்ணுகையில், "கெடுவான் கேடு
நினைப்பான்" என்பதும் கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே"
என்பதும் உறுதியாகின்றது. எண்ணியது நன்மை தருவதாக இருந்தால், அந்த
நல்லெண்ணத்திற்குத் திருவருளே துணை நிற்கும். தீயவை செய்தார் கெடுதல் உறுதி.
தீயவை
செய்தார் கெடுதல், நிழல் தன்னை
வீயாது
அடி உறைந்து அற்று.
மறந்தும்
பிறன் கேடு சூழற்க, சூழின்
அறம்
சூழும் சூழ்ந்தவன் கேடு.
என்னும்
திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.
No comments:
Post a Comment